அடி சறுக்கினாலும் அம்மிணி கில்லாடி!

அடி சறுக்கினாலும் அம்மிணி கில்லாடி!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அம்மிணி குரல் கொடுத்தாங்க. “ரேஷன் கடைக்குப் போகணும்”. வழக்கமா அவங்களே போயிருவாங்க. இன்னிக்கு வீட்டுல இருந்ததால, எனக்கு அந்த இலாகாவை ஒதுக்கீடு செஞ்சுட்டாங்க.

கார்டையும் பையையும் எடுத்துக்கிட்டேன். பத்து நிமிஷ நடை. வெளி உலகை வேடிக்கை பார்த்த மாதிரி இருக்கும்னு கிளம்பிட்டேன். சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் வாங்கச் சொல்லி இருந்தாங்க.

சர்க்கரையை பையில் வாங்கிட்டு பார்த்தா, து. பருப்புக்கு பை கொண்டு போவலைன்னு உறைச்சுது. சாமான் போட்டவரே பெரிய மனசா கேரிபேக்ல போட்டுக் குடுத்தாரு. வீட்டுக்கு வந்தா கேரிபேக் கனம் தாங்காம பொத்திருந்துச்சு. அது என் கண்ணுக்குத் தெரியல.

அம்மிணி பையை வாங்கிப் பார்த்துட்டு மூஞ்சிக்கு நேரா காட்டுனாங்க.

“என்ன இது...”

நானும் அப்புராணியா, “ரேஷன் சாமான்”னு சொல்ல... இன்னும் பிபீ எகிறுச்சு அவங்களுக்கு.

“இப்டி எல்லாத்தையும் ஒண்ணா வாங்கிட்டு வந்தா என்ன அர்த்தம்”னு சாமியாடுனாங்க.

பையை நானே வாங்கிப் பார்த்ததும் தான் நடந்த தப்பு புரிஞ்சிது. நியூஸ் பேப்பரைப் பிரிச்சு எல்லாத்தியும் கொட்டி பருப்பைத் தனியா எடுத்தேன். அதுக்கே ஒரு மணி நேரம் ஓடிருச்சு. பெண்டு கழண்டுருச்சு.

“இப்போ ஓக்கேவா”ன்னு கேட்டேன்.

அம்மிணி முகத்தை சுளிச்சுக்கிட்டாங்க. “ஒரு வேலை செஞ்சாலும் நறுக்குன்னு நம்ம பேர் சொல்றாப்ல செய்யணும். குழப்பக் கூடாது.”

மகனார் நமுட்டலா சிரிச்சாரு. “அப்பா செஞ்சாலும் அப்படித்தான்”.

கூட்டணி வலுவா இருக்கவும் என் சைடு வீக்கா இருந்ததால கம்முனு ஜகா வாங்கிட்டேன்.

எங்க தெருவுக்குப் பின்னாடி இப்போ கிராமத்துக் காய்கறி சந்தை போட ஆரம்பிச்சுருக்காங்க. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஈவ்னிங்.

அம்மிணி உத்தரவு போட்டாங்க. லிஸ்ட் கொடுத்து போய் வாங்கிட்டு வரச் சொல்லி. அம்மிணி அவங்களுக்குப் புரியறாப்ல லிஸ்ட் எழுதி இருந்தாங்க. கேட்கவும் பயம். கேட்காம போனா தப்பா வாங்கிட்டு வந்தாலும் பிரச்சினை.

என் முழியைப் பார்த்துட்டு ஏதோ கோளாறுன்னு கண்டுபிடிச்சுட்டாங்க.

“என்ன சிக்கல்”னு அன்பா விசாரிச்சாங்க. “மு.காய் னா முருங்கைக்காயா...”ன்னு கேட்டேன். “குட்”னு பாராட்டுனாங்க. “வெ.காய்னு ரெண்டு தடவை போட்டுருக்கே”ன்னு டவுட் கேட்டேன்.

“என்னன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்” அம்மிணி என்னவோ குட்டீஸ் ப்ரோகிராம் நடத்தற அண்ணாச்சி மாதிரி விசாரிச்சாங்க.
மகனார் கையில மொபைல் இருந்தாலும் கவனம் முழுக்க என்னோட நீட் தேர்வுல தான் இருந்துச்சுன்னு, அவரோட கேலிச் சிரிப்புலேர்ந்து புரிஞ்சிது.

“வெண்டைக்காயா”ன்னு மெதுவா கேட்டேன்.

“ரைட்”னு கண்டக்டர் மாதிரி விசில் கொடுத்தாங்க. “அடுத்த வெ. என்ன”னு கேட்டாங்க.

என்ன யோசிச்சாலும் தெரியல. “நீயே சொல்லிரு”ன்னு சரண்டர் ஆயிட்டேன்.

“வெள்ளரிக்காய்”னு பூரிப்பா சொன்னாங்க.

இதே டைப்புல அவங்க போட்ட லிஸ்ட்டுக்கு பொழிப்புரை தெளிவுரை எழுதி வாங்கிட்டு கிளம்புனேன். போவற வழியெல்லாம் எனக்கு இது தேவையான்னு என்னையே நான் நொந்துக்கிட்டு நடக்கவும் தெருவுல வேடிக்கை பார்த்திருக்காங்க.

கட்டைப்பை ரெண்டு கொண்டு போயிருந்தேன். லிஸ்ட்டைப் படிச்சு ஒவ்வொண்ணா வாங்கவும் ரெண்டும் ரொம்பிருச்சு. தக்காளி கேட்டதும் காய்கறிக்கார அண்ணாச்சி, “கடைசீல வாங்கிக்குங்க”ன்னாரு.

