‘எலீட்’ உறவினர் இல்லத் திருமண விருந்தில் ஓர் எளியவன்!

கட்டைப் பைகளுடன் கல்யாணத்துக்குச் சென்றுவந்த சாமானியனின் அனுபவம்
‘எலீட்’ உறவினர் இல்லத் திருமண விருந்தில் ஓர் எளியவன்!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இதை ஏதோ உயர்தர மக்களை எள்ளி நகையாடும் கட்டுரையாகவோ, சம்பாதிக்க தெரியாதவனின் வயிற்றேரிச்சலாகவோ, பிழைக்கத் தெரியாதவனின் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவோ கருத வேண்டாம். (அப்படி எண்ணினாலும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கக்கூடும். என்னதான் நீதி, நேர்மை, நியாய கலவையை வாழ்வியலில் எதிர்பார்த்தாலும் ஒரு டிபிக்கல் அரசியல்வாதி அந்நியநாட்டு வாகனத்தில் வெண்மையாக சிரித்துக்கொண்டே செல்லும்போது, “நல்லா சம்பாதிச்சிட்டார்” என்று சொல்லி நம்மையறியாமல் அவர் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்து வைத்த சொத்துக்கு முறையான வருமான வரி கட்டிவிடுகிறோம். செல்வம் குறைகளை மறைக்கும் நவீன கருவி என்றாலும் நல்வழியில் சம்பாதித்து பண்ணை வீட்டில் சமாதியான மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடைப்பு குறிக்குள் இவ்வளவு அடைத்திருக்க வேண்டாம் தான்!)

எல்லோருக்கும் உச்சபட்ச செல்வந்தர்கள் உறவினர்களாக இருக்கக்கூடும். அப்படி ஒரு உறவின் திருமணத்துக்குத்தான் சென்றிருந்தேன். திருமணம் சென்னையில் என்பதால் வீட்டில் பெரியவர்கள் பின்வாங்க, வாரிசுகளான நாங்கள் மட்டும் சென்றோம்.

திருமணம் நடந்தது சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில். அங்கு பெரும்பாலும் நடிகர், நடிகைகளுக்குத் திருமணம் (நடிகை என்றால் தொழிலதிபருடன் நடக்கும். நடிகர் என்றால் தொழிலதிபரின் மகளுடன் நடக்கும்) நடக்கும் பெரிய ஹால். திருமணத்துக்கு முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சி. ‘கல்யாணத்துக்கு முதல் நாளே பொண்ணும், மாப்பிள்ளையும் பக்கத்துல பக்கத்துல நிக்கிறதா?’ என்று முணுமுணுத்த சொந்தங்கள் வரவேற்புக்கு முதல் ஆளாக நிற்க தவறவில்லை. நெருங்கிய சொந்தம் எல்லாம் நானூறு கிலோமீட்டருக்கு அப்பால் இருந்ததால் அனைவர்க்கும் முதல் நாளே சென்னையின் நட்சத்திர ஹோட்டலில் அறை போடப்பட்டு இருந்தது.

நட்சத்திர அந்தஸ்து அறியாத நாங்கள் கையில் ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் கட்டைப் பையுடன் அன்ரிசர்வ்டு ரயிலேறி சென்னையில் வந்திறங்கினோம். எங்களை அழைத்துச் செல்ல இன்னோவா தயாராக இருந்தது. எங்களைவிட இன்னோவா ஓட்டுநர் நீட்டாக இருந்தார். எட்டு பேர் உட்காரும் இன்னோவாவில் நெருக்கியடித்து ஒரு டஜன் பேர் தொற்றிக்கொண்டோம். எங்களில் ஒருவர் லக்கேஜை, சணல் கயிற்றின் உதவியால் வண்டியின் மேல் கட்ட முயற்சிக்க... வண்டி ஓட்டுநர் தலையில் அடித்தபடி ஏதோ செய்ய கார் டிக்கி தானாகத் திறந்துகொண்டது. அதில் கட்டைப் பைகளைத் திணித்தோம். கார் உறவினரின் வீடு நோக்கிச் சென்றது. ‘நல்ல குத்து பாட்டு இருந்தா போட்டு வுடுங்க’ என்று வீடு வரும் வரை ஓட்டுநரின் பொறுமையை முடிந்தளவு கைவிட்டுக் கிளறினோம்.

