ஒதவின்னு கேட்டா ஓடிரணும்!

ஒதவின்னு கேட்டா ஓடிரணும்!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

உள்ளே நுழையும்போதே அம்மிணி கேட் போட்டாங்க. “எதிர் வீட்டுக்காரர் உங்களை அவசரமா பார்க்கணும்னாரு.”

“எதுக்கு“ன்னு கேட்டா, “எனக்கென்ன தெரியும்”னு நொடிச்சுக்கிட்டாங்க. ரொம்பத் துருவுனா, “ஆமா எல்லாத்தியும் எங்கிட்ட சொல்லிட்டுத்தான் செய்யறீங்களாக்கும்”னு எல்லா ராகத்துலயும் பாடுவாங்க.

அதுக்குள்ர அவரே வெளியே வந்துட்டாரு. “காபி குடிச்சாச்சா”ன்னு அக்கறையா அம்மிணியை விசாரிச்சாரு.

இந்நேரம் அது செரிச்சே போயிருக்கும்னு நினைச்சுக்கிட்டேன். திரும்பி என்னைப் பார்த்தவரு, “ஒங்க ஒதவி தேவை”ன்னு எடுத்ததுமே டாப் கியர்ல போனாரு. அவரோட எக்ஸ்ரே பார்வை என் சட்டைப்பைக்குள்ர அவர் தேடுனது இருக்குமாங்கிற மாதிரி துளாவுச்சு.

எதுக்கும் சட்டைப் பையை ஒருவாட்டி தொட்டுப் பாத்துக்கிட்டேன்.

நண்பரோட கார்ல ஆபிஸ் போவுறதாலயும் கேண்டின்ல சாப்பாடுங்கிறதாலயும் தினசரிப் படிக்காசு எண்ணிதான் அம்மிணி சாங்ஷன் பண்ணுவாங்க. பொய்க் கணக்கு சொன்னா ஆபிஸ்ல ஆடிட்டரைக் கூட நம்ப வச்சிரலாம். அம்மிணிகிட்ட நடக்காது. பாடி லாங்வேஜ்லயே கண்டுபிடிச்சிருவாங்க.

“அர்ஜென்டா பணம் தேவைப்படுது. எங்க அம்மிணி உங்க அம்மிணிகிட்ட கேட்டுப் பார்த்தாங்க. நீங்க வந்த பிறகு கேட்கச் சொன்னாங்க.”

ஓ. முன்னாடியே நூல் விட்டு ஆழம் பாத்தாச்சா. தெரியாத மாதிரியே பேசுறதுல அம்மிணி ஜெகஜ்ஜால கில்லாடி தான்னு பொருமிக்கிட்டேன். திரும்புனா அம்மிணியைக் காணோம். அதுவரைக்கும் நின்னவங்க உள்ளார போயிட்டாங்க.
வேற வழி. நானேதான் அடிச்சு ஆடணும்.

“எவ்ளோ வேணும்”னு கேட்டேன்.

“இருபதாயிரம். அடுத்த மாசமே முழுசா திருப்பித் தந்துடுறேன்”னாரு. எனக்கு பக்னு இருந்துச்சு. இருபது ரூபாவைக் கொடுக்கவே எனக்கு பவர் இல்லை. இவ்ளோ கேப்பாருன்னு அம்மிணிக்குத் தெரியுமா. ஒதவின்னு மட்டும் மேம்போக்கா சொல்லி இருப்பாரா.
வீட்டுக்குள்ர போகத் திரும்பினேன். என் மொபைல்ல டொய்ங்னு சவுண்டு கேட்டுச்சு. எதிர் வீட்டுக்காரர் குரலும் கேட்டுச்சு.
“என் அக்கவுண்ட் டீடெய்ல் உங்க வாட்ஸ் - அப்புக்கு அனுப்பி இருக்கேன். பர்மனென்டா ஆட் பெனிஃபிசரி செஞ்சுட்டா பின்னால ரொம்ப ஒதவும்”னு சீரியசா சொன்னாரு.

என்ன ஒரு வில்லத்தனம்னு அவரோட மூளையைப் பத்தி அவ்ளோ தொயரத்துலயும் சிலாகிச்சுக்கிட்டேன்.

வாசக் கதவை மொத வேலையா மூடுனேன். வேகமா அம்மிணிக்கிட்டப் போனேன். “நீ எதுக்கு ப்ராமிஸ் பண்ற”னு லைட்டா சவுண்டு விட்டேன்.

அம்மிணி அசரல. “நீங்க வந்தா கேட்டுப் பாருங்கன்னு தான் சொன்னேன்.”

“அதையேன் சொன்ன” நானும் விடாமக் கேட்டேன்.

“நீங்க டூர் போயிருந்தப்போ ஒரு நாள் ஆட்டோல வந்தேன். சேஞ்ச் இல்லன்னு ஆட்டோக்காரர் சொன்னப்போ நம்ம அபார்ட்மென்ட் வாசல்ல நின்னுக்கிட்டிருந்த இவருதான் ஐநூறு ரூபாய்க்கு சேஞ்ச் கொடுத்தாரு.”

அம்மிணி முகத்தை வச்சு இது காமெடியா சீரியசான்னு கண்டுபிடிக்க முடியல.

“ஏம்மா... சேஞ்ச் கொடுத்தா அதுக்காவ வீட்டையே எழுதி வைக்க முடியுமா?”

“என்னது...” அம்மிணி அதட்டுனதுல என் எக்சாம்பிள் சரியில்லன்னு புரிஞ்சுருச்சு.

“ஒண்ணுமில்ல...” அம்மிணி செஞ்ச அல்வாவை முழுசா வாயில அப்பிக்கிட்ட மாதிரி ஆஃப் ஆயிட்டேன்.

