’நலம் நலமறிய ஆவல்’ என்று எழுதியிருக்கிறீர்களா?

- உலக கடித தின சிறப்புக் கட்டுரை
’நலம் நலமறிய ஆவல்’ என்று எழுதியிருக்கிறீர்களா?

இன்றைக்கு நானாவித உபயோகங்களை நமக்குத் தருகிற செல்போனை நாம் கையில் வைத்திருக்கிறோம். நிறைய தளங்கள் வழியே உறவாட முடிகிறது. ஆனாலும் கூட யாரோ கேட்கும் கேள்விக்கு ‘K' என்றும் ‘ஓகே.’ சொல்கிறோம். முகநூல் நட்பு வட்டத்தில் யாரோ இறந்துவிட்டதாக ஒருவர் பதிவிட, கமென்ட் பாக்ஸில், ‘ஆத்மா நிம்மதி அடையட்டும்’ என்றெல்லாம் டைப் செய்ய நேரமில்லாமல், ‘RIP' என்று மூன்றெழுத்தில்... மூச்சுவிட்டவருக்காக இரங்கல் வாசித்துவிடுகிறோம். இருந்த இடத்தில் இருந்தபடி, மெயில் பாக்ஸை ஓபன் செய்து, என்ன தகவலைச் சொல்ல நினைக்கிறோமோ அதை உடனே அனுப்பிவிடுகிறோம். ஆனால், இத்தனை வசதிகள் இருந்தும் வாய்ப்புகள் இருந்தும், ‘நலம் நலமறிய ஆவல்’ என்று எழுதி மனதோடு மனது பேசிய கடிதங்கள் என்பவை, இந்தத் தலைமுறையின் எட்டாவது அதிசயம்.

பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் அப்போதெல்லாம் ஒரு வார்த்தை திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கும்... ‘ஊருக்குப் போனதும் லெட்டர் போடுங்க’ என்று! இந்த ஊரில் இருந்து சொந்தம் கடிதம் எழுதுவதும் அந்த ஊரில் இருந்து பதில் கடிதத்தை சொந்தம் எழுதுவதுமாக, சொந்தபந்தங்கள் வளர்ந்தது கடிதங்களால்தான்!

‘அன்புள்ள ..... நலம் நலமறிய ஆவல்’ எனும் வார்த்தைக்குள் தேன் தடவிய அன்பும் இழைந்திருப்பதை, படிக்கும்போதே உணரலாம். இந்த உலகில் யாரோ நம் நலம் விசாரிக்கிறார்கள் என்பதிலேயே நாம் நலமாகிவிடுவோம். மஞ்சள் நிற போஸ்ட்கார்டுதான் விலை குறைவு. எழுதுகிற இடமும் குறைவாகவே இருக்கும். அதிலுள்ள அசெளகர்யம்... எழுதியிருப்பதை போஸ்ட்மேனோ, வேறு எவரோ படித்துவிடலாம். மேலும், ‘ஊர்லேருந்து பொண்ணு கடுதாசி போட்ருக்குது’ என்று போஸ்ட்மேன் கடிதம் நீட்ட, ‘சித்த அப்படியே படிச்சி சொல்லிரு சாமீ’ என்பார்கள். அந்தரங்கம், ரகசியம் என்பதெல்லாம் பெரிதாக இருந்ததில்லை அப்போது!

அப்பா, தாத்தாக்களின் கடிதங்கள் இன்றைக்கும் பலரின் வீடுகளில் இருக்கலாம். அதைப் பார்த்தால் மேலே பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்கும். சிவமயம் என்று எழுதியிருப்பார்கள். முருகன் துணை என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கும். ‘மகாளாளஸ்ரீ’’ என்கிற வார்த்தையைத் தாங்கி வந்த கடிதங்கள் ஏராளம். ’சிரஞ்ஜீவி’ என்று பெயருக்கு முன்னே சேர்த்து எழுதுவார்கள். ‘நீங்கள் எப்போது வருகிறீர்கள்? ஏழூர்ச்செவ்வாய் திருவிழாவுக்கு அவசியம் வாருங்கள். காப்புக் கட்டிவிட்டார்கள். உங்களுக்குப் பிடிக்குமே என்று மாவடு ரெடி பண்ணி வைத்தாகிவிட்டது’ என்று பாச நேசமும் அன்புப்பிரியங்களும் உறவை இன்னும் இன்னும் அடர்த்தியாக்கிக் கொண்டே இருந்தன. இன்லேண்ட் லெட்டர் அடுத்த வகை. கொஞ்சம் காசு கூடுதல். ஆனால், பிரித்துத்தான் படிக்கமுடியும். பலருக்கு அதைப் பிரிப்பதே கடைசிவரை பிரம்மபிரயத்தனமாகவே இருந்தது.

