ட்ரில்லியன் பட்ஜெட் ட்ரீம் கண்டவன் நான்- ட்விட்டரில் களமாடும் கமல்

ட்ரில்லியன் பட்ஜெட் ட்ரீம் கண்டவன் நான்- ட்விட்டரில் களமாடும் கமல்

சானா
readers@kamadenu.in

அன்றும் அதிகாலைக் கனவில் இருந்தான் பாச்சா. யாரோ ஒரு தலைவரின் வீடு இருக்கும் சாலையை, பறக்கும் பைக்கில் அமர்ந்து கடந்துகொண்டிருக்கிறான். கீழே எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வாய்கள். வயிறுகள். வகை வகையான உணவு வகைகள். வாசனையால் உந்தப்பட்ட பறக்கும் பைக், எதையும் பொருட்படுத்தாமல் கூட்டத்துக்குள் இறங்க, “பெரிய ட்ரோன்ல ஏறி ஒருத்தர் ரோஸ் மில்க் கொண்டுவந்திருக்கார்டி…” என்று பெண்கள் கூட்டமும், “இல்லை… ஆளப் பாத்தா சரக்கு சப்ளை பண்றவன் மாதிரி இருக்கான்” என்று ஆண்கள் கூட்டமும் முண்டியடித்துக்கொண்டு வர, ஜோம்பிகளின் கைகளில் சிக்கிய அம்பியாக அலறிக்கொண்டிருந்தான் பாச்சா. “இதுக்குத்தான் ரெய்டு நியூஸையெல்லாம் லைவ்வா பார்க்காதேன்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். கேட்டாத்தானே?” என்று கிண்டல் செய்தது பறக்கும் பைக்.

பின்னர் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் பேட்டிகளுக்குத் தயாரானார்கள்.

“இன்றைக்கு முதலாமவர்… முதல்வராகும் கனவு தகர்ந்தாலும் அரசியல் பாதையைவிட்டு அகலாமலேயே கலைப் பயணத்தைத் தொடரும் கமல்ஹாசன்” என்று பறக்கும் பைக் வாசித்ததும், பதற்றத்துடன் திரும்பிய பாச்சா, “அப்படியா போட்டிருக்கு லிஸ்ட்ல?” என்றான்.

“போடலைதான்… சும்மா நானே எடுத்துவிட்டேன்” என்று பல்லைக் காட்டியது பறக்கும் பைக்.

“வரவர ‘பச்சைக்கிளி’ வடிவேலு மாதிரி மாறிட்டு வர்றே நீ. அரசியல் பக்கம் வந்தா அமாவாசைகளுக்கே ஆப்படிச்சுடுவே” என்று பைக்கைக் கடிந்துகொண்டு, அதை வானில் செலுத்தினான் பாச்சா.

ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் அமர்ந்து டிவியில் பட்ஜெட் நேரலையைப் பார்த்துக்கொண்டிருந்தார் கமல். மேஜையில் வெள்ளை, மஞ்சள் நிற வெற்றுத்தாள்கள் கிடந்தன.

அப்போது என்ட்ரி கொடுத்த பாச்சா, “அதிமுககாரங்க மாதிரி அஞ்சு நிமிஷத்துக்குள்ள வெளிநடப்பு பண்றதுக்காகவாச்சும் எலெக்‌ஷன்ல நீங்க ஜெயிச்சிருக்கலாம். ஹூம்!” என்று எடுத்த எடுப்பில் திரியைக் கொளுத்தினான்.

கையால் புருவத்தை முறுக்கிவிட்டபடி உறுமியபடி பேசத் தொடங்கினார் உலகநாயகன்.

“ட்ரில்லியன் பட்ஜெட் ட்ரீம் கண்டவன் நான். உள்ளாட்சித் தேர்தலில் வென்று நிச்சயம் முதல்வராவேன்(!)… மு.க.ஸ்டாலினுடன் மோதுவேன்” என்று டிவியைப் பார்த்துக்கொண்டே பேசியவர், அடுத்த கணமே, “ஐ மீன்… அடுத்த தேர்தலில் வென்று முதல்வராவேன். நாக்கு தடுமாறியதால் நான் அரசியல் தெரியாதவன் என்று அலட்சியமாக எண்ணிவிடாதீர்” என்று அலெர்ட்டானார்.

