ஒரே ஆண்டில் ஒன்பது படங்கள்: எல்லாவற்றிலும் ஜொலித்த எம்ஜிஆர்!

ஒரே ஆண்டில் ஒன்பது படங்கள்: எல்லாவற்றிலும் ஜொலித்த எம்ஜிஆர்!

அறுபதுகளில், எம்ஜிஆரும் சிவாஜியும் சக்கைப்போடு போட்ட காலம். எம்ஜிஆர் படங்கள் என்றால் அதில் ஜனரஞ்சகமும் இருக்கும், ஆக்‌ஷனும் இருக்கும், குடும்ப சென்டிமென்டும் இருக்கும். சிவாஜி படங்களென்றால் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். உணர்வுகளுக்கும் சிவாஜியின் நடிப்புக்குத் தீனி போடுவது போலான காட்சி அமைப்புகளும் வைக்கப்பட்டிருக்கும். இருவரும் ஒரே ஆண்டில் பல படங்களில் நடித்தவர்கள்.

1963-ம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த ஒன்பது படங்கள் வெளியாகின. ஜனவரி 11-ம் தேதி இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில் அவர் நடித்த ‘பணத்தோட்டம்’ வெளியானது. இதில் சரோஜாதேவி நாயகி. அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின. ’ஒருநாள் இரவில்’, ’ஒருவர் ஒருவராய்ப் பிறந்தோம்’, ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’, ‘பேசுவது கிளியா’, ‘ஜவ்வாது மேடையிட்டு’ என்று எல்லாப் பாடல்களும் இனிமையின் இசை வடிவம்!

அதையடுத்து, பிப்ரவரி 9-ம் தேதி எம்ஜிஆர் நடிப்பில் ‘கொடுத்து வைத்தவள்’ படம் வெளியானது. இந்தப் படத்தை ப.நீலகண்டன் இயக்கினார். ஈ.வி.சரோஜா நாயகியாக நடித்தார். ’பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது’, ’நீயும் நானும் ஒன்று’ என அழகான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.

பிப்ரவரி 22-ம் தேதி தேவர் பிலிம்ஸின் ‘தர்மம் தலைகாக்கும்’ படம் வெளியானது. சரோஜாதேவி எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தின் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ’பறவைகளே பறவைகளே எங்கே வந்தீங்க’, ‘தர்மம் தலைகாக்கும்’, ’ஒருவன் மனது ஒன்பதடா’, ‘ஹலோ ஹலோ சுகமா’ என எல்லா பாடல்களும் ஹிட்!

ஏப்ரல் 19-ம் தேதி, எம்ஜிஆர், பானுமதி நடித்த ‘கலையரசி’ வெளியானது. ஏ.காசிலிங்கம் இயக்கினார். அந்தக் காலத்திலேயே விண்வெளி, வேற்றுக்கிரகம் என்றெல்லாம் கதை அமைக்கப்பட்டிருந்தது. தமிழில் வெளியான இப்படியான முதல் 'ஏலியன்’ படம் இதுவாகத்தான் இருக்கும்.

ஜூன் 28-ம் தேதி, பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில், தேவிகாவுடன் எம்ஜிஆர் நடித்த ‘ஆனந்த ஜோதி’ வெளியானது. படத்தின் பல பாடல்கள் இன்றைக்கும் முணுமுணுக்கப்படுகின்றன. இதில் வரும் ‘நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா’ பாடல் அன்றைய காதல் தோல்விக்காரர்களுக்கு ஒத்தடம் கொடுத்தது. ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’, ‘ஒருதாய் மக்கள் நாம் என்போம்’, ‘பனி இல்லாத மார்கழியா’, ‘காலமகள் கண் திறப்பாள் சின்னையா’ போன்ற பாடல்கள் ஹிட்டடித்தன. இந்தப் படத்தில் சிறுவன் கமலும் எம்ஜிஆருடன் நடித்திருந்தார். எம்ஜிஆரும் கமலும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான்.

ஆகஸ்ட் 18-ம் தேதி, மீண்டும் தேவர் பிலிம்ஸின் ‘நீதிக்குப் பின் பாசம்’ படத்தில் எம்ஜிஆர் நடித்தார். ’மானல்லவோ கண்கள் தந்தது’, ’அக்கம்பக்கம் பார்க்காதே’, ’வாங்க வாங்க கோபாலய்யா வழக்கு என்ன கேளுங்கய்யா’, ’போனாளே போனாளே...’, ’இடி இடிச்சி மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு’, ’நினைத்தாலும் போதுமே நிலைமாறிப்போகுமே’ என அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன. படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

நடுவே மே மாதம் 10-ம் தேதி, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், சரோஜாதேவியுடன் ‘பெரிய இடத்துப் பெண்’ படத்தில் நடித்தார். ‘பாரப்பா பழனியப்பா’, ‘அன்று வந்ததும் அதே நிலா’, ‘அவனுக்கென்ன தூங்கிவிட்டான்’, ’கண்ணென்ன கண்ணென்ன கலங்குது’, ‘கட்டோடு குழலாட ஆட’ முதலான பாடல்கள் இன்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல்களின் பட்டியலில் இருக்கின்றன.

குடுமியுடன் எம்ஜிஆர் இருப்பார். பிறகு டிப்டாப் ஆசாமியாக வலம் வருவார். அக்காவைப் பாலியல் வன்கொடுமை செய்தவரைப் பழிவாங்கும் கதை இது. இதையே இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, கமல் நடிக்க உருவானதுதான் ‘சகலகலாவல்லவன்’ என்பார்கள்.

அக்டோபர் 26-ம் தேதி, கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பில், பானுமதியுடன் எம்ஜிஆர் நடித்த ‘காஞ்சித்தலைவன்’ வெளியானது. காசிலிங்கம் இயக்கினார். ’ஒரு கொடியில் இருமலர்கள்’, ‘கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே’ பாடல்கள் ரசிகர்களை வசீகரித்தன.

நவம்பர் 15-ம் தேதி, சாவித்திரியுடன் எம்ஜிஆர் ஜோடி சேர்ந்த ‘பரிசு’ வெளியானது. யோகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திலும் பாடல்கள் ரசிக்கப்பட்டன. ’கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்பு’, ‘எண்ண எண்ண இனிக்குது’, ’ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே’, ‘காலமெனும் நதியினிலே காதலெனும் படகு விட்டேன்’ என்ற பாடல்கள் எல்லோராலும் முணுமுணுக்கப்பட்டன.

இதில், ’பணத்தோட்டம்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘தர்மம் தலைகாக்கும்’, ‘பெரிய இடத்துப் பெண்’ என நான்கு படங்களில் சரோஜாதேவிதான் ஹீரோயின். ஒரு படத்தில் தேவிகா. ஒரு படத்தில் ஈ.வி.சரோஜா. ‘பரிசு’ படத்தில் சாவித்திரி. ‘கலையரசி’ படத்திலும் ‘காஞ்சித்தலைவன்’ படத்திலும் பானுமதி.

அந்த ஆண்டில், தேவர் பிலிம்ஸுக்கு இரண்டு படங்கள் செய்துகொடுத்தார் எம்ஜிஆர். அனைத்துப் படங்களும் கருப்பு வெள்ளைப் படங்களாகவே அமைந்தன. ஆனாலும் இதில் பல படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியைக் கொடுத்தன. அதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in