காலையிலேயே பஞ்சாயத்தா...?

மதுரையில் எந்திரக் கோளாறு, விதி மீறல் புகார்
காலையிலேயே பஞ்சாயத்தா...?

மதுரை மாநகராட்சி 100 வார்டுகள் உள்பட மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 1,615 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக 7760 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நேற்று மாலையே பூஜை எல்லாம் செய்து, பொங்கல் வைத்து, பொட்டு வைத்து அத்தனை வாக்குப்பதிவு இயந்திரங்களும் பக்குவமாக வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அப்படியிருந்தும், இன்று காலையிலேயே சில வாக்குச்சாவடிகளில் இருந்து இயந்திரம் ரிப்பேர் என்று போன் வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக 61வது வார்டு ஸ்ரீவித்யாலயம் பள்ளி வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதானதால், வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் டென்சன் ஆனார்கள். தேர்தல் அலுவலர்களையும் டென்சனாக்கினார்கள். இதேபோல பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்தும் புகார்கள் வந்தன.

இதுபோதாது என்று ஓட்டுப்போட வரும் வாக்காளர்களிடம் கடைசி நேரத்தில் எப்படியாவது தங்கள் சின்னத்தைப் பதிய வைத்துவிட வேண்டும் என்று அலைமோதினார்கள் அரசியல் கட்சியினர். இதனால், விதிமுறைகளை மீறி வாக்குச்சாவடி அருகே ஓட்டுக்கேட்டது, வாக்காளர்களை வாகனத்தில் அழைத்து வந்து ஓட்டுப்போட வைத்தது, பூத் பக்கத்தில் நின்றுகொண்டு சைகை மூலம் சின்னத்தை நினைவூட்டியது என்று புகார்கள் வந்தன.

பசுமலை சிஎஸ்ஐ பள்ளி வாக்குச்சாவடி, மதுரை இளங்கோ பள்ளி ஆகிய இடங்களில் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதேபோல 38வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பாண்டீஸ்வரி வாக்குச்சாவடி அருகே ஓட்டுக்கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் புகார் கூறியதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்புடன் அந்த போஸ்டர்கள் கிழித்தெறியப்பட்டன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in