‘எப்பொருளாளர் யார் யாராகிலும்...’

‘குறள்’ எழுப்பும் ஜெயக்குமார்
‘எப்பொருளாளர் யார் யாராகிலும்...’
ஓவியம்: வெங்கி

பாச்சா காலையில் எழுந்தது முதல் பறக்கும் பைக்கைத் தேடிக்கொண்டிருந்தான். நீண்ட நேரமாகியும் பைக் வராததால் சஞ்சலமடைந்து சட்டையைப் போட்டுக்கொண்டு சாலையில் இறங்கியவன், அங்கு கண்ட காட்சியால் அதிர்ச்சியில் உறைந்தான். புதிதாகப் போடப்பட்டிருந்த சிமென்ட் சாலையில் பறக்கும் பைக் ஏறத்தாழ புதையுண்டு கிடந்தது. பதறிப்போய் ஓடிய பாச்சா அருகில் சென்று விசாரித்தான்.

“என்னத்த சொல்ல? வேலூர் கான்ட்ராக்டர் இங்கேயும் வேலையைக் காட்டிட்டார் போல... நான் பாட்டுக்க கடனேன்னு லேண்ட் ஆகி ரெண்டு நிமிஷம் ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். அஞ்சே நிமிஷத்துல சிமென்டைக் கொட்டி என்னைச் சிக்கவச்சுட்டாங்க. இதாவது பரவாயில்லை... திருச்சியில சிஎம் வர்றார்னு ஸ்பெஷல் ரோடு போட்டு பஸ்ஸையே சிக்க வச்சுட்டாங்களாம்யா. இப்பெல்லாம் ட்ராக்கையெல்லாம் ட்ராப்பாக்குறதுதான் ட்ரெண்டு போல” என்று டென்ஷனை மறந்து காமெடி செய்தது பைக்.

“ஆமாம்பா... இப்பெல்லாம் யார்கிட்ட யார் சிக்கியிருக்காங்க... யாருக்கு யார் துரோகம் செய்றாங்கன்னே தெரியலை. அவசர அவசரமா ஓடிக்கிட்டே அரசியல் பண்ற மாதிரி, மூவ்மென்ட்லேயே சிமென்ட் போடுற மொமென்ட் போல இது” என்றான் பாச்சா. பின்னர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் பைக்கை அங்கிருந்து மீட்டு, அதன் மீது அமர்ந்து பறக்க ஆரம்பித்தான்.

அன்று முதலாமவர் ஜெயக்குமார்.

“அதாவது... சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும்தாங்க நான் சொல்வேன். சொல்லக் கூடாத விஷயத்தைப் பத்தி சொப்பனத்துல கூட சொல்லிப் பார்க்க மாட்டேன். அதனால மெயின் ரோட்டுல நிக்கிற வண்டிகள்ல சிமென்ட் போட்டு சிக்க வைக்கிறதைப் பத்தியெல்லாம் என்கிட்ட கேட்காதீங்க... செயற்குழு பொதுக்குழுவுல யாருக்கெல்லாம் சிக்கல் வந்துச்சுன்னு கேளுங்க. ‘தெரியாது’ன்னு தில்லா சொல்வேன்” என்று ஃப்ரெஷ்ஷாக பிரஸ் மீட் கொடுத்துக்கொண்டிருந்தார் ஜெயக்குமார்.

“அதிமுக இப்பெல்லாம் கழகம்ங்கிற வார்த்தையையே மறந்து கலகத்தையே பார்த்துட்டு இருக்கே... இதுக்கெல்லாம் யார் காரணம்?” என்று ஒரு நிருபர் கேட்க, “கட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த நினைச்சவங்களை கவனமா கட்டம் கட்டி கழட்டி விட்டுட்டு இருக்கோம். அதுக்கப்புறம் ஆழ்ந்த அமைதியோட அதிமுக செயல்படப்போகுது. காரணமெல்லாம் யாருன்னு தெரியும். ஆனா, சொல்ல மாட்டோம். சொல்லத் தெரியாது எங்களுக்கு” என்று பேச ஆரம்பித்தவர், அரை மணி நேரமாகியும் அதை முடிக்காததால் அலுப்படைந்த நிருபர்கள், மைக்குகளை அங்கேயே வைத்துவிட்டு டீ சாப்பிடப் போயிருந்தார்கள்.

