‘ஒரு வாரமெல்லாம் இல்லை... ஏழே நாள்ல நடவடிக்கை எடுத்தோம்!’

அடுத்த பிரச்சினைக்கு ஆயத்தமாகும் அன்பில் மகேஷ்
‘ஒரு வாரமெல்லாம் இல்லை... ஏழே நாள்ல நடவடிக்கை எடுத்தோம்!’
ஓவியம்: வெங்கி

அன்று காலையில், திரைப்பட தேசிய விருதுப் பட்டியலைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தது பறக்கும் பைக். சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகள் பெற்றவர்களின் பெயர்களையே அது உற்றுநோக்கிக் கொண்டிருந்ததைக் கவனித்த பாச்சா, “என்னப்பா... ரொம்ப அப்செட்டா இருக்கிற மாதிரி தெரியுது! உன் ஆதர்சக் கலைஞர்கள் யாருக்கும் அங்கீகாரம் கிடைக்கலைன்னு வருத்தமா?” என்றான்.

“அது இல்லை. இந்த லிஸ்ட்ல அரசியல்வாதிகள் பேரே இல்லையே... அவங்களைவிடவா சினிமா நடிகர்கள் சிறப்பா பெர்ஃபார்ம் பண்றாங்க?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டது பைக்.

“அதுசரி... என்னதான் மனுஷங்ககூட பழகுனாலும் அரசியல் தலைவர்களோட அரிய தகுதி உனக்குப் புரியாதுதான்! அவங்கள்ல பல பேர் ‘வாழ்நாள் சாதனையாளர்கள்’ அதாவது... லோகேஷ் கனகராஜ் படத்துல வர்ற மாதிரி ‘லைஃப்டைம் செட்டில்மென்ட்’ வாங்கி செட்டில் ஆகிடுவாங்கப்பா. கதை, திரைக்கதை, வசனம் மட்டுமில்ல... விநியோகத்துலயும்(!) அவங்க வேகத்துக்கு யாராலயும் ஈடுகொடுக்க முடியாது. அதனால அவங்களுக்குத் தனியா அவார்டெல்லாம் தேவையில்லைன்னு தேசிய விருது கமிட்டி நினைச்சிருக்கும்” என்றான் பாச்சா.

“அப்படிச் சொல்லு! சிறந்த விநியோகஸ்தருக்கு விருதுன்னு அறிவிச்சா... உலகத்துலேயே சிறந்தவர் நம்ம சின்னவர்... உதயநிதிதானே?” என்று சிரித்தது பைக்.

அன்று பேட்டிப் பட்டியலில் முதலாமவர்... சின்னவரின் சிறுவயது தோழரும், பிரச்சினைகளைப் பெரிதாக வளரவிட்டு பின்னர் தனது தனித்திறமையால் அதைச் சமாளிக்கப் பாடுபடும் ‘அமைக்கபிள்’ அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

லிஸ்ட்டைப் பார்த்ததும், “என்னப்பா இது! வழக்கமா சீமான், அண்ணாமலைன்னுதானே பேட்டி லிஸ்ட் ஆரம்பமாகும். இதென்ன இவர் புதுசா வந்திருக்காரு?” என்று பைக் கேட்டது.

“அவங்கள்லாம் வாராவாரம் ஆரவாரமா எதையாச்சும் பண்ணிட்டு லைம்லைட்டுக்கு வருவாங்க. இவர்...” என்று பாச்சா சொல்ல, “புரியுது! வா போகலாம்” என்று புன்னகைத்தபடி பறக்க ஆரம்பித்தது பைக்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லம்.

பழைய ஆல்பங்களைப் புரட்டியபடி பூரிப்புடன் அமர்ந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், “இது உதயநிதி. இது அவங்க தாத்தா கருணாநிதி... இது அப்பவே நாங்க திரட்டுன சிறப்பு நிதி” என்று அந்தக் கால நினைவுகள் மிளிர தனது ஆதரவாளர்களிடம் அளவளாவிக்கொண்டிருந்தார்.

“அது எப்படி சார்... இடுக்கண்களுக்கு மத்தியில படு உற்சாகமா இருக்கீங்க?! உங்களைப் பார்த்தாலே... உலகத்துல ஒரு பிரச்சினையும் நடக்கலைன்னு நன்னம்பிக்கை உருவாகுது. சீக்ரெட் என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க சார்” என்று சிரிக்காமல் கேட்டான் பாச்சா.

