அத்தனை வாத்தியார்களுக்கும் ஒரு ‘சல்யூட்’!

ஆசிரியர் தின சிறப்புப் பகிர்வு
அத்தனை வாத்தியார்களுக்கும் ஒரு ‘சல்யூட்’!

இந்தக் காலத்தில்தான் ‘இன்ன நாள், இந்த தினம்’ என்றெல்லாம் கொண்டாடுகிறோம். ஆனால் மிக நீண்டகாலமாகக் கொண்டாடுகிற நாளாகவும் கொண்டாடப்பட வேண்டிய நாளாகவும் இருக்கிறது ‘ஆசிரியர் தினம்’. சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை, ‘ஆசிரியர் தினம்’ என்று கொண்டாடி வருகிறோம்.

நம் ஒவ்வொருக்கும் ஆதர்சமாக இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான். ஆசிரியர்களை ‘குரு’ என்கிறோம். குருவுக்கும் சிஷ்யனுக்குமான பந்தம் என்பது அலாதியானது. அந்தக் காலத்தில், ‘குருகுலம்’ என்று உண்டு. அங்கே படிப்பதற்குக் குழந்தைகளைக் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள். குருவிடம் வித்தைகளைக் கற்றுக்கொள்வது மட்டுமின்றி குருவுக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்வார்கள். இன்றைக்கு ஹைடெக் பள்ளிகள், ஹாஸ்டல்கள் என்றெல்லாம் வந்துவிட்டன. ஆனால் அன்றைக்கே குருவிடம் தன்னை முழுவதும் ஒப்படைக்கிற சிஷ்யர்களாகத்தான் கல்வி முறை இருந்தது.

ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான பந்தம், காதலைவிட புனிதமானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சொந்தம் இது. 'நீ பாஸ் பண்ணினா என்ன, ஃபெயிலானா என்ன’ என்றெல்லாம் இருக்கமாட்டார்கள் ஆசிரியர்கள். என் வகுப்பில், நன்றாகப் படிக்கும் ஏழைப் பையனுக்கு, என் வேதியல் ஆசிரியர் அவனுக்குத் தேவையான ஜியாமெட்ரி பாக்ஸ், பேனா, நோட்டெல்லாம் வாங்கித் தந்தது இன்னமும் நினைவிருக்கிறது. அதேபோல், படிப்பில் கொஞ்சம் சுமாராக, ஆனால் விளையாட்டில் மகா சூரனாக இருந்த மாணவனை, தமிழாசிரியர் புரிந்து உணர்ந்துகொண்டார். ‘ஸ்கூல் முடிஞ்சதும் ஸ்டாஃப் ரூமுக்கு வா’ என்று அழைத்திருந்தார். அவனை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அவனுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள், ஷூ, சாக்ஸ் என வாங்கிக் கொடுத்தபோது அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. நம் தந்தைக்கு நிகரானவர்களாகத்தான் ஆசிரியர்களைப் பார்க்க முடியும் என்பதற்கு இவையெல்லாம் என்னளவில் நேரடியான சான்றுகள்.

குழந்தைகளின் திறமைகளைப் பெரும்பாலும் பெற்றோர்கள் புறந்தள்ளிவிடுவார்கள் அல்லது கவனிக்கத் தவறிவிடுவார்கள். ‘சும்மா எப்பப் பாரு பாடிக்கிட்டே இருக்கறது’, ‘ஸ்கூல் விட்டு வந்ததும் கிரவுண்டுக்கு ஓடிடுறியே. காலை உடைச்சிடுவேன்’ என்றெல்லாம் சொல்லி முட்டுக்கட்டை போட்டுவிடுவார்கள். ஆனால், ஒரு வகுப்பில் இருக்கிற நாற்பது மாணவ மாணவிகளுக்கும் என்னென்ன திறமை இருக்கிறது என்பதை, ஆசிரியர்களைத் தவிர வேறு எவரும் உணர்ந்திருக்கமாட்டார்கள்.

பள்ளி, கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்துவிட்டு, வேலை, மனைவி, குழந்தை என்றாகிவிட்டபோதும் எங்கோ ஓரிடத்தில் ஆசிரியரைப் பார்த்ததும் ஓடோடிச் சென்று ‘வணக்கம் சார், நான் உங்கள் மாணவன்’ என்று நெகிழ்வோம்.

