எங்கம்மாவுக்கு ஆபரேஷனாம்..!

எங்கம்மாவுக்கு ஆபரேஷனாம்..!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

அம்மிணி பரபரப்பா இருந்தாங்க. எப்பவும் அப்படித்தானேன்னு கேட்கக் கூடாது. அவங்க சைடு உறவுக்காரங்க சமாச்சாரம்னா ஸ்பீடு இன்னும் கொஞ்சம் அதிகமாவே இருக்கும்.

“என்னம்மா யாராச்சும் ஊர்லேர்ந்து விருந்துக்கு வராங்களா”ன்னு பொதுவா கேட்டேன். மனசுக்குள்ர ஒரு நப்பாசை. நல்ல சோறு கிடைக்க வாய்ப்பு வருதோன்னு.

“ஒங்கப்பாவுக்கு பொழுதினிக்கும் சாப்பாட்டு நினைப்புத்தான்”னு மகனார்ட்ட நொடிச்சுக்கிட்டாங்க.

கப்புனு ஆஃப் ஆகி யூனிஃபார்மைக் கழட்ட அடுத்த ரூமுக்குள்ர போனேன். பின்னாடியே வந்துட்டாங்க.

“என்ன ஏதுன்னு கேக்க மாட்டிங்களா...”

“நீயா சொல்லுவேன்னு”ன்னு பம்மினேன்.

“எங்கம்மாவுக்கு ஆபரேஷனாம். உடனே பண்ணி ஆகணுமாம்”னு கண்ணக் கசக்கினாங்க. நான் படிச்சது அக்கவுன்ட்ஸ். டாக்டருக்கு இல்லியேன்னு அரண்டுட்டேன்.

“மூளைல பண்ணணுமாம்”னு அடுத்த வெடியைப் போட்டாங்க. “கஷ்டமாச்சே”ன்னு சொல்லும்போதே, தேவை இல்லாம எனக்கு சிரிப்பு வந்துருச்சு. நல்லவேளை... அவங்க இருந்த சோகத்துல அதைக் கவனிக்கல.

“15 நாள் ஹாஸ்பிடல்லயே இருக்கணுமாம். கூடவும் ஆவலாமாம். வீட்டுக்கு வந்தாலும் ரெண்டு மாசம் பெட்ல தான்.”

“அச்சச்சோ. ஆபரேஷன் வேணாம்னு சொல்லிடலாமா”ன்னு லூசுத்தனமா கேட்டுட்டேன்.

முறைச்சாங்க. “உயிருக்கே ஆபத்தாம். ஆபரேஷன் உடனே செய்யாட்டி.”

“சரி. நர்ஸ் போட்டுரலாம் ஒதவிக்கு”ன்னு ஆறுதலா சொன்னேன்.

“அப்படி ஒண்ணும் எங்கம்மா வக்கத்து போவல. ரெண்டு பொண்ணுங்க இருக்கோம்.”

“இப்போ என்னதான் சொல்ல வர”ன்னு பொறுக்க முடியாம கேட்டேன்.

“நானும் தங்கச்சியும் மாத்தி மாத்தி போய் பார்த்துக்கலாம்னு. மூணு மாசத்துக்கு நான் இங்கே இருக்க மாட்டேன். போயிட்டு போயிட்டு வருவேன்”னு தீர்மானத்தை ஏக மனதா நிறைவேத்திட்டு எதிர் வீட்டுக்கு நியூஸ் சொல்லப் போயிட்டாங்க.

இனி நாலு வீட்டுக்காவது செய்திகள் வாசிப்பது அம்மிணின்னு இருக்கும்.

மகனாரைப் பார்த்தேன். அவன் கில்லாடி. “ஒங்க சாப்பாட்டைப் பார்த்துக்குங்கப்பா”னு கூட்டணிலேர்ந்து என்னைக் கழட்டி விட்டுட்டான்.