இப்போதெல்லாம் பால்காரர், பேப்பர் போடும் அண்ணன் எப்போது வருவார் என்பது கூட எவருக்கும் தெரியவில்லை. ஆனால், தபால்காரர் எத்தனை மணிக்கு நம்ம தெருவுக்கு வருவார் என்பது எண்பதுகள் வரை எல்லா வயதினருக்கும் அத்துபடி. நம் தெருவுக்கு வருவதற்குள்ளாகவே நான்கு தெரு தள்ளி அவரை மடக்கிப் பிடித்து, ‘எனக்கு ஏதாவது இருக்கா?’ என்று கேட்பார்கள். ‘உங்களுக்கு ஒண்ணும் இல்ல’ என்பார் தபால்காரர். சிலசமயம் கடிதம் இருந்தால் கொடுப்பார்.

ஹோட்டல் சப்ளையர்கள் எப்படி நான்கைந்து டேபிளில், ஏழெட்டு ஐட்டங்கள் சொன்னாலும் ஞாபகமாகக் கொண்டு வந்து கொடுத்து, அதற்கு உரிய பில்லையும் கொடுக்கிறாரோ... அவர்களைவிட பத்துமடங்கு ஞாபகசக்தி ராஜாக்கள் தபால்காரர்கள். அவ்வளவு நினைவாற்றலுடன் கடிதங்களை அடுக்கி வைக்கும்போதே, மன அலமாரியில் குறித்து வைத்துக்கொள்வார்கள்.

பெண் பார்த்துவிட்டு, ‘ஊருக்குப் போயி கலந்து பேசிட்டு கடுதாசி போடுறோம்’ என்கிற வசனத்தை கருப்பு வெள்ளைப் படங்களில் பார்த்தால், ‘அட...’ என்று வியப்பார்கள் இன்றைய இளசுகள். குந்தவைச்சது முதல் ஜோஸியக்காரர் கட்டம் சரியில்லைன்னு சொன்னார் என்பது வரை, நாலாவது வீட்டு அலமு நாலுமாசமா பேசுறதில்ல என்பது முதல், ‘எனக்குத்தான் பத்துநாளா மேலுக்கு சொகமில்ல’ என்பது வரை, சகலத்தையும் பகிர்ந்துகொள்ளும் கடிதங்கள்... தலைமுறைகளின் பொக்கிஷங்கள். இந்தக் கடிதங்களைக் கொண்டு எத்தனை திரைப்படங்கள். பாடல்கள். 'அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்’, ‘நான் எழுதுவது கடிதமல்ல’, நலம் நலமறிய ஆவல்’ என்று ஏகப்பட்ட லெட்டர் பாடல்கள். ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ எனும் காதல் கடிதம், ஆர்மோனியக் கட்டைக்குள்ளிருந்து வெளிவரும்போதே மனம் ஜிவ்வென்றாகிவிடும்.

எல்லார் வீடுகளிலும் ‘எஸ்’ டைப்பில் ஒரு கம்பி, வீட்டில் எங்கேனும் தொங்கவிடப்பட்டிருக்கும். அதில், வருகிற கடிதங்கள் பத்திரமாக குத்திவைக்கப்பட்டிருக்கும். ‘ஈமக்கிரியை’ கடிதங்களை மட்டும் வீட்டுக்குள் கொண்டுவரமாட்டார்கள். ‘குத்தி’யும் வைக்கமாட்டார்கள். வெளியே உள்ள ஜன்னலிலோ தாழ்வாரத்திலோ செருகி வைத்துவிடுவார்கள்.

கடிதங்களில் கிளுகிளுப்பும் குறுகுறுப்புமானவை ‘காதல் கடிதங்கள்’. ‘லவ் லெட்டர்’ என்று சொன்னால், இந்தக் காலத்துப் பசங்க, ‘லவ்வுக்கு ஏன் லெட்டர்’ என்று நக்கலடிப்பார்கள். அசடு வழிய போனில் பேசினால் ரிக்கார்டு செய்து, பிற்பாடு மிரட்டலுக்கெல்லாம் கூட பயன்படுத்திவிட்டவர்களுக்கு, அந்த ‘லவ் லெட்டரில்’ முழுக்க முழுக்க மனதில் இருந்து கொட்டி எழுதிவிட்டு, ‘இப்படிக்கு... உன் உயிர்....’ என்று பெயரே போடாமல் கொடுத்த பையன்களுக்கும் பெண்களுக்கும் இன்றைக்கும் பேரன் பேத்திகளே வந்துவிட்டார்கள்.