அப்போது, ‘எனக்கு அப்பவே தெரியும்டா. நீ அரசாங்க உத்தியோகத்துல சேருவேனு’, ‘அப்பவே தெரியும் நீ பிசினஸ்தான் செய்வேனு’, ‘உன் எக்ஸர்சைஸ் உடம்புக்கு போலீஸ் ஆவேன்னு அப்பவே நினைச்சேன்’ என்றெல்லாம் கணித்து வைத்துச் சொல்லுபவர்களை வெறுமனே ஆசிரியர்களாக மட்டுமா பார்க்க முடியும்? நம் லட்சியங்களுக்கான வேருக்கு நீர் விட்டவர்கள் என்பதுதானே சரியாக இருக்கும்.

எண்பதுகள் வரைக்கும் வாத்தியாரை சந்தையிலோ பொது வெளியிலோ பார்த்தால் அவ்வளவுதான். எதிர்திசை நோக்கி சிட்டெனப் பறப்போம். அதுவும் அப்பாவுடன் வந்திருக்கும்போது, வாத்தியாரை நேருக்கு நேர் பார்த்துவிட்டால், குலசாமி உட்பட மொத்த சாமியையும் வேண்டிக்கொள்வோம். ‘பையன் வீட்டுக்கு வந்து என்னதான் பண்றான்? படிக்கறதே இல்லியா’ என்று ஆசிரியர் கொளுத்திப் போட, அன்றைக்கு வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மகாபாரத யுத்தமே நடக்கும்.

சந்தையில், கடைவீதியில் பையுடன் வரும் வாத்தியாரிடம் இருந்து, பையை வாங்கிக்கொண்டு, ‘காக்கா’ பிடிக்க ப்ளான் பண்ணுகிற பையன்களும் உண்டு. ஆனால் அந்த ஜம்பமெல்லாம் ஆசிரியர்களிடம் செல்லாது.

இன்னும் சில ஆசிரியர்கள், வீட்டைக் கண்டுபிடுத்து வருவார்கள். அவருடன் எழெட்டு நண்பர்களும் உடன் வருவார்கள்.வந்து ஆற அமர காபியெல்லாம் குடித்துவிட்டு, ‘நல்ல பயதான். கொஞ்சம் விளையாட்டுப் புத்தி. டேய், நாளைலேருந்து சாயந்திரம் ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்துரு. இந்த வருஷம் நல்ல மார்க் எடுத்துட்டீனா உன் லைஃப் நல்லாருக்கும்டா’ என்று டியூஷன் ஃபீஸே வாங்காமல் டியூஷன் எடுத்து, மரமண்டைக்குள் கல்வியை வலியத் திணித்ததால்தான் ’இன்றைக்கு நான் நல்லாருக்கேன்’ என்று பல்லாயிரக்கணக்கான பேர் சொல்லுவோம்தானே!

‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்பார்கள். முதலில், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று வரிசைப்படுத்தியும் பார்க்கலாம். மாதாவைப் போல் குரு, பிதாவைப் போல் குரு, தெய்வத்தைப் போல் குரு என்றும் பார்க்கலாம். ஏணியையும் தோணியையும் ஆசிரியருக்குச் சமமாகச் சொல்லுவார்கள். அவர்கள் மட்டுமே அப்படியே இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் இருந்து ஆசிரியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் என லட்சக்கணக்கான பேர்கள் உருவானார்கள்; உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

பள்ளிக்குப் பக்கத்தில் எப்படியும் ஒரு டீக்கடை இருக்கும். எங்கள் பள்ளிக்கு அருகே ‘ஆனந்தா பேக்கரி’ என்றிருந்தது. அங்கே கெமிஸ்ட்ரி வாத்தியார் இளங்கோவன் சாரும் பயாலஜி வாத்தியார் காதர் சாரும் டீ குடிக்கப் போவார்கள். நாங்கள் எங்களிடம் இருக்கும் காசையெல்லாம் ஒன்றுதிரட்டி, சால்ட் பிஸ்கட் நாலுவாங்கி எட்டாகப் பங்கிட்டுத் தின்னப் போவோம். அங்கே எங்களைப் பார்த்ததும், ‘என்னடா பசங்களா, பசிக்குதா. இவங்களுக்கு வெண்ணெய் பன் கொடுங்க’ என்று எல்லோருக்கும் வழங்கும்போது, அப்படியான ஆசிரியர்களிடம் தாய்மையை உணர்ந்திருக்கிறோம் நாங்கள்.

