பேசிக்கிட்டாங்க

பேசிக்கிட்டாங்க

தஞ்சாவூர்

டீக்கடையில் உரிமையாளரும் வாடிக்கையாளரும்...
“என்னண்ணே இது... கணக்கு தீர்த்து பத்து நாள்கூட ஆகலே... இன்னும் நானுற்று சொச்சம் கடன் இருக்குங்கறீங்களே?”
“என்ன செய்ய சொல்றீங்க தம்பி? கும்பலா வந்து டீ குடிச்சிட்டு கணக்குல எழுதிக்குங்கன்னு பந்தாவா சொல்றீங்க... எழுதி வைக்கிறோம்! பின்னே நீங்க குடிக்கிற டீக்கு வெள்ளை அறிக்கையா வெளியிட முடியும்?”
“டாஸ்மாக் மூலமா கவர்மென்ட்டுக்கே வருமானம் கொடுக்கிற விஐபி கஸ்டமர்ணே நானெல்லாம். மஞ்ச கடுதாசி கொடுக்காம நியாயமா டீக்கணக்கு தீர்க்கிற எனக்கே வெள்ளை அறிக்கையா? இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியலை?”
(திகைத்து நிற்கிறார் டீக்கடைக்காரர்!)
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

சீர்காழி

ஸ்டேட் பேங்க் வாசலில் இரு இளைஞர்கள்...
“ஏன் ரொம்ப டல்லாயிருக்கே மச்சான்...?”
“ஒவ்வொருத்தர் மேலேயும் எவ்வளவு கடன் இருக்குன்னு தமிழக நிதி அமைச்சரோட வெள்ளை அறிக்கையைப் பார்த்துத்தான் மாப்ளே..."
“ஒரு பொருளாதார மேதை நான் இருக்கும்போது நீ ஏன் கவலைப்படறே? எல்லா மாவட்டத்துலயும் ஒவ்வொரு வாரமும் மொய் விருந்து அரசு சார்பா வச்சுட்டா போதுமே! உள்ளூர் விஐபி-க்களை மட்டும் இன்வைட் பண்ணினாலே வெயிட்டா ஒரு அமவுன்ட் தேறும் கடனை கச்சிதமா அடைச்சிடலாம். எப்படி என்னோட ஐடியா!?”
“வாரத்துக்கு நாலு தடவை ‘சின்ன கவுண்டர்’ படத்தைப் பார்த்தா இப்படித்தான் பேசத் தோணும்டா!”
- வி.வெங்கட், சீர்காழி

நாகர்கோவில்

வடிவீஸ்வரத்தில் இரு பெண்கள்...
“என்னாச்சு அக்கா... எப்பப் பார்த்தாலும் பேரன்கூட வாக்கிங் கிளம்பிடுறே? சுட்டிப்பையன் வெளியே தூக்கிட்டு போகச்சொல்லி அடம் பிடிக்கிறானா?”
“இவனோட அண்ணனுக்கு ஆன் லைன் கிளாஸ் நடக்கும்போது இவன் வேற உள்ளே புகுந்துடுறான். அதான் கொஞ்ச நேரம் வெளியே தூக்கிட்டு வந்திடுறேன்.”
“அப்படி என்ன செஞ்சுடப்போறான்? இவனும் இப்பவே எல்லாத்தையும் ஆன்லைன் கிளாஸ்லேயே கத்துக்கலாம்ல?”
“சரியா போச்சு போ! இப்ப ஸ்கூல் மேனேஜ்மென்ட்களுக்கு இருக்குற பசிக்கு 'இப்ப ஒரு பையன் தலையக் காட்டுனானே அவனுக்கும் சேர்த்து ஃபீஸ் கட்டுங்க’ன்னு சொன்னாலும் சொல்வாங்க! எதுக்கு வம்பு?”
- எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்

கம்பம்

பேருந்தில் நடத்துநரும் பயணியும்...
“யோவ் பச்சை சட்டை! மாஸ்க் போடாம மத்தியில நிக்கிறியே... கொஞ்சம் ஒதுங்கி நில்லு.”
“ஆமா... எங்ககிட்ட மட்டும் எகிறுங்க. பஸ்ல 50 பர்சென்ட் ஆள்தான் ஏத்தணும்னு கவர்மென்ட்ல சொல்லும்போதெல்லாம் நீங்க கேட்டுடுறீங்களாக்கும்?”
“அது சரி, நாங்க கலெக் ஷன் காட்ட வேண்டாமா? தெரியாமச் சொல்லிட்டேன்... நீங்க மாஸ்க் போடுறீங்களோ இல்லையோ கொஞ்சம் ஓரமா நின்னு வாங்க தம்பி!”
- பெ.பச்சையப்பன், கம்பம்

தோப்புத்துறை

ஒரு வீட்டின் வாசலில்...
(மின் கட்டணம் ரீடிங் எடுப்பவரிடம்)
“என்ன சார் இந்தத் தடவை கரன்ட் பில் நாலாயிரத்துக்கு மேல வந்துருக்கு. கொஞ்சம் சரியா பாருங்க சார்.”
“நீங்க நிறைய எலெக்ட்ரிக் சாதனம் யூஸ் பண்றீங்க சார். வீட்டைச் சுற்றியும் நிறைய லைட் போட்டிருக்கீங்களே?”
“அதுக்குதான் எங்ககிட்ட சோலார் இருக்கே சார்”
(அருகிலிருப்பவர்) “சார் அவர்கிட்டதான் சோலாரு இருக்காமே அப்ப 'கோளாறு' உங்ககிட்டதான், ரீடிங் மெஷினை செக் பண்ணுங்க சார் எங்க காலனியிலேயும் இதே பிரச்சினைதான்."
“ரீடிங் எடுக்க வந்தவனுக்கு டியூஷன் எடுக்கிறத விட்டுட்டு, ஈபி ஆபீஸ்ல கம்ப்ளெய்ன்ட் எழுதிக் குடுங்க சார்..!
-ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை

வானவன்மகாதேவி

வேப்பமரத்தடி பேருந்து நிறுத்தத்தில் இருவர்...
“என்னண்ணே... காலையிலிருந்து கையில நோட்டும் பேனாவுமா பஸ் ஸ்டாப்லேயே உட்கார்ந்திருக்கீங்க?"
“வீட்டுல போரடிக்குது. அதான் இப்படி டைம் பாஸ் பண்றேன். கூடவே ஒரு ஆராய்ச்சியும் நடக்குது.”
“இதுல எப்படிண்ணே பொழுது போகும்?”
“ஒவ்வொரு பஸ்ஸும் ஒரு கிலோமீட்டர் ஓடினா 59 ரூபாய் நஷ்டமாகுதாம். நம்ம ரூட்டுல ஒரு நாளைக்கு எவ்வளவு நஷ்டமாகுதுன்னு கண்டுபிடிக்க வேணமா... அதுக்குத்தான் இந்த சர்வே"
“கரெக்ட்ணே. இப்படி ஏதாவது உருப்படியா செஞ்சா சீக்கிரமா இந்தியா வல்லரசாகிடும். நீங்க கன்டினியூ பண்ணுங்கண்ணே.”
(இது பாராட்டா, கிண்டலா என்று புரியாமல் குழம்புகிறார் ‘ஆராய்ச்சியாளர்’!)
-எஸ்.சுதாகரன், வானவன்மகாதேவி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in