எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி : ‘ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே’ பொங்கல் வாழ்த்து அட்டைகள்!

எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி :  ‘ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே’ பொங்கல் வாழ்த்து அட்டைகள்!

வாட்ஸ் அப்பில் காலையில் எழுந்ததும், ‘குட்மார்னிங்’, இரவில் ‘இந்த இரவு நல்லிரவாக இருக்கட்டும்’ என்று மெசேஜ் தட்டிவிடுகிறோம். அதே போக்கில் கல்யாணம், காதுகுத்து, சீமந்த அழைப்பிதழ்களையும் வாட்ஸ் அப்பிலேயே அனுப்பி விடுகிறோம். வாய்வார்த்தை அழைப்பும் கூட குறைந்து போயிருக்கிறது.

அந்த வரிசையில் தீபாவளிக்கு ‘ஹேப்பி தீபாவளி’ , புத்தாண்டுக்கு ‘ஹேப்பி நியூ இயர்’ என்றும் மெசேஜ் தட்டிவிட்டவர்கள், தற்போது ‘ஹேப்பி பொங்கல்’ என்று பொங்கல் வாழ்த்தையும் முடித்திருப்பார்கள். ஆனால் எண்பதுகளின் நிறைவுக் காலம் வரை இப்படியெல்லாம் இல்லை. ‘’உங்க காலத்துல செல்ஃபோன் எல்லாம் ஏது’’ என்று எளிதில் இதை புறக்கணித்துவிட முடியாது. அந்தளவுக்கு கொண்டாட்டங்கள் உண்மையானதாகவும், வாழ்த்துகள் இதயபூர்வமாகவும் இருந்தன என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது!

பொங்கல் வருவதற்கு முன்னதாக, வீடுகளைச் சுத்தம் செய்யும் பணி தொடங்கிவிடும். அப்போதெல்லாம் ஆயிரம் ரூபாய்க்குள் முடிகிற வகையில் சுண்ணாம்பு அடிப்பார்கள். வீடு ஒருபக்கம் புதுசாகிக் கொண்டிருக்கும். வீட்டில் உள்ள பழையது எல்லாம் அப்புறப்படுத்தப்படும்.

பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்தே கடைகள் மற்றும் பிளாட்பாரங்களில், வாழ்த்து அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த வாழ்த்து அட்டைகளைப் பார்ப்பதற்காகவே பெருங்கூட்டம் கூடும். ‘இது வாங்கணும், அந்தக் கார்டு வாங்கணும், முருகன் படம் மாமாவுக்கு அனுப்பணும், சிவாஜி படம் பெரியப்பாவுக்குப் பிடிக்கும், நண்பனுக்கு கமல்னா பிடிக்கும், திருவாரூர் அத்தைக்கு கலைஞர் புகைப்பட அட்டை வாங்கணும்..’ என்றெல்லாம் பார்த்து வைத்துக்கொள்வார்கள்.

பொங்கல் வாழ்த்து அட்டைகள் வாங்கி அனுப்ப வேண்டும் என்பதற்காகவே காசு சேர்த்த ஆண்களும் பெண்களும் இன்று பேரன் பேத்திகளுடன் பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அட்டையில் எம்ஜிஆர் சிரிப்பார். அதைப் பிரிந்தால் நடுவே தாமரை மாதிரி டிசைன் இருக்கும். அதில் ஜிகினாக்கள் ஒட்டப்பட்டிருக்கும். நடுவே எம்ஜிஆர் கையை விரித்து வானம் நோக்கி கைகாட்டுவார். பார்க்கவே மனசை அள்ளும்.

