லிஃப்ட் வேணுமா சார்..?

லிஃப்ட் வேணுமா சார்..?

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

வீடு வாடகைக்குத் தேடிக்கிட்டிருந்தார் நண்பர். என்னையும் விசாரிச்சாரு. “எங்க அபார்ட்மென்ட்ல இருக்கு. ரெண்டாவது மாடி. அருமையா இருக்கும்”னு அடிச்சு விட்டேன்.

“லிஃப்ட் இருக்கா...”ன்னு பதில் கேள்வி கேட்டாரு. “இல்ல”ன்னு சொன்னதும் ஒரு அடி தள்ளி நின்னாரு. “ரெண்டாவது மாடில குடி இருக்கீங்கன்னு சொன்னீங்க. லிஃப்ட் இல்லியா...”ன்னு மூஞ்சியச் சுளிச்சாரு.

“எனக்குத் தமிழ்ல பிடிக்காத வார்த்தை லிஃப்ட்”னு அவர்ட்ட சொல்லிட்டேன். ஆபிஸ்லகூட படியேறித்தான் போவேன். ஒவ்வொருத்தருக்கு பல்லி, கரப்புன்னா அலர்ஜி. எனக்கு லிஃப்ட்னா டென்ஷன்.

மும்பைல ஒருத்தரைப் பார்க்கப் போனப்போ, கூட வந்தவரு லிஃப்ட்டுக்கு கூட்டிப் போனாரு. “அய்யோ லிஃப்டா... வேணாம். நான் படில நடந்து வரேன்”னு சொன்னதும் சத்தமா சிரிச்சிட்டாரு. 14-வது மாடில ஆபிசாம். “நீ எப்போ படியேறி வந்து எப்போ வேலையை முடிக்கிறது”ன்னு.

பக்கத்து சீட்டு அம்மிணி சொன்னாங்க. “இவருக்கு ஏன் லிஃப்டுன்னா பயம்னு எனக்குத் தெரியும்”னு. ஏன்னா... அந்தச் சம்பவம் நடந்தது அவங்களுக்கும் தெரியும்.

உடனே மத்தவங்க அவங்களைச் சுத்தி நின்னுக்கிட்டாங்க. “சொல்லுங்க... சொல்லுங்க”ன்னு.

அரை மணி பேச்சுல ஓடும்னு பிளானு. “போங்க... அவங்கவுங்க சீட்டுக்குப் போயி வேலையப் பாருங்க”ன்னு விரட்டி விட்டேன். ஆனா, மனசுக்குள்ர அந்தச் சம்பவம் ஓட ஆரம்பிச்சுருச்சு.

எங்க ஆபிஸ்ல ரெண்டு டைப்புலயும் லிஃப்ட் உண்டு. மாடர்னா தானாவே கதவு மூடிக்கிட்டு மியுசிக் போடற ஒரு லிஃப்ட். ஏதாச்சும் சாமானை ஏத்திக்கிட்டு வராப்ல கம்பி கேட்டை நம்மளா மூடித் திறக்கறாப்ல இன்னொண்ணு.

இந்த எலக்ட்ரானிக் தானியங்கி லிஃப்ட்டை ஒரு நாள் சர்வீஸ் பார்த்துக்கிட்டிருந்தப்போ ஒரு அவசரத்துக்கு மேனுவல் லிஃப்ட்ல ஏறித் தொலைச்சுட்டேன். என் கூட இன்னொரு அம்மிணியும் உள்ர வந்துட்டாங்க.

ரெண்டு கதவையும் இழுத்து மூடறத்துக்குள்ர நாக்கு தள்ளிருச்சு. சரியா மூடலைன்னா போவாதுன்னு பயம் காட்டி இருந்தாங்க. என்னவோ தொண்டைல மாட்டிக்கிட்ட மாதிரி கரக் புரக்னு சத்தம் போட்டுக்கிட்டு மேலே ஏறுச்சு.

ரெண்டாவது மாடிக்கும் மூணாவது மாடிக்கும் நடுவுல லிஃப்ட் திடீர்னு மூச்சை விட்டுருச்சு.

“என்ன ஸார் ஆச்சு”ன்னு அம்மிணி நான் ஏதோ போக்கிரி பட விஜய் கணக்கா லிஃப்டை பாதில நிக்க வச்ச மாதிரி லுக் விட்டாங்க.
“தெரியல. பிரச்சினை போல இருக்கு”ன்னு பயத்தோட உளறுனேன்.

அந்த அம்மிணி என்னை நம்பாம, “தள்ளுங்க”ன்னு சொல்லிட்டு தன் பங்குக்கு ரெண்டு மூணு ஸ்விட்சை அழுத்தவும் லிஃப்ட் பயங்கரமா கோவிச்சுக்கிட்டு தடாபுடான்னு ஆடுச்சு.

அந்தச் சத்தம் கேட்டு ஒருத்தர் மூணாவது மாடிலேர்ந்து எட்டிப் பார்த்தாரு. “என்ன ஸார்... ரிப்பேரா”ன்னு சாவதானமாக் கேட்டாரு.
“ஆமாய்யா... ஆளைக் கூப்பிடுங்க. மாட்டிக்கிட்டோம். மூச்சு முட்டுது”ன்னு சொன்னேன். “இதோ வரேன்”னுட்டுப் போயிட்டாரு.
திரும்பிப் பார்த்தா அம்மிணி லிஃப்ட் மூலைக்குப் போயிட்டாங்க. இப்போ மேலே கீழே ரெண்டு ஃப்ளோர்லயும் ஆளுங்க கூடிட்டாங்க. பேச்சுச் சத்தம் கேட்டுச்சு.

