வார்த்தைகளை அளந்து பேசணும்... அண்ணாமலையின் அமைதிப் பேச்சு

வார்த்தைகளை அளந்து பேசணும்... அண்ணாமலையின் அமைதிப் பேச்சு

சானா
readers@kamadenu.in

‘அமித் ஷாவுக்கு எதிராக அண்ணாமலை உண்ணாவிரதம்’ எனும் செய்தி டிவியில் பிரேக்கிங் நியூஸாக ஓடிக்கொண்டிருக்கிறது. பீதியுடன் அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பாச்சா, “அரசியல்னு வந்துட்டா யாருக்கு எதிரா யாரும் வாய்ஸ் கொடுப்பாங்க சரி. அதுக்காக ஒரு வரைமுறை வேண்டாமா? என்ன கட்சிய்யா இது?” என்று சொல்லிக்கொண்டே போக, அதை டெல்லியில் அமித் ஷாவும் மோடியும் அருகருகே உட்கார்ந்து (ஒட்டுக்) கேட்டுக்கொண்டிருப்பது போல இன்னொரு காட்சியும் ஓடுகிறது. திடுக்கிட்டுக் கண் விழித்த பாச்சா. “என்ன ஒரு திகில் கனவு” என்று திருதிருவென விழிக்க, பக்கத்தில் இருந்த பறக்கும் பைக் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தது. “அரசியல்னா அப்படித்தான்யா. இந்த அண்ணாமலை என்ன, ‘அந்த’ அண்ணாமலையே அரசியலுக்கு வந்திருந்தாலும் இப்படி ஏதாச்சும் அதிரடிக் காட்சிகள் நடக்கத்தான் செய்யும். நாமதான் இதையெல்லாம் பார்த்து பதற்றப்படாம இருக்க பழகிக்கணும்” என்று ஆற்றுப்படுத்தியது பைக்.

ஆம், அன்றைக்கு முதலாமவர் அண்ணாமலையேதான்!

டிபிக்கல் அரசியல் தலைவர் போலவே வேட்டி, சட்டை அணிந்து வரவேற்பறையில் அமர்ந்திருந்த அண்ணாமலை, தாடி வைத்த மோடி படத்தைப் பார்த்தபடி ‘க்ளீன் ஷேவ்’ செய்யப்பட்ட தன் தாடையை அவ்வப்போது தடவித் தடவிப் பார்த்துக்கொண்டிருந்தார். ஸ்பீக்கரில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாடிய, ‘ஜனரிந்தா நானு மேலே பந்தே’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தபோது பாச்சா உள்ளே நுழைந்தான். வந்ததுமே, “என்ன சார், பழசையெல்லாம் இன்னும் மறக்கலை போல. வீட்ல தமிழ்ப் பாட்டுக்குப் பதிலா கன்னட ‘ஹாடு’ கேட்கிறதுதான் ஹாபியா?” என்று வம்பும் வளர்த்தான்.

“நனகே கன்னடம் கொட்டில்லா...” என்று சொல்லி நாக்கைக் கடித்துக்கொண்ட அண்ணாமலை, “எனக்குக் கன்னடமே தெரியாது. ராஜ்குமார்னா ‘லாலாலா மியூசிக் டைரக்டரா?’ன்னுதான் கேட்பேன். என்னைப் பார்த்து இப்படிக் கேட்கிறீங்களே நாயமாண்ணா?” என்று பல்லைக் கடித்தபடி பணிவுடன் கேட்டார்.

“அய்யய்யோ... அப்படியெல்லாம் இல்லீங்க. சீமான் மாதிரியான தமிழ்த் தலைவர்கள் கேட்கிறாங்கன்னு சொல்ல வந்தேன்” என்று சமாளித்தான் பாச்சா.

