அய்யா சூர்யா... தம்பி அன்புமணி!

அனைத்துப் பக்கமும் அணை கட்டும் சீமான்
அய்யா சூர்யா... தம்பி அன்புமணி!
ஓவியம்: வெங்கி

“ஹா(ங்) பாய் போலோ... பிரதான் மந்திரி னே கைஸா அய்ஸா டிசிஷன் லியா?” என்று யாரோ ஸ்பஷ்டமான இந்தியில் கஷ்டப்பட்டுப் பேசுவதைக் கேட்டுக் கடுப்புடன் கண்விழித்தான் பாச்சா. ‘இந்த நேரத்துல யார்றா இந்தியில பேசி இம்சை பண்றது?’ என்று தமிழ் நெஞ்சம் தடதடக்க எழுந்தான். பார்த்தால், பறக்கும் பைக்தான், தனது டெல்லி நண்பரான இன்னொரு பறக்கும் பைக்குடன் காணொலி அழைப்பில் கதைத்துக்கொண்டிருந்தது. வேளாண் சட்டத்தை மோடி அரசு வெற்றிகரமாக(!) திரும்பப் பெற்றதைப் பற்றி ஆவலாதியாக அளவளாவிக்கொண்டிருந்தன இரு இயந்திரங்களும்.

‘அப்படீன்னா வேற வழியில்லை. நாளைக்கு(ம்) அண்ணாமலையில இருந்து ஆரம்பிச்சுட வேண்டியதுதான்’ என்று அந்தக் கணம் முடிவெடுத்தான். அவனது மண்டு... மன்னிக்கவும் மைண்டு வாய்ஸை அப்படியே கேட்ச் பண்ணிய பறக்கும் பைக், “வேணாம்ப்பா. அண்ணாமலையை லாஸ்ட்டா வச்சுக்கோ. ஆசிரியர் சீமானைத்தான் முதல் தலைவரா செலக்ட் பண்ணியிருக்கார்” என்றது.

மறுநாள் காலை.

உள்ளூர் சினிமா தொடங்கி ஓடிடியில் வரும் உலகப் படங்கள் வரை ஒவ்வொன்றாக ஓட்டிப் பார்த்து, சீன் பை சீனாகப் பிரித்துக்கொண்டிருந்தார் செந்தமிழன் சீமான். “பயபுள்ளைக எந்த சீன்ல எந்தச் சிக்கலை சிம்பாலிக்கா வச்சிருக்கானுகன்னே தெரியலை. சினிமா எடுத்து பேர் வாங்குன சீமானாலேயே சீன்ல இருக்கிற குறியீட்டைக் கண்டுபிடிக்க முடியலைன்னு குத்திக்காட்டி மக்களைப் பேசவெச்சுட்டாங்களே” என்றும் முணுமுணுத்துக்கொண்டிருந்தார் முப்பாட்டன் முருகனின் பேரன்.

“அதே டவுட்டுதான் சார் உங்க பிரஸ் மீட்டைப் பார்த்ததும் எனக்கும் வந்துச்சு” என்றபடி, அவர் முன் பிரச்சினைமானான்... மன்னிக்கவும், பிரசன்னமானான் பாச்சா.

கடுப்பை மறைத்து ஹல ஹல என்று சிரித்த சீமான், “உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கும்னு நினைக்கிறேன். அதான் பீதியைக் கிளப்புற ஃபீலிங்லேயே பேட்டி எடுக்கிறே...” என்றார்.

“சீரியஸா கேள்வி கேட்டா கூட்டத்தோட சேர்ந்து கோரஸா சிரிச்சு குழப்பிவிடுறதை விடவே மாட்டீங்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டான் பாச்சா.

இதைக் கேட்டதும் இறுக்கமான முகத்துடன் நிமிர்ந்த சீமான், “எங்க அரசியல் அணுகுமுறை பத்தி வீணா விமர்சிக்கிறதை விட்டுட்டு, கேள்வியை மட்டும் கேளு” என்றார் கெத்தாக.

