மோடிஜியிடம் மொத்தத்தையும் கொட்டிய பன்னீர்செல்வம்!

இந்தியா கேட்டில் இரண்டாம் தர்ம யுத்தம்
மோடிஜியிடம் மொத்தத்தையும் கொட்டிய பன்னீர்செல்வம்!
ஓவியம்: வெங்கி

அன்றைய தினம் பாச்சாவின் அறையில் ஒரு பொதுக்குழுக் கூட்டத்துக்கு நிகரான புயல் வீசிக்கொண்டிருந்தது. பாச்சா தரப்பில் பத்து பதினைந்து பேரும், பறக்கும் பைக் தரப்பில் சில பல ரோபாட்டுகளும் கூடி காரசாரமாகக் கதைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது டெல்லியிலிருந்து பறந்துவந்த ட்ரோன் ஒன்று, இரு தரப்புக்கும் நடுவில் தரையிறங்கி இந்தியில் பேசத் தொடங்கியது. அறையைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள டெல்லி ட்ரோன் தலைமை அபிப்ராயப்படுவதாகவும், இனி எல்லா பேட்டிகளையும் டெல்லியிலிருந்தே ‘டெலி பிராம்ப்டர்’ உதவியுடன் முடித்துத் தருவதாகவும் டீல் பேசியது. அப்போது, “எது... யார் வீட்டு ரூமை யார்யா லீஸுக்கு எடுக்கிறது?” எனக் கேட்டபடி வீட்டின் உரிமையாளர் விறுவிறுவென நுழைய... திடுக்கிட்டு பாச்சா கண்விழிக்க... சுற்றுமுற்றும் பார்த்தபோதுதான் தெரிந்தது, அத்தனையும் கனவு என்று!

பக்கத்தில் இருந்து பறக்கும் பைக் சிரித்துக்கொண்டிருந்தது. “ஏம்பா... அதிமுக அதிரிபுதிரி நியூஸை எல்லாம் பார்த்துட்டு... விடிய விடிய விடாம வெப் சீரிஸும் பார்த்தா... யார் யார் பக்கம் இருக்காங்க, எப்ப கிளைமாக்ஸ் வரும்னு டென்ஷன்ல தானே மனுஷன் இருப்பான்?” என்று கேட்ட பைக்குக்குப் பதில் சொல்ல முடியாமல், வைரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்ட வைத்திலிங்கம் மாதிரி பரிதவித்தான் பாச்சா.

“இன்னைக்கு யார் முதல்ல?” என்று பைக் கேட்க, “ஓபிஎஸ்தான்” என்றான் பாச்சா. “அவர்தான் டெல்லியில டேரா போட்டிருக்காரே...” என்றது பைக். “சரி அப்ப நாம அங்க போவோம்” என்றான் பாச்சா.

அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கினர்.

தலைநகர் டெல்லியில் தரையிறங்கிய பின்னர் தமிழ்நாடு இல்லம் முதல் தல்கொட்டோரா ஸ்டேடியம் வரை துழாவியும் ஓபிஎஸ்ஸை ஒரு இடத்திலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“என்னப்பா இது, பிஎம் மோடி பின்னாடி பெருங்கூட்டத்துல ஒருத்தரா பன்னீர்செல்வம் பந்தாவா வந்த படத்தைப் பார்த்தோம். இப்ப அவரை எங்கேயுமே பார்க்க முடியலையே?” என்று பறக்கும் பைக் கேட்டது.

“இங்கே சமாதி, நினைவிடம்னு ஏதாவது இருக்கா?” என்று கேட்ட பாச்சா, ஏதோ நினைவு வந்தவனாக, “நேரா ‘இந்தியா கேட்’டுக்குப் போ” என்றான்.

இந்தியா கேட்டிலோ திருவிழாக் கூட்டம். அம்மா சமாதியில் அமர்ந்திருந்ததைவிடவும் அதிக அடக்கத்துடன், அந்தக் காலத்து அக்னி வீரர்களின் நினைவிடத்தில் அமரிக்கையாக அமர்ந்திருந்தார் ஓபிஎஸ்.