உறவினர் வீடு கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே அமைந்திருந்தது. வீட்டு மாடியில் நின்று பார்த்தால் கைக்கு எட்டும் தொலைவில் கடற்கரை. வீட்டு வாட்ச்மேன் கூட ஆசீர்வதிக்கப்பட்டவர் போல இருந்தார். உறவினர் எங்களை இதயபூர்வமாகவே வரவேற்றார். சிறுவயதில் இவரை ஊரில் பார்த்திருக்கிறேன். கலைந்த கேசம், பார்ப்பதற்கு எளிமையாக இருப்பார். அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். இப்போது தலை முழுவதும் வழுக்கை. முகத்தில் கூடுதல் ஒளி. அருகில் சென்றாலே ரெண்டாயிரம் ரூபாய் சென்ட் வாசனை. எங்கள் சிவகங்கை மாவட்ட கோஷ்டி சென்னை குழுவுடன் தனியாகத் தெரிந்தது.

காலை குளியல் முடிவதற்குள் வீடு ஒரு வழியாகிவிட்டது. எங்களோடு வந்த இன்னொரு கைலி, துண்டுடன் எதிரே உள்ள கடற்கரையில் குளிக்க ஆயத்தமானது. ‘பக்கத்துலயே கடல் மாதிரி என்ன கடலே இருக்கும் போது எதுக்கு பாத்துரூம்ல குளிக்கணும்?’ அவர்களை உறவினர் தடுத்து வீட்டுக்குள் குளிக்க வைக்க படாதபாடுபட்டார். ‘கல்யாணத்துக்கு ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துறணும்!’ என அவர்தான் வலியுறுத்தி சொன்னார். பாவம், தன்னையே நொந்துகொண்டிருந்திருப்பார்!

அதுநாள் வரை பெரிய மனிதராக அறியப்பட்ட ஒரு உறவு மெத்தையில் குதித்துக் குதித்து விளையாடியது. “உள்ள ஸ்ப்ரிங் இருக்கு மாப்ள! ஆட ஆட தூக்கிக் குடுக்குது பாரு!”

ஒருவழியாக காலைச் சாப்பாட்டை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு அனுப்பிவைத்தார். புறநகரில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் அது. மீண்டும் இன்னோவா காரில் இருந்து திமுதிமுவென்று இறங்கினோம். முதலில் இறங்கிய ஓட்டுனர் ஹோட்டலுக்குள் சென்று வரவேற்பறை பெண்ணிடம் எதோ சொல்ல அவர் ஏறிட்டு எங்களைப் பார்த்தார். அதற்குள் எங்கள் மற்றொரு தென்மாவட்ட பங்காளி வீட்டு சொந்தங்கள் இன்னொரு இன்னோவாவில் வந்திறங்கியது. அவர்களது கையில் ஏ.கே.அஹமது கட்டை பைகள். இவர் என்ன ஊர் என்பதை கையில் வைத்திருக்கும் ஜவுளிப் பைகளில் மூலம் அறிந்துவிட முடியும்.

கடைப் பெயர்கள் பொறிக்கப்பட்ட கட்டைப் பைகள் பெரியளவு கொண்ட அடையாள அட்டைகள் போன்றவை. இரு மாவட்டச் சொந்தங்கள் நலம் விசாரித்துக்கொண்டோம். பார்த்து பல வருடமாகிய சொந்தங்கள் எப்படி பேசிக்கொள்ளும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல வருடம் கழித்து பார்க்கிறோம் மற்றும் சென்னைக்கு வந்திருக்கிறோம் என்கிற கலவையான உற்சாக உணர்வில் சத்தம் போட்டு பேசிக்கொள்ள வாசலில் இருந்த வாட்ச்மேன் பதற்றமாக ஓடி வந்தார். ஏறி பார்த்துவிட்டு சென்றார்.

வெளியே வந்த ஓட்டுநர் எங்களை உள்ளே அழைத்துச் சென்றார். எங்கள் உடைமைகளுக்கும் புறச்சூழலுக்கும் சம்பந்தமே இல்லை. கொத்தாகச் சாவிகளை எடுத்துக் கொடுத்தனர். மூவருக்கு ஒரு அறை வீதம் அந்த தளத்தின் வலது பக்கம் உள்ள அனைத்து அறையிலும் எங்கள் வகையறாக்கள் ஆக்கிரமித்து இருந்தது. அறைக்குள் நுழைந்ததும் குளித்துவிட்டு வெளியே வந்த புத்துணர்வுடன் கூடிய நறுமணம். எல்லாம் வெண்மை மயமாக இருந்தது. அறைக்குள் எங்கள் நூற்றி இருபது ரூபாய் செருப்பை ஒரு ஓரமாக போட்டோம். அதுநாள் வரை பெரிய மனிதராக அறியப்பட்ட ஒரு உறவு மெத்தையில் குதித்துக் குதித்து விளையாடியது. “உள்ள ஸ்ப்ரிங் இருக்கு மாப்ள! ஆட ஆட தூக்கிக் குடுக்குது பாரு!” வெள்ளை மெத்தை உறையில் குதித்துப்போன உறவின் கால்தடம் பதித்திருந்தது. “இதுல என்ன அசிங்கம் இருக்கு மாப்ள? எல்லாத்துக்கும் தான காசு வாங்குறாய்ங்க!”

