பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

மெடிக்கல் ஷாப்பில் உரிமையாளரும் வாடிக்கையாளரும்...
“ஏன் சார்… எப்பவும் உற்சாகமா இருப்பீங்க… இப்பெல்லாம் ரொம்ப சுணக்கமா பேசறீங்களே?"
“பின்ன என்ன சார்... கரோனா வந்ததும் ஒரு மாஸ்க் போடச்சொன்னாங்க. ரெண்டாவது அலை வந்ததும் ரெண்டு மாஸ்க் போடச் சொன்னாங்க... அடுத்து மூணாவது அலைக்கு மூணு மாஸ்க் போடச் சொன்னா என்ன செய்றதுன்னு கவலையா இருக்கு. மாஸ்க் வாங்கியே சம்பாத்தியமெல்லாம் காலி ஆயிடும் போலிருக்கே?”
“இதுக்கெல்லாம் கணக்குப் பார்த்தா, கரோனா நம்மளைப் படுத்தி எடுத்துடும் சார். உங்களுக்காக டிஸ்கவுன்ட்ல மாஸ்க் தர்றேன். வாங்கிக்கோங்க...”
“ஏதோ உங்களை மாதிரி ஆட்கள் இருக்கிற தாலதான், வைரஸுக்கு மத்தியிலும் வாழ்க்கை ஓடுது.”
- வி.ரேவதி, தஞ்சை

தோப்புத்துறை

வள்ளியம்மை சாலை அருகே ஒரு டீக்கடையில்...
“தம்பி... சர்க்கரை இல்லாம ஒரு டீ போடுப்பா.”
“உங்களுக்கு இல்லாததா… போட்டுடுவோம் சார்!”
“தம்பி... இதே மாதிரிதான் நான் மூணு மாசமா சர்க்கரை இல்லாம டீ குடிக்கிறேன். அந்தச் சர்க்கரைக்குப் பதிலா அதுக்கான காசைத் திருப்பி குடுப்பியா?”
“சார், உங்களுக்கு உடம்புல சர்க்கரை மட்டுமில்ல கொலஸ்ட்ராலும் நிறையவே இருக்கு.
ரேஷன் கடையில எடை எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்திருந்தா உங்க வீட்டுக்கு மூட்டை கணக்குல சர்க்கரை சேர்ந்திருக்குமே? அதையெல்லாம் சரியா கவனிச்சிட்டு வாங்க... சர்க்கரையோட பாலையும் சேர்த்து ஊத்தறேன்.”
(அனைவரும் சிரிக்கிறார்கள்)
- ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை

காட்பாடி

ரேஷன் கடை க்யூவில்...
“ஏம்பா... க்யூவில் நிக்கிற பாதிப் பேர் மாஸ்க் போடாம நிக்கிறாங்களே?”
“என்ன செய்ய… மாஸ்க் இல்லேன்னா ரேஷன் இல்லன்னு கவர்ன்மென்ட் சொல்லுது. நல்லது சொன்னா நம்ம மக்கள் எங்கே கேட்கிறாங்க?”
“அப்ப 20 கிலோவுக்குப் பதில் 19 கிலோ அரிசி, கூடவே ரெண்டு மாஸ்க்குன்னு கவர்ன்மென்ட் உத்தரவு போட்டுடலாம்.”
“உம்… உன்னையும் அரசு ஆலோசனை குழுவுல சேர்க்கணும்பா. சும்மா சொல்லக் கூடாது... ரேஷன் அரிசி உம் மூளையை ஷார்ப்பாதான் ஆக்கியிருக்கு.”
- அ.சுகுமார், காட்பாடி

திருச்சி

டீக்கடையில்    டீமாஸ்டரும், வாடிக்கையாளரும்...
“என்னய்யா இது… வந்ததும் வராததுமா டீ கிளாஸ் கழுவுற தண்ணி வச்சிருக்க பக்கெட்டைக் கீழ தள்ளிவிடுற... காலையிலயே சரக்கா?”
‘‘அய்யய்யே! ‘தண்ணி’ இல்லண்ணே... தடுப்பூசி போட்டுட்டு வந்திருக்கேன்.’’
“நல்ல விஷயந்தானே... அதுக்கு எதுக்கு இந்த அலப்பறை?”
“இல்லண்ணே... தடுப்பூசி போட்டதால ‘பாகுபலி’யா மாறிட்டேனான்னு சும்மா ‘செக்’ பண்ணிப் பார்த்தேன்... சும்மா சொல்லக்கூடாது... நம்ம கை பட்டவுடனேயே பக்கெட் சும்மா... பறக்குதுல்ல!”
“ஏம்பா... நம்ம பிரதமர் ஒரு பேச்சுக்குச் சொன்னா, அதை வச்சு ஊருக்குள்ளே ஒரண்டை இழுக்க ஆரம்பிச்சுட்டீங்களா? நாடு வெளங்குமாய்யா?”
- க.விஜயபாஸ்கர், திருச்சி

சென்னை

ராயப்பேட்டையில் இரு இளைஞர்கள்...
“என்ன மச்சி... ஒரு வாரமா உன்கிட்ட இருந்து போனையே காணோம்?”
“எல்லாம் ஒரு சேஃப்ட்டிக்குத்தான் மாம்ஸ்! நம்மள மாதிரி ஆளுங்களோட போன்களையெல்லாம் ஒட்டுக் கேட்கிறாங்களாம். அதான் எதானாலும் நேரிலேயே பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.”
“ஓட்டை போனை வச்சிருக்கிற உன்னையெல்லாம் மதிச்சு வேவு பாக்கிறாங்களாக்கும். கம்பி கட்டுற கதையெல்லாம் நல்லா சொல்றடா டேய்!”
“பெரிய மனுஷனாகத்தான் ஆக முடியலை... பெரிய மனுஷன் மாதிரி நடிக்கவாச்சும் விடுங்களேன்டா!”
- எ.எம்.முகமது ரிஸ்வான், சென்னை

நாகர்கோவில்

மீனாட்சிபுரம் பழைய திருவள்ளுவர் பஸ் நிலையம் எதிரே இருவர்...
“என்ன மாப்ள… தடுப்பூசி போட்டுட்டியா?”
“அட எங்கப்பா… டோக்கன் வாங்கவே போதும் போதும்னு ஆகுதாம்.... நம்மளால எல்லாம் வரிசையில் நின்னு டோக்கன் வாங்க முடியாதுப்பா!"
“என்னப்பா நீ... இப்படி சோம்பேறித்தனாமா இருக்கே?! என்னைப் பாரு… விடிய விடிய வரிசையில் நின்னு டோக்கன் வாங்கினேனாக்கும்."
“நீ வாங்குவே. ஏன்னா… அரசாங்கம் குச்சி கட்டி உங்களுக்கு நல்லா ‘ட்ரெய்னிங்' குடுத்து வெச்சிருக்குதே...”
“ஓ… நான் சரக்கு வாங்க வரிசையில நின்னத நக்கல் பண்றியாக்கும். கெட்டதுலயும் ஒரு நல்லது இருக்கேன்னு சந்தோஷப்படுடா சோம்பேறி!”
- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in