பகல்ல கேண்டின்ல ஓட்டிரலாம். நைட்டுக்கு என்ன செய்யன்னு யோசிச்சப்போ அம்மிணி உள்ளார வந்தாங்க.

“ஆபிசுக்கு லீவு சொல்லிருங்க. ஆபரேஷன் டயத்துல நீங்க கூட இருக்கணும்ல.”

நான் என்னவோ மாஸ்க் கவுன்லாம் போட்டுக்கிட்டு, சர்ஜன் கேக்க கேக்க கத்தி கபடால்லாம் எடுத்துத் தரப் போவுற மாதிரி மிரட்டுனாங்க.

“நான் எதுக்கு வீணா...”ன்னு இழுத்தேன்.

“அட்வான்ஸ் கட்டணும். மருந்து கேட்டா வாங்கித் தரணும். ரத்தம் தேவைனா தர வேண்டி இருக்கும்”னு அடுக்கிட்டே போனாங்க.
விட்டா என் மூளையையே தர வேண்டியிருக்கும்னு சொல்லிருவாங்களோன்னு பயந்துட்டேன்.

“என்னோட ரத்தம் வேற குரூப்பு”ன்னு சொன்னதும் ஆவேசம் ஆயிட்டாங்க. “இருந்தா என்ன... எங்கம்மாவுக்கு ரத்தம் கொடுத்தா குறைஞ்சா போயிருவீங்க”னு கத்துனாங்க.

மகனார் அதுவரை சைலன்டா இருந்தவரு இப்போ அவர் பங்குக்கு வச்சாரு. “ரிப்ளேஸ்மென்ட் பா. ஒரு பாட்டிலுக்கு இன்னொரு பாட்டில். எந்த க்ரூப்பா இருந்தாலும் ஓகே.”

“நல்லா எடுத்துச் சொல்லு. எங்க உறவுக்குன்னா எஸ்கேப் ஆவுறதுலெயே குறியா இருப்பாரு”னு அம்மிணி மறுபடி கண்ணக் கசக்குனாங்க.

“சரி... சரி”ன்னு கெஞ்சுன பிறகுதான் அடங்கினாங்க. “ஒரு நாளாச்சும் ஆபிஸ் போய் வெவரம் சொல்லிட்டு வரணும்”னு பர்மிஷன் கேட்டேன். போனாப் போவுதுன்னு ஒத்துக்கிட்டாங்க.

மகனார் தான் கொண்டு போய் வுடுறதா அழைச்சுக்கிட்டு போனாரு. “அட்மிட் ஆகும்போது தகவல் சொல்றேன்... உடனே கிளம்பி வாங்க”ன்னு அம்மிணி உத்தரவு போட்டாங்க. மறக்காம என்னோட டெபிட் கார்டு கிரடிட் கார்டு எல்லாத்தியும் எடுத்து வச்சுக்கிட்டாங்க.

“என் ஐடி கார்டு வேணாமா”ன்னு விசமத்தனமா கேட்டது தப்பா போச்சு. “அதை ஒங்க ஆபிஸ்லயே மதிக்க மாட்டாங்களே”ன்னு நோஸ் கட் கொடுத்தாங்க.

ஆபிஸ்க்கு போய் லீவு சொல்ல வாயைத் தொறந்தப்போ பாஸ் என்னை விட ஸ்பீடா பேசிட்டாரு. “கொல்கத்தா போவணும். வேண்டிய டேட்டால்லாம் எடுத்து வச்சுக்கோ. நானும் வரேன்”னாரு.

இதை எப்படி அம்மிணிகிட்ட சொல்லறதுன்னு புரியல. “சாவி எதிர் வீட்டுல கொடுத்துருக்கோம். நாங்க கெளம்பிட்டோம்”னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.

கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல தங்கி இருந்தப்ப அம்மிணி போன். நான் குளிச்சுக்கிட்டிருந்ததால பாஸ் யதார்த்தமா போனை எடுத்துட்டாரு.

“ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. ஆபிசு பாசுன்னு கதை விடாம கிளம்பி வாங்க. ஒங்க பாசுக்கு குடும்பம் உறவுன்னு ஒரு சிந்தனையும் கிடையாது. அதே போல நீங்களும் இருக்காதீங்க”ன்னு டோஸ் விட்டுருக்காங்க.

பாஸ் போனை எடுத்ததாவே காட்டிக்கல. நான் தான் அம்மிணி கால் வந்துருக்கேன்னு பேசினா வெவரம் தெரிஞ்சுது. கொல்கத்தால இருக்கேன்னு சொன்னதும் அதுக்கு தனி ஆவர்த்தனம் வாசிச்சாங்க.

பத்து நாள் கழிச்சுத்தான் ஊருக்கு போக முடிஞ்சிது. அம்மிணி தாண்டவமே ஆடிட்டாங்க. தங்கச்சி புருசன் நல்ல பேர் வாங்கிட்டாராம். பணம் கட்டுனது முழுக்க என் கார்டுல. அந்தாளு ஹாஸ்பிடல் கேன்டின்ல ஃப்ளாஸ்க்ல காபி வாங்கிக் கொடுத்து, விசிட்டர்ஸ் தங்குற ஹால்ல ஓரமாத் தூங்கியே பத்து நாளும் இருந்தாராம்.

“ஒம்புருசனுக்கு எந்தக் கவலையும் இல்லியா”ன்னு ஆளுக்காள் ஏத்தி விட்டு, அம்மிணி உச்சத்துல இருந்தாங்க.

“இப்போ என்ன செய்யணும் சொல்லு”னு கெஞ்சினேன்.

“20 நாள் நீங்க இங்கே இருக்கணும். அப்பதான் நிம்மதி”ன்னாங்க.

சகலைக்கு மனசே இல்லை. “நானும் கூடவே இருக்கேனே”ன்னு சொல்லிப் பார்த்தாரு. மாத்தி மாத்திப் பாக்கலாம்னு சொல்லிரவும் மூணு வேளையும் ஹாஸ்பிடல் கேன்டின்ல என் மகனார் வாங்கிக் கொடுத்த டிபன் சாப்பாடு மிஸ் ஆவுதேன்னு மனசுக்குள்ர புலம்பிட்டே போனாரு.

நான் வந்தபிறகு ஹாஸ்பிடல்ல என்னை மட்டும் விட்டுட்டு அம்மிணி அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க.

“எப்ப வேணா கூப்பிடுவாங்க. பேஷன்டோட அட்டெண்டர்னு ஒங்க பேரைத்தான் சொல்லி இருக்கோம். ஊர் சுத்த போயிராதீங்க”ன்னு வார்னிங் குடுத்துட்டுப் போனாங்க.

பாத் ரூம் டாய்லட் போவ முடியல. ஒரு காபி சூடா குடிக்க முடியல. மைக்ல என் பேரைச் சொல்ற பிரமைல அதையே உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன். மொத்தத்துல பயங்கரமா டவுன் ஆயிட்டேன்.

ஒரு வழியா ஐசியுவுல இருந்து மாமியார் ஜெனரல் வார்டுக்கு வந்தாங்க. அம்மிணி குடும்பம் குதூகலமா வந்துச்சு. சகலை மறுபடி டிபன் சாப்புடற ஏக்கத்தோட வந்தாரு.

“பாரேன். ஒம்புருசனைக் காணோம். எங்கே போய்த் தொலைஞ்சாரு”ன்னு மாமனார் கேட்டது காதுல விழுந்துச்சு.

அடுத்த கட்டில்ல ட்ரிப்ஸ் ஏத்திக்கிட்டுருந்த என்னைப் பாக்கக்கூட இல்லை, அந்தத் தானாச் சேர்ந்த கூட்டம் !

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in