“எந்தப் பிரச்சினையா இருந்தாலும் ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமரத்துல ஒரு குத்துன்னு எல்லாப் பக்கமும் தாறுமாறா தார்மிக ஆதரவு தர்றீங்களே? ‘ஜெய் பீம்’ பட சர்ச்சையில நீங்க யாரு பக்கம் நிக்கிறீங்கன்னு சைடுல நின்னு சாதகமாத் தலையாட்டுறவங்களுக்கே சர்வநிச்சயமா தெரியாது போலருக்கே?” என்று கேட்டான் பாச்சா. கெட்ட கோபத்துடன் முறைத்த சீமான், “அதான் எங்க அய்யா சூர்யா, தம்பி அன்புமணின்னு எல்லார் பக்க நியாயத்தையும், இதமாப் பேசி பதமா வெளில வந்துட்டோம். இப்ப குறுக்கால புகுந்து ஏன் குழப்புறே?” என்றார் குன்ஸாவாக.

“கூட்டணி தர்மத்துக்காகத் திராவிடக் கட்சிகள்லாம் திரும்புன பக்கமெல்லாம் கும்பிடு போட்டு அட்ஜஸ்ட் பண்ணும். நீங்கதான் கூட்டணியே வைக்காம கொள்கைப்பிடிப்போட எலெக்‌ஷனை எதிர்கொள்ற கட்சியாச்சே? அப்புறமும் ஏன் குத்துமதிப்பா அரசியல் பண்றீங்க?” என்றான் பாச்சா.

“இரு இரு... நீ ரொம்பப் பேசுறே... அடுத்த உள்ளாட்சித் தேர்தல்ல உனக்கு சீட் குடுத்து செலவழிக்க வச்சாத்தான் அடங்குவ” என்று சிரித்தபடி சீமான் எச்சரித்ததும், இதயம் படபடக்க எஸ்கேப்பானான் பாச்சா.

அடுத்து ஓபிஎஸ்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற பிரதமருக்கு சென்டிமென்டாக நன்றி சொல்லி, சோஷியல் மீடியாவில் ட்ரெண்டான சுவடே தெரியாமல் ஆழ்ந்த அமைதியில் அமர்ந்திருந்தார் பன்னீர்செல்வம்.

“வேளாண் சட்டங்கள் விவசாயிகளோட லிவருக்கு நல்லதுங்கிற ரேஞ்சுல லிட்டரலா சப்போர்ட் பண்ணினீங்க. இப்ப அதே சட்டங்களை வாபஸ் வாங்குனதும் வாயார வாழ்த்தி நன்றி சொல்றீங்க... விவசாயிகளின் நண்பர்னு மோடிக்கு வினயமே இல்லாம சர்ட்டிஃபிகேட் கொடுத்திருக்கீங்க... எப்படி சார் இப்படி?” என்று கேட்டு தர்மசித்த தவத்தைக் கலைத்தான் பாச்சா.

மெல்ல கண் திறந்த பன்னீர்செல்வம், “நாங்கள்லாம் விவசாயிகளின் நண்பர்கள். என் நண்பர் ஈபிஎஸ்கூட ஒரு விவசாயிதான். அவர் மோடியோட நண்பர். மோடி எனக்கு நண்பர். இப்படி எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் நட்பா இருக்கிறதுனால அப்படிச் சொன்னேன். அது ஒரு குத்தமா?” என்று பணிவான குரலில் ஆதங்கப்பட்டார்.

“கட்சிக்குள்ள களேபரம்னு கன்னாபின்னான்னு நியூஸ் வந்தாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறுறவங்களைக் கட்டம் கட்டுறதுல ஆரம்பிச்சு, கனமழைப் பயிர் சேதத்தை ஆய்வு செய்றது வரைக்கும் பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கைகோத்து அரசியல் பண்றாங்கன்னு ஊருக்குள்ள எல்லாரும் நம்புறாங்க. ஆனா, வேளாண் சட்ட விஷயத்துல மோடிக்கு நீங்க மட்டும் சோலோவா நன்றி சொல்லியிருக்கீங்களே?” என்றான் பாச்சா.

