ஒரே பாடலில் மொத்தக் கதையும் சொன்ன கவியரசர்!

’நிழல் நிஜமாகிறது’ படத்தில் நிகழ்ந்த அற்புதம்
ஒரே பாடலில் மொத்தக் கதையும் சொன்ன கவியரசர்!

இரண்டரை மணி நேரப் படத்தில் நான்கு முதல் ஐந்து நிமிடத்துக்கு ஆறேழு பாடல்கள் வரும். அப்படி வருகிற பாடல்கள், கனமான கதைக்குக் கொஞ்சம் இலகுவான உணர்வைத் தரலாம் அல்லது கதையின் ஒரு புள்ளியையும் இன்னொரு புள்ளியையும் இணைக்கிற திரைக்கதைக்கு நடுவே பார்வையாளர்களைப் பசையென ஒட்டவைக்கலாம். கேரக்டரை உணர்த்தும் பாடல்கள் இப்போதெல்லாம் குறைந்துவிட்டன. அப்படியிருக்க... கதை சொல்லும் பாடல்களின் நிலை? அவையெல்லாம் ஒருபக்கமிருக்க... படத்தின் மொத்தக் கதையையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் ஒரு நான்கரை நிமிடப் பாடல் சொல்லிவிடுகிற மாயாஜாலம்... அசாத்திய சாதனை!

இப்படியான அற்புதம் நிகழ்ந்த படங்களும் பாடல்களும் எத்தனையோ உண்டு. என்றாலும், இந்தப் படத்தின் பாட்டு ஏனோ தனி ரகமாக, நம் மனசைக் கபளீகரம் செய்துவிட்டது.

அந்த இயக்குநர் கே.பாலசந்தர். பாடலாசிரியர்... கவியரசு கண்ணதாசன். இசையமைப்பாளர்... எம்.எஸ்.விஸ்வநாதன். அந்தப் படம்... ‘நிழல் நிஜமாகிறது’. 1969-ல் கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் ‘அடிமகள் (அடிமைகள்)’ என்ற பெயரில் வந்த மலையாளப் படத்தின் கதையை அடித்தளமாக வைத்துக்கொண்டு, 1978-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவானது ‘நிழல் நிஜமாகிறது’.

கமல், சுமித்ரா, ஷோபா, சரத்பாபு, அனுமந்து, மெளலி முதலானோர் நடித்த இந்தப் படத்தைப் பற்றி பிறகொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன், இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், படத்தின் மொத்தக் கதையையும் சொல்லும் அற்புதத்தைக் கவனிப்போம் (படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள். ஒன்று ‘கம்பன் ஏமாந்தான்’ பாட்டு. இன்னொன்று... ‘இலக்கணம் மாறுதோ!’)

“யாருக்குப் பாட்டு எழுதுவது என்றாலும் அது ரொம்ப சுலபம் எனக்கு. ஆனால் பாலசந்தருக்குப் பாட்டு எழுதுவதென்றால், மனிதர் என்னை முழுவதுமாகக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கிவிடுவார். படத்தின் கதை பாடலில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்” என்று கவியரசு கண்ணதாசனே சொல்லியிருக்கிறார்.

படத்தின் கதை... சரத்பாபுவும் சுமித்ராவும் அண்ணன் - தங்கை. சரத்பாபுவின் நண்பர் கமல் அந்த ஊருக்கு வருகிறார். ஷோபாவும் அனுமந்துவும் சரத்பாபு வீட்டு வேலைக்காரர்கள். வந்தநாள் முதலே கமலைப் பிடிக்காது சுமித்ராவுக்கு. அதேநேரத்தில் அவர் மீது காதல் வயப்பட்டிருப்பார். ஆனால் ஈகோ தடுக்கும். முட்டிக்கொண்டே இருப்பார்கள்.

அனுமந்துவுக்கு ஷோபா மீது காதல். ஆனால் பல கனவுகளுடன் இருக்கும் ஷோபாவை, தன் வார்த்தைகளுக்கு மசியவைத்து அவரிடம் அத்துமீறிவிடுவார் சரத்பாபு. கர்ப்பமாக இருப்பதற்கு கமல்தான் காரணம் என சுமித்ராவுக்கு நினைப்பு. உண்மையை அறிந்த கமல், ஷோபாவுக்கு ஒரு வீடு பார்த்து அனுமந்துவைத் துணைக்கு வைப்பார். இங்கே... இன்னொரு விஷயம்! ஷோபாவுக்கு தமிழில் இதுதான் முதல் படம்.

கமல், சுமித்ரா
கமல், சுமித்ரா

இப்படியான சூழலில் ஒரு பாடல். ‘இலக்கணம் மாறுதோ... இலக்கியம் ஆனதோ...’ பாட்டு. எஸ்பிபி-யும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள். கவியரசு கண்ணதாசனின் வரிகள். எம்எஸ்வி உயிரோட்டமான இசையைக் கொடுத்திருப்பார்.

