யார் இந்த டாக்டர் கனிமொழி?

திமுக மாநிலங்களவை வேட்பாளரின் சுவாரஸ்ய பின்னணி
யார் இந்த டாக்டர் கனிமொழி?

என்.வி.நடராசனின் பேத்தியும், என்.வி.என்.சோமுவின் மகளுமான டாக்டர் கனிமொழி, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகிறார். என்.வி.நடராசன் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர். 1967-ல் அண்ணா முதல்வரானபோது அவரது அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். பிறகு மு.கருணாநிதி அமைச்சரவையிலும் அதே அமைச்சராகத் தொடர்ந்தவர் என்பது நமக்குத் தெரியும்.

டாக்டர் கனிமொழி
டாக்டர் கனிமொழி

ஆனால் அவர், காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்தக் கட்சியில் இருந்து விலகி, திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியில் சேர்ந்தவர் என்பதும், பெரியாரின் தொண்டனாக அவரது மூட்டை முடிச்சுகளைச் சுமந்துகொண்டு பின்னால் சென்றவர் என்பதும் இன்றைய தலைமுறையினர் அதிகம் அறிந்திராத செய்தி.

1938-ல் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி இருந்தபோது, இந்தி மொழித்திணிப்பை அறங்கேற்றியது மத்திய அரசு. அப்போது என்.வி.நடராசன் காங்கிரஸ் கட்சியில்தான் இருந்தார். பெத்துநாயக்கன்பேட்டை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அவர். அப்போது சென்னை மாவட்ட கமிட்டி தலைவராக சத்யமூர்த்தியும், மாவட்ட கமிட்டி உறுப்பினராக என்.வி.நடராசனும் இருந்தனர். கதர்ச்சட்டை அணிந்த காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும் காங்கிரஸ் கொண்டுவந்த கட்டாய இந்தியை எதிர்த்தார் நடராசன். அப்போது பெரியார் ஈ.வெ.ராமசாமியும், அறிஞர் அண்ணாவும் இந்தியை எதிர்த்து அறப்போர் நடத்தி வந்தார்கள். சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்து கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள். இந்தித் திணிப்பை என்.வி.நடராசன் எதிர்த்தபோதிலும், அவர் பெரியார், அண்ணாவுடன் சேரவில்லை. சேராததது மட்டுமின்றி, அவர்களது அரசியல் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

அந்த அளவுக்கு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தாலும், என்.வி.நடராசனால் இந்தித் திணிப்பு விஷயத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்க முடியவில்லை. அதனால் என்விஎன், சென்னை சிவஞானம் பார்க்கில், காங்கிரஸ் இந்தி எதிர்ப்புக் கூட்டம் என்ற தலைப்பில் தொடர்ந்து கூட்டம் நடத்திவந்தார். காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த திட்டத்தை ஒரு காங்கிரஸ்காரரே இவ்வளவு தீவிரமாக எதிர்த்ததால், அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் வரத் தொடங்கினார்கள். அதில் அறிஞர் அண்ணாவும் ஒருவர். கூட்டம் முடிந்ததும் அண்ணா, என்.வி.நடராசனிடம் சென்று அவரது பேச்சைப் பாராட்டியதுடன், "நீ ரொம்ப நாளைக்கு காங்கிரஸில் இருக்க மாட்டாய்..." என்று புன்னகையுடன் சொன்னார். "நான் காங்கிரஸைவிட்டு விலகுவேன் என்று கனவுகூடக் காணாதீர்கள். அதுவும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுவேன் என்று கற்பனை கூட செய்யாதீர்கள்" என்று ஆவேசமாகப் பதில் சொன்னார் நடராசன்.

ஆனால் நடந்தது வேறு. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் கூடி, என்.வி.நடராசனின் செயலுக்கு விளக்கம் கேட்டது. அதற்கு என்.வி.நடராசன், "நடப்பது காங்கிரஸ் ஆட்சி. இந்த ஆட்சி ஒரு சட்டம் கொண்டுவருகிறதென்றால், மாநில காங்கிரஸ் கட்சியின் ஆதரவைப் பெற்றுத்தான் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், கட்டாய இந்தித் திட்டமானது மாநில, மாவட்ட கமிட்டியைக் கேட்காமலேயே கொண்டுவந்த திட்டம். டெல்லிக்கு அப்படி கேட்காமலேயே செயல்படுத்தும் உரிமை இருக்கிறதென்றால், எனக்கும் அதை எதிர்க்கும் உரிமை உண்டு" என்றார். அந்த விளக்கத்தை மாவட்ட தலைவர் (பிற்கால மாநில தலைவர்) சத்தியமூர்த்தி ஏற்றுக்கொண்டார்.

அதோடு பிரச்சினை முடியவில்லை. சென்னை அரசாங்கம் கொண்டுவந்த கட்டாய இந்தி திட்டத்தை ஆதரிக்கும் தீர்மானம் கூட்டத்தில் கொண்டுவரப்பட்டது. அதற்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்தார் என்.வி.நடராசன். தனியே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. கடைசியில் அந்தத் தீர்மானம் நிறைவேறும் தருவாயில் அதைத் தடுக்க முடியாத வேதனையில், ‘தமிழ் அன்னைக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுகிறேன்’ என்று, தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறினார் என்.வி.என்.

