ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 58

ஆடம்பரக் கொண்டாட்டத்தை அறவே விரும்பாத மனிதர்!
துடிக்கும் கரங்கள் படத்தில்...
துடிக்கும் கரங்கள் படத்தில்...

இயக்குநர் ஸ்ரீதரின் சில படங்கள் தோற்றுப் போனபோது, ‘அவருக்குத் திறமை வற்றிவிட்டது’ என்று ஒரு முன்னணிப் பத்திரிகை எழுதியது. வெகுண்டு எழுந்த ஸ்ரீதர், அன்று வளரும் நாயகர்களாக இருந்த ரஜினி - கமலை வைத்து ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்கிற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்து, தனது வற்றாத திறமையை நிரூபித்தார். என்றாலும் 80-களின் தொடக்கம் அவருக்கு மீண்டும் சரிவாகவே அமைந்தது.

அப்போது ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டிருந்த ரஜினியுடன் மீண்டும் இணைந்தார் ஸ்ரீதர். அந்தப் படம், கே.ஆர்.ஜி. தயாரித்த ‘துடிக்கும் கரங்கள்’. இந்தப் படத்தின் மூலம்தான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை அமைப்பாளராக அறிமுகமானார். ஸ்ரீதரின் வெற்றிப் படப் பட்டியலில் இணைந்துகொண்டது ‘துடிக்கும் கரங்கள்’.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினியை அழைத்த ஸ்ரீதர், “புதுமுகங்களை வைச்சு வெற்றி கொடுத்தவன் நான். என்னதான் கண்டென்ட் ஒரு படத்துக்கு முக்கியம்ன்னாலும் இந்தக் காலத்துல அதை ‘எலிவேட்’ பண்ண ஸ்டார்ஸ் வேணும் ரஜினி” என்று நெகிழ்ந்தார். ஆனால், ரஜினி ஸ்ரீதரை அந்த இடத்தில் விட்டுக்கொடுக்கவில்லை. “உங்கப் பெருந்தன்மை நீங்க இப்படி சொல்றீங்க.. தமிழ் சினிமாவுக்கு எவ்வளவு நல்ல கண்டென்ட் கொடுத்தவங்க நீங்க... உங்கள் அச்சீவ்மென்ட்ஸ் அன்பீட்டபிள் சார். உங்க டைரக்‌ஷன்ல நடிக்கிறதை எப்பவுமே கர்வமா ஃபீல் பண்றேன்” என்றார் ரஜினி. ஸ்ரீதர் - ரஜினியின் இந்த உரையாடலுக்குச் சாட்சி, ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த எழுத்தாளர், இயக்குநர், நாடகாசிரியர் சித்ராலயா கோபு.

அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை மனம் திறக்கிறார் கோபு: “ஊட்டியில் ஒரே மாதத்தில் இந்தப் படத்தை எடுத்து முடித்தார் ஸ்ரீதர். காரணம், ரஜினியிடம் 20 நாட்கள்தான் கால்ஷீட் இருந்தது. கூடுதலாக தேவைப்பட்டால் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என்று ரஜினி சொல்லியிருந்தார். அந்த 20 நாட்களில் தான் சம்பந்தப்பட்டக் காட்சிகளை எடுப்பதில் தாமதம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் ரஜினி. இதற்காக டிசம்பர் மாதக் கடுங் குளிரில் காலை ஐந்து மணிக்கு ஸ்ரீதர் ஸ்பாட்டுக்கு வருவார் என்றால், ரஜினி 4 மணிக்கே மேக்-அப் மேனை வரச்சொல்லி மேக் - அப் போட்டுக்கொள்ள 45 நிமிடத்தை செலவழிப்பார். மேக்-அப் கண்டினியூட்டி பார்ப்பதில் ரஜினி கெட்டிக்காரர். உதவி இயக்குநர்கள் கோட்டை விடுவதைக்கூட இவர் இயக்குநரிடம் சொல்லாமல் நேராக என்னுடைய காதில் ரகசியமாகச் சொல்லுவார். அன்று முதலில் எடுக்கும் காட்சிக்கான காஸ்ட்யூம் அணிந்து அதிகாலை 4.45 மணிக்கு ரெடியாக இருப்பார். ரஜினி இவ்வளவு சீக்கிரம் வருகிறார் என்றால், எத்தனை மணிக்கு எழுந்து கிளீன் ஷேவ் செய்துகொண்டு, குளித்து ரெடியாகி வந்திருப்பார் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

‘அதிகாலையிலத்தான் எல்லாருக்கும் கண்கள் சொருகும். நீங்க தூக்கத்தை எப்படி சமாளிக்கிறீங்க?’ என்று ஒருநாள் ரஜினியிடமே கேட்டுவிட்டேன். அதற்கு ரஜினி, ‘சிவாஜி சார்கிட்ட கத்துக்கிட்டேன் சார். ‘டேய் ரஜினி... நாளைக்கு நடிக்கப்போற சீன்களை மைண்ட்ல ஓட விட்டுக்கிட்டுபோய் தூங்கு. அதுதான் காலையில நம்ள எழுப்பிவிடுற அலாரம். குடிச்சுட்டு தூங்கணும்னு நினைக்காத. அது தூக்கமே கிடையாது’ன்னு சொல்லிக் கொடுத்தார்.’ என்றார்.