“இல்லீங்கண்ணா... நாங்க ரொம்பத் தெளிவா இருக்கோம். நாங்க இப்போ(தைக்கு) தமில்நாட்டுல இருக்கோம். ஆனா, தேசியம்தான் எங்க கொள்கை. தேசம்னு வரும்போது அதுக்குள்ள கர்நாடகமும் வரும்ங்களா வராதுங்களாண்ணா?” என்று பாச்சாவிடமே பதில் கேள்வி கேட்டார் அண்ணாமலை.

“எல்லாம் சரி. ஆனா, மேகேதாட்டு அணைக்கு எதிரா நீங்க நடத்தின நாடக... சாரி உண்ணாவிரதத்தையெல்லாம் பொம்மை சார் ஒரு பொருட்டாவே எடுத்துக்கலையே?” என்றான் பாச்சா.

“அதுதாண்ணா பாஜகவோட ஜனநாயகம். ஒரு தலைவர் சொல்றதை இன்னொரு தலைவர் ஏத்துக்கணும்னு நம்ம கட்சியில அவசியமில்லை. அவங்கவங்க இஷ்டப்படி எந்த முடிவையும் எடுக்கலாம். இப்படியெல்லாம் வேற கட்சியில பார்க்க முடியும்ங்களா?” என்று கேட்டுவிட்டு ஆழமாகப் பார்த்தார் அண்ணாமலை.

“சரி விடுங்க. பாஜகவை ஏதாச்சும் சொன்னா பிசினஸ்ல கை வெச்சுடுவோம்னெல்லாம் சொல்லி பயமுறுத்துறீங்களே? உங்க அப்ரோச்ல இது புதுவிதமா இருக்கே?” என்ற பாச்சாவைப் பார்த்து பவ்யமாகச் சிரித்தார் அண்ணாமலை.

“அதாவதுங்கண்ணா... குறை சொல்லும்போது வார்த்தைகளை அளந்து நாயமா, நாகரிகமா பேசணும். இல்லைன்னா, தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன். அப்புறம் பல்லு, கில்லெல்லாம் படார்னு வெளில வந்துரும்ங்கண்ணா” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அங்கிருந்து தடாலென்று பாய்ந்து தப்பித்தான் பாச்சா.

அடுத்து ஜெயக்குமார்.

‘சார்பட்டா பரம்பரை’ படத்தை ஓடிடி-யில் ஒன்பதாவது முறையாகப் பார்த்தபடி தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டிருந்தார் முன்னாள் அமைச்சர்.

“என்ன சார்... ரொம்பக் கோபமா இருக்கீங்க? உங்களைப் பார்த்து டான்சிங் ரோஸ் கேரக்டரை டிசைன் பண்ணிட்டு உங்களுக்குக் காப்பிரைட் குடுக்காம விட்டுட்டாங்களா?” என்று கேட்டபடி அவர் முன் ஆஜரானான் பாச்சா.

“யோவ்... தெரிஞ்சிக்கிட்டே தெரியாத மாதிரி கேட்கிறியா? ஏற்கெனவே, புரட்சித் தலைவர் - பொன்மனச் செம்மலைப் படத்துல தப்பாக் காட்டிட்டாங்கன்னு எரிச்சல்ல இருக்கேன். நீ வேற தகராறு பண்ணிக்கிட்டு...” என்றார் ஜெயக்குமார்.
“மன்னிச்சிடுங்க சார். தமிழக அரசியல்ல நாகரிகம்னு ஒரு வஸ்து வளருதுன்னு கொஞ்ச நாளா ஒரு பேச்சு இருந்துச்சு. ஆனாக்கா, கலைஞர் படத் திறப்பு விழாவுக்கு வராம அதிமுக இப்படி நாகரிகத்துக்கு எதிர்ப்பதமா நடந்துக்கிடுச்சே. நல்லாருக்கா சார் இது?” என்று கேட்டான் பாச்சா.

