அரசியல் பேச வைக்கிறார்கள்... அலுத்துக்கொள்ளும் எல்.முருகன்

அரசியல் பேச வைக்கிறார்கள்... அலுத்துக்கொள்ளும் எல்.முருகன்

சானா
readers@kamadenu.in

“தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழே இறங்கி, அதைத் தூக்கிக்கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில்...” என்று இயந்திர உடல் நடுங்கியபடி இருள் அறையில் வேதாளம் கதையை வாசித்துக்கொண்டிருந்தது பறக்கும் பைக். வெளியிலிருந்து அறைக்குள் நுழைந்த பாச்சா, பட்டென ஸ்விட்சைத் தட்டியதும் பளீரென விளக்கெரிய... பறக்கும் பைக் பயந்து அலறியது.

“அட, பயந்தாங்கொள்ளி! வேதாளம் கதைக்கே வெலவெலத்துட்டா எப்படி? நாட்டுல நிஜமாவே நடக்கிற கொலை, கொள்ளை சம்பந்தப்பட்ட மர்மக் கதைகளைப் படிச்சா வீராதிவீரனுக்கே வேர்த்துக் கொட்டிடும் தெரியுமா?” என்று சிரித்தான் பாச்சா.
“இதுல அரசியல் எதுவும் இருக்கா?” என்று வழக்கம்போல பறக்கும் பைக் வம்பிழுக்க, “ம்க்கும். பேப்பர்ல அரசியல் நியூஸ் மட்டும்தான் அச்சாகுதாக்கும்? இது அன்றாட நாட்டு நடப்புடா. உம்பாட்டுக்கு எதையாச்சும் பேசி ஒரண்டை இழுத்து வச்சுடாதே” என்றபடி அன்றைய பணிகளுக்குத் தயாரானான் பாச்சா.

முதலில் எல்.முருகன்.

மத்திய அமைச்சராகிவிட்ட மகிழ்ச்சியில், மக்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் அரிய பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு, அது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் சேதி சொல்லிவிட்டு களைத்துப்போய் வீடு சேர்ந்திருந்தார் முருகன்.
“என்ன சார்! தாராபுரம் தொகுதி மக்களைப் பார்த்து ஆசி வாங்கிட்டீங்களா?” என்று வந்ததும் வராததுமாக வாயைக் கிண்டினான் பாச்சா.

“நான் சேலத்துக்குத்தான் போயிருந்தேன்… எதுக்குத் தாராபுரம்னு பர்ட்டிக்குலரா கேட்கிறே?” என்று நெற்றியைச் சுருக்கினார் மத்திய அமைச்சர்.

“பின்னே? தாராபுரம் மக்கள் தயவுலதானே அரசியல்ல அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கீங்க... அவங்க மட்டும் உங்களை ஜெயிக்க வச்சிருந்தாங்கன்னா நீங்க வெறும் எம்எல்ஏ ஆகி அதிமுகவுக்குத் துணையா வெளிநடப்புதான் பண்ணிட்டு இருக்கணும். இப்படி சென்ட்ரல் மினிஸ்டராகி சேலத்துல யாத்திரை போக முடியாதுல்ல?” என்றான் பாச்சா.

எரிச்சலை மறைத்துக்கொண்டு இன்முகம் காட்டிய எல்.முருகன், “எங்கே இருந்தாலும் முழுமூச்சா மக்களுக்குச் சேவை செய்யணும்னு மோடி ஜி சொல்லியிருக்கார். அவர் டெய்லி டென் அவர்ஸ் மக்களைப் பத்தித்தான் சிந்திச்சிட்டு இருப்பார். ஷேவ் பண்ணக்கூட…” என்று பேசும்போதே குறுக்கிட்டு, “அய்யோ போதும் சார். இந்த அரிய உண்மையை அண்ணாமலை ஏற்கெனவே சொல்லிட்டார்” என்று கதறிய பாச்சா, “எல்லாம் சரி! பெட்ரோல் விலையைத் திமுக அரசு இன்னும் குறைக்கலைன்னு சொல்லி மீம்ஸ் பசங்களுக்கு மீல்ஸ் ஆகியிருக்கீங்களே? பங்க்-க்குக்கூட போக வேணாம்… பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட கூட விசாரிக்க மாட்டீங்களா?” என்று கேட்டான்.

“இது தவறான விஷயம். அமலுக்கு வரும் விஷயங்களைவிட அறிவிக்கப்பட்டு அமலுக்கு வராத அல்லது அமலுக்கு வந்தும் ஏற்கெனவே அறிவிக்கப்படாத வாக்குறுதிகளைப் பற்றித்தான் கவலைப்படுவேன். எனவே, நான் பேசியதில் தவறில்லை. அப்படியே பார்த்தாலும் அடுத்தடுத்து கேட்ட கேள்விகள் சிலபஸுக்கு உள்ளேதானே இருந்தன” என்று என்னென்னவோ பேசிய எல்.முருகன் இறுதியில், “இப்படித்தான் என்னை அரசியல் பேச வைத்துவிடுகிறார்கள்” என்று பெருமூச்சுடன் பொருமினார்.

“சரியாப் போச்சு போங்க! நீங்க அரசியல் தலைவர்தானே? உங்ககிட்ட அரசியல் பத்தி கேட்காம ஓ.டி.டி பட விமர்சனமா கேட்பாங்க?” என்று கேட்டுவிட்டு, எல்.முருகன் சுதாரிக்கும் முன் எஸ்கேப் ஆனான் பாச்சா.

அடுத்து ஓ.பன்னீர்செல்வம் இல்லம்.

