பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

வல்லம்

டாஸ்மாக் கடை அருகில் இருவர்...
“என்னடா ஒரு வாரமா உன்னைக் கடைப் பக்கமே காணோம்?”
“என்ன பண்றதுப்பா... அடுத்து மூணாவது அலை வருதுன்னு சொல்றாங்க. ரெண்டு அலையிலே தப்பிச்ச மாதிரி அதுலயும் தப்பிச்சிடணும்ல… அதான் கொஞ்ச நாளா தலைமறைவா இருக்கேன்.”
“அட பயந்தாங்கொள்ளி… இவங்க சானிடைசரை கையிலே தடவிக்கிறாங்க... நாம உடம்புக்குள்ளே விட்டுக் கழுவறோம்! நம்மள கரோனா நெருங்கிடுமா?”
“இதெல்லாம் ஓவர் கான்ஃபிடன்ஸ் மாப்பு. பல பேரு இப்படிச் சொல்லிட்டுத் திரிஞ்சு கடைசியில பாசிட்டீவ் ஆகிட்டாங்க. பார்த்து சூதானமா இருந்துக்க!”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்.

ஸ்ரீரங்கம்

தலைமைத் தபால் அலுவலகத்தில்...
“மேகதாது கார்டு இருக்குங்களா அம்மா?”
“எது மேகதாது கார்டா... என்ன அய்யா சொல்றீங்க? மேக் தூத் கார்டுதான் கிடைக்கும்… மேகதாதுன்னா கர்நாடகா கட்ட ப்ளான் பண்ற டேம்.”
“ஏம்மா எனக்கு அரசியல் தெரியாதுன்னு நினைச்சீங்களா... மேக் தூத் கார்டைத்தாம்மா தமிழ்ல மேகதாதுன்னு சொன்னேன்!”
(க்யூவில் நிற்கும் அனைவரும் சிரிக்கிறார்கள்!)
- வி.ரேவதி, தஞ்சை.

தஞ்சை

கீழவீதியில் இரு நண்பர்கள் ...
“என்னடா மாப்ள மாஸ்க் லூசா தாடையில தொங்குது? சரியா போடுடா... போலீஸ் பாத்தா தண்டம் குடுக்கணும்.”
“அதான் அரசாங்கமே தளர்த்தப்பட்ட ஊரடங்குன்னு பல தடவை அறிவிச்சிடுச்சே. அது மாஸ்க்குக்குப் பொருந்தாதா?”
“ஊரடங்கு தளர்வுக்கும் மாஸ்க்குக்கும் முடிச்சு போடாதடா மங்குனி. ஏற்கெனவே ஹெல்மெட் இல்லாம வண்டி ஓட்டி பல தடவை தண்டம் அழுத ஆளு நீ. இப்ப மாஸ்க் போடாம போலீஸுக்குக் கப்பம் கட்டணும்னு உனக்கு விதி இருக்கு போல…”
(நண்பர் ஜெர்க்காகி மாஸ்க்கை மூக்கு வரைக்கும் ஏற்றிக்கொள்கிறார்!)
- வளர்மதி ஆசைத்தம்பி, தஞ்சாவூர்.

காந்திபுரம் - கோவை

செல்போன் கடை அருகே இருவர்...
“என்ன மாப்ள... புது போன் மாத்திட்டியா? கையில வச்சி உத்து உத்துப் பார்த்துட்டு இருக்கே?”
“இல்லடா மச்சி... ஏதோ சாஃப்ட்வேர் வச்சி ஒட்டுக் கேக்குறாங்களாம், அதான் ஒரே யோசனையா இருக்கு...”
“ஆமா... இவரு பெரிய சீன அதிபரு! உங்க ரகசியத்தை உலகமே ஒட்டு கேக்கப் போவுது... போவியா!”
“என்னடா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்ட?”
“பின்ன, மூணு வருஷத்துக்கு முன்னாடி உள்ள மெசேஜையெல்லாம் முந்தா நேத்துக்கூட ஃபார்வர்டு பண்ணிட்டு இருந்தே... இதெல்லாம் உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல?”
- பா.சக்திவேல், கோயம்புத்தூர்.

நாகர்கோவில்

கடைவீதியில் இருவர்...
“என்னடே! ரெண்டு நாளா ஆளையே பார்க்க முடியலை?”
“கரோனா தடுப்பூசி போட்டதால உடம்பு வலி, காய்ச்சல்னு எங்கேயுமே போக முடியலை!”
“நானும்தான் போட்டேன், எனக்கு ஒண்ணுமே செய்யலையே... நல்ல தெம்பாத்தான் இருந்தேன்!”
“அப்ப உனக்கு அந்த ஊசி சரியா வேலை செய்யலை போல... எதுக்கும் முதல் ஊசியையே ரெண்டாவது தடவை போட்டுக்க மக்கா!”
“அடேய், வாட்ஸ்-அப்ல எதாச்சும் படிச்சிட்டு வதந்தியைப் பரப்பாதீங்கடா… நல்லா கெளப்புறீங்கடா பீதியை!”
- எ.முகமது ஹுமாயூன், நாகர்கோவில்.

தோப்புத்துறை

பெருமாள் கோவில் அருகே ஒரு உணவகத்தில்...
“அண்ணே சாப்பிட என்ன இருக்கு... இட்லி தோசை ஏதும் கிடைக்குமா?”
“எல்லாம் தீர்ந்து போச்சுப்பா. உப்புமா சாப்பிடுறீயா தம்பி?”
“எது இந்த உருமாறிய இட்லிதானே..?”
கடைக்காரர் சிரித்தபடி.. “உன்னைப் பட்டினி போட்டாதான் திருந்துவ... நம்ம கடையில எப்பப்பா இட்லி மீந்து போயிருக்கு... அதுல உப்புமா செய்யுறதுக்கு?”
“அய்யோ சும்மா சொன்னேன்... அம்மா ஊர்லேருந்து வர்ற வரைக்கும் உங்க கடையிலதான் சாப்பாடு… பழிவாங்கிடாதீங்க!”
-ந.விஜய்ஆனந்த், தோப்புத்துறை.

நாகர்கோவில்

பஜாரில் தாத்தாவும் பேரனும்...
“இந்தக் கடையிலேயே டிராவல் ‘பேக்' வாங்கிக்கலாம்டா...”
“வேண்டாம் தாத்தா… இது ராசி இல்லாத கடை.”
“என்னடா இப்படி சொல்றே?”
“பின்ன என்ன... பத்தாவது போறதுக்கு ஆசை ஆசையா இந்தக் கடையில்தான் ‘பேக்' வாங்கினோம். ஆனா, ஸ்கூலுக்கே போக முடியாமப் போச்சே!”
“ஓஹோ... என்னக் கேட்டா இதுதான் உனக்கு ராசியான கடை”
“என்ன தாத்தா சொல்றே...”
“பின்ன என்ன... ஸ்கூலுக்குப் போயிருந்தா மட்டும், நீ பாஸாகி இருப்பியாக்கும்? ஏதோ இந்தக் கடையில் ‘பேக்' வாங்கினகாட்டி... கரோனா வந்து உன்னைக் காப்பாத்திவிட்டுடுச்சு!”
- மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான் விளை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in