அப்பாவின் பெல்ட், மாமாவின் முறுக்கு மீசை, அம்மாவின் தோசைக்கரண்டி சூடு, எதிர்வீட்டு, பக்கத்துவீட்டு அக்காக்களும் மாமாக்களும் வந்து சொல்லும் அட்வைஸ்... இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, காதலைச் சொல்லாமல் விட்டவர்களும் உண்டு. கடுதாசியில் பேர் போடாமல் காதலைச் சொன்னவர்களும் உண்டு. காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதும் கடிதங்கள் தொடர்ந்து பரிமாறப்பட்டு, அப்படி வந்த காதல் கடிதங்களை ஒளித்து வைத்திருக்கும் டெக்னிக்கிற்கு அந்தக் கால இளசுகளுக்கு அவார்டே கொடுக்கலாம். எந்த ‘ரா’ உளவுப்பிரிவும் கூட கண்டுபிடிக்கமுடியாது!

என்னுடைய அப்பா ஊரிலிருக்கும் தாத்தாவுக்கு இத்தனாம் தேதி வருகிறோம் என்று கடிதம் எழுதுவார். அதன்படி வந்திருப்பார். அன்றைய தினம் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது தபால்காரர் வந்து, ‘மாப்ளே லெட்டர் போட்டிருக்காரு. இந்த வாரம் வரேன்னு போட்டுருக்காரே. வந்துட்டாரா?’ என்றபடி கடிதம் கொடுப்பார். ‘வந்துட்டேன் வந்துட்டேன்’ என்று சொல்ல, வீடே சிரிக்கும். தபால்காரரும் மோர் குடித்துவிட்டு சிரித்தபடி சைக்கிளை எடுப்பார்.

அப்போதெல்லாம் கதை, கவிதை எழுதுபவர்கள், பேப்பரும் பேனாவுமாக வாங்கிக்கொண்டே இருப்பார்கள். கவர், ஸ்டாம்ப் ரெடியாக வீட்டில் இருக்கும். கதையை எழுதி, பத்திரிகை ஆபீஸுக்கு அனுப்பிவிட்டு, தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். ‘தங்கள் கதை பிரசுரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது’ என்று பதில் வந்தாலும் சரி, ‘தங்கள் கதையை பிரசுரிக்க இயலவில்லை’ என்று வந்தாலும் சரி, அதை ஊருக்கேக் காண்பித்து பெருமைப்பட்டுக்கொள்வார்கள். பத்திரிகையில் பிரசுரமாகி, இலவச பிரதியும் அடுத்த மாதம் பத்து ரூபாயோ நூறு ரூபாயோ சன்மானமும் வந்த அத்தாட்சி கடிதத்தை இன்னும் ஃப்ரேமிட்டு வைத்திருக்கிற பெருசுகள் இருக்கிறார்கள்.

தீபாவளி, பொங்கல் என்றால், தபால்காரருக்கு ஒருபக்கம் ஜாலி; இன்னொரு பக்கம் அயர்ச்சி. பல வீடுகளில் இருந்து இனிப்புகள் கிடைக்கும். பொங்கல் காசு தருவார்கள். மணியார்டர் வந்தால் ஏதேனும் கொடுப்பார்கள். அதேசமயம், ஒருநாளில் நான்கைந்து டெலிவரிகள் செய்யவேண்டியிருக்கும். ஒருவீட்டுக்கு ஐந்தாறு வாழ்த்துக்கடிதங்கள் வரும். ஸ்டாம்ப் ஒட்டாமல் வந்த கடிதமென்றால், ‘வாங்கு, வாங்கமாட்டேன்’ எனும் யுத்தமே நடக்கும். நண்பர்களின் லூட்டி அது. கமல், ரஜினி, எம்ஜிஆர், சிவாஜி, பிள்ளையார், முருகன், மகாலட்சுமி, விஜயகாந்த், ஸ்ரீதேவி என்று டிசைன் டிசைனாக வந்த வாழ்த்து அட்டைகள், காதலையும் அன்பையும் தோழமையையும் உறவையும் சொல்லிக்கொண்டே இருக்கும்.

இன்றைக்கு செல்போன் யுகம். உறவுகள் கூட தடக்கென முறிந்துவிடுகின்றன. செல்போனில் அவர்களின் நம்பர்களை ‘பிளாக்’ செய்துவிடுவதெல்லாம் சட்டென்று நிகழ்ந்துவிடுகின்றன. ஆனால், சொத்துத் தகராறு, மான அவமானப் பிரச்சினைகள் கூட ஒரு கடிதத்தில், ‘நலம் நலமறிய ஆவல்’ எனும் ஒற்றை வார்த்தையில் மீண்டும் உயிர்த்தெழுந்துவிடும். ‘ஆயிரம்தான் இருந்தாலும் நம்ம ரத்தமில்லையா?’ என்று கடிதத்தில் கைகுலுக்கி, நேரில் ஆரத்தழுவி, அந்தக் கடிதத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு, நெஞ்சில் அடைகாத்த தலைமுறையினருக்குத் தான் தெரியும்... ‘நலம் நலமறிய ஆவல்’ என்கிற வார்த்தைக்குள்ளிருக்கும் உயிர்!

- செப்டம்பர் 1 உலக கடித தினமாம். ‘நலம் நலமறிய ஆவல்’

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in