“அதான் அதிமுகவும் திமுகவும் ஒண்ணுன்னு நீங்க சொல்லும்போதே அகில தமிழகத்துக்கும் தெரியுமே ஆண்டவரே! இப்பெல்லாம் எச்.ராஜா மாதிரியே சிந்திக்கிறீங்கன்னு இணையவாசிகள் உங்களை இடித்துரைக்கிறாங்க கவனிச்சீங்களா?” என்றான் பாச்சா.
“எது அந்த வெள்ளை அறிக்கை விவகாரமா? 

எச்.ராஜான்னு இல்லை இளையராஜாவைக் கேட்டாலே ஏகப்பட்ட தகவல்கள் சொல்வார். ஒருமுறை ‘கலைஞன்’ படத்தின் கம்போஸிங் சமயத்திலே…” என்று இருக்கின்ற இடத்திலிருந்து இன்னொரு சப்ஜெக்ட்டுத் தாவினார் கமல்.

“இதுதான் சார் பிரச்சினை. கட்சி அலுவலகத்துக்குச் செலவு செய்றதைவிடவும், ப்ரொடக்‌ஷன் கம்பெனியைத்தான் போஷிக்கிறீங்கன்னெல்லாம் நியூஸ் வருதே… அப்ப ட்விட்டர்ல ட்ரெண்டு பண்ணிட்டு, சினிமாவுல மட்டும் சீரியஸா இயங்கப்போறீங்களா?” என்று பாச்சா கேட்டதும், பல்ஸ் ஏறிய கமல், “அரசியலும் சினிமாவும் என் இரு கண்கள். இரண்டிலும் ராப்பகலாக ராஜபாட்டைப் போடுபவன் நான்” என்றார்.

“ராஜபாட்டைன்னா சர்தான் சார். அது ‘ராஜபார்வை’யா மாறிடாம இருந்தா நல்லாருக்கும்” என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஆழ்வார்பேட்டை எல்லையைத் தாண்டினான் பாச்சா.

அடுத்து எடப்பாடி பழனிசாமி.

பட்ஜெட் கூட்டத்தொடரிலிருந்து பாதியில்… இல்லையில்லை, ஆதியிலேயே அவசரமாக வெளிநடப்பு செய்த வேகத்தில் காரில்கூட ஏறாமல் வெற்றிநடை(!) போட்டுக்கொண்டிருந்தார். அவரைவிட ஒரு அடியாவது முன்னே செல்ல வேண்டும் என்று பக்கத்திலேயே பன்னீர்செல்வமும் பாதயாத்திரையாக வந்துகொண்டிருந்தார்.

“என்ன சார், இதுலயும் ரெண்டு பேருக்குள்ள போட்டியா? அதுசரி ஏன் இப்படி எடுத்த எடுப்புல எக்ஸிட் ஆகிட்டீங்க? கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரியாமத்தான் அதிமுககாரங்க கம்பி நீட்டிட்டாங்கன்னு கதிரவக் கட்சிக்காரங்க கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க பார்த்தீங்களா?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டான் பாச்சா.

“விவரமே இல்லாத விடியா அரசு போடுற பட்ஜெட்டைக் கம்ப்யூட்டர்ல பார்த்தா என்ன, காகிதத்துல பார்த்தா என்ன? எல்லாம் ஒண்ணுதான். கவர்ன்மென்ட் பட்ஜெட் போட்டாலே எல்லாம் கப்சாவாத்தான் இருக்கும். நாங்கள்லாம் எத்தனை பட்ஜெட் போட்டிருப்போம்…” என்ற எடப்பாடி, எதையோ தப்பிதமாகப் பேசிவிட்டதாக உணர்ந்து தடுமாறினார்.

