‘ஒற்றைத் தலைமை இல்லப்பா... ஒற்றுமைத் தலைமை' - ஓபிஎஸ் புது ரூட்

* டிஸ்கி: இது ஒரு கற்பனைப் பேட்டி என்பதால், உங்கள் பக்கத்து வீட்டுப் பிள்ளையாக நினைத்து பாச்சா மீது பச்சாதாபம் காட்டவும்!
‘ஒற்றைத் தலைமை இல்லப்பா... ஒற்றுமைத் தலைமை' - ஓபிஎஸ் புது ரூட்
ஓவியம்: வெங்கி

அன்று அதிகாலை பத்து மணிக்கு(!) வாக்கிங் சென்றிருந்த பாச்சாவுக்கு ஆச்சரியங்கள் பல காத்திருந்தன. குறுக்கே மறுக்கே ஓடிக் கொண்டாடிய தொண்டர்கள், தெருக்களில் வெடிச் சத்தம், திருப்பதி சைஸ் லட்டு விநியோகம் என காணும் இடமெல்லாம் கன ஜோராக இருந்தது. அவனுக்கும் ஓரிரண்டு லட்டுகள் கிடைத்தன. அவனுடன் ஃப்ளையிங் பயிற்சிக்கு வந்திருந்த பறக்கும் பைக்குக்கு டிஜிட்டல் லட்டுவை வாட்ஸ்-அப் மூலம் வழங்கினார்கள் சிலர். “என்னப்பா இதுதான் தீபாவளியா? ஏக அமர்க்களமா இருக்கே... இதே மாதிரி ட்ரெஸ் போட்ட ஒரு க்ரூப் போன வாரம் போறவர்றவங்களுக்கெல்லாம் ஜிலேபி கொடுத்துச்சு. இப்ப அதே டைப் க்ரூப் லம்ப்பா லட்டு குடுக்குது?!” என்று கேட்ட பைக்கைப் பார்த்துப் புன்னகைத்த பாச்சா, “தீபாவளியெல்லாம் வாரத்துக்கு ஒருவாட்டி வருமாய்யா? இதுதான் அரசியல். அதுவும் உட்கட்சி அரசியல்” என்றான்.

அர்த்தபுஷ்டியுடன் சிரித்த பைக், “அதுக்காண்டி அடுத்தடுத்த நாளும் ஆயிரக்கணக்குல லட்டு குடுக்குறதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான். நீயும் பேட்டி கீட்டின்னு என்னைக் கூட்டிட்டு வெட்டியா அலையுறதுக்குப் பதிலா ராயப்பேட்டையில வெடி கடையும் ஸ்வீட் கடையும் போட்டா வெற்றிகரமா வண்டியை ஓட்டலாம். கேட்டாத்தானே!” என்று அலுத்துக்கொண்டது. “ராயப்பேட்டைன்னா கூடவே சோடா பாட்டில், கருங்கல்னு ஸ்பெஷல் ஐட்டம்ஸை வச்சு வித்தா ஸ்வீட்டைவிட ஸ்பீடா சேல்ஸ் ஆகும்டா மெட்டல் மண்டையா” என்று சிரித்தான் பாச்சா.

“ரொம்பச் சிரிக்காத பாச்சா. நெக்ஸ்ட் மூவ் என்னன்னு தெரியாம எக்ஸ் சிம் வெக்ஸ் ஆகியிருக்காரு. இன்னிக்கு முதல் பேட்டியை அவர்கிட்ட எடுத்துடலாம் வா” என்று அவனைச் சுமந்துகொண்டு ஆகாயம் ஏகியது.

ஓபிஎஸ் இல்லம்.

‘அங்கே எனக்கோர் இடம் வேண்டும்...’ என்று அடிக்கடி ஒலிக்கும் ‘எங்கே நிம்மதி’ பாட்டைக் கேட்டபடி ஓவர் துக்கத்தில் இருந்தார் ஓபிஎஸ். பாட்டுக்கு ஏற்ற செட் போல வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு அவர் ‘ஒற்றை’யாக உலாத்திக்கொண்டிருந்தது உள்ளபடியே உள்ளத்தை உருக்கியது.

அப்போது அங்கு வந்த ஒற்றைத் தொண்டரிடம், “மனசு சரியில்ல. தேனிக்குப் போகணும். ஏற்பாடு பண்ணு” என்று உத்தரவிட்டுக்கொண்டிருந்த ஓபிஎஸ் முன் ஆஜரானான் பாச்சா.