கோபமாக வீடு நோக்கி வந்தவரின் கையில் ஒரு துண்டுப் பிரசுரம் கொடுக்கப்பட்டது. ஆர்வமே இல்லாமல் அதைப் பிரித்துப் பார்த்தார், நடராசன். அதில், இன்று கடற்கரையில் நடைபெறும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய என்.வி.நடராசன் பேசுவார் என்று அச்சிடப்பட்டிருந்தது. அவருக்கு ஒரே ஆச்சரியம். சற்று முன்தானே நாம் கட்சியில் இருந்து விலகினோம். அதற்குள்ளாக எப்படி அப்படி துண்டு பிரசுரம் அச்சிட்டார்கள் என்று. பிறகுதான் நினைவுக்கு வந்தது, அண்ணா ஏற்கெனவே தன்னிடம் சொன்ன வாசகமும், காலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்துக்குப் புறப்பட்டுப் போகும்போது மீண்டும் அதை நினைவூட்டிவிட்டுச் சென்றதும். நமக்கான இடம் எது என்பதை நம்மைவிட அண்ணா சரியாகப் புரிந்துவைத்திருக்கிறாரே... என்று ஆச்சரியப்பட்டுப் போனார் நடராசன்.

அன்று மாலை நடந்த கூட்டத்தில் பேசிய அண்ணா, "நண்பர் நடராசனை நான் நீண்ட காலமாக அறிவேன். காங்கிரஸின் உண்மையான தொண்டனாக இருந்துவந்தவர். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், 1936-ல் நான் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டபோது, என்னைத் தீவிரமாக எதிர்த்து வேலை செய்தவர்களில் முக்கியமானவர் அவர். அந்தத் தேர்தலில் நான் தோற்கடிக்கவும் பட்டேன். ஆனால், இருவருமே தொழிற்சங்க நிர்வாகிகளாக இருந்ததால், தொழிலாளர் இயக்கம் சம்பந்தமாக அவர் என்னை அடிக்கடி சந்திப்பதுண்டு. அது தொடர்பான உதவி கூட கேட்பதுண்டு. அதற்காக அவர் தன்னுடைய கொள்கையை சிறிதும் விட்டுக்கொடுத்ததில்லை. அந்த உறுதிப்பாட்டின் காரணமாகத்தான் அன்பும், உண்மையான தொண்டன் என்ற மதிப்பும் அவர் மீது எனக்கு ஏற்பட்டது. இப்போது தமிழ் காக்க காங்கிரசில் இருந்து வெளியேறியிருக்கிறார். வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். நட்புக்காக அவர் காங்கிரஸில் இருந்து நழுவியிருந்தால் இந்த மதிப்பு ஏற்பட்டிருக்காது. கொள்கைக்காக வெளியேறியதால் அவரது மதிப்பு உயர்ந்திருக்கிறது" என்று பாராட்டினார்.

இப்படி இந்தி எதிர்ப்புக் கொள்கைக்காக காங்கிரஸில் இருந்து விலகி நீதிக்கட்சியில் சாதாரண தொண்டனாகச் சேர்ந்த என்.வி.நடராசன், பிறகு சென்னை மாவட்ட சுயமரியாதை சங்கத்தின் செயலாளராகவும், நீதிக்கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார். அந்தக் காலத்தில் பெரியார் போகுமிடமெல்லாம், ஒரு உருவம் அவரது மூட்டை முடிச்சுகளைச் சுமந்தபடி அவரைத் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கும். அவர்தான் என்.வி.நடராசன்.

அண்ணா திராவிட நாடு பத்திரிகையைத் தொடங்கியபோது, ‘கட்சிக்கு முழு நேரத் தொண்டராகப் பணியாற்றுங்கள். மாதம் 75 ரூபாய் சம்பளமாகத் தருகிறேன்’ என்று என்.வி.என்-ஐ அழைத்தார் பெரியார். ஆனால், காசு விஷயத்தில் கஞ்சத்தனம் கொண்ட தலைவரான பெரியார் தனது கஷ்டநிலையைக் கூறி, சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளும்படி நடராசனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மாதத்தில் இருபது நாட்கள் நான் சுற்றுப்பயணம் செய்வதால், ஆங்காங்கே உள்ள தோழர்கள் நமக்கும் சேர்த்துச் சோறு போட்டுவிடுவார்கள் என்றும், அதற்காகவே இந்த 25 ரூபாயைப் பிடித்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். பெரியாரின் இந்தக் கருமித்தனம் என்.வி.என்-னுக்கு கோபத்தை உண்டாக்கினாலும், கட்சிக்காகத்தானே பணியாற்றுகிறோம், சம்பளமா பெரிது என்று அதற்கும் ஒப்புக்கொண்டு, இப்படி மூட்டை முடிச்சுகளை சுமந்துகொண்டு திரிந்தார் என்று தன்னுடைய கட்டுரை ஒன்றில் என்.வி.நடராசனைப் பற்றி எழுதியிருக்கிறார் முல்லை சக்தி.

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீது அவரது அரசியல் எதிரிகள் வைக்கிற முக்கியமான குற்றச்சாட்டில் ஒன்று, "ஐம்பெரும் தலைவர்களை ஓரங்கட்டிவிட்டு கருணாநிதி திமுகவின் தலைவராகிவிட்டார்" என்று. ஆனால், அந்த ஐம்பெரும் தலைவர்களின் வாரிசுகளுக்கும் திமுகவில் உரிய மரியாதை தரப்படுகிறது என்பதை என்.வி.நடராசன் மறையும் வரையில் அவர் விரும்பிய துறையின் அமைச்சராக மரியாதையுடன் நடத்தியது, அவரது மகன் என்.வி.என்.சோமுவை மத்திய அமைச்சராக்கியது என்று தனது செயல்பாட்டின் மூலம் நிரூபித்தார் மு.கருணாநிதி. இப்போது, என்.வி.என்-னின் பேத்தி கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக்குவதன் மூலம் மு.க.ஸ்டாலினும் அந்தப் பணியைத் தொடர்கிறார் என்று மகிழ்கிறார்கள் திமுகவினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in