“காப்பாத்துங்க... காப்பாத்துங்க”ன்னு சின்னப் புள்ளை மாதிரி சவுண்டு விட்டேன். அவ்ளோதான். என் கூட இருந்த அம்மிணி முகத்துல இன்னும் பயம் கூடிப் போச்சு. கண்ணை மூடிக்கிட்டு, “காக்க... காக்க”ன்னு ஆரம்பிச்சுட்டாங்க.

ரெண்டாவது மாடிலேர்ந்து பார்த்தா தெரியலியாம். லிஃப்டோட அடிப் பக்கம் தான் தெரியுதாம். யாரோ சத்தமா சொல்லிட்டு, “இருங்க. மூணாவது மாடிக்குப் போய் பார்க்கிறவரை லிஃப்டை தூக்கிராதீங்க”ன்னு சொன்னது கேட்டுச்சு.

அரை மணிப் போராட்டத்துக்குப் பின்னாடி ஒரு வழியா மூணாவது மாடிக்குப் பாதி உயரத்துக்கு லிஃப்டை ஏத்துனாங்க. எனக்கு ஒருத்தர் கை கொடுத்து மேலே தூக்கி விட்டாரு. சட்டைல கிரீஸ் ஒட்டிக்கிச்சு.

அவர் இழுத்த இழுப்புக்கு நான் வரலேன்னு முனகிட்டே தூக்குனாரு. ஆனா, அந்த அம்மிணிக்கு ஒரு ஸ்டூலைக் கொடுத்து அதுல ஏறச் சொல்லி சொகுசா மேலே வரவழைச்சுட்டாங்க.

சுடச் சுட டீ வாங்கி வச்சுக்கிட்டு இன்னொருத்தர் காத்துக்கிட்டிருந்தாரு.

“நீங்க கான்பரென்ஸ் ரூம் ஏசில போய் ஒக்காருங்க. இன்னிக்கு வேலை எதுவும் செய்ய வேணாம்”னு அவங்ககிட்ட அக்கறையா பேசி பத்து பேர் கூட்டமா அவரை அழைச்சுக்கிட்டுப் போனாங்க. என்னைக் கண்டுக்க ஒருத்தரும் இல்லை.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஆபிஸ்ல யார் என்னைப் பார்த்தாலும், “சார்தான் அந்த லிஃப்ட்ல”ன்னு மொட்டையா சொல்லி அடையாளம் காட்டுவாங்க. கிக்கிபுக்கின்னு அவங்க சிரிக்கிறப்போ கடுப்பாகும்.

பாஸ் கூப்பிட்டாரு. “அசோகன் லீவுல போறாரு. ஒரு வாரம் தான். அந்த சீட்டும் கொஞ்சம் பார்க்க முடியுமா”ன்னு கேட்டாரு.
உள்ளார பக்னு இருந்துச்சு. பாஸ் உடனே சொன்னாரு. “எப்பவும் வேலை இருக்காது. ஏதாச்சும் நாம வாங்கினா அந்த கொடேஷன் ஃபைல் தான் வரும். பழைய ரேட் புது ரேட் கம்பாரிசன் பார்த்து ரேட்லாம் ஓக்கேவான்னு சொன்னா போதும். ஒங்களுக்கும் ஒரு எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்கும்”னு உருகிப் போய் சொன்னாரு.

ப்ரமோஷன் டயத்துல ஒதவும்னு சொல்லாம சொல்றாருன்னு புரிஞ்சுது. மாட்டேன்னு சொன்னா மைனஸ் போட்டுருவாரோன்னு ஒரு கலக்கம் வந்துச்சு. தலையாட்டுனேன்.

அடுத்த நிமிஷமே டொப்புனு ஒரு ஃபைலை என் டேபிள் மேல வச்சாங்க. “புது புரபோசல் சார்.”

பிரிச்சா தலை சுத்துச்சு. இப்போ இருக்கிற லிஃப்ட் பழசாயிருச்சு. புதுசு மாத்தணும்னு கொடேஷன். விதியேன்னு ஃபைலைப் படிக்க ஆரம்பிச்சா நேரம் போனதே தெரியல.

ஃபைல்லேர்ந்து தலையைத் தூக்கினா ஆபிசே காலி. மணி ஆறரை. எல்லாரும் கிளம்பிப் போயிட்டாங்க.

அட்டெண்டர் கையில சாவிய வச்சுக்கிட்டு “எப்போ போவீங்க”னு அபசகுனமா கேட்டாரு.

என் கைப்பையை எடுத்துகிட்டு வேகமா ஆபிசை விட்டு வெளியே வந்தேன். மெயின் ரோடு அரை கிமீ தூரம் இருக்கும். அங்கே போனாத்தான் பஸ் கிடைக்கும்.

நடக்கணுமானு யோசிச்சப்போ ஒரு டூ வீலர் என் பக்கத்துல வந்து நின்னுச்சு.

திரும்பிப் பாத்தேன். எங்க ஆபிஸ் தான். அவரும் லேட் போல. அக்கறையா கேட்டாரு.

“லிஃப்ட் வேணுமா சார்?”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in