சுமித்ராவையும் கமலையும் காட்டுவார் பாலசந்தர். அப்போது...

இலக்கணம் மாறுதோ

இலக்கியம் ஆனதோ

இதுவரை நடித்தது

அது என்ன வேடம்

இது என்ன பாடம் என்று ஆரம்பிக்கும் பாடல். அதன் பின்னரும் சுமித்ரா பற்றி கமல் பாடுவதாக அதாவது நினைப்பதாகக் காட்சி.

கல்லான முல்லை இன்றென்ன வாசம்

காற்றான ராகம் ஏன் இந்த கானம்

வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று

யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று

மன்மதன் என்பவன் கண் திறந்தானோ

பெண்மை தந்தானோ... என்று ஈகோவைத் தாண்டி சுமித்ராவுக்குள் இருக்கிற காதலைச் சொல்லும்படி அமைந்திருக்கும் வரிகள் இவை. இந்தப் பாடலில், ’யார் சொல்லித்தந்தார்’ என்று பாடும்போது, தன் ஸ்டைலில் லேசாக அலட்சியச் சிரிப்பை உதிர்ப்பார் எஸ்பிபி.

இப்போது சுமித்ராவின் எண்ணம். அவர்தான் கமலை தப்பான ஆள் என்று நினைக்கிறார் அல்லவா. ஆனால் உள்ளே காதலும் இருக்கிறதே! வாணி ஜெயராம் மட்டும் என்ன... சும்மா இருந்துவிடுவாரா? குரலிலும் கணீர் காட்டி, ஈகோவைத் தெளித்திருப்பார்.

என் வாழ்க்கை நதியில்

கரை ஒன்று கண்டேன்

உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்

புரியாததாலே திரை போட்டு வைத்தேன்

திரை போட்ட போதும் அணை போட்டதில்லை

மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ

விளக்கி வைப்பாயோ... என்று முடிப்பார். ’கரை, கறை, விலக்கி, விளக்கி’ என்று விளையாடியிருப்பார் கவியரசர்.

இப்போது, அனுமந்துவையும் ஷோபாவையும் திரையில் காட்டுவார் பாலசந்தர். கமலின் கணிப்பில், அனுமந்துவை நினைத்து வரும் வரிகள்...

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை

தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை

தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்

பாடாமல் போனால் எது தெய்வமாகும்

மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை

உரைப்பது கீதை... என்று அனுமந்துவின் கேரக்டரையும் தியாகத்தையும் பேரன்பையும் வெள்ளந்தி மனதையும் சொல்லுவதாக அமைந்திருக்கும்.

அடுத்து, வாணி ஜெயராம் குரல் வழியே வரும் பாடல். இது ஷோபாவின் நினைப்பு. அனுமந்துவைப் பற்றிய ஷோபாவின் எண்ணம். காது கேட்காத, வெகுளித்தனமான, அன்பே உயர்வெனக் கொண்டு வாழும் அனுமந்து குறித்த வரிகள்.

ஷோபா
ஷோபா

மணி ஓசை என்ன இடி ஓசை என்ன

எது வந்த போதும் நீ கேட்டதில்லை

நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்

நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்

நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்

பூர்வ ஜென்ம பந்தம் என்று முடித்திருப்பார் கவியரசர்.

கமல், சுமித்ரா, ஷோபா, அனுமந்து நால்வரின் மனநிலைகளை விளக்கினால், மொத்தக் கதையே இந்தப் பாடலில் வந்துவிடும் என்பதை கவியரசரிடம் சொல்லி, பாலசந்தர் இப்படியொரு பாடலைப் படைத்திருக்கிறார். நான்கு பேரின் மனம் சொல்லும் பாடல் என்றாலும் எஸ்பிபி, வாணி ஜெயராம் இருவரை மட்டுமே பாடவைத்திருப்பார் மெல்லிசை மன்னர்.

பொதுவாகவே, பாலசந்தர் படங்களில் கதை மொத்தத்தையும் சொல்வது போலான பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். பாடலின் வரிகள், இசைக் கோர்ப்பு, காட்சி அமைப்பு, நடிப்பு... என எல்லாமே செதுக்கப்பட்டிருக்கும்.

‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் ‘இலக்கணம் மாறுதோ’ பாட்டு, பாலசந்தர் படப் பாடல்களுக்கு சோறு பதம். இந்தப் பாடலைக் கேட்டுப்பார்த்தால், காட்சியாகப் பார்த்தால், படம் மொத்தத்தையும் பார்த்தால், ரசனையும் கவிதையுமாகப் பாடல்களை உருவாக்கியதைக் கண்டு சிலிர்த்துப் போவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in