சட்டென்று ஆ(ல்)பத்தை மூடி வைத்த அமைச்சர், “இதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமில்லையே! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில எல்லாருமே முழு மகிழ்ச்சியோட முக மலர்ச்சியோட இருக்காங்க” என்றார்.

“உண்மைதான் சார்! கழக ஆட்சியில எல்லாரும் கலகலப்பா இருக்காங்கன்னு கள்ளக்குறிச்சி பக்கம் போனாலே தெரியும்” என்று ஆமோதித்த பாச்சா, “அது எப்படி சார், உங்க துறை அறிவிப்புகளையெல்லாம் உடனுக்குடன் மாத்தி... பிஸியா இயங்குறதை பிரமாதமா எஸ்டாபிளிஷ் பண்றீங்க. ஆனா, ஊரையே உலுக்கும் பிரச்சினைக்கு ஒரு வாரம் கழிச்சுதான் உங்க பாணியில நடவடிக்கை எடுக்கிறீங்க. உங்க ஃப்ரெண்ட் உதயநிதி ஒரு வாரத்துல எத்தனை படம் ரிலீஸ் பண்ணியிருப்பார் தெரியுமா?” என்று கேட்டான்.

“ஒரு வாரம் எல்லாம் இல்லை. ஏழே நாள்ல எல்லாத்துக்கும் தீர்வு கண்டுட்டோம். எதுக்கெடுத்தாலும் குத்தம் கண்டுபிடிச்சு குத்திக் காட்டுறதை ஊடகங்கள் கைவிடணும். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லைங்கிற மாதிரி... அடுத்தடுத்து பெரிய பெரிய பிரச்சினைகள் நடக்கும்போது அடுத்த ஒண்ணு ரெண்டு நாள்ல உறுதியான நடவடிக்கைகளை எங்க அரசு எடுக்கும். இது உண்மை” என்றார்... ‘பொய்யாமொழி’!

“அப்படீன்னா... உங்க ஆட்சியில இன்னும் பல பிரச்சினைகள் நடக்கும்னு பெருமையாச் சொல்றீங்க. அப்படித்தானே?” என்ற பாச்சா, “உதயநிதிக்கு திக் ஃப்ரெண்டா இருக்கீங்க. அவரை மாதிரியே நீங்களும் சினிமாவுல நடிச்சா... அவரைவிட சூப்பரா நடிப்பீங்க. வாக்காளர்களும் ஸாரி... ரசிகர்களும் கொஞ்ச நாளைக்கு சந்தோஷமா இருப்பாங்கல்ல?” என்றான்.

பளீரெனச் சிரித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், “நாப்பது வயசுக்கு மேல நமக்கு ‘யூத் ஐகான்’ விருது வழங்கி ‘கலாட்டா’காரங்க சம்பவம் பண்ணிட்டாங்க. அடுத்து சினிமா சான்ஸ்னு எதையாச்சும் சொல்லி சீண்டி விட்டுடாதீங்க பாஸ்!” என்றார்.

“அதுவும் சரிதான். உதயநிதிக்கு வடிவேலுவை அப்பாவா நடிக்க வச்ச மாதிரி... உங்களைச் சித்தப்புவா நடிக்க வச்சு சிரிப்பு மூட்டிடுவாங்க” என்று எதேச்சையாகச் சொன்ன பாச்சா, அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆவேச மோடுக்குச் செல்வதை அவதானித்ததும் அங்கிருந்து எஸ்கேப்பானான்!

அடுத்து செந்தமிழன் சீமான்!

“யப்பா... தமிழ்க் குடி சம்பந்தப்பட்ட புத்தகங்களை எடுத்துட்டுவான்னு சொன்னா... தயிர் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எடுத்துட்டு வர்றே? தமிழ்க் குடின்னா தமிழ்ச் சாதி. சரியா வெளங்கிக்கிடணும். என் தலைமையில எளிய தமிழ்ப் பிள்ளைகளோட ஆட்சி மலர்ந்தவுடனே ‘சாதி’ங்கிற வட மொழிச் சொல்லுக்கு இடம் கிடையாது. ‘சாதி’ங்கிற இடத்துல எல்லாம் ‘குடி’ங்கிற தமிழ்ச் சொல்தான் தங்கம் போல ஜொலிக்கும்” என்று தம்ளருடன் நின்றிருந்த தமிழர் தம்பியிடம் ‘தண்மை’யாகப் பேசிக்கொண்டிருந்தார் சீமான்.

