பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

கோவை

குனியமுத்தூர் அருகே இருவர்…
“இன்னிக்கு என்ன விசேஷம்ணே... தெருல எல்லாருக்கும் பொங்கல், போண்டால்லாம் வாங்கித் தர்றீங்க… உங்க வீட்டுக்கும் ரெய்டு வரப்போறாங்களா?”
“அந்தளவுக்கெல்லாம் நம்ம வொர்த் இல்ல... இன்னிக்கு எங்கம்மா நினைவு நாள். அதான் எல்லாருக்கும் டிபன் வாங்கிக் கொடுத்தேன்...”
“ஸாரிண்ணே… சும்மா தமாஷுக்குச் சொன்னேன்... உங்க நல்ல மனசு தெரியாதா? இடையில எத்தனை அம்மா வந்து போனாலும் பெத்த அம்மாவை மறக்க முடியுமா?”
“அம்மா நினைவு நாள்ங்கிறதால அமைதியா இருக்கேன். காலையிலங்காட்டியும் குசும்பு பண்ணாம ஓடிடு!”
- பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

நாகர்கோவில்

டீக்கடையில் இரு நண்பர்கள்…
“மக்கா! எனக்கும் சேர்த்து ஒரு டீயும் வடையும் சொல்லேன்! கையில கேஷ் இல்லைன்னு ஏடிஎம்ல பணம் எடுக்கப் போனா அங்கேயும் பணமில்லை…”
“இல்லைன்னாலும் மாப்ள தர்ம பிரபு தான்… நீ எச்சிக் கைய வைச்சு காக்கா ஓட்டாத பரம்பரைன்னு ஊருக்கே தெரியும்! இப்படியெல்லாம் ஏடிஎம் மேல பழி போடுறவங்க பெருகிட்டாங்கன்னுதான் இனி ஏடிஎம்ல பணம் வைக்கலைன்னா அந்த பேங்குக்கு ஃபைன் போடுவோம்னு ரிசர்வ் பேங்க் ஆர்டர் போட்டுடுச்சு போல…”
“அடப்பாவி! என் காசுல எத்தனை தடவை இரை எடுத்திருப்பே... ஒரு டீ வடை வாங்கி தர்றதுக்கு உலக வங்கியில இருந்து உள்ளூர் வங்கி ரூல்ஸ் வரைக்கும் சொல்லி முடிச்சிட்டியேடா… சரி, சரி… அப்படியே ஒரு சிகரெட்டும் சேர்த்துச் சொல்லிடு!”
- எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்.

விருகம்பாக்கம்

ஜூஸ் கடையில்…
“கொஞ்ச நாளாவே நானும் பார்த்துட்டு தான் வர்றேன்… கரன்ட் பில் ஓரவா வருது… என்னதான் கவருமென்டு நடத்துறாங்களோ தெரியலை!”
“போன வாரம் நீதானே சொன்னே வொர்க் ஃப்ரம் ஹோம்ல ஒரு வருஷம் எப்படி போச்சுன்னே தெரியலைன்னு! உன் வொய்ஃப் ஒரு ரூம்ல, பிள்ளைங்க செல்போனோட ஹால்ல, நீ சிஸ்டத்தோட ஒரு இடத்துலன்னு மூணு இடத்துல லைட்டும் ஃபேனும் ஓடுச்சுன்னா கரன்ட் பில் ஓவரா வராம என்ன பண்ணும்!”
“நீ விடிய பார்ட்டி ஆளுங்கிறதையே மறந்துட்டேன் மாம்ஸ்! அமைச்சர்களைவிட நீ அருமையா சமாளிக்கிறடா.”
“அட அப்ரசன்டி… கட்சிக்காரனுக்குன்னு தனி மீட்டர் வைச்சு கரன்ட் தந்த மாதிரில்ல பேசுற... என் வீட்டு பில்லைச் சொன்னா வீட்டுக்கு வீடு வாசப்படிதான்னு புரிஞ்சுக்குவே…”
- எ.எம்.முகமது ரிஸ்வான், சென்னை.