“அதை விடப்பா ஏய்! ஸ்டாலின் எங்க அம்மா படத் திறப்பு விழாவுக்கு வரலை. நாங்க அவரோட அப்பா படத் திறப்பு விழாவுக்குப் போகலை. கணக்கு சரியாப் போச்சு” என்ற ஜெயக்குமார், குரலைச் சற்று தணித்தபடி, “அதோட... நாங்க ஃபங்ஷனுக்குப் போயிருக்கிற சமயத்துல டெல்லில இருந்து டீலிங் பேசக் கூப்பிட்டுட்டாங்கன்னா திடுதிப்புன்னு ஓடியார வேண்டியிருக்கும். எதுக்கு அந்த ரிஸ்க்கு?” என்று சீக்ரெட்டாகச் சிரித்தார்.

“ஆமா பின்னே!” என்று அவர் பாணியிலேயே சொன்ன பாச்சா, “எல்லாம் சரி சார். இந்த ‘அண்ணே அண்ணே’ பாட்டை ரீமிக்ஸ் பண்ணி ஸ்டாலினைக் கலாய்ச்சியிருக்கீங்களே? இந்த ஐடியா எங்கிருந்து சார் வந்துச்சு?” என்று கேட்டவுடன் வெட்கச் சிரிப்புச் சிரித்த ஜெயக்குமார், “அதுக்காகத்தானே மைக் பிடிச்சுப் பேசிப் பழகியிருக்கேன். பேச்சையே கொஞ்சம் பேஸ் வாய்ஸ்ல எடுத்துவிட்டா பாட்டாகிடும்ல. எத்தனை மேடை பார்த்தவன் நான்” என்றார்.

தொடர்ந்து, “அடுத்து ‘நீட்டை நீட்டா நீக்காம, எதுக்கு ஆட்சியில இருக்கீங்க வேஸ்ட்டா’ன்னு ஒரு பாட்டெழுதி நானே பாடலாம்னு ஐடியா பண்ணியிருக்கேன். கேட்கிறியா?” என்றும் கேட்டார்.

அதற்கு மேலும் பாச்சா அங்கிருப்பானா என்ன?

அடுத்து செந்தமிழன்.

செல்போனைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த சீமான், “கடைசியில என்னையும் பெகாசஸ் லிஸ்ட்ல சேர்த்துட்டாய்ங்களே” என்று வேதனைச் சிரிப்புடன் சொல்ல, சுற்றியிருந்த தம்பிகள் வெடித்துச் சிரித்துக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு சென்ற பாச்சா, “எல்லாருக்கும் அதான் ஆச்சரியம். நீங்கதான் எல்லாரையும் வெளிப்படையா வெளுத்தெடுப்பீங்களே... உங்க போன்ல ரகசியமா என்னத்தை ஒட்டுக் கேட்டுடப் போறாங்க? அப்படியே நீங்க பேசுன தடாலடி ஆடியோக்களை, தம்பிகளாக இருந்து ரிட்டயர்டான தமிழர்கள் இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணிடுவாங்களே. அப்புறம் எதுக்கு உங்களைக் கண்காணிக்க பெகாசஸ்?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினான்.

அன்றைக்கு ஏதோ நல்ல மூடில் இருந்த சீமான், “அதுவும் சரிதான். என் பேச்சு மட்டும் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் புரிஞ்சிருந்தா... ஒஹோஹ்ஹோ...” என்று சீரிய முறையில் சிரிக்க, தம்பிகளும் சேர்ந்து சிரித்தனர்.

“புரிஞ்சிருந்தா... இந்தத் தம்பி நம்மளவிட நல்லா கம்பி கட்டுது. இவரையே இனி மன் கி பாத்துக்கு ஸ்க்ரிப்ட் எழுதச் சொல்லுன்னு மோடி அமித் ஷாவுக்கு ஆணையிட்டிருப்பார்” என்று பாச்சா சொல்ல, அங்கு சிரிப்பு மூடு மாறி சீரியஸ் மூடு ஸ்டார்ட் ஆனது.
நேர்காணல் அந்தக் கணத்துடன் நிறைவடைந்தது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in