பேசிக்கிட்டாங்க..!

பேசிக்கிட்டாங்க..!

எட்டயபுரம்
செருப்புக்கடை ஒன்றில் கஸ்டமரும் முதலாளியும்...
``என்ன அண்ணாச்சி, உங்க கடையில மூணு மாசத்துக்கு ஒரு ஜோடி செருப்பு வாங்கிட்டே இருக்க வேண்டியதா போச்சே. தேய்ஞ்சு போகாத மாதிரி குவாலிட்டியா செருப்பு வச்சிக்கிறதில்லையா..?''
``செருப்பை கால்ல போட்டாலே இந்தப் பிரச்சினைதான் தம்பி. நீங்க வேணா பத்திரமா கையிலயே வச்சிக்கிட்டு நடங்க. இந்த உலகம் அழியும் வரை தேயவே தேயாது தம்பி..!''
(இதைக் கேட்டதும், “சூப்பரா கலாய்ச்சிட்டீங்க போல” என சிரித்துக்கொண்டே வெளியேறுகிறார் கஸ்டமர்)
- இராமனூத்து, த.ஆறுமுகத்தாய்

மதுரை
அண்ணா நகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் நோயாளி பெண்மணியும் ரிசப்ஷனிஸ்ட்டும்...
``ஏம்மா .. எனக்கு இந்த டோக்கன் வேணாம். வேற மாத்தி கொடுங்க''
``அதான் முதல்லயே டோக்கன் போட்டாச்சே... அப்புறம் என்ன? சீக்கிரமா டாக்டரை பாத்துடலாம்''
``அதில்லைமா... இது எட்டாம் நம்பர் டோக்கன். எட்டு எங்களுக்கு ராசியில்லை அதான்...''
``ஏம்மா.. இது என்ன ஆஸ்பத்திரியா இல்ல ஆர்.டி.ஓ ஆபீஸா ? விட்டா இங்கியே எட்டு போட்டு காட்டுவே போலிருக்கே... இதுக்கும் ஃபேன்சி நம்பர் வேணும்னா எக்ஸ்ட்ரா பில் போடுவோம்; பரவாயில்லையா?''
(ரிசப்ஷனிஸ்ட் அதட்டும் தொனியில் சொன்னதும் பெண்மணி அமைதியாகப் போய் உட்காருகிறார்)
மதுரை, எம்.விக்னேஷ்

வள்ளியூர்
ரயில்வே ஸ்டேஷனில் இருவர்...
``ஏ மக்கா, சொன்னா கேளு! நீங்க மூணு
பேரும் ஏ.ஸி. டிக்கெட் ரிசர்வ் பண்ணி
யிருக்கிய... நான்  ரிசர்வ் பண்ணல... சாதா டிக்கெட்தான்! நான் வந்து உங்ககூட இருந்தா நல்லா இருக்குமா சொல்லு! செக்கர் வந்தா மானம் கெடுத்திருவான்!''
``சமத்துவம், எல்லாரும் ஒண்ணுதான் அப்பிடி இப்பிடினு பேசுதான்வ.அப்புறம் ரெயில்ல என்ன பிரிவுங்கேன்? எல்லாரும் ஒண்ணுதான்! நீ வால...நான் பார்த்துகிடுதேன்!''
``நாம தட்டிக்கேட்டே வளர்ந்தவனுங்க...தப்பு பண்ணக்கூடாது! மதுரையில இறங்கி பேசிக்கிடுவம்! நான் என் பொட்டிக்கு போறேன், வரட்டா!''
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி
ஒரு டீ கடையில் இருவர்...
``என்னப்பா,திடுதிப்புனு திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து பண்ணிட்டாங்க?''
``அதான் புயல் சேதம் - நிவாரணம்னு காரணம் காட்டிட்டாங்களே!''
``தேர்தல் நடந்தா அவங்களுக்கு ஏகப்பட்ட நிவாரணத்தை வேட்பாளர்களே போட்டி போட்டுக்கிட்டு வழங்கியிருப்பாங்களே...தேர்தல் ஆணையத்துக்கு திருவாரூர் மக்கள் மேல உண்மையான அக்கறை இல்லைன்னு நினைக்கிறேன்!''
``ஆமாமா... அப்படி இருந்திருந்தா அவங்கெல்லாம் ஓட்டுக்கு ஏத்த நிவாரணம் தந்து முடிச்ச பிறகு ரத்து பண்ணிருக்குமே. இனிமேல் இடைத்தேர்தல் நாளை அறிவிக்கும்போது, டேட்டுக்கு கீழே ‘கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது'னு தேர்தல் ஆணையம் போட்டாலும் போடலாம்!''
(டீ கடையில் சிரிப்பலை)
கிருஷ்ணகிரி, வீ.விஷ்ணு குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in