ஆளுங்கட்சிக்காரங்களுக்கு ‘டேஸ்ட்’ தெரியாது!

ஆவேசம் கொண்ட சீமான்
ஆளுங்கட்சிக்காரங்களுக்கு ‘டேஸ்ட்’ தெரியாது!
- ஓவியம்: வெங்கி

அன்றைய பொழுது எந்த அசம்பாவிதமும் இல்லாமல் ஆனந்தமாக விடிந்தது. ஆனபோதும், அன்றைக்கும் வழக்கமான பதற்றத்திலேயே இருந்தது பறக்கும் பைக். “நான் குண்டக்கமண்டக்கன்னு ஏதாவது குறும்பு பண்ணுவேன். நீ கோபத்துல குமுறுவ. இன்னிக்கு அப்படி ஒண்ணுமே நடக்கலை... ஒருவேளை சகுனம் சரியில்லையோ?” என்றது பறக்கும் பைக். “பகுத்தறிவோட சிந்திக்கணும்டா பைக் பையா! பீதிக்கு நடுவுல பேட்டி எடுத்தாலும் பாடிக்குச் சேதாரம் இல்லாம பறந்து வந்துடறோம்ல? அப்படின்னா, அமைதியான சூழல்ல வேலைய ஆரம்பிச்சா, அபாயம் இல்லாம அப்ஸ்காண்ட் ஆகிறதுக்கு வாய்ப்பு இன்னும் அதிகம்தானே? பாசிட்டிவ்வா யோசிச்சுப் பழகு” என்றான் பாச்சா.

“பகுத்தறிவு சிந்தனையோ, பாசிட்டிவ் எனர்ஜியோ... அதெல்லாம் மனுஷங்க சமாச்சாரம். எனக்குத் தெரிஞ்ச ஒரே வேலை பறக்கிறது மட்டும்தான்” என்றது பைக். “அப்ப அதை ஒழுங்கா செய்” என்று அதைப் பணித்து, அன்றைய பணிக்குத் தயாரானான் பாச்சா.

முதலில் சீமான்.

“நீங்க வீரவுரை ஆத்துற வீடியோவுல வடிவேலு வாய்ஸை மிக்ஸ் பண்ணி வெக்ஸ் ஆக்கியிருக்காங்க”, “திமுககாரங்க தினப்படி அர்ச்சனை பண்ணியிருக்காங்க” என்றெல்லாம் அன்றாட அறிக்கையை எடுத்து அண்ணனுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்கள் அன்புத் தம்பிகள். அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தியவாறு அண்ணாந்து சிந்தித்துக்கொண்டிருந்த சீமான், “அண்ணாமலை மறுபடியும் உங்களை பங்கம் பண்ணியிருக்கார்” என்று ஒரு தம்பி சீற்றத்துடன் சொன்னதும் சிந்தை கலைந்தார்.

அந்த நேரம் பார்த்து பாச்சாவும் உள்ளே நுழைய, சிவந்த கண்களுடன் சீட்டில் சாய்ந்துகொண்டார் சீமான்.

“ஆமா சார். ஆமைக் கறி அது இதுன்னு அநியாயத்துக்கு வாரியிருக்கார் அண்ணாமலை” எனப் பிரவேசித்த நொடியிலேயே பிரச்சினையை... மன்னிக்கவும் பேட்டியை ஆரம்பித்தான் பாச்சா.

பேட்டி தொடங்குகிறதா என்பதற்கான சிக்னலே சீமானிடமிருந்து வராததால், “சிக்கல்ல மாட்டிக்கிட்டோமோ” எனும் சீரிய(ஸ்) சிந்தனை பாச்சாவைப் பற்றிக்கொண்டது.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் சீறத் தொடங்கினார் சீமான்.

“அண்ணாமலைக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக்க ஆசைப்படுறேன். ஐபி-யைக் கையில வச்சிருக்கிற அமித் ஷாவுக்கு வேணும்னா இந்தச் சீமான் லைட்டா பயப்படுவான். ஆனா, ஐபிஎஸ் ஆபீஸரா இருந்தார்ங்கிறதுக்காக அண்ணாமலைக்கெல்லாம் பயப்பட வேண்டிய அவசியம்... இதுவரைக்கும்... ஏற்படலை” என்றார் ஆணித்தரமாக.