“அப்படீன்னா... சாதிகளை ஒழிக்க மாட்டீங்க. ஒளிச்சு வச்சிடுவீங்கன்னு எடுத்துக்கலாமா?” என்று கேட்டபடி சீமான் முன் ஆஜரானான் பாச்சா.

செய்யாறு அருகே முழுக்கைச் சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டு மேடையிலேயே சீற்றம் காட்டிய சீமான், அதே சீற்றத்தைச் சிரமேற்கொண்டு வரவழைத்துக்கொண்டு பாச்சாவை எதிர்கொண்டார்.

“தீய திராவிடக் கட்சிகள் ஆட்சியில திரும்பின பக்கமும் தீப்பிடிச்சு எரியறதைக் கவனிச்சியா? அவங்கதான் ஊழல் செஞ்சு ஒளிச்சு வச்சுக்குவாங்க. எளிய தமிழ்ப் பிள்ளைகள் நாங்க ஏகமனசா மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துடுவோம். அதுமாதிரி... தமிழ்ப் பிள்ளைகளோட வாரிசுகளுக்குத்தான் தமிழ்நாட்டுல தங்குறதுக்கு இடம் கொடுப்போம். தஞ்சம் தேடிவந்தவங்க தங்கத்தையே கொண்டுவந்தாலும் தங்க விட மாட்டோம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் என் கோட்டை. என் ஆட்சி அமைஞ்சதும் தொடங்கும் வெளிமாநிலத்தவர் வேட்டை” என்று வீராவேசமாகச் சொன்னார் சீமான்.

“எல்லாம் சரி சார். உங்க சித்தப்பா, பெரியப்பா, சின்னம்மா எல்லாம் இருந்த கட்சி சின்னாபின்னமாகிட்டு இருக்கு. சென்டிமென்டா ஸ்டேட்மென்ட் விடுறதைத் தாண்டி அவங்களைச் சேர்த்துவைக்க எந்த முயற்சியும் எடுக்கலையா? ‘எல்லாம் ஒண்ணுமண்ணா இருந்து கட்டியெழுப்பிய இயக்கம்’னு சின்னம்மா உங்ககிட்ட சொன்னப்ப, ‘நான் வேணும்னா பேசட்டுமாம்மா?’ கேட்டவர் நீங்க. இப்ப அநியாயத்துக்கு அமைதி காக்குறீங்களே?” என்றான் பாச்சா.

“பல மாசத்துக்கு முன்னாடி சொன்ன ‘பழைய’ பேச்சையெல்லாம் வச்சிக்கிட்டு இன்னைக்கு என்கிட்ட கேள்வி கேட்காதே ராஜா! இன்னைய தேதிக்கு அதிமுகவோட இடத்துக்கு நாதக வருதுன்னு நாடறிஞ்ச அரசியல் பார்வையாளர்களே பேச ஆரம்பிச்சுட்டாங்க. அடுத்து நடக்கப்போற எம்பி எலெக்‌ஷன்ல எங்க தம்பிகள் ஜெயிப்பாங்க. அடுத்தடுத்து காட்சி மாறும்; ஆட்சி மாறும். என் கையில மட்டும் நிலம் சிக்குச்சி நீ செத்தே!” என்று எகிறினார் சீமான்.

“அப்படீன்னா... ‘வென்றால் மகிழ்ச்சி... தோற்றால் பயிற்சி’ன்னு மேடைக்கு மேடை சொல்லி தம்பிகளோட தன்னம்பிக்கையைக் குலைக்கிறீங்களே... அது?” என்றான் பாச்சா.

அதுகாறும் அமைதிகாத்த எளிய தமிழ்ப் பிள்ளைகள் வலிமையைக் காட்ட ஆயத்தமாக... பேட்டியை முடித்துக்கொண்டு ஓட்டமெடுத்தான் பாச்சா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in