துடிக்கும் கரங்கள் படப்பிடிப்பின் போது...
துடிக்கும் கரங்கள் படப்பிடிப்பின் போது...

முதல்நாள் இரவு ரஜினி தூங்க 10 மணி ஆகிவிடும். என்னிடம், அடுத்த நாளுக்கான காட்சிகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், ‘கீ டயலாக்ஸ்’ என்ன சார்? என்று கேட்டுவிடுவார். ரொம்ப முக்கியமான சீன் இருந்தால் ஸ்ரீதர் சாரின் ரூமுக்குப்போய், அந்தக் காட்சியைப் பற்றி தன்னுடைய சந்தேகத்தையெல்லாம் கேட்டு தெளிந்த பிறகுதான் படுப்பார். படுக்கும் முன்பு ரஜினி கொஞ்சம் நடித்துப் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறேன். மறுநாள் கச்சிதமாக நடித்து அசத்துவார். அதேபோல் ஒவ்வொரு காட்சியை ஸ்ரீதர் எடுத்து முடித்ததும் ‘ஓகேவா சார்... சரியா வந்திருக்கா. டவுட்ஃபுல்னா இன்னொரு டேக் போயிடலாமா?’ என்பார். அதற்கு ஸ்ரீதர், ‘இன்னமும் நியூ கம்மர் மாதிரியான ஃபீல் இருக்கிறது பெரிய விஷயம் ரஜினி. அப்ரிசியேட் யூ’ என்று ரஜினியை வாழ்த்துவார்.

நேரில் பார்த்தேன்

படப்பிடிப்பின் இடைவேளையில், தரையில், மர நிழலில் ஒரு துண்டை விரித்து கால்களை மடக்கிக்கொண்டு ரஜினி தனியாகத் தூங்குவதைப் பார்த்திருக்கிறேன். அதேபோல், மற்றவர்களுடன் பேசும்போது மரியாதையாக ‘சார்’ போட்டுத்தான் பேசுவார். ரஜினியைத் தனியாக இயக்கும் வாய்ப்பு எனக்கு அமையாமல் போய்விட்டது. ‘துடிக்கும் கரங்கள்’ படத்தில் ஒரு சிறு காட்சியை படமாக்கும் பொறுப்பை ஸ்ரீதர் எனக்குக் கொடுத்தார். மெக்கானிக் ஷெட்டில் ரஜினி வேலை செய்துகொண்டிருப்பார். அப்போது அவர் டெலிபோனில் பேசுவது போன்ற காட்சி அது. அப்போது ரஜினி உணர்ச்சி ததும்ப நடித்தார்.

ஊட்டியில் ‘துடிக்கும் கரங்கள்’ படப்பிடிப்பின்போது ரஜினிக்கு பிறந்தநாள் வந்தது. தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி., யூனிட்டில் உள்ள கடைசி தொழிலாளிக்கு ஏதாவது குறையிருந்தாலும் அதை சரி செய்யும் கருணையுள்ளம் கொண்டவர். பணச் செலவைப் பற்றி கவலைப்படமாட்டார். அப்படிப்பட்டவர் படத்தின் ஹீரோவுடைய பிறந்த நாளைக் கொண்டாடாமல் இருப்பாரா? அவர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துவிட்டார். ஏற்பாடு நடக்கிறது என்பதை அறிந்த ரஜினி, ‘எதுக்கு சார் அநாவசியமான செலவு... நீங்கள்லாம் வாழ்த்துச் சொன்னாப் போதும். செலிப்ரேஷன் வேண்டாம் ப்ளீஸ்...’ என்று கெஞ்சிப் பார்த்தார். ஆம், தனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாடுவதை ரஜினி விருப்பியதே கிடையாது. ரஜினியின் மனைவி லதா, கணவரை வாழ்த்துவதற்காக குழந்தைகளுடன் முதல்நாளே ஊட்டிக்கு வந்து இறங்கினார். அங்கே நடந்த பிறந்தநாள் பார்ட்டி விழா ஏற்பாடுகளைப் பார்த்து அவருக்கே சர்ப்பிரைஸ் ஆகிவிட்டது” என்று நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார் கோபு.

ஸ்ரீதர் - ரஜினி இருவரில் யார் சிறந்தவர்?

