சிவாஜி - ஏ.பி.நாகராஜன் கூட்டணியின் 9-வது படம்: ‘தில்லானா மோகனாம்பாள்’ தந்த மெகா வெற்றி!

சிவாஜி - ஏ.பி.நாகராஜன் கூட்டணியின் 9-வது படம்:
‘தில்லானா மோகனாம்பாள்’ தந்த மெகா வெற்றி!

தமிழ் சினிமாவில் பக்தியை மிக எளிமையாகவும் சினிமாவின் மொழியிலும் சொல்லி, மிகப்பெரிய கனமான விஷயங்களைக்கூட ரசிகர்களின் மனதில் மிக எளிதாக ஏற்றி வெற்றி பெற்றவர் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். இவர் இயக்கிய ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’, ‘திருமால் பெருமை’, ‘கந்தன் கருணை’ என பக்திப் படங்களின் பொக்கிஷமாக வந்தவை ஏராளம்.

சிறு வயதிலேயே நாடகத் துறைக்குள் நுழைந்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகக் குழுவில் இணைந்தார். சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 1953-ல் ‘நால்வர்’ எனும் படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார். இதையடுத்து பல படங்கள். 1956-ல் சிவாஜி கணேசன் நடித்த ‘நான் பெற்ற செல்வம்’ படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதினார். அப்போது நடந்த சந்திப்பு சிவாஜிக்குள்ளேயும் ஏ.பி.நாகராஜனுக்குள்ளேயும் அப்படியொரு பந்தத்தை ஏற்படுத்தியது.

1962-ம் ஆண்டு, ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தின் மூலம் இயக்குநரானார் ஏ.பி.நாகராஜன். படத்தின் நாயகன் சிவாஜி. அடுத்த வருடம் சிவாஜியை வைத்து ‘குலமகள் ராதை’ படத்தை இயக்கினார். 1964-ல் சிவாஜியை ஒன்பது வேடங்களில் நடிக்க வைத்து ‘நவராத்திரி’யை உருவாக்கினார். இதுதான் சிவாஜியின் 100-வது படம். ஆக, சிவாஜியின் 100-வது படத்தை இயக்கிய பெருமையும் ஏ.பி.நாகராஜனுக்கு உண்டு.

1965-ல் சிவாஜி, சாவித்ரி உள்ளிட்டோர் நடித்த ‘திருவிளையாடல்’ படத்தை இயக்கினார். மிகப் பெரிய வெற்றியடைந்த அப்படத்தைத் தொடர்ந்து, 1966-ல் ’சரஸ்வதி சபதம்’ படத்தை இயக்கினார். அதுவும் மிகப் பெரிய வெற்றி. 1967-ல் ‘கந்தன் கருணை’ படத்தை இயக்கினார். அதே வருடத்தில், ‘திருவருட்செல்வர்’ படத்தை இயக்கினார்.

ஆம், 1962-ல் இயக்குநரானது முதல், வருடத்துக்கு ஒரு படம் இயக்கிய ஏ.பி.நாகராஜன் தொடர்ந்து சிவாஜியையே நாயகனாக்கி அழகு பார்த்தார்.

1967-ல் ‘சீதா’ என்றொரு படம், ஜெமினி கணேசனை வைத்து இயக்கினார். 1968-ல், சிவாஜியுடன் இரண்டு படங்களில் இணைந்தார் ஏ.பி.நாகராஜன். ஒன்று... ‘திருமால் பெருமை’. இன்னொன்று ‘தில்லானா மோகனாம்பாள்’. சிவாஜியை நாயகனாக்கி ஏ.பி.நாகராஜன் இயக்கிய 9-வது படம் இது.

’திருவிளையாடல்’ படத்தின் ஒலிச்சித்திரமும் ‘சரஸ்வதி சபதம்’ படத்தின் ஒலிச்சித்திரமும் 1990-கள் வரை பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. அதேபோல், ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படமும் திரையிட்ட அனைத்து தியேட்டர்களிலும் 100 நாள், 150 நாள், வெள்ளிவிழா என பெரும் வெற்றிவிழாக்களைச் சந்தித்தது.

1968-ம் ஆண்டுக்குப் பிறகும் கூட, சிவாஜியை வைத்து பல படங்களை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருக்கிறார் என்றாலும் ‘தில்லானா மோகனாம்பாள்’ அடைந்த உயரத்துக்கு இணையாக மற்ற படங்கள் அமையவில்லை. அந்தப் படம் ஓர் அபூர்வ வைரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in