இன்னொரு டொய்ங் சத்தம் என் போன்ல கேட்டுச்சு. “அனுப்பிட்டீங்களா”. எதிர் வீட்டுக்காரர் தான்.

என்னமா ஃபாலோ அப் பண்றாரு. இவரை பேங்க் வேலைக்கு வச்சா லோன் எல்லாம் கரெக்டா வசூல் பண்ணிருவாரு.

பல்லைக் கடிச்சுக்கிட்டு பணத்தை அனுப்புனேன். வந்தக் கடுப்புல sent-னு மொட்டையா ஒரு மெசெஜ் மட்டும் அனுப்பிட்டு விட்டுட்டேன்.

நைட் சாப்பாடு முடிஞ்சுது. வழக்கம் போல வாசப் பக்கம் ஒரு தடவை எட்டிப் பாத்துட்டு, கதவை உள் தாப்பா போடலாம்னு பார்த்தா எதிர் வீட்டுக் கதவு தொறந்துருச்சு. அவர் கையில் போனை வச்சுக்கிட்டு உத்து உத்து பாத்துக்கிட்டு இருந்தாரு.

“ஹிஹி. ஏதோ தேவைன்னு சொன்னீங்களே. அந்த வேலை முடிஞ்சிருச்சா.”

ஒரு மரியாதைக்குக் கேட்டேன். உள்ளுக்குள்ள எரிச்சல். பணம் கிடைச்சுது தேங்க்ஸ்னு சொல்ல வேணாமா. இவன்லாம் என்ன மனுசன்.

அதை விடக் கடுப்பா அவரு. “அனுப்பாம எப்படி வரும்”ன்னாரு 

பயங்கர கன்ஃப்யூஷன். “அப்பவே அனுப்பிட்டு மெசெஜ் பண்ணேனே”

“உங்க மெசேஜ் தான் வந்துச்சு. கிரடிட் ஆச்சுன்னு பேங்க் மெசெஜ் வரல.”

என்ன ஒரு லாஜிக். “சில சமயம் எனக்கும் வராது. ஆனா அக்கவுன்ட்ல கிரடிட் ஆகியிருக்கும்”னு பொறுமையா சொன்னேன். அவரு மூஞ்சில சிரிப்பே வரல.

உள்ளார வந்ததும் அம்மிணி அதே டவுட்டைக் கிளப்பினாங்க. நாங்க பேசிக்கிட்டத கேட்டுருப்பாங்க போல.

வேற வழி தெரியாம என் அக்கவுன்டை ஓப்பன் பண்ணி பணம் அனுப்பினதைக் காட்டுவோம்னு பாத்தா, பதற்றத்துல ஏதோ தப்பா டைப் பண்ணிட்டேன். இன்னும் ஒரு தடவை தப்பா போட்டா அக்கவுண்ட் லாக் ஆயிரும்னு மிரட்டல் வந்துச்சு.

அம்மிணி முனகுனாங்க சத்தமா. “இப்படித்தான் அப்பவும் ஏதாச்சும் தப்பா அனுப்பி இருப்பீங்க. யாரோட கணக்குக்கு போச்சோ. முள்ளங்கிப் பத்தையா இருபதாயிரம்.”

மகனார் உதவிக்கு வந்தார். “உங்க மெயிலுக்கு தகவல் வந்துருக்குமே”ன்னு எடுத்துக் கொடுத்தாரு.

நாள் முழுக்க மொபைலை நோண்டுனதுல சார்ஜ் போயிருந்துச்சு. சார்ஜரைத் தேடுனேன்.

காலிங் பெல் அடிச்சுது. திறந்து பார்த்தா எதிர்வீட்டு அம்மிணி தான்.

“இன்னொரு தடவை சரியா அனுப்ப முடியுமா”ன்னு சாந்தமா கேட்டாங்க. என்னவோ வாட்ஸ் - அப் மெசெஜை டெலிட் பண்ணிட்டு மறுபடி அனுப்பச் சொல்ற மாதிரி.

பணம்யா... பணம்னு வெறி பிடிச்சாப்ல கத்தத் தோணுச்சு.

எங்க அம்மிணி அவங்களை அணைச்சாப்ல கூப்பிட்டுக்கிட்டு எதிர் வீட்டுக்குள்ர போயிட்டாங்க. “இப்போ அவர்ட்ட பேசாதீங்க. மனுசன் ஒரு நிலைல இல்ல”ன்னு ஆறுதல் சொன்னது எனக்கே கேட்டுச்சு.

மகனார் என் போனை சார்ஜ்ல போட்டு அதை எடுத்துக்கிட்டு எதிர் வீட்டுக்குப் போனாரு. திரும்பி வந்தப்போ எதிர்வீட்டு அண்ணாச்சியும் சேர்ந்து வந்தாரு. மனுசன் முகத்துல லிட்டர் கணக்குல அசடு வழிஞ்சுது.

“ஸாரி ஸார். என் அக்கவுன்ட் நம்பரை அனுப்பினதா நினைச்சு யாருக்கு நான் பணம் அனுப்பணுமோ அவரு அக்கவுன்ட் நம்பரை உங்களுக்கு அனுப்பிட்டேன். இப்போ அவரும் பணம் வந்துருச்சுன்னு தகவல் சொல்லிட்டாரு.”

சொல்லிட்டு அண்ணாச்சி திரும்பிப் போனதும் நான் எங்க அம்மிணியைப் பார்த்தேன். கெத்தா சொன்னாங்க.
“மணி என்னாவுது பாத்தீங்களா... எப்போ தூங்குறது. கதவைத் தாப்பா போட்டுட்டு வந்து படுங்க!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in