“ஆனாலும், இந்த ஆமைக்கறி சமாச்சாரத்தை அனைத்துக் கட்சிக்காரங்களும் ஆயுதமா எடுத்துக்கிறது உங்களுக்கு அன்கம்ஃபர்ட்டபிளா இல்லையா?” என்றான் பாச்சா, விடாக்கண்டனாக!

“ஆமைக்கறி பத்தி சொன்ன வாய்வழி வரலாற்றுத் தகவல்கள் தமிழர் வயிறுகளுக்கு... மன்னிக்கவும் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திருக்குன்னு ஹார்வர்டு பல்கலைக்கழக ப்ரொபஸர் ஹாங் ஜி சொல்லிருக்கார். இன்னொரு விஷயம் சொல்றேன்.. ஏர்போர்ட்ல என்னைச் செக் பண்ற சீனியர் அதிகாரிகள் பலர் என் செல்லத் தம்பிகள்தான். ‘நம்ம ஆட்சி அமைஞ்சதும் கறி இட்லியைக் காலைச் சிற்றுண்டியா அறிவிச்சிடணும்ணே’ன்னு கண்கலங்க அவங்க கேட்கிறது எனக்கு மட்டும்தான் கேட்கும். எதிர்க்கட்சிக்காரங்க... அதாவது ஆளுங்கட்சிக்காரங்களுக்கு, அதாவது பாஜக, திமுகவுக்கு அந்தளவுக்கு ‘டேஸ்ட்’ தெரியாது” என்றார் சீமான்.

“பின்னே? அது சீமானுக்கு மட்டுமே தெரிஞ்ச சீக்ரெட் ரெசிப்பியாச்சே! அதை விடுங்க... ஏற்கெனவே உங்ககிட்ட கேட்டதுதான். ‘நானே நல்லாட்சி தரும்போது எதுக்கு உள்ளாட்சி?’ன்னு கேட்டவர் நீங்க. இப்ப ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல தனித்துப் போட்டின்னு உற்சாகமா அறிக்கை விடுறீங்களே? மக்கள் நம்புவாங்களா?” என்றான் பாச்சா.

“நம்பாமலா நம்பர் 3 பொசிஷனை எங்களுக்குக் குடுத்திருக்காங்க? நாங்க தனிச்சு நிப்போம். நல்லா அடிச்சுப் பேசுவோம். ஓட்டைப் பிரிச்சுக் காட்டுவோம்... ஸாரி, புடிச்சிக் காட்டுவோம். இதுதான் எளிய தமிழ்ப் பிள்ளைகளோட எனிடைம் கொள்கை... போதுமா?” என இருகரங்களையும் இறுகக் கூப்பி வழியனுப்பினார்.

“அடுத்து யாரு அண்ணாமலை தானே?” என்று பைக்கிடம் கேட்டான் பாச்சா. “ஆமா, இன்னைய தேதிக்கு இவங்க ரெண்டு பேருக்கும்தானே போட்டி. அப்படின்னா அவருக்கப்புறம் இவர்தானே!?” என்று சிரித்தது பைக்.

ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுவிட்ட களிப்பில் இருந்தது கமலாலயம்.

மணிக்கொரு தடவை மளமளவென பேட்டி கொடுத்தாலும் மனம் தளராமல் மலர்ந்த முகத்துடன் இருந்தார் மல... அண்ணாமல!

“ஏர்போர்ட்டுக்கே போய் கவர்னரை வரவேற்றுவிட்டார் ஸ்டாலின். அப்புறமென்ன, இனி ‘சமாதானம்’தானே?” என்று முதல் கேள்வியாகக் கேட்டான் பாச்சா.

“நீங்க என்ன உள்நோக்கத்தோட இப்படிக் கேட்கிறீங்கன்னு தெரியலைங்ணா. ஆனா, நிச்சயமா நா அடிச்சு சொல்வேன். இனி தமிழ்நாடு... ஸாரி தமிழக அரசு நாங்க நினைக்கிற மாதிரி நல்ல திசையை நோக்கிப் போகும். அதை அமித் ஷா டைரக்ட் பண்ணுவாரு. ஆர்.என்.ரவி டைரக்ட்டா பண்ணுவாரு” என்று அகமகிழ சொன்னார் அண்ணாமலை.