ஒன்பதாவது படிக்கும்போது உடன் படித்த பெண்ணுக்கு ஒரு பையன் ‘லவ் லெட்டர்’ கொடுக்க, அந்த விஷயம் வெற்றிவேல் சாருக்கு தெரிய, அந்தப் பையனை தனியே அழைத்து, ‘காதல்கீதல்லாம் இப்போ வேணாம்டா. இப்போ மனசை அலைபாய விட்டுட்டோம்னா, அது இழுக்கிற இழுப்புக்குத்தான் போக வேண்டியிருக்கும். படிடா. நல்லாப் படி. ஜெயிச்சிட்டு லவ் பண்ணு’ என்று அறிவுரை வழங்கினார். அதுமட்டுமல்ல, ‘அந்தப் பையனைக் கூப்பிட்டு கண்டிச்சிட்டேன். நாலு அறைவிட்டேன். படவா அழுதுட்டான். பயந்துட்டான். இந்த விஷயத்தை உங்க அப்பாகிட்டல்லாம் சொல்லாதே. அப்புறம் உனக்கு டி.சி வாங்கினாலும் சரி, இவனுக்கு டி.சி. கொடுக்கச் சொன்னாலும் சரி... உங்க வாழ்க்கையே திசை மாறிப்போயிரும்’ என்று அப்பெண்ணிடம் கேட்டுக்கொண்டார். அப்படியான ஆசிரியரை நண்பனை விட மேலானவராக உணரமுடிகிறதுதானே!

இன்றைக்கு பள்ளிகள், வியாபாரக்கூடங்களாகிவிட்டிருக்கலாம். ஆசிரியர்கள், டியூஷனை பிசினஸாகப் பார்க்கலாம். ஆசிரியர்களை மதிக்காத நிலையில் மாணவர்கள் இருக்கலாம். ‘எங்ககிட்ட ஃபீஸ் வாங்கறீங்கதானே, அதுக்கு தகுந்தது மாதிரி பாடம் நடந்துங்க’ என்று முதலாளித்துவ சிந்தனைகள் மேலோங்கியிருக்கலாம். ஆனால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவனுக்குமாக இழையோடிக்கொண்டிருக்கிற பந்தத்தை அப்போது நம்மால் உணரவே முடியாது.

எல்லாம் முடித்துவிட்டு, நாற்பது, நாற்பத்தைந்து, ஐம்பதுகளில் வாழ்க்கையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது, நமக்கு முதலில் ஆசிரியர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். இத்தனைக்கும் செல்லமாகப் பட்டப்பெயர்களை ஆசிரியர்களுக்கு வைத்ததெல்லாம் கூட நடந்திருக்கும். ‘டேய் அந்த சார் இப்போ எங்கே இருக்காருடா’, ‘தமிழ் வாத்தியாரை போன வருஷம் பாத்தேண்டா’, ‘கெமிஸ்ட்ரி சார்தான் இறந்துட்டாராம். அடிக்கடி அவர் ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும்டா எனக்கு’ என்றெல்லாம், புலம்பிக்கொண்டே இருக்கிற மாணவச் செல்வங்களால்தான் ஒவ்வொரு தலைமுறையிலும் மனதால் பாடம் நடத்துகிற ஆசிரியர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.

என் மகனின் நண்பன். அவன் தந்தை புற்றுநோயால் இறந்துவிட்டார். அவர் இறந்த சோகத்திலேயே அடுத்த இருபதாம் நாள் அம்மாவும் இறந்துவிட்டார். பள்ளிப்படிப்பு பாதியில் நிற்க, அவன் சொந்த மாநிலமான ஒடிசாவுக்கே சென்றுவிட்டான். அவனுக்கு போன் செய்து, வரச் செய்து, அந்தப் பையனை பாலிடெக்னிக்கில் சேர்த்து படிக்கவைத்துக்கொண்டிருக்கும் அவனுடைய முன்னாள் ஆசிரியை, எப்போதும் தெய்வத்துக்கு நிகரானவர்தான்!

ஏணியாகவும் தோணியாகவும் இருப்பது சிறுமையல்ல. அது தன்னலமில்லாத சேவை. அத்தனை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தினத்தில் அடிப்போம் ‘சல்யூட்!’

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in