“யாரோ தமிழ்நாட்டு சுவாமிஜி தன்னந்தனியா தவமிருக்காராம். புரட்சி தியானம்னு ஒரு புது யோகாவை டெமோ காட்டுறதுக்காக டெல்லி வந்திருக்காராம்” என்று ஏதேதோ செய்திகள் பரவ, எல்லா திசையிலிருந்தும் ஆட்கள் வந்து குவிந்து பன்னீர்செல்வத்தைப் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அனைவரையும் விலக்கிவிட்டு அவர் அருகில் சென்ற பாச்சா, “என்ன சார் இது! தரை பெருசா இருந்தா உடனே தர்மயுத்தத்துல உட்கார்ந்துடுவீங்களா? இப்பெல்லாம் உங்க தர்மயுத்தம் ஒரே மர்ம யுத்தமா இருக்கே?” என்று கேட்டான்.

ஒரு கண்ணை மூடியபடி மறுகண்ணை மட்டும் திறந்து பார்த்த ஓபிஎஸ், ‘தர்மபிரபு... நீ இங்கேயும் வந்துட்டியா?’ என்பதுபோல் முறைத்தார்.

“ஈபிஎஸ்சுக்கு நடந்த மாதிரி எனக்கு ஈஸியா எதுவும் நடக்க மாட்டேங்குது தம்பி. ஆடிட்டர் சொல்றபடி ஆடினா போதும்னு இருந்துச்சு... அப்புறம் அமித் ஷா சொல்றதைக் கேட்கணும்னு சொன்னாங்க... அதுக்கெல்லாம் என்ன முடிவெடுக்கணும்னு அம்மாவோட ஆன்மாகிட்ட வேற ஆலோசனை கேட்டுக்குவேன். ஆனா, எப்பவுமே என்னை நம்ப வச்சு நம்ப வச்சு நம்பர் டூவாவே ஆக்கிட்டாங்க. இப்ப நண்பர்னு சொல்லிக்கவே கட்சியில நாலைஞ்சு பேர்தான் மிச்சம் இருக்காங்க... அதையெல்லாம் யோசிச்சி... கண்ணை மூடிக்கிட்டு கவலைப்பட்டுட்டு இருந்தேன். அதுக்குள்ளே தர்மயுத்தம்னு தாறுமாறா தகவலைப் பரப்பிட்டாங்க” என்றார் பன்னீர்செல்வம்.

“அதான் பொதுக்குழுவுல எடுத்த தீர்மானம் எதுவுமே செல்லாதுன்னு தீர்மானமா தீர்மானம் சொல்லிட்டாங்களே... இனிமே பொதுக்குழுவுக்குப் பதிலா தனிக் குழுவை மட்டும் வச்சு சமாளிக்க முடியாதுங்களா?” என்று பாச்சா கேட்டான்.

“இப்பெல்லாம் நானே எனக்கு ஆதரவா இல்லையோன்னு நினைக்கிற அளவுக்குக் கொண்டுவந்துட்டாங்கப்பா. அதான் மோடிஜியைப் பார்த்து மொத்தத்தையும் கொட்டிட்டேன். அவர் சொல்லித்தான் துணை முதல்வரானேன். அவர் கைகாட்டினா முதல்வராகி மக்களுக்காகத் திரும்பவும் தியாகம் செய்யத் தயாரா இருக்கேன்” என்றார் பன்னீர்செல்வம்.

“அது சரி. ஒருபக்கம் மோடி, மறுபக்கம் ஸ்டாலின், இன்னொரு பக்கம் சசிகலான்னு சகல திசைகள்லயும் சைலன்டா காய் நகர்த்திக்கிட்டே சகட்டுமேனிக்கும் சங்கடப்படுற மாதிரி காட்டிக்கிறீங்களே...” என்று பாச்சா கேட்க, அதற்குள் அமித் ஷா ஆள் விட்டுத் தேடுவதாக வந்த தகவலையடுத்து ஓபிஎஸ் அங்கிருந்து கிளம்ப, பாச்சாவும் சென்னையை நோக்கிப் பறக்கத் தொடங்கினான்.