இன்டர்காமில் அழைத்தால் உணவு அறைக்கே வந்துவிடும் என்று உறவினரால் அறிவுறுத்தப்பட்டது. மணி பதினொன்று தான் ஆகியிருந்தது. எனிலும் போன் செய்தால் சரியாக சாப்பாடு வருகிறதா என்பதை ஆராய முதல் கட்டமாக ஒரு பழச்சாறு ஆர்டர் செய்யப்பட்டது. அரை மணி நேரமாகியும் வராததால் எங்களில் ஒருவர் கோபமாகி இன்டர்காமில் கத்திவிட்டு எங்களை பார்த்து சிரித்தார். “எவ்வளவு கத்தியும் அவனுகளுக்கு கோபமே வரமாட்டுது. இதுக்கும் சேர்த்துதான் காசு வாங்குறாய்ங்க போல” என்று நெகிழ்ந்தார். சிறிது நேரத்தில் ஒரு நேபாளி பழச்சாறு கொண்டு வந்து வைத்துவிட்டு ரூமை சுற்றி ஒரு பார்வை வீசினார். இவங்களிடம் மாட்டிய அறையை கடைசியாய் ஒருமுறை பார்த்துக்கொள்கிறேன் என்பது போல அந்த பார்வை இருந்தது.

சற்று நேரம் எதிரே இருந்த ராட்சஸ LED-யில் படம் பார்த்துக்கொண்டிருந்தோம். மதிய உணவு வேளை நெருங்கியிருந்தது. இதற்கிடையே உறவினர் நன்றாகச் சாப்பிடும்படி சொல்லி உசுபேற்றியிருந்தார். முதலில் மெனு கார்டைப் பார்த்துவிடுவோம் என்று இன்டர்காமில் சொல்லி மெனு கார்டை வரவழைத்தோம். பங்காளி சகட்டுமேனிக்கு ஆர்டர் செய்தான். “இதை ஆர்டர் பண்ணுறியே, என்னன்னு தெரியுமா?” என்றதற்கு, “அது என்னென்னு தெரிஞ்சுக்கத்தான் ஆர்டரே பண்ணுனேன்” என்றான். இதற்கிடையில் பக்கத்துக்கு அறைக்கு சென்று சக வகையறாக்கள் என்ன ஆர்டர் செய்கிறார்கள் என்ற ஆர்வம் வேறு. ஆர்டர் எடுத்தவர் அரை மணி நேரமாகும் என்றார்.

அதுவரை அறைக்கு வெளியே சற்று உலாவுவோம் என்று கைலியுடன் வெளியே வந்தோம். இரண்டு மூன்று வெள்ளைக்காரப் பெண்கள் எங்களை விநோதமாகப் பார்த்துவிட்டு அவர்களுக்குள் சிரித்துவிட்டு சென்றனர். வா என்னென்னு கேட்போம் என்று எகிறிய பங்காளியை அமைதிப்படுத்திவிட்டு உலாவினோம். தூசியே இல்லாமல் பளிச்சென்று எல்லாம் இருந்த இடத்தில் இருந்ததே ஆச்சரியமாக இருந்தது.

சற்று நேரத்தில் உணவு வந்துவிட்டது. என்னவென்று தெரியாத பல அயிட்டங்கள் இருந்தது. எல்லா உணவுகளும் பெரும்பாலும் சிக்கன் கலந்திருந்தது. உயர்ரக ஆங்கிலத்தில் இருந்த உணவுப் பதார்த்தம் ஒன்று உருளைக்கிழங்கு மசியல் என்று தெரிந்ததும் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆர்டர் செய்தது வீணாகப்போய்விடக் கூடாது என்கிற உணர்வு பங்காளிக்கு இருந்ததால் எதுவும் வீணாகாமல் உள்ளே சென்றது. ஏசி இப்போது பழகிய ஒன்றாக மாறிவிட்டாலும் அப்போது அறையில் இயங்கிய ஏசி அநியாயத்துக்கு எங்களை பாத்ரூமுக்கு முட்டித்தள்ளியது.

மாலைதான் வரவேற்பு நிகழ்ச்சி என்பதால் சாப்பிட்டுவிட்டு சற்று கண் அயந்தோம். “இனிமே யூரின் போக தெம்பில்ல, மொதல்ல அந்த கருமம் பிடிச்ச ஏசியை அமத்தி தொலைங்க” என்று பங்காளி கத்தியது எல்லோருக்கும் சரி என்று பட்டது. உண்மையில் அப்படி யார் சொல்லுவார் என்று பரஸ்பரம் காத்திருந்த உண்மை வெளிப்பட்டது.

