கரைவேட்டி கறையானாலும் பரவாயில்லை.. ஜெயக்குமார் ஆவேசம்

கரைவேட்டி கறையானாலும் பரவாயில்லை.. ஜெயக்குமார் ஆவேசம்

சானா
readers@kamadenu.in

“இப்பல்லாம் செல்போனைப் பார்த்தாலே செம்ம காண்டாகுது. செல்ஃபி எடுக்கிறதுக்குத்தான் செல்போன் கேமரான்னு பார்த்தா, செல்ஃப் சூனியம் வச்சுக்கிறதுக்கும் இதுதான்யா வழி பண்ணுது…” என்று வீடியோ காலில் வெறுப்புடன் பேசிக்கொண்டிருந்தது பறக்கும் பைக்.

அன்றைய பேட்டிகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்த பாச்சா, பறக்கும் பைக்கின் சம்பாஷணையைக் கேட்டு ஷாக்காகி, “என்னடா இப்பல்லாம் பெரிய மனுசங்க மாதிரி நீங்கள்லாம் பெனாத்த ஆரம்பிச்சுட்டீங்க..?” என்று கேட்டான். “அட சும்மாப்பா… பெகாசஸ் யுகத்துல பெரிய மனுசங்கள்லாம் எப்படி ஃபீல் பண்றாங்கன்னு சும்மா எனக்கு நானே பேசிப்பார்த்தேன்” என்றது பைக்.
“அட நீ வேற… மனுசன் பேசுற பேச்சுக்கு பெகாசஸெல்லாம் தேவையே இல்லை. பெரிய இடத்து விவகாரத்துல எல்லாம் மூக்கை நுழைக்காதே… பேசாம கெளம்பு” என்றான் பாச்சா.

முதலில் ஜெயக்குமார்.

கட்சியில் அடுத்து யாருக்கு என்ன பிரச்சினை வரலாம்… அன்னாருக்கு என்னென்னவெல்லாம் சொல்லி முட்டுக் கொடுக்கலாம் என ஒரு பாக்கெட் டைரியில் பாயின்ட் குறித்தபடி பரபரவென இருந்தார் ராயபுரம் ஜெயக்குமார்.

“இப்பல்லாம் காலங்கார்த்தால ப்ரெஸ்மீட்டு, அம்மா தந்த ரிஸ்ட் வாட்சுன்னு கலகலன்னு இருக்கீங்களே… மீன்வளத் துறை மினிஸ்டரா இருந்தப்பகூட இவ்ளோ பிஸியா இருந்திருக்க மாட்டீங்க போல” என்றபடி உள்ளே நுழைந்தான் பாச்சா.
“அட நீ வேறப்பா… திமுக அரசு வந்தாலும் வந்துச்சு… விசாரணை, வேதனை, சோதனைன்னு ஒரே ரோதனையா இருக்கு. ஒரு சேஞ்சுக்கு நிம்மதியா கரோக்கில பாடுனா, ‘ஏதாச்சும் பிரச்சினையா தலைவரே?’ன்னு தொண்டர்கள் ஓடியாந்து தொந்தரவு பண்றாங்க… அதான் ப்ரெஸ்மீட்ல ஏழெட்டு மைக்குக்கு முன்னால மனசைத் திறந்து பாட்டுப் பாடுறேன்” என்று அண்ணாந்து பார்த்து ஆதங்கப்பட்ட ஜெயக்குமார், “அதையும் கோடநாடு எஸ்டேட் பத்தின ஸ்டேட்மென்ட்டா எடுத்துக்கிட்டு கோக்குமாக்கா கேள்வி கேட்டு நிம்மதி இல்லாம பண்றாங்க நிருபர்கள்” என்று சலித்துக்கொண்டபோது, பாச்சாவுக்கு உண்மையிலேயே பாவமாக இருந்தது.

“அப்படின்னா எங்கேயாச்சும் ரிலாக்ஸ்டா டூர் போய்ட்டு வரலாமே சார்… இருக்கவே இருக்கு கோட… சாரி கொடைக்கானல்” என்று பாச்சா சொன்னபோது, ஜெயக்குமாருக்குச் சற்றே வியர்த்தது.

“கேட்கணும்னு நினைச்சேன் சார்… அதென்ன எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது கோடநாடு கேஸ் பத்தி சட்டமன்றத்துல பேசணுமான்னு ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க... இதயதெய்வம் இத்தனை வருஷம் ரெஸ்ட் எடுத்த கோடநாடு உங்களுக்குக் கோயிலா தானே இருக்கணும்?” என்று சென்டிமென்ட்டாக மடக்கினான் பாச்சா.

“மக்களுக்கு ஒண்ணுன்னா மளமளன்னு களத்துல இறங்கி வேலை பார்க்கணும்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க. இப்ப பாரு... எடப்பாடி பழனிசாமி மாதிரி எளிய விவசாயிகள், எஸ்.பி.வேலுமணி மாதிரி ஏழைபாழைகள்னு எல்லாருமே திமுக ஆட்சியோட கொடுமை தாங்காம திண்டாடிட்டு இருக்காங்க… இதையெல்லாம் பார்த்துட்டு எதையும் பேசாம இருந்தாதான் என்னை விமர்சிக்கணும். நாங்கள்லாம் களத்துல இறங்கி போராடுறவங்க… கரைவேட்டி கறையானாலும் பரவாயில்லைன்னு தரையில உட்காரத் தயங்காதவங்க…” என்று ஜெயக்குமார் எதுகை மோனையில் எகிறிக்கொண்டிருக்கும்போதே, சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப்பானான் பாச்சா.