அந்த நேரம் பார்த்து அங்கே பிரசன்னமான பாச்சா, “என்ன சார், ஆயிரம் பிரச்சினைக்கு நடுவுலயும் ‘அண்ணன்’ ஓபிஎஸ்னு அன்பா கூப்புடுறீங்க. கட்சித் தொண்டர் கட் பண்ணின ஓபிஎஸ் படத்தை பேனர்ல திரும்பவும் ஒட்டி ஹானர் பண்றீங்க. நீங்க ஈபிஎஸ் பக்கமா இல்லை ஓபிஎஸ் பக்கமா?” என்று பிரச்சினையை... மன்னிக்கவும் பேட்டியை ஆரம்பித்தான்.

“இன்னைக்கு இருக்கிற நிலைமையில நான் என் மனசாட்சி(!) மனப்பாடமா சொல்லிக்கொடுக்கிற விஷயத்தைத்தான் பிரஸ் மீட்ல பேசிட்டு இருக்கேன். ஒரு ஆர்டரா பேசிட்டு இருக்கும்போது சிலபஸ்ல இல்லாத கேள்வியைக் கேட்டா எனக்குச் சொல்லத் தெரியாது. நாங்க என்ன உதிரிக் கட்சியா தம்பி? உயிருக்குயிரான உடன்பிறப்புகள்... சாரி ரத்தத்தின் ரத்தங்கள் உள்ள முதன்மைக் கட்சி. இங்கே ஜாம் ஜாம்னு ஜனநாயகம் இருக்கிறதால அங்கொண்ணும் இங்கொண்ணுமா எதையாவது பேசிட்டு இருப்பாங்க. எல்லாத்துக்கும் பொதுக்குழுவுல பொதுவா ஒரு முடிவெடுத்துடுவோம்; கவலைப்படாதீங்க” என்றார்.

“இப்பயாவது ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் போஸ்டர் யுத்தம் நடத்துறாங்க. நீங்க புரட்சித் தலைவி இருந்தப்பவே போஸ்டர் ஒட்டி சிஎம் ஆசையைச் சொன்னவராச்சே... உங்ககிட்ட பழனிசாமியே படு உஷாரா இருக்கணும்னு பேசிக்கிறாங்களே” என்று ஃப்ளாஷ்பேக் ஃப்ளெக்ஸை அவர் நினைவுக்குக் கொண்டுவந்தான் பாச்சா.

“தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் சில விஷயங்கள் நடந்திருக்கும் தம்பி. அதைப் பெருசுபடுத்தாதீங்க. ‘எப்பொருளாளர் யார் யாராகிலும் அப்பொருளாளர் மெய்ப்பொருளாளர்...’னு யாரோ ஒரு புலவர் சொல்லியிருக்கார். மறந்துடாதீங்க” என்ற ஜெயக்குமாரிடம், “அப்படீன்னா ஓபிஎஸ்கிட்ட இருக்கிற பொருளாளர் பதவிக்கு முட்டிமோதுற லிஸ்ட்ல நீங்களுக்கும் இருக்கீங்கன்னு குறிப்பா சொல்ல வர்றீங்களா?” என்று பாச்சா கேட்க, அருகில் இருந்த தொண்டர்கள் ஆவேசத்துடன் அவனைப் பார்க்க, அங்கிருந்து அவசரமாக அகன்றான்.

அடுத்து சீமான்.

ஈபிஎஸ்சும் ஓபிஎஸ்சும் ஈருடலும் ஓருயிருமாகப் பாசத்துடன் பழகிய பழைய காணொலிகளை ஈரக் கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தார் ஈழ விடுதலைப் போராளியாம் சீமான்.

“அது எப்படி சார்? நீங்களும் நீண்டகாலமா ஒரு கட்சியை நிம்மதியா நடத்தி நித்தம் ஒரு பேட்டி கொடுத்துட்டு இருக்கீங்க... அடுத்த கட்சியில இருக்கிற தலைவர்களுக்கு நடுவுல இருக்கிற அதிருப்தி பத்திப் பேசுனா அழுகிற குரல்ல ஆதங்கப்படுறீங்க. உங்க அரசியல்ல இது புது ரகமால்ல இருக்கு?” என்று அவர் முன் ஆஜராகிக் கேட்டான் பாச்சா.

