அடிச்சுக் கேப்பாங்க... அப்பவும் சொல்லாதீங்க!

அடிச்சுக் கேப்பாங்க... அப்பவும் சொல்லாதீங்க!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

என்னையும் அறியாம கீபோர்ட்ல ஏடாகூடமா விரலை வச்சுட்டேன் போல. கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல sffktiibdd@$%&& அப்படின்னு டைப் ஆயிருந்துச்சு.

“ஸார்...ஸார்"னு அலறி என்னைத் தட்டி எழுப்பினாரு பக்கத்து சீட்டு அண்ணாச்சி.

“எப்பவும் சுறுசுறுப்பா இருப்பீங்களே... நான் கூட என் வொர்க்கை குடுத்துட்டு பர்மிஷன் போட்டு வீட்டுக்குப் போவலாம்னு நினைச்சேன்”னு துக்கப்பட்டாரு.

ஆறுதலா ஒருத்தர் நம்மகிட்ட வந்து பேசினா அம்புட்டு மேட்டரையும் கொட்டிருவேன்.

“ஒங்ககிட்ட சொல்றதுக்கு என்ன. எங்க அம்மிணி பக்கத்துல யாரோ தெரிஞ்சவங்க தீபாவளி சீட்டு பிடிக்கிறாங்கன்னு எனக்கும் சொல்லாம மாசாமாசம் பணம் கட்டியிருக்காங்க. இப்போ அந்த அம்மிணி சொல்லாம கொள்ளாம வீட்டைக் காலி செஞ்சுட்டு போயிருச்சாம்.”

அண்ணாச்சி தன்னோட பணத்தையே ஏமாந்த மாதிரி முகத்தைத் தொங்கப் போட்டாரு.

“சொன்னாக் கேக்குதுங்களா. ஒரு அவசரத்துக்கு நாம கேட்டாலே தராதுங்க. இப்படித்தான் தொலைச்சுட்டு வரும்”னு பொருமித் தள்ளிட்டாரு.

“இனிமே என்னைக் கேக்காம எதுவும் செய்யாதேன்னு சொல்லி வச்சிருக்கேன்”னு மேட்டரை முடிச்சேன். அடுத்த சீட்டு அம்மிணி வந்தாங்க.

“என்ன ரெண்டு பேரும் ரகசியமா பேச்சு”ன்னு தூண்டில் போட்டாங்க. உடனே அண்ணாச்சி ஆரம்பிச்சாரு. அம்மிணி ஏமாந்த கதையை நான் சொன்னதை விடக் கூடுதலா நாலஞ்சு பிட்டு சேர்த்துப் போட்டாரு.

“எங்க வீட்டுக்காரரு என்னை இப்படில்லாம் செஞ்சா வீட்டுலயே சேர்க்க மாட்டாரு. அவ்ளோ கண்டிப்பு”ன்னு அந்த அம்மிணி சொல்றப்போ நானே நம்பிட்டேன்.

அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சு. ஒரு தடவை ஏடிஎம் கார்டையே வச்சுட்டு வந்துட்டாங்க. நல்லவேளை செக்யூரிட்டி இருக்கிற இடம். நல்ல மனசுக்காரர் ஒருத்தர் எடுத்துக் குடுத்துட்டுப் போனதால பொழைச்சாங்க.

“ஒண்ணும் பிரச்சினை இல்ல. அவங்க உறவுக்காரங்க கிட்ட பேசி இருக்கோம். செட்டில் பண்ண வைக்கிறோம்னு உறுதி கொடுத்துருக்காங்க”ன்னு போட்டு விட்டேன்.

அப்படிச் சொல்லாட்டி என்னைச் சுத்தி நின்னு கும்மி அடிப்பாங்க போல தோணுச்சு.

மறு வாரம். எனக்கே மறந்து போச்சு . அண்ணாச்சி எதிர்ல வந்து, “என்னாச்சு”னு உரிமையாக் கேட்டாரு.

“எது என்னாச்சு... ஆபிஸ் மீட்டிங்கா.”

“எப்ப பாரு ஆபிசு. நம்ம சீட்டு பணம். உங்க அம்மிணி கட்டுனாங்களே. தெருவுல ஒருத்தர்ட்ட. அதை அவங்க உறவுக்காரங்க திருப்பி வாங்கித் தருவாங்கன்னு சொன்னாங்களே”னு நீட்டி முழக்கினாரு.

நம்ம சீட்டு பணமா. என் அடி வயிறு கலங்குச்சு. மனுசன் இப்படியே நாலு தடவை சொல்லி ரெண்டு பேரும் கூட்டாக் கட்டுனதுங்கிற லெவல்ல கொண்டு வந்து விட்டுருவாரோன்னு.

“தேடிக்கிட்டு இருக்காங்க. எங்கே போனாங்கன்னு தெரியலியாம்”னு உண்மையச் சொல்லிட்டேன்.

அண்ணாச்சி வலிக்காம தன் தலையில தட்டிக்கிட்டாரு. “போச்சா... அவ்ளோ பணமும்”னு நொந்துகிட்டாரு. இப்போ இன்னொரு அண்ணாச்சி வந்தாரு.

