பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தோப்புத்துறை

பெருமாள் கோயில் அருகில்...
“என்ன தம்பி மிக்சியோட எங்கே போயிட்டு வர்ற?”
“சட்னி அரைக்கும்போது நின்னுபோச்சு. சரின்னு யூ-டியூப் பார்த்து சரி பண்ணுனேன். ஒரே புகையா வந்துச்சி! அதான் எலெக்ட்ரிசியன்கிட்ட குடுத்து சரி பண்ணி வாங்கிட்டு வர்றேன். அது சரி நீங்க எங்கண்ணே கிளம்பிட்டீங்க?"
“கால்ல சின்ன கட்டி வந்துருச்சு. ஒரே வலி... அதான் டாக்டரைப் பார்க்கப் போறேன்."
“இதுக்கு எதுக்குண்ணே டாக்டர்கிட்ட போறீங்க. யூ-டியூப்ல அருமையான கைவைத்தியம் இருக்கு. இருங்க பார்த்துச் சொல்றேன்.”
“யப்பா டேய்! யூ-டியூப்ல பார்த்து வைத்தியம் பண்ணி, சின்ன கட்டி வெடிச்சி சேதாரமாகிடப்போகுது. உன் அன்புக்கு நன்றி. ஆளைவிடுப்பா!”
- ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை.

தஞ்சை

தனியார் மருத்துவமனையில் மருத்துவரும் நோயாளியும்...
“உங்களுக்கு சுகர், பிபீ இருக்கா?"
“சுகர் இருக்குங்க டாக்டர்.... அது அப்பப்ப வந்துட்டுப் போகும்.”
“அப்பப்ப வந்துட்டுப் போறதுக்கு அது என்ன விருந்தாளியா? சுகர் இருக்கா இல்லையான்னு கரெக்டா சொல்லுங்க.”
“இல்லீங்க டாக்டர்.... சுகர் கொஞ்சமா இருக்கு.”
“கொஞ்சம்னா என்ன ஒரு 100 கிராம் இருக்குமா? ஏன் இப்படி உயிரை வாங்குறீங்க... சர்க்கரை நோய்ங்கிறது ஏதோ வெளியில சொல்லக்கூடாத நோய் மாதிரி நடந்துக்கிறீங்க. போய் டெஸ்ட் எடுத்துட்டு ரிப்போர்ட்டோட வாங்க.”
- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

வேலூர்

டீக்கடை முன்பு நண்பர்கள்...
“நேத்து மட்டும் நாலைஞ்சி கல்யாணப் பத்திரிகை வந்திருக்கு. இந்தக் கரோனா காலத்துல கவர்ன்மென்ட் கட்டுப்பாட்டை மீறி 51-வது ஆளா எதுக்குப் போகணும்னு முடிவு பண்ணிட்டேம்பா!”
“நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே மூணு முடிச்சு போட்டுட்டே.
கல்யாணத்துக்கு நிறைய பேரை இன்வைட் பண்ணி மொய்யையும் கலெக்ட் பண்ணிகிட்டே. நாங்கெல்லாம் நாலு கல்யாணத்தில் தலை காட்டுனாத்தானே நாளைக்கு எங்க விசேஷத்துக்கும் அவங்க வருவாங்க?"
“சரி... சரி. ஞாபகமா மாஸ்க்கையும் மாட்டிகிட்டுத் தலையக் காட்டுங்கப்பா...”
“நைன்ட்டீஸ் சிங்கிள்ஸைப் பார்த்து நக்கல் பண்றதை விடுங்கடா டேய்! முடியல எங்களால.”
(கடையில் சிரிப்பலை!)
- அ.சுகுமார், காட்பாடி.

தஞ்சாவூர்

டாஸ்மாக் அருகே இருவர்...
“ஒலிம்பிக்ல நம்ம ஆளுங்க பெருசா சாதிக்கலையே ஏன் மாப்ஸ்?”
“ம்ம்ம்... எல்லாம் செலக் ஷன்ல பண்ற தப்புதான்!”
“என்னடா சொல்றே?”
“பின்னே என்ன? உன்னையே எடுத்துக்க... எத்தனைத் தடைகளைத் தாண்டி டாஸ்மாக்குக்கு ஓடி வர்றே? எமர்ஜென்சின்னா உங்க வீட்டு சுவரைத் தாண்டிக் குதிக்கிறே... குடுத்த கடனைத் திருப்பிக் கேட்டா மூஞ்சியிலே குத்துறே... இவ்ளோ திறமை இருக்கிற உன்னையெல்லாம் செலக்ட் பண்ணாம மெடல் எப்படி ஜெயிக்கிறது... நீயே சொல்லு!”
“போதும்டா... வாங்கிக் குடுத்த ஒத்தை குவாட்டருக்கு, மேல கலாய்ச்சிட்டே... நேரம் வரட்டும் வச்சுக்கிறேன்!”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.

சீர்காழி

மின்வாரிய அலுவலகம் அருகே இரு இளைஞர்கள்...
“என்ன மாம்ஸ் இந்தப் பக்கம்... நீதான் இன்டர்நெட்லேயே கரன்ட் பில் கட்டிடுவியே?”
"இந்த மாசம் எங்க வீட்டுக்குக் கரன்ட் பில் ஆயிரம் ரூபாய் அதிகமா வந்திருக்கு மச்சான். அதான் எப்படின்னு ரீடிங் எடுக்கறவருகிட்டே கேட்டுட்டுப் போகலாம்னு வந்தேன்.”
“ரீடிங் எடுக்கிறவரு என்ன மனுநீதி சோழனா... உனக்கு உடனே தீர்ப்பு சொல்றதுக்கு? கடன் வாங்கியாவது கரன்ட் பில் கட்டிட்டுப் போவியா...”
“உங்க ஆட்சி வந்ததும் எல்லாத்துக்கும் முட்டுக் குடுக்க ஆரம்பிச்சுட்டீங்கடா. அநியாயமா என்னோட வயித்தெரிச்சலுக்கெல்லாம் முட்டுக்குடுக்காதே... வெளங்காம போயிடுவே...”
- வி.வெங்கட், சீர்காழி.

வேதாரண்யம்

டாஸ்மாக் கடை முன்பு இருவர்...
“என்ன மாப்ள... ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வந்துருக்கே?"
“ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கிட்டேன்!”
“நல்ல விஷயம்தானே... அப்புறம் எதுக்கு இந்த பக்கம்?"
“ரெண்டு டோஸ் போட்டதுக்கு அப்புறம் ஏதோ பூஸ்டர் போடணும்னு நியூஸ்ல பார்த்தேன்!"
“புரியுது... டாஸ்மாக் சரக்கை பூஸ்டர்னு சொல்லி சமாளிக்கப் பார்க்கிறே... அதானே?”
(முதலாமவர் அசடுவழிகிறார்)
-எஸ்.சுதாகரன், வானவன்மகாதேவி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in