“என்ன சார் இதுக்கே அசந்துட்டா எப்படி? அடுத்து சுப்ரீம் கோர்ட் இருக்கு. அட அதுவும் சரி வரலைன்னா டென்னிஸ் கோர்ட், ஃபுட் கோர்ட்னு எதாவது ஒரு கோர்ட்டுக்குப் போய் ட்ரை பண்ணிப் பார்க்கலாமே?” என்று கேட்க, ஒன்றும் பேசாமல் ஒருபக்கமாக டர்ன் பண்ணி தூண் ஒன்றில் சாய்ந்துகொண்டார் ஓபிஎஸ்.

விடாத கருப்பாக விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த பாச்சா, “ஒற்றை வார்த்தை ட்ரெண்டு காட்டுறதா ட்விட்டர்ல ‘தொண்டர்கள்’னு போட்டீங்க. ஆனா, ஒற்றைத் தொண்டர்தான் உதவிக்கு இருக்கார் போல. எஞ்சியிருந்தவங்கள்லாம் எடப்பாடி பக்கம் போய்ட்டாங்களோ? தொண்டர்கள் பெருக்கெடுத்து ஓடிவருவார்கள்னு கிறுக்கெடுத்து ஓடிவந்தேன் நான்” என்று வைரமுத்து பாணியில் கேட்டதும் துணுக்குற்று தூணிலிருந்து விலகிவந்த ஓபிஎஸ், “ஒரு தொண்டரோட மனசு இன்னொரு தொண்டருக்குத்தான் தம்பி தெரியும். நானே புரட்சித் தலைவி, இதய தெய்வம், மரணத்தில்கூட சந்தேகம் இல்லாத மாபெரும் ஆளுமையாம் அம்மாவோட தூயத் தொண்டன்தான். என் பக்கம் இருக்கிறதெல்லாம் தொண்டர்கள்தான். அந்தப் பக்கம் இருக்கிற எல்லாரும் குண்டர்கள்” என்றார் துக்கத்தை மறைத்தபடி.

“அரசியல்னா எதிர் முகாம் ஆட்களை ஏளனம் பண்றது பாரம்பரியமா பண்ணுறதுதான். அதுக்காக குண்டர்கள்னெல்லாம் சொல்லி பாடி-ஷேமிங் பண்றது சரியா சார்?” என்று கேட்டான் பாச்சா.

“பார்ட்டி பாடியையையே... அதாவது கட்சி அமைப்பையே சிதைச்சு பாடி-ஷேமிங் பண்றது அவங்கதான் தம்பி. நான் ஒற்றைத் தலைமைக்கெல்லாம் ஆசைப்படலைங்கிறதை முதல்ல புரிஞ்சுக்க. ஒற்றுமைத் தலைமைதான் என் பாலிஸி. எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும். சமாதானமாப் போகணும்ங்கிறதுதான் என் எல்ஐசி” என்றார் ஓபிஎஸ்.

“அதெல்லாம் சரிதான். அதுக்காக, திமுககாரங்ககூட எல்லாம் ஓபிஎஸ் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கிறதுதான் கொஞ்சம் ஓவரா இருக்குன்னு ஈபிஎஸ் வட்டாரம் எரிஞ்சு விழுதே? உங்களுக்கும் திமுகவுக்கும் இருக்கிறது ஒட்டு உறவா இல்லை ஓட்டு உறவா சார்?” என்று அடுத்த வெடியைப் போட்டான் பாச்சா.

“இதெல்லாம் அரசியல் நாகரிகம் இல்லாதவங்களோட கற்பனை தம்பி. நான் என்னைக்குமே தர்மத்தின் பக்கம் நிக்கிறவன். தர்மயுத்தம் நடத்தி டிஎம்கேகாரங்ககிட்ட இருந்தே ஆதரவு வாங்கி ட்ரெண்ட் பண்ணினவன். இதெல்லாம் இடைக்கால இன்பத்தை அனுபவிக்கிறவங்களோட ஏகடியம். எதிர்காலம் என் கையிலதான்” என்றார் ஓபிஎஸ்.

“தனிஒருவரா தமிழ்நாட்டையே கலங்கடிச்ச தர்மயுத்தத்தை மறக்க முடியுமா சார்! என்ன ஒண்ணு... அப்ப ஒரு ‘குரு’ வழிகாட்டினார். இப்ப ‘விஸ்வகுரு’ கூட உங்களுக்குத் தண்ணி காட்டுறார். அதான் வித்தியாசம். சரி விடுங்க. இந்த ஒற்றுமையைக் கவனிச்சீங்களா? உங்களுக்குச் சாதகமா தீர்ப்பு வழங்கியது கூட தனி நீதிபதிதான். அப்படீன்னா அரசியல்ல நீங்க தனிச்சு விடப்பட்டுட்டீங்கன்னு சிம்பாளிக்கா எடுத்துக்கலாமா?” என்று பாச்சா கேட்டதும் பொறுக்க முடியாத ஓபிஎஸ் புகழேந்திக்கு போன் போட்டார்.