இதவற்றை வாங்கும் முன்னதாக, ஒரு பேப்பரை எடுத்து யாருக்கெல்லாம் வாழ்த்து கார்டு அனுப்பவேண்டும் என்று லிஸ்ட் போடுவார்கள். அந்த லிஸ்டில் அவரவர் பெயருக்குப் பக்கத்தில், காமராஜர், நேரு, காந்திஜி, கலைஞர், இந்திராகாந்தி, எம்ஜிஆர், ரஜினிகாந்த், வெங்கடாஜலபதி, பொங்கல் வைக்கும் குடும்பப் படம், மாட்டு வண்டி படம், ஸ்ரீதேவி , கே.ஆர்.விஜயா, பிள்ளையார் படம் என்றெல்லாம் எழுதிக் கொள்வார்கள்.

உரிய வாழ்த்து அட்டைகளை வாங்கி வந்து அதன் உள் தாளில் கவிதை போல ஏதேதோ கிறுக்கி, விலாசம் எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவார்கள். இதில் ஸ்டாம்ப் கிடைக்காமல் திண்டாடிப்போகிற கதையெல்லாம் நடக்கும். நம் ஏரியா போஸ்ட் ஆபீஸில் ஸ்டாம்ப் தீர்ந்திருக்கும். பக்கத்து ஏரியாக்களில் உள்ள போஸ்ட் ஆபீஸ் நோக்கி சைக்கிளில் படையெடுத்து, ஸ்டாம்புகள் வாங்கி, நண்பர்களுடன் பங்கிட்டுக்கொள்ளும் நண்பர்கள், ‘ஸ்டாம்ப் காப்பான் தோழன்கள்’ ஆக மரியாதை பெறுவார்கள்.

இதில் இன்னொரு கூத்தும் நடக்கும். என் நண்பனுக்கு ரஜினி பிடிக்கும். அவனுக்கு வேண்டுமென்றே கமல் படத்தை அனுப்புவேன். அதேபோல், என் தாத்தாவுக்கு சிவாஜி என்றால் உயிர். சிறுவயதில் நான் எம்ஜிஆர் வெறியன். அதனால் தாத்தாவுக்கு எம்ஜிஆர், சித்திக்கு சிவாஜி, இன்னொரு சித்திக்கு எம்ஜிஆரும் சிவாஜியும் சேர்ந்திருக்கும் படம், மாமாவுக்கு முருகன் படம் என்று, ஒருவீட்டில் இருக்கும் நான்கைந்து பேருக்கும் அனுப்புவோம். அனுப்புவோருக்கும் பெறுவோருக்கும் அப்படியொரு மகிழ்ச்சி அதில் ஒளிந்திருக்கும்.

பொங்கல் வாழ்த்து அட்டை பல தருணங்களில் காதல் விடு தூதாகவும் ஆகியிருக்கும். ‘நான் உன்னை எந்த அளவுக்கு லவ் பண்றேன் தெரியுமா? இந்த உலகமே எதிர்த்தாலும் நான் அதையெல்லாம் பொருட்படுத்தமாட்டேன்’ என்று ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் பையன், எட்டாங்கிளாஸ் படிக்கும் பெண்ணின் வீட்டுக்கு, அவளுக்குப் பிடித்த நடிகரின் படத்தையோ சாமி படத்தையோ வாங்கி அனுப்பிவைப்பான். வாழ்த்தெல்லாம் சொல்லிவிட்டு, உன்னுடைய இணைபிரியாத என்று எழுதிவிட்டு ‘ஆர்’ என்றோ. ‘உன் தோழி’ என்றோ எழுதி அனுப்புவான். அதெல்லாம் அக்காலத்தின் தனி சாகசக் கதைகளில் சேரும்.

சில குசும்புக்கார பேர்வழிகள் இன்னொன்றும் செய்வார்கள். ‘சார் போஸ்ட்’ என்று போஸ்ட்மேன் அண்ணன், கேரியரில் மூட்டை கட்டிக்கொண்டு வியர்க்க வியர்க்க வருவார். நாமும் சென்று வாழ்த்து அட்டையை வாங்குவோம். ‘மூணு ரூபா கொடுங்க’’ என்பார். ‘’ஸ்டாம்ப் ஒட்டாம அனுப்பிருக்காங்கம்மா’’ என்பார். கரும்பு வாங்கவோ டமாரம் வாங்கவோ சினிமாவுக்குப் போகவோ வைத்திருந்த காசில், மூன்று ரூபாய் பலியாகியிருக்கும். வாழ்த்து அட்டையை அனுப்பியவர் மீது வசவு பாடுவார்கள். இப்படியான குறும்பால், பேச்சுவார்த்தை முறிந்த கதையெல்லாம் உண்டு.