“சரி... எந்த ப்ளானையும் ப்ளான் பண்ணித்தானே பண்ணுவீங்க! ஆனாக்கா, சமூக நீதி பத்தியெல்லாம் இப்ப சகஜமா பேச ஆரம்பிச்சுட்டீங்களே? பெரியார் பர்த்டேவை மோடியும் ஷேர் பண்ணிக்கிறதாலே அதைப் பத்திப் பேசலாம்னு அமித் ஷா ஆலோசனை சொல்லிட்டாராக்கும்!?” என்றான் பாச்சா.

“சமூக நீதிக்கு ஒரே ஒரு நாளை ஒதுக்கும் கட்சி இல்லீங்ணா நாங்க. வருஷம் முழுக்க... ஏன் வாழ்க்கை முழுக்க சமூக நீதிதான் எங்களுக்குக் கொள்கை” என்று இறுமாப்புடன் சொன்னார் அண்ணாமலை.

“ஆமா பின்னே? சமூகம், நீதி எல்லாம் உங்க கட்டுப்பாட்டுலதானே இருக்கு!?” என்று பாச்சா சொன்னதைக் கேட்டு ஆமோதிப்பாகத் தலையாட்டிய அண்ணாமலை, ஏதோ உள்குத்து என உணர்ந்து, “என்ன சொல்ல வர்றீங்கண்ணா?” என்று கேட்கும்போது எஸ்கேப் ஆகியிருந்தான் பாச்சா.

அடுத்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

நிதிப் பிரச்சினைகளைக் காட்டிலும், நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன்வரை பாஜகவினருக்குப் பதில் சொல்வதிலேயே பாதி நேரத்தைச் செலவழிக்கும் பழனிவேல் தியாகராஜன், பாச்சா வந்ததைக் கவனிக்காமல், ஜிஎஸ்டி கூட்டம் நடத்தப்பட்டது தொடர்பாகக் கால்குலேட்டர் வழியாகக் கண்டன அறிக்கையை டைப் செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தார்.

“ஜிஎஸ்டி கூட்டத்துக்கு ஏன் போகலைன்னு கேட்டா, ‘ஜி’யே வெட்கப்படுற அளவுக்கு ரீசன்ட் ஸ்டைல் ரீஸன் சொல்லியிருக்கீங்களே... இதுவரைக்கும் அப்ரப்ட்டா ஆப்சென்ட் ஆன ஸ்கூல் பசங்ககூட லீவ் லெட்டர்ல இப்படி ஒரு ரீஸன் சொன்னதில்லை சார்! ஒய் அண்ட் ஹவ் டிட் யூ டூ தட்?” என்று அமைச்சரைப் பார்த்ததும் அரைகுறை ஆங்கிலத்துக்குத் தாவினான் பாச்சா.

“நாங்க ஆல்ரெடி... ஏற்கெனவே டோல்டு தட், இப்படி 10 நாளைக்கு முன்னாடி படார்னு சொன்னா திடுதிப்புன்னு திட்டம் போட முடியாதுன்னுட்டு. அது இம்பாசிபிள்! அப்புறம் ஒன்றரை வருஷமா ஆன்லைன் க்ளாஸ் அட்டெண்ட் பண்ணிய அனுபவம் உள்ள ஆனானப்பட்ட ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸே க்ளாஸ் ஓப்பன் பண்ணினதும் தடுமாறுறாங்க. எங்களுக்கு அந்த அளவுக்குக்கூட எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது. அப்புறம் எப்படி எங்களை எதிர்பார்க்க முடியும்? திஸ் இஸ் தப்பு” என்றார் நிதியமைச்சர்.

“சரிதான் சார். லாட் ஆஃப் தேங்க்ஸ் சார். ஹார்ட்டி ஸ்மைலி லைக்ஸ் சார்” என்று சல்லிசல்லியா(!) நொறுங்கிய ஆங்கிலத்தில் அமைச்சரிடமிருந்து விடைபெற்றான் பாச்சா.

Related Stories

No stories found.