அதற்குப் பின்னே அங்கே நிற்க பாச்சாவுக்குத் துணிச்சல் வருமா என்ன?

“அடுத்து அமைச்சர் எ.வ.வேலு” என்று பட்டியல் வாசித்த பறக்கும் பைக், “இவர் பத்திரிகைக்காரங்க என்ன கேட்கணும்னு உத்தரவு போடுற அமைச்சராச்சே? பேட்டி ஏட்டிக்குப் போட்டியா இருக்குமே... அவசியம் போகணுமா?” என்று கேள்வி ஒன்றையும் போட்டது.

“கன்டென்ட் யார் கொடுத்தாலும் அவங்க நமக்குக் கடவுள் மாதிரிப்பா. கவலைப்படாம வா” என்றான்.

அமைச்சர் இல்லம்.

பச்சை நிறத்தில் வேட்டி, துண்டு என்ன... செடி கொடிகூட இருக்கக்கூடாது என வாய்மொழி உத்தரவு வந்ததால், அங்கு நின்ற மரங்கள் ‘இலை’கள் இன்றி காணப்பட்டன. சில மரங்களின் இலைகள் கருப்பு - சிவப்பு நிறத்தில் காணப்பட்டன.

அமைச்சரைக் காண வருபவர்கள் சொந்த வீடு இருக்கிறதா எனச் ‘சோதிக்கப்பட்ட’ பின்னரே அனுமதிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டதால், வாடகை வீட்டில் (அறையில்!) தங்கியிருக்கும் பாச்சாவுக்கு பக்கென்று இருந்தது.

“அதெல்லாம் அறப்போராட்டம் பண்றவங்களுக்குத்தான் பொருந்தும் பாச்சா. நாம அக்கப்போர் பண்ற ஆளுங்கதானே!” என்று தைரியம் கொடுத்தது பறக்கும் பைக்.

“எது? தேர்தல் அறிக்கையில சொல்லியிருந்துச்சா? திமுககாரங்க அதை நிறைவேத்தணுமா? தேர்தல் அரசியல்னாலே என்னான்னு தெரியாதவங்க வைக்கிற கண்டிஷனுக்கெல்லாம் நாம பதில் சொல்ல வேண்டியதில்லை. போனை வைப்பா” என்று கலைஞர் காலத்துத் தொண்டர் ஒருவரைக் கடிந்துகொண்டபடி காரில் ஏறப்போனார் எ.வ.வேலு.

“சார், இந்தக் கேள்விக்காச்சும் பதில் சொல்லுங்க” என்றபடி பாய்ந்து சென்ற பாச்சா, “இன்னைக்கு இருக்கிற கார் எண்ணிக்கைக்கு தார் ரோட்டையெல்லாம் தாராளமா விரிவுபடுத்தித்தான் ஆகணும்னு ஒரு அரிய கருத்தைச் சொல்லியிருக்கீங்க. ஊருக்குள்ள மழை பெஞ்சா ரோடெல்லாம் சேறா ஆகி நடந்துபோறவங்களுக்குக் கூட ஆக்ஸிடென்ட் ஆகி ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருக்கு. அதுக்கெல்லாம் ‘கொள்கை முடிவு’ எடுக்க உங்க கட்சிக் கொள்கை இடம் கொடுக்குமா?” என்று கேட்டான்.

“உங்களுடைய மனதிலே எண்ணிக்கொண்டிருக்கிற எண்ணத்தை நான் பதிலாகச் சொல்ல முடியாது. எங்களுடைய மனதிலே என்ன இருக்கிறது என்பதையே நாங்கள் இன்னமும் முடிவுசெய்யவில்லை என்பதால்...” என்று ஏதோ சொல்லவந்த எ.வ.வேலு வழக்கம்போல எரிச்சலடைந்து காரில் ஏறினார்.

“எல்லாம் சரி சார். ‘கார் யாருக்காகப் போகுது? மக்களுக்காகக் போகுது’ன்னு கருத்தா ஒரு கருத்து சொன்னீங்களே. அதுல பரந்தூர் மக்களுக்கும் பரந்த இடம் இருக்கும்ங்களா?” என்று கேட்க, அமைச்சரின் கார் வேகமெடுத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in