ஆட்டுக்குத் தாடியும், பாட்டுக்குப் புரோஹித்தும் எதுக்கு?

ஆட்டுக்குத் தாடியும், பாட்டுக்குப் புரோஹித்தும் எதுக்கு?

கடந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ச்சி இது. பிக் பாஸ் வீடு எப்படியிருக்கும் என்று சொல்ல மறந்துவிட்டோமே..? வீட்டில் திரும்பிய திசையெல்லாம் விளம்பரம் வௌம்பரம். நீச்சல் குளம் அருகே ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்று பெரிய ஃபிளக்ஸ். லிவ்விங் ரூமில் உள்ள சோபாக்களில், ’கவிழ்த்தாலும் கவிழாது பழனிசாமி அன் கோ’ என்றும், தலையணைகளில், ‘கருப்புப் பணத்தை மீட்போம்’ என்றும் எழுதிவைத்திருக்கிறார்கள். பெண்களுக்கான படுக்கை அருகே ‘பதஞ்சலி அழகு சாதனங்கள்’ என்றும், ஆண்கள் படுக்கை அருகில், ‘டாஸ்மாக்’ விளம்பரமும், சமையலறையில், ‘நமோ டீக்கடை’, ‘அம்மா உணவகம்’ என்றும், டைனிங் டேபிளில், ‘மேக் இன் இண்டியா’, ‘நமக்கு நாமே’ என்றும், கை கழுவும் இடத்தில், ‘அன்புமணி ஃபார் சிஎம்’ என்றும், கழிப்பறையில், ’அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை’ என்றும் எழுதப்பட்டிருக்கின்றன.

நாள் 7 காலை 6 மணி

“நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்?” என்ற பாடலுடன் விடிகிறது. அந்த சத்தத்தால், யோகா செய்துகொண்டிருக்கும் ஹெச்.ராஜா கடுப்பாகிறார். எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் கை கோத்தபடி உற்சாகமாக ஆடுகிறார்கள். கமல் கார்டனுக்கே போய், குஷ்பு, ராகுலுடன் கை கோத்தபடி ஆட, ஸ்டாலின் எரிச்சலாகப் பார்க்கிறார். கடைசியில் துரைமுருகன், திருமா, வைகோ, விஜயதரணியுடன் ரிங்கா ரிங்கா ரோஸஸ் சுற்றி திருப்தியடைந்துகொள்கிறார் ஸ்டாலின்.

வீட்டுக்கான தலைவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி ‘டாஸ்க்’ வைக்கிறார் பிக்பாஸ். ஓபிஎஸ், ஸ்டாலின், ஹெச்.ராஜா ஆகியோர் போட்டியிடுகிறார்கள். யாரோ போட்ட உத்தரவால், தனது வாய்ப்பை எடப்பாடிக்கு விட்டுக்கொடுக்கிறார் ஓபிஎஸ். தேர்தலில் எடப்பாடி அமோக வெற்றிபெறுகிறார். ஹெச்.ராஜாவுக்கு தமிழிசைகூட ஓட்டுப்போடவில்லை என்றாலும், எடப்பாடிக்கு அடுத்த அதிகாரம் பெற்றவராக அவரையே அந்த வீடு நினைக்கிறது. தோல்வி தந்த விரக்தியில், தலைவரின் செயல்களைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார் ஸ்டாலின்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in