‘அதையெல்லாம் அப்பட்டமா வெளில சொல்ல முடியாது’ என்பதுபோல் அமரிக்கையாகவே அமர்ந்திருந்த ஓபிஎஸ்ஸிடம், “உங்க கேரக்டரைப் புரிஞ்சிக்கவே முடியாதுன்னு ‘அஸ்பயர்’ சுவாமிநாதன் சொன்னதை அப்படியே நிரூபிக்கிறீங்களே?” என்று சொல்லிவிட்டு பாச்சா வானேகினான்.

கடைசியாக ‘கமா’ புகழ் அண்ணாமலை.

தன்னைப் பற்றிய மீம்ஸை ரசிப்பதாகச் சொல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்றைக்கு ஏதேனும் மீம்ஸ் வந்திருக்கிறதா என்று அலைபேசியில் ஆவலுடன் தேடிக்கொண்டிருந்தார்.

“மீம்ஸே தேவைப்படலை சார்... வேளாண் சட்டம் பத்தி ஸ்ட்ரிக்ட்டான குரல்ல நீங்க கொடுத்த ஸ்பீச்சை மட்டும் ரிப்பீட் மோடுல கேட்டு சிரிச்சிக்கிட்டு இருக்காங்க சார்” என்று எடுத்த எடுப்பில் எரிச்சலைக் கிளப்பினான் பாச்சா.

“ம்க்கும். இதைக் கேட்கிறதுக்குன்னே வருவியே... 500 வருஷமானாலும் கமாவை மட்டும்தான் மாத்த மாட்டோம்னு சொன்னோம். கம்ப்ளீட்டா வாபஸ் வாங்க மாட்டோம்னு வாக்குறுதி கொடுத்தோமா?” என்று வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் கேட்டார் அண்ணாமலை.

“சரி அதை விடுங்க. ‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம்னே சொல்லாத நாங்களே அதைக் குறைச்சுட்டோம். குறைப்போம்னு தேர்தல் வாக்குறுதியில சொன்ன திமுக அரசு ஏன் குறைக்கலை?’ன்னு கொஸ்டின் பண்ணியிருக்கீங்க. ரெண்டு பேரும் எலெக்‌ஷன் ரிசல்ட்டுக்கப்புறம் எக்கச்சக்கமா மாறிடுறீங்களே... தாமரைக்கும் சூரியனுக்கும் இடையில எலெக்‌ஷன் ஸ்ட்ராட்டஜியில ஏதாச்சும் கனெக்‌ஷன் இருக்கா?” என்று கேட்டான் பாச்சா.

“அதையெல்லாம் நீங்க அகில இந்தியத் தலைமைகிட்டதான் கேட்கணும்” என்று அவசர அவசரமாக மறுத்தார் அண்ணாமலை.

“அதுசரி, வேளாண் சட்ட வாபஸ் பத்திக் கேட்டா, ‘இதுகுறித்து எங்கள் தமிழகத் தலைவர் பதில் சொல்வார்’னு ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மாதிரி நாராயணன் திருப்பதி திரும்பத் திரும்பப் பேசுறார். நீங்க தேசியத் தலைமைகிட்ட கேட்கணும்னு திருப்பிப் போடுறீங்க...” என்று சலித்துக்கொண்ட பாச்சா, “உங்க கட்சியைச் சேர்ந்த குஷ்பு, மழை வெள்ளத்துல பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கப்போய் மறுபடியும் மறுபடியும் பல்பு வாங்கியிருக்காங்களே...” என்று கேட்டான்.

“இதுகுறித்து எங்கள் தேசியச் செயற்குழு சிறப்பு அழைப்பாளரான குஷ்பு பதில் சொல்வார்” என்று நாராயணன் பாணியிலேயே நழுவினார் அண்ணாமலை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in