என் பெயின்டிங்குக்காக அப்பா வெயிட்டிங்!

அன்புமணியின் அடுத்த திட்டம்
என் பெயின்டிங்குக்காக அப்பா வெயிட்டிங்!
ஓவியம்: வெங்கி

பாச்சாவுக்கும் பறக்கும் பைக்குக்கும் அன்று ஏகக் குழப்பம். டிவி சேனல் ஒன்றில் அண்ணாமலை பேசும் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. “வரவிருக்கின்ற 2026 தேர்தலில் 150 எம்எல்ஏக்களைப் பெற்று கோட்டையில் அமருவோம்” என்று ஆவேச சபதம் செய்கிறார் அண்ணாமலை. சேனலை மாற்றினால், “அன்புமணியைக் கோட்டையில் அமர வைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால்...” என்று அதட்டுகிறார் ராமதாஸ். இரண்டே சேனல்கள். இரண்டே உரைகள்... மீண்டும் மீண்டும் வருகின்றன. “அடடா! ‘மாநாடு’ ஸ்டைல்ல ‘டைம் லூப்’புக்குள்ள மாட்டிக்கிட்டோம் போலிருக்கே... ரெண்டையும் மாத்தி மாத்தி கேட்டா மண்டையே வலிக்குதே” என்று அரற்றினான் பாச்சா.

“யோவ்! ‘டைம் லூப்’னு ஒண்ணு இருந்தா ‘டைம் லூப்ஹோல்’னு ஒண்ணு இருக்கணும்ல. வா அதுக்குள்ளே புகுந்து எஸ்கேப் ஆகலாம்” என்றது பறக்கும் பைக். அதன்படி, இருவரும் எப்படியோ போராடி வெளியே வந்தார்கள். பார்த்தால், அங்கு அமைதிப் புன்னகையுடன் அன்புமணி நின்றுகொண்டிருந்தார்.

பின்னணியில் உலகப் பிரமுகர்களின் உருவப்படங்கள் அடங்கிய பிரம்மாண்ட ஓவியம். “வாங்க வாங்க... இதுல இருக்கிற ஆளுமைகள் அகில உலகத்துலயும் அரும்பெரும் சாதனைகள் பண்ணினவங்க...” என்று சொன்ன அன்புமணி, “இந்த பெயின்ட்டிங்ல நானும் இடம்பெறணும்னு அப்பா வெயிட்டிங்” என்று அடக்கத்துடன் சொன்னார்.

“அவர் பேசுற பேச்சையெல்லாம் கேட்டா, வெயிட்டிங்கைவிட பைட்டிங் மோடுதான் அதிகமா தெரியுது... இந்த தடவை பாமகவுக்குள்ளேயே கூட்டணிக் குழப்பம் வந்துடுமோங்கிற அளவுக்கு கூண்டோட பல பேர் கழகங்களை நோக்கி கட்சி மாறிட்டு இருக்காங்களே” என வந்த இடத்தில் வம்பைத் தொடங்கினான் பாச்சா.

“எப்படியாவது ஜெயிக்கலாம்னு ஏகப்பட்ட வேலைகள் பார்த்தாலும் எலெக்‌ஷன்ல எதிர்பார்க்கிற ரிசல்ட் வர்றதில்லை. கட்சிக்காரங்க கனஜோரா வேலை பார்த்தால்தானே நாங்களும் ஆட்சிக்கு வர முடியும்? நாங்க கஷ்டப்பட்டு கட்சியை நடத்துறோம். எங்களுக்கு என்ன பேக்ரவுண்டு இருக்கு, சோர்ஸ் இருக்கு? நாங்க என்ன பெரிய பெரிய தொழிற்சாலை வெச்சிருக்கோமா?” என்றார் அன்புமணி.

“அதான் எலெக்‌ஷனுக்கு எலெக்‌ஷன் கூட்டணி வைக்கிறீங்கள்ல?” என்றான் பாச்சா.