“எல்லாம் சரி சார். திமுக அரசு நீட் தேர்வுக்குத் தீர்வு தரலைன்னு திட்டித்தீர்க்கிறீங்களே… நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நாம்தானே சிஎம்மா இருந்தோம்னு உள்ளுக்குள்ளே ஒரு குரல் ஒலிக்குதா இல்லையா?” என்றான் பாச்சா.

“நான் வெறும் நாலு வருஷம்தானே சிஎம்மா இருந்தேன்? மு.க.ஸ்டாலின் முதல்வராகி முழுசா 100 நாள் ஆகிடுச்சு. வாய்க்கு வந்தபடி வாக்குறுதி கொடுத்துட்டு இப்ப வக்கனையா வெள்ளை அறிக்கை வெட்டி அறிக்கைன்னு விதண்டாவாதம் பண்ணிட்டு இருக்காங்க. விடியா அரசு மட்டும் இல்லை இது… முடியா அரசு… படியா அரசு…” என மூச்சிரைக்கப் பேசிக்கொண்டேபோனார் முன்னாள் முதல்வர்.

பழனிசாமி பேசப் பேச மாஸ்க்குக்குள்ளே மைண்ட் வாய்ஸில் சிரித்துக்கொண்டிருந்த பன்னீர்செல்வம், அவர் தன் பக்கம் திரும்பியதும் அவசர அவசரமாக முகத்தில் இறுக்கம் காட்டினார்.

இதைக் கவனிக்காததுபோல் காட்டிக்கொண்ட பாச்சா, “விஜயபாஸ்கர்ல ஆரம்பிச்சு வேலுமணி வரைக்கும் ரெய்டு வந்துட்டாங்க. அடுத்த லிஸ்ட்ல யாரு லீடிங்ல இருக்கார்னு அரசியல் வட்டாரத்துல அரசல் புரசலா பேச்சிருக்கு கவனிச்சீங்களா?” என்றதும் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் ஏக காலத்தில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ஒரு முடிவுடன் வாய் திறந்த ஓபிஎஸ், “ரெய்டுக்கெல்லாம் பயந்து ரத்தத்தின் ரத்தங்கள் ஓய்ந்து விடமாட்டோம். எத்தனை சோதனை வந்தாலும் ஈஸியாக எதிர்கொள்வோம். எஸ்கேப் அரசியல் எங்களுக்கும் தெரியும். ஆனா காட்டத் தெரியாது எங்களுக்கு” என்றார்.

“எல்லாம் தெரியும் சார். ஏதாச்சும் சிக்கல் வந்தா எம்எல்ஏ ஹாஸ்டலுக்குள்ள என்ட்ரி கொடுத்து எஸ்கேப் ஆகிறதுல ஆரம்பிச்சு, ஃப்ளைட் ஏறி பி.எம் வீட்டுல லேண்ட் ஆகிற வரைக்கும் எல்லா வித்தையையும் கத்து வச்சிருக்கீங்களே… அப்புறம் என்னத்துக்கு அச்சம்?” என்று பேசிக்கொண்டேபோன பாச்சாவை ஏறிட்டுப் பார்த்த எடப்பாடி, “ஈன்றைக்கு(!) இந்த அரசுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இனி எங்கள் கட்சிக்காரர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் காவல் துறையை ஏவிவிட்டால், நீங்கள் குறிவைக்கும் தலைவர்களின் வீடுகள் முன்பு நிரந்தரமாக பிரியாணி கடைகள் போடப்படும். பொய் வழக்கு போட முயன்றால் புரோட்டா கடைகள் திறக்கப்படும். வேட்டையாடும் நோக்கத்துடன் வருபவர்களை வெண்பொங்கல் வீரர்கள் எதிர்கொண்டு வீழ்த்துவார்கள்” என்று சுடச்சுட சூளுரைத்தார்.

அவர் பேசப்பேச வயிற்றுக்குள் அலாரம் அடிக்க, பேட்டியை முடித்துக்கொண்டு பிரியாணி கடைக்குப் பறந்தான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in