அடுத்து ஆழ்வார்பேட்டை.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி என உதாறாக உரையாற்றிய உற்சாகத்தில் இருந்தார் உலக நாயகன்... (எத்தன ‘உ?’). ஒரு மணி நேர ஷூட்டிங். இடையில் ரிலாக்ஸ் செய்துகொள்ள அரசியல் என சளைக்காமல் உழைத்துக்கொண்டிருந்த சகலகலாவல்லவனுக்கு சலாம் வைத்தபடி உள்ளே நுழைந்தான் பாச்சா.

“உள்ளாட்சித் தேர்தல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லையே சார்…” என்று பாச்சா ஆரம்பித்ததும் ஆர்வத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்த கமல், “ஒருமனதா முடிவெடுத்து உள்ளாட்சித் தேர்தலை உதாசீனப்படுத்திடுவீங்களே...” என்று அவன் சொன்னதும் கடுப்பை முகத்தில் காட்டினார்.

“உள்ளாட்சி என்பது என் உடன்பிறந்த கொள்கை. நானே நடித்து நானே இயக்கி இன்னொருவரின் பெயரைப் போட்டு எனக்குள்ளே ஒரு தன்னாட்சியை நடாத்திக்காட்டியவன் நான். சென்ற முறை கிராமப் புறங்களில் கட்சிக்குக் கட்டமைப்பு இல்லை என்பதுதான் நாங்கள் தேர்தலைப் புறக்கணித்ததற்குக் காரணம்…” என்று கமல் சொல்ல, இடைமறித்த பாச்சா, “இந்த முறை உங்க கட்சிக்கு அர்பன்லேயே ஆள் இல்லையே…” என்று பகடி செய்ய ‘விக்ரம்’ கமலுக்கு வெறியேறியது.

“எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் ஏற்றம் நிறைந்த வியூகத்தை வகுக்கப்போகிறோம். இனி நாங்கள் தோல்வியைத் தழுவ மாட்டோம்” என்று கமல் சொல்ல, “எப்படியும் கடைசி நேரத்துல நழுவப்போறீங்க… இதுக்கு எதுக்கு சார் கர்ஜிக்கிறீங்க?” என்ற பாச்சா, ஏதோ நினைவு வந்தவனாக, “எல்லாம் சரி, ‘பயமா முதல்வரே?’ன்னு ட்விட்டர்ல ஏதோ ட்ரெண்ட் பண்ணியிருக்கீங்களாம்?! அதுல ‘முன்னாள்’ங்கிற ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களோ? இப்ப அரசியல் ட்ரெண்ட் அதுதானே?” என்றான்.

அப்போது, “சார் ஷாட் ரெடி” என்று அசிஸ்டன்ட் டைரக்டர் வந்து சொன்னதும், ஆத்திரத்தை ஆக்‌ஷன் காட்சியில் காட்ட ஆயத்தமானார் கமல்.

அடுத்து உதயநிதி.

சட்டப்பேரவைக் கன்னிப் பேச்சில் (வானதி மேடம் மன்னிக்க!) கவனம் ஈர்த்த சேப்பாக்கம் தொகுதி செல்லப்பிள்ளையாம் உதயநிதி, உற்சாகத்தின் உச்சியில் இருந்தார்.

“ஏன் இருக்காது…? அப்பா முதல்வர், நீங்க எம்எல்ஏ, உங்க பையன் ஃபுட்பால் ப்ளேயர்னு ஆளுக்காள் அசத்திட்டு இருக்கீங்க… சந்தோஷத்துக்குக் கேட்கவா வேணும்?” என்றான் பாச்சா.

“மகிழ்ச்சி… நன்றி” என்று வழக்கம்போல் கண்கள் சுருங்கச் சிரித்தார் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி’ எனும் உதயநிதி.

“எனக்கென்னவோ, சட்டமன்றத்துல உங்க வணக்கத்துக்குப் பதில் வணக்கம் வைக்காத எடப்பாடிக்கு ஏற்பட்டிருக்கிற சிக்கல்தான் உங்க சந்தோஷத்துக்கு முக்கியக் காரணமா இருக்கும்னு தோணுது” என்று அடுத்த நொடியே உதயநிதியின் ஆனந்தத்துக்கு உலைவைத்தான் பாச்சா.

“சட்டம் சத்தம் போடாம தன் கடமையைச் செய்யுது. அதுல சந்தோஷப்படுறதுக்கு என்ன இருக்கு?” என்று மீண்டும் சிரித்தார் சேப்பாக்கம் எம்எல்ஏ.

“அதெல்லாம் சரிதான். ஆனா, ‘திராவிட நடிகர்’னு எ.வ.வேலு உங்களுக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்காரே… அதை நீங்க அடுத்து நடிக்கிற ‘கண்ணை நம்பாதே’ பட டைட்டில்ல சேர்ப்பீங்களா?” என்று கேட்டுவிட்டு, பதிலை எதிர்பார்க்காமல் பைக்கில் ஏறிப் பறக்க ஆரம்பித்தான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in