விண்வெளித் துறையில் கனவுகளை விதைத்த கல்பனா சாவ்லா!

விண்வெளித் துறையில் கனவுகளை விதைத்த கல்பனா சாவ்லா!

விண்வெளித் துறையில் சாதிக்க வேண்டும் என எத்தனையோ இளம் பெண்களுக்கு உத்வேகம் கொடுத்த கல்பனா சாவ்லாவின் பிறந்ததினம் இன்று. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியப் பெண் எனும் சாதனை புரிந்த கல்பனா சாவ்லா, விண்கல விபத்திலேயே பலியானது மிகப் பெரிய துயரம்.

இளம் வயதிலிருந்தே விண்வெளித் துறையில் ஆர்வம் கொண்டிருந்தவர் கல்பனா சாவ்லா. குழந்தையாக இருந்தபோது விமானங்களைப் பார்த்து உத்வேகம் கொண்டவர் அவர். விண்வெளி வீரராக ஆக வேண்டும் எனும் ஆர்வம் அவருக்குள் முகிழ்த்தது. அதன் பின்னர் நடந்தவை அனைத்தும் வரலாறு!

ஹரியாணாவில் பிறந்தவர்

1962 மார்ச் 17-ல் ஹரியாணா மாநிலம் கர்னாலில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் கல்பனா. உள்ளூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வானூர்தி பொறியியல் பயின்றார். அங்கு பட்டம் பெற்ற பின்னர், 1982-ல் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். 1984-ல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்த அவர், 1988-ல் கொலராடோ பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர், நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் சேரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1994-ல் அவரை ஒரு விண்வெளி ஆய்வாளராக நாசா தேர்வு செய்தது. 1997-ல் முதன்முறையாக கொலம்பியா விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றுவந்தார். ரோபாட்டிக் தொழில்நுட்பத்தின் முதன்மை ஊழியராக அந்த விண்கலத்தில் அவர் பணியாற்றினார். பின்னர் 2003-ல் எஸ்டிஎஸ்-107 எனும் விண்வெளிப் போக்குவரத்துத் திட்டத்தில் மீண்டும் விண்வெளிக்குச் செல்ல அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. கொலம்பியா விண்கலம் மூலம் விண்வெளி ஆராய்ச்சியை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்கு அந்த விண்கலம் திரும்பிக்கொண்டிருந்தபோது, பிப்ரவரி 1-ம் தேதி புவி வளிமண்டலத்தில் நுழைந்தபோது வெடித்துச் சிதறியது. அந்தக் கொடூர விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட, விண்கலத்தில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர்.

பின்னர் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு தகனம் செய்யப்பட்டு, அவரது அஸ்தி உடாவில் உள்ள தேசியப் பூங்காவில் தூவப்பட்டது. அவரது வாழ்நாளின்போதும், மரணத்துக்குப் பிறகும் ஏராளமான கவுரவங்கள் அவருக்குக் கிட்டின. 2002 செப்டம்பர் 12-ல் மெட்-சாட் வரிசையின் முதல் செயற்கைக்கோளை (மெட்-சாட் 1) இந்தியா ஏவியது. அந்தச் செயற்கைக்கோளுக்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநில அரசு இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கல்பனா சாவ்லாவின் பெயரில் விருது வழங்கிவருகிறது. கல்பனா சாவ்லாவை கவுரவிக்கும் விதமாக, 2020-ல், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் வர்த்தகரீதியான கார்கோ விண்கலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்காவின் பல பல்கலைக்கழகங்கள், சாலைகள் மற்றும் விண்வெளித் திட்டங்களுக்கு கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in