இவர்கிட்டேயும் நடந்ததை ஆக்‌ஷனோட ஆர்வமாச் சொல்லிக் காட்டுனாரு.

“அதெல்லாம் திரும்பக் கிடைச்சுரும் ஸார். கவலையை விடுங்க. ஒழைச்ச காசு”ன்னு எதிர்பாராத விதமா அவரு நல்வாக்குச் சொல்லவும் எங்க ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி.

அப்புறம் தான் மனுசன் வெடியப் போட்டாரு. “ஒங்க சித்தப்பா மகன் எங்கியோ ஓடிப் போயிட்டாருன்னு ஒரு தடவை சொன்னீங்களே... இப்போ எப்படி இருக்காரு.”

சித்தப்பாரா. மகனாரா. முதல்ல எனக்குப் புரியல.

“அதாங்க... பத்து வருசத்துக்கு முன்னால சொன்னீங்களே”ன்னு எடுத்துக் குடுத்தாரு.

“அது என்ன கதை”ன்னு ப.சீ. அண்ணாச்சி ஆர்வமாக் கேட்டாரு. நான் எப்பவோ புலம்பிய கதையை வார்த்தை மாறாம சொன்னாரு இவரு.

“அவன் தான் மறுநாளே திரும்பி வந்துட்டானே. அப்புறம் படிப்பை முடிச்சு வேலைக்குப் போய் கல்யாணமும் ஆயிருச்சே”ன்னு சொன்னேன்.

“எதுக்கு கேட்டேன்னா... இந்த மாதிரி ஆளுங்க எப்ப மறுபடி ஓடுவாங்கன்னு தெரியாது. பொறுப்பா இருக்காரான்னு கன்ஃபார்ம் பண்ணிக்க கேட்டேன்”னாரு.

“அதெல்லாம் நல்லா இருக்கான். சொந்த வீடு கூடக் கட்டிட்டான்”னு நான் சொன்னதைக் காதுலயே வாங்கல.

“எவ்ளோ தூரம் போனாராம்.”

“யாரு?”

“அதான்... அந்த ஓடிப் போனவரு.”

“அவருதான் திரும்பிட்டாரே...”

“எதனால திரும்பி வந்தாராம். நடுவுல என்ன நடந்துச்சு. ரெண்டு நாள் சாப்பாடு எப்படி சமாளிச்சாரு.”

இவரு கேள்வியா அடுக்கினதைப் பார்த்தா ஓடுனா என்னென்ன வசதி கிடைக்கும்னு தெரிஞ்சு வச்சுக்கிட்டு ஓட முயற்சி செய்யப் போறாரோன்னு தோணுச்சு.

நாங்க மூணு பேரும் நிக்கிற குழப்பத்தைப் பார்த்து இன்னும் ரெண்டு பேரு வந்தாங்க. அவங்கட்ட, ஒருத்தர் சீட்டுப் பணம் பத்தி சொல்ல இன்னொருத்தர் ஓடிப் போனவனைப் பத்தி சொன்னாரு.

வேற வழி இல்லாம சொன்னேன்.

“சீட்டுக் கட்டுனதுல பாதி திருப்பிக் குடுத்துட்டாங்க. மீதியை ரெண்டு மாசத்துல தரோம்னு சொல்லி இருக்காங்க.”

இப்படி சுலபமா முடிஞ்சிருச்சேன்னு வருத்தம் ஒருத்தருக்கு. “என்ன இருந்தாலும் வட்டி போச்சுல்ல”னு பாயின்ட்டைப் பிடிச்சாரு.
“போலீஸ்ல சொல்லிட்டீங்களா... போட்டோ இருக்கா”ன்னு அரைகுறையா காதுல வாங்குன அப்போதான் வந்த ஒருத்தர் கேட்டாரு.
“அவன் தொலைஞ்சது பத்து வருசத்துக்கு முன்னால. இப்போ நல்லாவே இருக்கான்”னு அழுவாத குறையா அவருக்கும் சொன்னேன்.
“அதை ஏன் ஸார் இப்போ சொல்லிக்கிட்டு. ஏன்... வேலை ஒண்ணும் இல்லியா. பாஸ் அவுத்து விட்டுட்டாரா”ன்னு ஒரு யோக்ய சிகாமணி புத்திசாலித்தனமா கேட்டாரு.

போன் வந்துச்சு. அம்மிணிதான். அடுப்புல சுடுதண்ணி வச்சிருக்காங்க. கீழே இறக்கும்போது தவறி கையில கொட்டிருச்சாம்.

“அய்யோ... என்னாச்சு?”

“நல்லவேளை. டக்குனு பக்கத்து க்ளினிக் போயிட்டேன். லைட்டாத்தான் பட்டுருச்சு. ஊசி போட்டு மாத்திரை கொடுத்தாரு. ஈவ்னிங் வந்து பதறுவீங்கன்னு இப்பவே சொல்லி வச்சேன்.”

ப.சீ. அண்ணாச்சி எழுந்து வந்து ஆர்வமாக் கேட்டாரு.

“போன்ல யாரு... என்னாச்சி?”

தலைப்பைப் படிங்க இப்போ. இனிமே இவங்ககிட்ட எதுக்காவது நான் வாயத் தொறப்பேனா?!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in