களையிழந்துகிடந்த கமலாலயத்தில் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தார் அண்ணாமலை.

“என்ன சார்! எனிடைம் எல்லா சேனல்லையும் பிரைம்டைம் பிரமுகரா வந்துட்டு இருந்தீங்க. ஏழெட்டு நாளா ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஈரங்க நாடகத்துல நீங்கள்லாம் இருந்த இடமே தெரியலையே?” என்று வந்த வேகத்தில் அவரிடம் வம்பிழுத்தான் பாச்சா.

360 டிகிரியில் முகத்தைச் சாய்த்து முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாமலை, “ண்ணா! அப்படியெல்லாம் இல்லீங்க... நாங்களே நாலு நாளைக்கு ப்ரெஸ் மீட் கொடுக்காம இருந்தாலும், எங்க ஆளுங்க மேல ஏதாவது கேஸைப் பொட்டு திமுக அரசு எங்களைச் சுறுசுறுப்பா வச்சிருக்கும்” என்றார்.

“அதான் தெரியுமே சார்! அதிமுகவுல ஆரம்பிச்சு அரபு நாடுகள் வரைக்கும் எதையாச்சும் டாஸ்க் கொடுத்து டென்ஷன்லேயே வச்சிருக்கிற கட்சியாச்சே உங்களுது! உங்ககிட்ட கேட்காம அதிமுககாரங்களால சரியா சண்டைகூட போட்டுக்க முடியாதுன்னு ஐநா சபை வரைக்கும் பேச்சு இருக்குதே” என்று பாச்சா சொன்னதைப் பாராட்டாகவே எடுத்துக்கொண்டார் அண்ணாமலை.

“பாருங்கண்ணா. எங்களுக்கும் அதிமுகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இரட்டை இலை கட்சியில நடக்கிற ஒற்றைத் தலைமை மோதலுக்கும் தாமரை சின்னத்துக்கும் ரொம்ப தூரம்ங்க. அதெல்லாம் உங்களை மாதிரியான மீடியாகாரங்க கெளப்பிவிடுறது” என்றார் அண்ணாமலை.

“நல்லா இருக்கு கதை! நாங்க மீடியாவா இல்லை மீடியேட்டரா? நீங்க பண்ற அரசியல்ல செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸே எடுக்க ஆரம்பிச்சுட்டார்” என்று சலித்துக்கொண்ட பாச்சா, “சரி விடுங்க! அதிமுகவுல அவ்வளவு களேபரம் நடந்து முடிஞ்சதும் ரெண்டு பேரையும் போய்ப் பார்த்திருக்கீங்களே... கிளைமாக்ஸ்ல போலீஸ் வர்ற தமிழ் சினிமா மாதிரில்ல இருக்கு இது!” என்றான் பாச்சா.

“ஐபிஎஸ்ஸா இருந்ததை மறந்துட்டு அமைதியா அரசியல் பண்ண விட மாட்டீங்க போல” என்று அர்த்தபுஷ்டியுடன் சொன்ன அண்ணாமலை, “குடியரசுத் தலைவர் தேர்தல்ல அதிமுக சப்போர்ட் வேணும்லங்க... அதான் சம்பிரதாயப்படி சப்போர்ட் கேட்கப் போயிருந்தோம். இது தப்புங்களா?” என்றார் பாச்சா.

“பாஜக என்ன பண்ணாலும் தப்பில்லைன்னு உச்சத்துல இருக்கிற எல்லாரும் உரத்த குரல்ல சொல்லிட்டு இருக்காங்க. நானெல்லாம் என்னங்க சொல்றது. நடத்துங்க!” என்றபடி நடையைக் கட்டினான் பாச்சா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in