படவுலகில் வாய்ப்புகள் குறைந்தபோது ராணிப்பேட்டையில் லெதர் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி நடத்திய ஸ்ரீதர், அது நஷ்டமடைந்ததும் மிகவும் மனமுடைந்துபோனார். தொண்ணூறுகளின் இறுதியில் ‘ஸ்ட்ரோக்’ வந்து பின்னர் குணமாகி ஸ்டிக் உதவியுடன் ஸ்ரீதர் நடந்துகொண்டிருந்த சமயம் அது. அப்போது ஸ்ரீதரின் வீடு தேடிப் போனார் ரஜினி. ஸ்ரீதரின் கையைப் பிடித்து குலுக்கிவிட்டு, “எப்படி இருக்கீங்க சார்?” என்றார்.

அருணாச்சலம் படத்தில்...
அருணாச்சலம் படத்தில்...

“நல்லா இருக்கேன் ரஜினி... இப்போ என்ன படம் பண்றீங்க?”

“அருணாச்சலம்ன்னு ஒரு படம் சார்.”

“ஓ..! யார் டைரக்ட் பண்றா?”

“சுந்தர்.சி டைரக்ட் பண்றார்”

“ஓ குட்! ‘உள்ளத்தை அள்ளித்தா’ மூவீ டைரக்டர்... ஐ யம் ரைட்?”

“எஸ்... சார்!”

“கோ அகெட்..! என்னோட வாழ்த்துகள்.”

“தாங்க்யூ சார்.. ஒரு முக்கியமான விஷயமா உங்களைப் பார்க்க வந்திருக்கேன்.”

“சொல்லுங்க ரஜினி...”

“இந்தப் படம் மூலமா நம்ம இண்டஸ்ட்ரில சிலருக்கு உதவலாம்னு இருக்கேன்...”

“வெரி குட்... காட் பிளஸ் யூ. விவரமாச் சொல்லுங்க.”

“எட்டு பேரை செலக்ட் பண்ணி இருக்கேன். அவங்க முதலீடு எதுவும் போடவேண்டாம். இந்தப் படத்தின் மூலமா வர்ற லாபத்தில் இருந்து அவங்க எட்டு பேருக்கும் ஒரு பெரிய தொகையைப் பிரிச்சுக் கொடுக்கலாம்னு இருக்கேன்.”

“நல்ல விஷயம்... பண்ணுங்க.”

“அந்த எட்டு பேர்ல உங்களையும் சேர்த்துக்கலாம்னு...”

சட்டென்று ரஜினியை இடைமறித்தார் ஸ்ரீதர்.

“ஸாரி... ரஜினி! எனக்கு இந்த உதவி தேவையில்லை.. நான் அவ்வளவு கஷ்டப்படல. என்னை விட கஷ்டப்படற யாரையாவது எனக்குப் பதிலா சேர்த்துக்குங்க... தேங்க் யூ ஃபார் யுவர் வொண்டர்ஃபுல் எஃபோர்ட்.”

ஸ்ரீதர் பாராட்டினாலும் அவரிடமிருந்து இந்தப் பதிலைக் கொஞ்சமும் ரஜினி எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரம் மவுனமாக இருந்த ரஜினி எழுந்தார்.

“அப்போ புறப்படறேன் சார்...”

“ஒரு நிமிஷம் ரஜினி...”

“சார்..?”

“எனக்கு உதவி செய்யணும்னு நீங்க நினைச்சா.. இந்தப் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பைக் கொடுங்க. அதுக்குச் சம்பளம் கொடுங்க. அது இப்போ சாத்தியமில்லே... ப்ரி புரோடெக்‌ஷன் முடிஞ்சுடுச்சுன்னா பரவாயில்லை ரஜினி. உங்க அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுங்க. அதுக்கு சம்பளம் கொடுங்க. மனப்பூர்வமா ஏத்துக்கிறேன். உங்ககிட்ட இருந்து இனாமா பணம் வாங்கிக்க நான் தயாரா இல்லை... ஸாரி.

இதைக் கேட்டதும் ரஜினி பிரம்மித்துத்தான் போனார்! ஸ்ரீதர் என்கிற படைப்பாளி எத்தனை கம்பீரமானவர் என்று ஒரு கனம் நினைத்தவர், விடைபெறும்முன் சட்டென்று அவரது காலைத் தொட்டு வணங்கிவிட்டுக் கிளம்பினார்.

ரஜினி - ஸ்ரீதர் இந்த இரண்டு ஆளுமைகளில் யார் உயர்ந்தவர் என்கிற சந்தேகம் வருகிறது அல்லவா? ஓடி ஓடி உழைத்து தமிழ் சினிமாவுக்கு சிறந்த படைப்புகளைக் கொடுத்த ஒரு கலைஞன், உடல் நலிந்து நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, அவர் கேட்காமலேயே ஓடோடிப் போய் உதவி செய்யத் துடித்த ரஜினி உயர்ந்து நிற்கிறாரா... அல்லது “செய்கிற வேலைக்கு ஊதியம்தான் வாங்குவேனே தவிர, உதவி வாங்கமாட்டேன்” என ரஜினியிடம் நேருக்கு நேராகச் சொன்ன ஸ்ரீதர் உயர்ந்து நிற்கிறாரா?

(சரிதம் பேசும்)

படம் உதவி: ஞானம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in