திருச்சி

டீக்கடையில் டீமாஸ்டரும், கஸ்டமரும்...
“அண்ணே... இந்தக் கரோனா மூணாவது அலை எப்பண்ணே வரும்?”
“என்னடா... என்னமோ உறையூர் பஸ் எப்ப வரும்னு கேட்கிற மாதிரி ஈசியா கேட்கிற?”
“அதுக்கில்லண்ணே… நான் ஒரு பத்து நாளு வெளியூருக்குப் போவணும்... அங்க போன நேரத்துல இந்த மூணாவது அலை வந்துடுச்சுன்னா அப்புறம் லாக்டவுன் போட்டுடுவாங்க. நான் அங்கயும், குடும்பம் இங்கயுமா கெடந்து அல்லாடணும். இல்லேன்னா நடந்து நடந்தே சாவணும்... அதான் ஒரு முன்னெச்சரிக்கையா விசாரிச்சேன்.”
“இப்படியெல்லாம் விசாரிச்சு பீதியைக் கிளப்பாதீங்கடா. முன்னெச்சரிக்கையா என்ன செய்யணும்னு கவர்ன்மென்ட்டே நமக்குச் சொல்லிடும். அது சொல்றதை மட்டும் ஃபாலோ பண்ணிட்டு அமைதியா இரு.”
“அதானே… ஒரு ஜெனரல் நாலேட்ஜை வளர்த்துக்க விட மாட்டீங்களே…”
- க.விஜயபாஸ்கர், திருச்சி.

சீர்காழி

பெட்ரோல் பங்கில் வாகன ஓட்டியும் சிப்பந்தியும்…
“தொண்ணூத்தி ஏழு ரூபாய்க்குப் பெட்ரோல் போடுங்க…”
“டூட்டி மாத்தி முதல் கஸ்டமர் நீங்கதான்… வந்தவுடனே ஏழரையைக் கிளப்பறீங்களே, நியாயமா?”
''வழக்கமா நூறு ரூபாய்க்குப் பெட்ரோல் போடுவேன்… லிட்டருக்கு மூணு ரூபாய் குறைஞ்சிருக்கறதுனால அப்படிச் சொன்னேன். கோவிச்சுக்காதீங்க…”
“ரொம்ப கரெக்ட். நான் இப்படி எல்லாருக்கும் ஒரு ரூபாய் காயினா எடுத்து சில்லறை தர்றேன். நீங்க மூணு ரூபாய் பாக்கி சில்லறையை வாங்கிட்டுப் போயி கரோனா நிவாரண நிதிக்குக் கொடுத்துடுங்க. நாடே சுபீட்சமாகிடும்.”
- வி.வெங்கட், சீர்காழி.

தஞ்சாவூர்

கீழவாசலில் இரு நண்பர்கள்…
“என்ன மச்சி… பட்ஜெட்ல எதிர்பார்த்த மாதிரி ஒண்ணுமில்லையே?”
"கொஞ்சம் பொறுங்கடா டேய்… எல்லாத்துக்கும் பணம் வேண்டாமா? இப்பத்தான் ரெய்டு படலத்தையே ஆரம்பிச்சிருக்கோம்! அவங்களோட கஜானாவை எல்லாம் கைப்பற்றிட்டா, இன்னும் எக்ஸ்ட்ராவா ரெண்டு பட்ஜெட் போடலாம்... வெயிட் பண்ணு!”
“ம்க்கும். அவங்க ரெய்டுக்கே சாப்பாடெல்லாம் போடறாங்க! நீங்க வாயாலே நல்லா வடை சுடறீங்க!”
"இப்ப உனக்கு டிபன் வேணும்… அதானே! அதுக்கு ஏண்டா அரசியல், பட்ஜெட்டெல்லாம் பேசி இம்சை பண்றீங்க…?!”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in