அப்டிக்கா அம்பது... இப்டிக்கா அம்பது!

அப்டிக்கா அம்பது... இப்டிக்கா அம்பது!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

பாஸ் அவரோட ரூமுக்கு கூப்பிட்டா, மேட்டர் அர்ஜென்ட்  இல்லைன்னு அர்த்தம்.  அவரே என் சீட்டுக்கு  வந்துட்டா, விஷயம் தீப்பிடிக்குதுன்னு தெரிஞ்சுரும்.

“ஸ்டோருக்குப் போகணும்”னு மொட்டையா சொன்னார்.

“மாச சாமான்லாம் வாங்கிட்டேன் ஸார்”னு பழக்க தோஷத்துல உளறிட்டேன்.

“யோவ்... மெட்டிரியல் ஆடிட் அடுத்த வாரம். ஸ்டோருக்குப் போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்கணும். போன தடவை சொதப்பின மாதிரி ஆகக் கூடாது.”

சுதாரிச்சுக்கிட்டு அட்டென்ஷன்ல நின்னேன். தலை தானா ஆடுச்சு.

“பிரகாசத்தை வரச் சொல்லி இருக்கேன்”னு அடுத்த குண்டு போட்டார்.

பிரகாசம் எங்க கம்பெனி பெயின்டர். வெள்ளை சிவப்பு மஞ்சள் பெயின்ட் டப்பாக்கு மத்தில உட்கார்ந்திருப்பார். அரசியல் பேச ஆரம்பிச்சா எதுலயாவது கோர்த்து விட்டுருவார். அதுக்கு பயந்துக்கிட்டே பேச்சு குடுக்க மாட்டேன்.

“அவரைக் கூப்பிட்டுகிட்டு போய் நீட்டா மார்க் பண்ணிட்டு வந்துருங்க.”

பாஸ் கிளம்பிப் போனதும் லைட்டா பிரைமர் தின்னர் எல்லா வாசனையும் கலந்து காத்துல வந்துச்சு. நிமிர்ந்து பார்த்தா எதிர்ல பிரகாசம். கம்பெனியோட ப்ளூ கலர் யூனிஃபார்ம்ல சிரிச்சுக்கிட்டே நின்னார்.

“எப்போ போலாம் ஸார்...”னு கேட்டதும் நடுங்கிட்டேன். ஏன்னு புரியலியா. அடுத்த டயலாக் கேளுங்க.

“டீ இப்போ வந்துரும். குடிச்சுட்டு போலாமா”ன்னாரு.

மணி இப்போ 9. டீ டைம் 9.30. இப்போ புரிஞ்சுதா.

“ஸ்டோர்ல சூப்பர் டீ வாங்கித் தரேன்”னு பில்டப் பண்ணேன்.

என் கையில் ஒரு டப்பாவையும் நாலு ப்ரெஷ்சும் கொடுத்தாரு. அவர் கூடவே போனதுல நான் அவரோட அப்ரசண்டி மாதிரி தெரிஞ்சுது.

போவுற வழில அவரோட அரசியல் விசிறிகள் நின்னாங்க.  “என்னண்ணே இவ்ளோ சீக்கிரம் கிளம்பிட்டீங்க.”

குனிஞ்சு டப்பாவைக் கீழே வச்சாரு. மனுசன் குண்டு. அவர் கையில் பெயின்ட் டப்பா வச்சிருக்கிறப்போ பார்த்தா விளையாட்டு பொம்மை மாதிரி இருக்கும்.

“வேலை இருக்குல்ல...”

“எப்போ முடியும்?”

“ஒரு வேலையை ஒரு நாள் பூராவும் செய்யலாம். ஒரு மணி நேரத்துலயும் செய்யலாம்” வழக்கமான டயலாக்கை எடுத்து விட்டாரு.
“செய்யாமையும் இருக்கலாம்”னு கீச்சுக் குரல் ஒண்ணு கேட்டுச்சு.

“ஏய் எவன்டா அது” பிரகாசம் இன்னும் பிரகாசம் ஆகிக் கத்துனாரு.

“வாங்க. நாம போவலாம்”னு நான் கெஞ்ச வேண்டியதாயிடுச்சி.

“தலைவர் அறிக்கையை படிச்சீங்களாண்ணே”ன்னு ஒருத்தன் வந்தான்.  “என்ன சொல்லி இருக்காரு”ன்னு எதிர்க் கேள்வி போட்டாரு.

“ஹி ஹி... வால் போஸ்டர்தான் பார்த்தேன்ணே. பேப்பர் இங்கே  படிச்சுக்கலாம்னு வந்துட்டேன்.”

“ஓசியிலயே மங்களம் பாடிருவியே. போ... போய்ப் படிச்சுட்டு வா.”

பிரகாசம்  குனிஞ்சு டப்பாக்களைத் தூக்கினாரு.  “வந்துட்டானுவ. அரசியல் அரிச்சுவடி தெரியாதவனுங்க”ன்னு முனகிட்டே ஸ்டோர் பக்கம் இஞ்ச் இஞ்ச்சா நவுந்தாரு. டீ டைமுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

பிரகாசத்தைப் பார்த்ததுமே டீ கேன் வச்சிருந்தவர் பெரிய லோட்டால புடிச்சுக் குடுத்தாரு. ரெண்டு தகர டின் மேல ஒரு பலகையைப் போட்டு பெஞ்ச். அதுல உக்காந்து ரசிச்சுக் குடிச்சாரு.