வேதனை பொங்கும் கண்களுடன் நிமிர்ந்து பார்த்த சீமான், “எங்க அய்யா பன்னீர்செல்வம், எங்க அய்யா பழனிசாமி, எங்க அம்மா சின்னம்மா மற்றும் எங்க உறவினர்கள்லாம் ஒண்ணா மண்ணா இருந்து அண்ணா ‘திராவிட’ முன்னேற்றக் கழகத்தை வழிநடத்தணும்னு நினைக்கிற திராவிட(!) எதிர்ப்புப் போராளி தம்பி நானு. அவங்கள அந்த அளவுக்கு நேசிக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பேசிக்கிறேன். எதையாவது செஞ்சு எல்லாரும் ஒண்ணா இருந்தாத்தானே பொருளாதார ரீதியா என்னை மாதிரி ஏழைத் தம்பிகள் எதையாவது பேசி பொழைப்பை ஓட்ட முடியும்?” என்று ஏக்கக் குரலுடன் சொன்னார்.

“அரக்க குணமும் இரக்கமற்ற மனமும் கொண்டவர்கள்தான் அதிகாரத்துல இருப்பாங்கன்னு ஆவேசமாச் சொல்லியிருக்கீங்க. இத்தனை வருஷமா அதிகாரத்துல இருந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் ரெண்டு பேர்ல இரக்கமற்றவர் யார், அரக்கர் யார்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டான் பாச்சா.

சீற்றத்தைக் கட்டுப்படுத்திக்கொண்ட சீமான், “தம்பி... ஒரு விஷயத்தை விளங்கிக்கிடணும். அண்ணாமலையையெல்லாம் விட அதிகமா ஒரு காலத்துல பேட்டி கொடுத்துட்டு இருந்தவன் நான். பண்பாளரும் கல்வியாளருமான தம்பி அண்ணாமலை இப்ப அந்த இடத்துக்கு வந்துட்டார். அதுல எனக்கு மகிழ்ச்சிதான். விஷயம் என்னன்னா... எங்கேயாவது ஏதாவது கேள்வி வந்தா மனசுக்குத் தோணுறதைப் பேசுவோம். அதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு அடுத்த பிரஸ் மீட்ல பிரச்சினை பண்ணக் கூடாது. இன்னைய தேதிக்கு இரக்கமில்லாதவர்னா அது அதிகாரத்துல இருக்கிற எங்க அய்யா மு.க.ஸ்டாலின் தான்” என்றார்.

“அப்போ மோடி?” என்று பாச்சா கேட்டதும் ‘பயபுள்ளை விட மாட்டேங்கிறானே’ என்று சுதாரித்த சீமான், “கேரளாவுல எல்லார் வீட்டு கூரையிலயும் சோலார் பேனல் வச்சிருக்கான். நம்ம ஊர்ல தமிழ்க் குடிகள் வீட்டு மாடியில அதையே ‘சோழர் பேணல்’னு தூயத் தமிழ்ல மாத்தி செட் பண்ணிவைக்கலாம். எங்க அய்யா மணிரத்னம் அவர்கள் எடுக்கிற ‘பொன்னியின் செல்வன்’ போஸ்டர் மியூஸிக் கூட வந்திருச்சு. இதையெல்லாம் வெளங்கிக்கிடணும்” என்று ஏதேதோ சொன்னார்.

அவரது அவஸ்தையைப் புரிந்துகொண்ட பாச்சா, “சரி விடுங்க, கடைசியா ஒரு கேள்வி. ஆனானப்பட்ட அதிமுகவுலேயே ஒருங்கிணைப்பாளர் பதவிகளையெல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டாங்க. உங்க கட்சியில இன்னமும் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தக்கவச்சுக்கிட்டு இருக்கீங்களே... தம்பிகள் யாரும் தகராறு பண்ண மாட்டாங்களா?” என்று கேட்க, சீமானின் கண்கள் சிவக்கத் தொடங்கின. பாச்சா பறக்கத் தொடங்கினான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in