உர்ரென வந்த கோபத்தை உள்ளுக்குள் இழுத்துக்கொண்ட அன்புமணி, “அதான் உள்ளாட்சித் தேர்தல்ல வைக்கலையே? தனியாத்தானே நின்னோம்?” என்றார்.

“எப்ப யாருகூட கூட்டணின்னு தெரியாம, எந்தக் கட்சிக்காரங்ககூடயும் சகஜமாப் பழக முடியாம தொண்டர்கள்லாம் துவண்டுபோய்ட்டா தோல்வியை எப்படி சார் தவிர்க்க முடியும்?” என்று ஆதங்கத்துடன் அடுத்த கேள்வியைப் போட்டான் பாச்சா.

“தொண்டர்களுக்குத் தோள் கொடுத்து, நிர்வாகிகளை நிமிரச் செய்து அடுத்த தேர்தலிலே...” என்று மெலிதான மேடைப்பேச்சு பாணிக்கு அன்புமணி தாவியபோது, “அடப் போங்க சார். கட்சிப் பணிகள்ல கவனம் செலுத்தலைன்னா மாடு மேய்க்கிற பசங்களுக்கு மாவட்டப் பதவி போய்டும்னு அப்பா அரட்டிட்டு இருக்கார். ரெண்டு பேரும் ரெண்டு விதமா பேசுறீங்கன்னு பொதுவெளியில பேச்சு வந்துடுச்சே” என்று கேட்ட பாச்சா,

அதுவரை அன்பாகப் பேசிக்கொண்டிருந்த அன்புமணி ஆவேசமாகும் அறிகுறி தெரிந்ததும் அரக்கப்பரக்க அங்கிருந்து அகன்றான்.

அடுத்தவர் சீமான்.

மோடியின் சார்பாகத் தன்னைச் சந்திக்க வந்த சீக்கியரிடம் சினத்துடன் சீறிய கதையை, முப்பதாவது முறையாகத் தம்பிகளிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “சீமான் வர்ர்ணும்...” என்று சிங் பாணியில் அங்கதமாகச் செந்தமிழன் பேசுவதைக் கேட்டு, தம்பிகள் கைத்தட்டி ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

“சரியாப்போச்சு போங்க. உங்களை பாஜகவுல சேர்த்து முதல்வராக்கிடுவாங்கங்கிற ரேஞ்சுக்கு ஒரு க்ரூப் கதை பண்ணிட்டு இருக்கு. நீங்க அதுக்குத் தீனி போடுற மாதிரி சிங்கு கதையையே சொல்லி சிரிச்சிட்டு இருக்கீங்களே?” என்றான் பாச்சா.

மூண்டெழுந்த கோபத்தீயை மூக்கைத் தேய்த்து முடக்கிய சீமான், “இதையெல்லாம் போய் திமுககாரங்ககிட்ட கேளுப்பா. சும்மா ‘ஒன்றியம்’னு ஒரே வார்த்தையை வச்சு, வந்ததுல இருந்து ஓரங்க நாடகம் போட்டுட்டு இருக்காங்க. அதான் பாஜகவுக்குப் ‘பக்கா’வாத்தியமா இருக்கிற மாதிரி அடுத்து அடுத்து அவங்க நடவடிக்கையெல்லாம் இருக்கே?” என்றார்.

“கரெக்ட் சார். தமிழகமே... மன்னிக்கவும் தமிழ்நாடே அதைத்தான் பேசிட்டு இருக்கு” என்ற பாச்சா, “வாடகைக்கு வீடு கிடைக்காததையெல்லாம் வரலாற்றுத் துயரம் லிஸ்ட்லே சேர்த்து வருத்தமா பேசியிருக்கீங்களே? இந்தத் துயரத்தையெல்லாம் தம்பிகள் எப்படித்தான் தாங்குறாங்களோ?” என்று பச்சாதாபத்துடன் பாச்சா கேட்டதும் பாச மூடுக்கு மாறிய சீமான், “பாருப்பா... நாட்டை ஆளத் துடிக்கிற எனக்கு வீட்டைக் கொடுக்க யாருக்கும் மனசு வரலை. எடுத்துச் சொன்னா யாருமே நம்ப மறுக்குறீங்க... இதுதான் தீய திராவிடக் கட்சிகளால சொந்த மண்ணுக்கு ஏற்பட்டிருக்கிற சோகம்” என்று உடைந்த குரலில் கூறினார்.