“ஏன்”னு விசாரிச்சா, “தனியா பை இல்லீல்ல, தக்காளிக்கு மேலே எதுனாச்சும் போட்டா நசுங்கிரும், வீட்டுல பாட்டு வாங்க வேண்டியிருக்கும்”னு விளக்கமாச் சொன்னாரு.

ஒரு ஆம்பள கஷ்டம் இன்னொரு ஆம்பளைக்குத்தான் புரியுதுன்னு கண்ணு வேர்த்திருச்சு. ஒரு வழியா ரெண்டு மூட்டையோட படியேறி வீட்டுக்குள்ர வந்தா அம்மிணி கையைக் கட்டிக்கிட்டு நின்னாங்க.

“வாங்கிட்டேன்”னு ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்கினாப்ல பையைக் காட்டுனேன்.

“எடுத்து வைங்க பார்ப்போம்”னு அசால்ட்டா லுக் விட்டாங்க.

கொத்தவரை பீன்ஸ் பச்சை மிளகா எல்லாம் கலந்து கட்டி நின்னுச்சு. கூடவே வெண்டைக்காயும்.

பிரிவோம் சந்திப்போம்னு எனக்குப் புரிஞ்சுருச்சு. வேற வழி. பரப்பி வச்சு ஒவ்வொண்ணா எடுத்து தனித்தனியா பிரிச்சேன்.
“அப்படியே புதினா 

கருவேப்பிலைய ஆஞ்சு வச்சிருங்க”ன்னு அடுத்த ஆர்டரைப் போட்டுட்டு போயிட்டாங்க.

மகனாரைப் பார்த்தேன். ஏதாச்சும் உதவுவாரான்னு. “வழியெல்லாம் புலம்பிட்டே போனிங்களாமே... தகவல் வந்துருச்சு”ன்னு ப்ரேக்கிங் நியூஸ் சொன்னாரு.

“அம்மாவுக்குத் தெரியுமா”னு மெதுவா கேட்டேன். அம்மிணி பதில் சொன்னாங்க. “பார்த்தவங்க போன் செஞ்சு சொன்னதே எனக்குத்தான்”.

மொட்டை மாடிக்குப் போயிட்டேன். சனி, ஞாயிறு ரெண்டு நாள் ஓட்டியாவணும். என்ன செய்யலாம். கவர்ன்மென்ட் ஹாலிடே. போய்க் கேட்டாலும் செக்யூரிட்டி கதவைத் தொறக்க மாட்டாரு.

மறுநாள் காலைல எதிர்ல வந்து நின்னு சிரிச்சாங்க. “வீட்டுல இருக்கீங்க. புடிச்சதா சமைச்சா ஆர அமர நிதானமா சாப்பிடுவீங்க. என்ன செய்யட்டும்”னு ஒலக வழக்கப்படி கேட்டாங்க.

நாம ஒண்ணு சொன்னா அவங்க வேற ஒண்ணு செய்வாங்க. நானும் சிரிச்சுக்கிட்டே சொன்னேன். “எது செஞ்சாலும் ஓகே.”
“சும்மா சொல்லுங்க. நம்ம வீடுதானே. எப்பவும் நான் தானே செய்யறேன்.”

மகனாரைப் பார்த்தேன். “நீ சொல்லு.”

“வெஜ் புலவ்”னு சொல்லவும் அம்மிணி புருவத்தை சுருக்கினாங்க.

“போன மாசம் தானே செஞ்சோம்.”

அம்மிணி போவுற ரூட்டு புரிஞ்சிது. என் மனசுல வந்த ஐட்டங்களை அப்படியே அடக்கிட்டேன்.

அம்மிணி அலுத்துக்கிட்டாங்க. “சொல்லவும் மாட்டிங்க. எதையாவது வக்கணையா செஞ்சு போட்டாலும் குத்தம் குறை சொல்வீங்க. ஒங்ககிட்ட மாட்டிகிட்டு நான் படுற பாடு இருக்கே...”

மகனார் நல்லாவே ஐஸ் வச்சாரு. “அதெல்லாம் ஜாலிக்கும்மா. தட்டுல எதையாவது மிச்சம் வைக்கிறோமா. வழிச்சு உள்ளே தள்றோம்ல. யூ ஆர் கிரேட்மா.”

மகனாரைப் பெருமிதமா பார்த்துட்டு, நீயும் இருக்கியேன்ற மாதிரி அலட்சியமா என்னைப் பார்த்தாங்க.

கிச்சனுக்குள்ர போனாங்க. பத்து நிமிசம் போச்சு. “அடடா...”ன்னு அம்மிணி சத்தமா சொல்லவும் என்னவோ ஏதோன்னு ஓடுனோம். அரிசில ஞாபக மறதியா துவரம்பருப்பைப் போட்டுட்டாங்க.

“பிரிச்சுத் தரவா”னு எக்ஸ்பீரியன்ஸ்ல கேட்டேன். அம்மிணி முகத்துல பளிச்!

“எதுக்கு. இன்னிக்கு கோவை ஸ்பெஷல் அர்சிம்பருப்புப் பொங்கல் செய்யப் போறேன். வித்தியாசமா சாப்பிடக் கேட்பீங்க தானே.”
அம்மிணிக்கு அடி சறுக்கினாலும் சமாளிப்புல கில்லாடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in