மாலையில் அழைத்து செல்ல இன்னோவோ கார் தயாராக இருந்தது. முடிந்தவரை பான்ஸ் பவுடரை முகத்தில் ஏற்றி, தங்கிய ஹோட்டலுக்கு நியாயம் செய்ய முற்பட்டோம். கார் எங்களை அடைத்துக்கொண்டு வரவேற்பு நடக்கும் இடத்திற்கு சென்றது. வழி நெடுகிலும் சென்னை ஆச்சரியமாக இருந்தது. மண்டப வாயிலிருந்து உள் மண்டபம் அழைத்துச்செல்லும் வழி நெடுகிலும் எதோ ஒரு வெளிநாட்டு சோலைக்குள் புகுந்த உணர்வு. “இதுக்கே ரெண்டு ரூவா வந்திருக்கும் போலேயே” என்று பங்காளி காதுக்குள் கிசுகிசுத்தான்.

மிக பிரம்மாண்டமான திருமண ஹாலை அண்ணார்ந்து பார்த்தபடி உள்ளே நுழைந்தோம். மணமக்கள் சுத்தமான பூக்களால் சோடிக்கபட்ட கூண்டு போன்ற மேடையில் அமர வைக்கப்பட்டு இருந்தனர். உறவினரின் சம்பந்தி மெகா சீரியல்கள் எடுக்கும் தயாரிப்பாளர் என்பதால் சின்னத்திரை பிரபலங்கள் வரத்து அதிகமாக இருந்தது. அனைவரது கையிலும் பெரிய அளவில் காகிதம் சுற்றப்பட்ட பரிசுப் பொருட்கள். உள்ளிருக்கும் பரிசுப்பொருளை விட அது பேக்கிங் செய்த விதத்திற்கு அதிக செலவாகியிருக்க வேண்டும். நாலாயிரம் ரூபாய் பேசிக் ஆண்ட்ராய்டு போனில் எங்கள் தென் மாவட்ட உறவினர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். கதைப்படி ஒரு சீரியலில் ஆறு மாதமாக கோமாவில் பேஷன்டாக நடித்த நடிகையிடம் பங்காளி ஒருவன் நலம் விசாரித்துக்கொண்டிருந்தான். டிவியைத் திறந்தாலே அழுதுகொண்டிருக்கும் முகங்களை சிரித்த முகமாகப் பார்ப்பதே சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. அங்க பாரு விஸ்வா, இங்க பாரு சுந்தரம் என்று மெகாசீரியல் கதாபாத்திர பெயர்களை சத்தம் போட்டு சொல்லிக்கொண்டிருந்த பங்காளியை இழுத்துக்கொண்டு போய் சாப்பிடச் சென்றேன். பபே சிஸ்டம். செல்வந்தர்கள் தட்டேந்தி நின்றுகொண்டிருந்தத வரிசையில் நானும் பங்காளியும் சேர்ந்துகொண்டோம்.

பபே சிஸ்டத்தில் பறிமாறும் சிப்பந்திகள் மிகவும் பணிவாக இருந்தனர். இறந்து போன கோழிக்கே வலிக்காத அளவுக்கு இடுக்கி கம்பியில் சிக்கன்-65-யைப் பிடித்து பிளேட்டில் வைத்தனர். சமூகம் நின்றுகொண்டு சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்க்கும்போது இவர்களுக்குச் சாப்பாடு ஒரு பொருட்டே இல்லை என்பது போல தோன்றியது. எல்லாம் முடித்த பிறகு வந்த அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை உறவினர் அவரது கையால் வழங்கினார். பங்காளி வழக்கம் போல இரண்டு குடும்ப அட்டைக்கு இரண்டு தொகுப்பை வாங்கினான். தொகுப்பின் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறியும் ஆவலை ஓரளவே அடக்க முடிந்தது. அதே காரில் ரயில்வே ஸ்டேஷன் வந்தடைந்தோம். இடித்துக்கொண்டு மக்கள், புளிச்சென்று கண்ட இடங்களில் துப்பும் வாய்கள், கடும் இரைச்சல் என்று மீண்டும் பழைய உலகத்துக்குத் திரும்பியது போல இருந்தது. முன்பதிவு டிக்கெட் என்றாலும் அடித்துப்பிடித்துக்கொண்டு ஏறினோம்.

உறவினர் கொடுத்த தொகுப்பைக் காலுக்கு அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தபோது ரயில் பின்னோக்கிச் சென்றது. மற்றபடி கட்டுரையின் முதல் பாராவில் அடைப்புக்குறிக்குள் இடம்பெற்ற குறிப்புகளுக்கும் இக்கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கா.ரபீக் ராஜா, எழுத்தாளர், ‘ஒரு எளியவனின் குறிப்புகள்’ நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: rabeek1986@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in