‘ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி…’ பாடலைக் கேட்டபடி ஹாயாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார் ஓபிஎஸ்.
“இருக்காதா பின்னே? நம்ப வச்சு நம்ப வச்சு கடைசி வரைக்கும் நம்பர் டூவாகவே வச்சிருக்கிற நண்பருக்கு ஒரு பிரச்சினை வரும்போது ரொம்ப ஹேப்பியாத்தானே இருப்பீங்க…” என்றபடி உள்ளே நுழைந்தான் பாச்சா.

உடனடியாகப் பாட்டை ஆஃப் செய்து மாஸ்க்கை எடுத்து மாட்டிக்கொண்டு மகிழ்ச்சியை மறைத்த ஓபிஎஸ், “இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு நீயாகவே எதையாச்சும் எழுதிப்புடாதே. நாங்க எல்லாருமே கஷ்டத்துல இருக்கோம்… சாரி, நம்ம மக்கள் எல்லாருமே கஷ்டத்துல இருக்காங்க. அந்த வருத்தத்தை மறக்கத்தான் வாத்தியார் பாட்டு கேட்டுட்டு இருந்தேன்” என்றார்.

“சார்… அது சிவாஜி பாட்டு. இப்படித்தான் எலெக்‌ஷன்ல தோத்து எதிர்க்கட்சியாகிட்டதை மறந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுன்னு ப்ரெஸ் மீட்ல பேசுனீங்க…” என்று பாச்சா சொல்ல, ஒன்றும் சொல்லாமல் மவுனம் காத்தார் ஓபிஎஸ்.
“சரி அதைவிடுங்க… குடிசைமாற்று வாரியம் கட்டித்தந்த குடியிருப்பு விஷயத்துல உங்க மேல…” என்று பாச்சா கேள்வியைத் தொடரும்போதே குமுறலுடன் குறுக்கிட்ட ஓபிஎஸ், “இது எல்லாமே எதிர்க்கட்சிக்காரங்க… சாரி ஆளுங்கட்சிக்காரங்களோட சதி. மக்கள் பிரச்சினைக்காக மணிக்கணக்கா குரல் கொடுக்கிற எங்களை மடக்குறதுக்காக இப்படிப் புதுசு புதுசா பொய்ப் புகார் சொல்றாங்க…” என்றார்.

“அதுவும் சரிதான். மக்கள்(!) பிரச்சினைக்காகத்தான் டெல்லிக்குப் போய் டீல் பேசுறீங்க… மக்கள் பிரச்சினைக்காகத்தான் தரையில உட்கார்ந்தெல்லாம் தர்ணா பண்றீங்கன்னு உங்களைப் பார்த்து ஊரே உச்சுக்கொட்டுது” என்று பாச்சா பேசப் பேச, ரிங் அடிக்காத போனை சட்டென எடுத்து, “யாரு வேலுமணியா… கொஞ்சம் உடனே வர முடியுமா?” என்று கேட்க, விறுவிறுவென்று வெளியேறினான் பாச்சா.

அடுத்து சீமான்.

அடுத்தடுத்து அரசியல் மேடைகள், ஆன்லன் மீட்டிங்குகள் என்று அனுதினமும் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருக்கும் நாதக தலைவர், இடையிடையே கட்டிட ஆய்வுப் பணிகளிலும் கவனம் செலுத்திய களைப்பில் இருந்தார்.

“முன்னாடி எல்லாம் எதிர்க்கட்சிகளைத்தான் ஏறக்கட்டி அடிப்பீங்க… இப்பல்லாம் ஆளுங்கட்சியையே அதிகம் குறிவைக்கிறீங்களே?” என்று அவரிடம் கேட்டான் பாச்சா.

“புரியுது. திராவிடக் கட்சின்னு திமுகவை மட்டும் விமர்சிக்கிறேன்னு எனக்கு சூசகமா சுட்டிக்காட்டுறே அதானே? நான் அம்மா கட்சியையும்தான் விமர்சிக்கிறேன். புளியந்தோப்பு விஷயத்துல புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கிருக்கேன் பார்க்கலையா?” என்று சீறினார் சீமான்.

“அம்மா கட்சியை விடுங்க. இப்பெல்லாம் சின்னம்மா மேலதான் அதிகப் பாசம் காட்டுறீங்க போல… பிறந்தநாள் வாழ்த்தெல்லாம் பிரமாதமா இருந்துச்சே!?” என்று கேட்ட பாச்சாவை முறைத்த சீமான், “தலைவர்கள் பிறந்தநாளுக்குத் தவறாம வாழ்த்து சொல்றதுதான்யா தமிழர் பண்பாடு. இந்தக் கலாச்சாரத்தைக் காப்பாத்தணும்னுதான் நானும் கட்சி ஆரம்பிச்சு கஷ்டப்பட்டு நடத்திட்டு இருக்கேன்” என்றார்.

“கஷ்டமாதான் சார் இருக்கு. ஆனாக்கா, ஆப்கானிஸ்தானை அலறவச்சுட்டு இருக்கிற தாலிபான்களை தட்டிக்கொடுத்துப் பேசியிருக்கீங்களே… இது லிஸ்ட்லேயே இல்லையே?” என்றான் பாச்சா.

‘இதை எப்போ பேசுனோம்?’ என்று சீரியசாகச் சிந்தித்த சீமான், “எங்களை மாதிரி வீராவேசம் காட்டி விடுதலைப் போராட்டம் நடத்துற யாரையும் நாங்க விட்டுக்கொடுக்க மாட்டோம்… இதைத்தான் எங்கண்ணன் ஒசாமா பின் லேடன்…” என்று பேசிக்கொண்டிரும்போதே ஓட்டமெடுத்தான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in