எப்போ அவர்  குடிச்சு முடிப்பாருன்னு காத்துக்கிட்டு இருந்தேன்.

ஸ்டோர் பத்தி சொல்லிடறேன். எங்க கோடவுன் நாலு எடத்துல இருக்கு. ரொம்ப காஸ்ட்லி ஐட்டம் எல்லாம் லாக் பண்ணி வைக்கிற வசதியோட ஒரு கோடவுன். மீதி மூணும் பெருசு பெருசா பேக்கிங்ல இருக்கும்.

ஒவ்வொரு ஐட்டத்தை சுத்தி வெள்ளைக் கோடு கட்டம் மாதிரி போட்டு வச்சிருப்போம். ஒரு கட்டத்துக்குள்ர ஒரே டைப் மெட்டிரியல்.  அன்னிக்கு எவ்ளோ ஸ்டாக் இருக்கோ அந்த எண்ணிக்கைல ரகவாரியா இருக்கும். பிரகாசம் எந்த ஐட்டமோ அதோட பேரை கீழே கண்ணுக்குத் தெரியறாப்ல மஞ்ச பெயின்ட்ல எழுதுவாரு.

ஆடிட்டர் வரப்போ லிஸ்ட் கொடுத்துருவோம். கூடவே வந்து கணக்குக் காட்டுவோம்.

“மார்க்கிங் வழக்கம் போலத்தானே ஸார்...”

பிரகாசம் கேட்டப்போ சிரிப்பு வந்துச்சு. போன வருசம் ஒரு பேக்கிங்கை யாரோ ஒழுங்கா வைக்காம தனியா போட்டுருந்தாங்க. பிரகாசம் கவலையே படாம அதுக்கும் தனியா சின்னக் கட்டம் போட்டு ஜாயின்ட் பண்ணிட்டாரு. ஆடிட்டர் அதைப் பார்த்துட்டு நினைச்சு நினைச்சு சிரிச்சாரு.

“அந்த பிரஷ்  எடுங்க. அதில்ல... அதோ பாருங்க. என்னா ஸார்... மசமசன்னு.”

பிரகாசம் சலிச்சுக்கிட்டார். வேலை ஆவணுமேன்னு பல்லைக் கடிச்சுக்கிட்டு நானும் சகிச்சுக்கிட்டேன். ஒரு கட்டம் போட்டு முடிக்கவே சாப்பாட்டு நேரம் வந்துருச்சு. மனுசனுக்கு வயித்துல கடிகாரம் இருக்கும் போல. கையில வாட்ச் கட்டல. ஆனா, டக்குனு டப்பாவை ஓரங் கட்டிட்டாரு.

“வாங்க ஸார் போவலாம்”னு,  இருபது அடி முன்னால கேன்டினுக்கு போயிக்கிட்டிருந்தாரு.

சாப்பாடு ஆனதும் வழக்கம் போல ஆமை நடை. வழியில அரசியல். டீ டைம் வரைக்கும் இன்னொரு கட்டம். ஒரு வழியா அன்னிக்கு வேலை முடிஞ்சிது.

சீட்டுக்குத் திரும்பினதுமே பாஸ் கேட்டாரு.  “எல்லாமே ஓவரா.”

“நாளைக்கும் போவணும்”னு சொன்னா மூஞ்சிய சுளிச்சாரு. என்னோட சிரமம் எனக்கில்ல தெரியும்.

ஆடிட் நாளும் வந்துச்சு. பிரகாசமும்  வந்தாரு. ஒதவிக்கு வச்சுக்குங்கன்னு பாஸ் சிபாரிசு. முனகிட்டே கூட்டிக்கிட்டு போனேன்.
ஒரு ஐட்டம் 100னு கணக்குல இருந்துச்சு. எண்ணிப் பாத்தா 50 தான் வந்துச்சு. பெரிய பெரிய பேக்கிங். ஆடிட்டர் சுழிச்சு எழுதப் போனாரு.

பிரகாசம் சட்டுனு சொன்னாரு.  “சார்... இன்னொரு எடத்துல மீதி 50 இருக்கு ஸார். லோடு அங்கே இறக்கிட்டாங்க, இங்கே இடம் பத்தலன்னு.”

எனக்கும் புரியல. ஆடிட்டரை கோடவுன் கடைசி வரை கூட்டிக்கிட்டுப் போயிட்டு, சுத்தியடிச்சு வேற பாதை வழியா திருப்பி கூட்டிக்கிட்டு வந்தாரு.

“அங்கே மஞ்ச பெயின்ட்ல பார்த்தீங்க தானே. இது சிவப்பு. புதுசா வந்த லோடுன்னு அடையாளத்துக்கு. எண்ணிக்குங்க. சரியா 50 இருக்கும்.”

ஆடிட்டர் ஹேப்பியா போயிட்டாரு. நான் பிரகாசத்தைப் புடிச்சேன்.  “இதென்ன பித்தலாட்டம். முன்பக்கமா அதே எடத்தைக் காட்டி 50. சுத்தி வளைச்சு அதோட பின் வரிசையக் காட்டி இன்னொரு 50னு சொல்லிட்டீங்க.”

பிரகாசம் தன்னோட குண்டு உடம்பை நிமிர்த்தி சொன்னாரு.  “கணக்கு எழுதுனவங்க எங்க தப்பு விட்டாங்கன்னு பாருங்க ஸார். இப்போதைக்கு நிலைமையை சமாளிச்சாச்சில்ல. அரசியல்ல இதெல்லாம் சகஜம் ஸார்.”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in