“அந்த சோகத்தையும் மீறி, மழை வெள்ளத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுற சொந்தங்களுக்கு பாசமுத்தம் கொடுக்கிறதா சொல்றீங்க... க்ரேட் சார். ஆனா, நாதக தம்பிகளே உதவுறாங்களா... இல்லை, உதவுற தம்பிகளை உங்க தம்பிகளா சம்பந்தப்படுத்திக்கிறீங்களா?” என்று பாச்சா கேட்டதும், “இரு இரு... வாடகைக்கு ஒரு வீடு சிக்குச்சி. நீ செத்தே” என்று சிரித்தபடியே சொன்னார் சீமான்.

உதறலெடுக்க உடனடியாக உத்தரவு வாங்கிக்கொண்ட பாச்சா, அடுத்து உதயநிதி இல்லத்தில் தரையிறங்கினான்.

“ஒவ்வொரு மாசமும் பர்த்டே வந்தா நல்லாருக்கும்னு பேசிருக்கீங்களே... அப்படீன்னா சீக்கிரமா வயசு ஏறி இளைஞரணிச் செயலாளர் பதவியில இருந்து இறங்க வேண்டியிருக்குமே?” என்று கேட்டு, உற்சாகத்தில் இருந்த உதயநிதியிடம் ஒரண்டை இழுத்தான்.

“ஒவ்வொரு மாசமும் நலத்திட்ட உதவி பண்ணலாம்னு ஒரு ப்ளோவுல சொல்லிட்டேன். ஏன் செய்யக்கூடாதா?” என்று சலித்துக்கொண்ட உதயநிதியை, “நலத்திட்ட உதவி செய்ற அளவுலேயே மக்களை வச்சிருக்கீங்களேன்னு உள்ளுக்குள்ள ஒரு உறுத்தல் இருக்கணுமே. சரி அதைவிடுங்க, ஆழ்வார்பேட்டையில இருந்துக்கிட்டே ஆழ்வார்பேட்டை ஆண்டவரை ஆழம்பார்க்கிற மாதிரிப் பேசுறீங்களே... அடுத்தப் படத்துல அவர் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரா?” என்று மீண்டும் சீண்டினான் பாச்சா.

“ரிலீஸாகாத சினிமாவையெல்லாம் ரிலீஸாக வச்சு அழகு பார்க்கிற என்கிட்ட ‘ரிப்பீட்’ மோடுல கேள்வி கேட்டு கோபப்படவைக்காதே... நான் கோபாலபுரத்துக்காரன்” என்றார்.

“ஏரியாவுல என்ன சார் இருக்கு... ஏரி, குளம் நிரம்பி வெள்ளம் வர்றதைத் தடுக்க ஏதாச்சும் வழிபண்ணுங்க” என்று எடுத்து இயம்பிய பாச்சா, ஏதோ நினைவுவந்தவனாக, “அம்மா உணவகத்தைக் கலைஞர் உணவகமா மாத்துற ஐடியாவுல உங்க கட்சிக்காரங்க அலம்பல் பண்றாங்களே... டைம் லூப், டைம் ட்ராவல்னு ஏதாச்சும் எசகுபிசகாகி எதிர்காலத்துல நீங்க சிஎம் ஆகிட்டீங்கன்னா... ‘மூன்றாம் கலைஞர் உணவகம்’னு பேர் மாத்திடுவீங்களா?” என்று கேட்க, “அண்ணா... பாபுண்ணா, இவரு ஏதோ மனு கொடுக்க வந்திருக்கார்... என்னன்னு கேளுங்க” என்று உதயநிதி சவுண்டு விட, பைக்கை அங்கேயே விட்டுவிட்டு பாய்ந்தோடினான் பாச்சா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in