இன்றைய இளைஞர்களுக்கு, போஸ்ட்மேன், போஸ்ட் ஆபீஸ், ஸ்டாம்ப் என்பதெல்லாம் தெரியாது. அக்காலத்திய போஸ்ட்மேன்கள் கருணையே உருவானவர்கள். அன்பே உருவெனக் கொண்டவர்கள். உலகில் ஞாபகசக்தி அதிகம் கொண்டவர்களில் அவர்களும் அடங்குவார்கள்!

சாதாரண நாட்களில் காலை ஒருமுறையும் மதியம் மூன்று மணி போல் ஒருமுறையும் போஸ்ட்மேன்கள் கடிதங்களை டெலிவரி செய்ய வருவார்கள். ஆனால், பொங்கல் வந்துவிட்டால், ஒருநாளைக்கு ஏழெட்டு முறை கூட வருவார்கள். அந்த அளவுக்கு வாழ்த்து அட்டைகள் மலையாய் குவிந்திருக்கும்!

குட்டீஸ் மத்தியில் போட்டாபோட்டியும் நடக்கும். ‘’எனக்குத்தான் அதிக வாழ்த்து அட்டைகள் வந்துச்சு’’ என்று பெருமை பேசிக்கொண்டவர்களும் உண்டு. அந்த வாழ்த்து அட்டைகளை எத்தனை போகி வந்தாலும் தூக்கிப் போட மனமில்லாமல் அடைகாத்து வைப்பவர்கள் இருக்கிறார்கள். அவற்றில், ‘ஆட்டோகிராஃப்’ , ‘பொக்கிஷம்’, ‘அழகி’ , ‘சீதாராமம்’ கதைகள் ஏதேனும் ஒளிந்திருக்கவும் கூடும்.

பொங்கல் வாழ்த்து அட்டைகளை டெலிவரி செய்யும் போஸ்ட்மேன் அண்ணன்களும் மாமாக்களும் சைக்கிளில் வந்து பெல் அடித்து, ‘போஸ்ட்’ என்று குரல் கொடுப்பார்கள். அவர்களுக்கு சில வீடுகளில் குடிக்க மோர், கரும்பு அல்லது பொங்கல் பணம் என்று வழங்குவோரும் உண்டு.

இன்றைக்கும் போஸ்ட் ஆபீஸ் இருக்கிறது. போஸ்ட்மேன்கள்... தன் நிலையில் இருந்து சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்’ போல் ‘கடமையே கண்ணாயிரம்’ என டெலிவரி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்டாம்புகள் இன்றைக்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால் பொங்கல் வாழ்த்து அட்டைகள் வழக்கத்தில் இருந்து காணாமல் போய்விட்டன. பிப்ரவரி 14க்கு மட்டும் அட்டைகள் வாங்கி, அதை நேரில் கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள்.

சும்மா... ஒருமுறையாவது, போஸ்ட் ஆபீஸ் போய், ஒரு கார்டோ கவரோ வாங்கி, ஒரேயொரு வரி... எவருக்கேனும் எழுதிப் போடுங்களேன்! அது ‘நலம் நலமறிய ஆவல்’ என்பதாக இருக்கலாம். அல்லது ‘பொங்கலோ பொங்கல்’ என்றும் இருக்கலாம். இதனால் எழுதிய நீங்கள் மகிழ்கிறீர்களோ இல்லையோ... நீங்கள் யாருக்கு அனுப்பியிருக்கிறீர்களோ அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்.

’பொங்கும் மங்கலம் என்றும் தங்கிட பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்!’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in