இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினி!

1979 ஆகஸ்ட் 10-ல் வெளியான ‘நான் வாழவைப்பேன்’ படத்தின் சுவாரசியம்
நான் வாழவைப்பேன்
நான் வாழவைப்பேன்

‘சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டம் கிடைக்கத் தொடங்கிய நாள் முதல் இன்று வரை அந்தப் பட்டத்துக்கு உரியவராக கொடிநாட்டி வெற்றியை ருசித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 1975-ல் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தொடங்கிய அவரின் பயணம், ஒவ்வொரு வருடமும் கொஞ்சம்கொஞ்சமாக ஏறிக்கொண்டே இருந்தது.

1979-ல், ரஜினியின் திரையுலகப் பயணத்தை எடுத்துக் கொண்டால், அது கலவையாகவே இருக்கிறது. அந்த வருடத்தில் ஏழு படங்களில் நடித்தார் ரஜினி

‘தாயில்லாமல் நானில்லை’ டைட்டில் கார்டு
‘தாயில்லாமல் நானில்லை’ டைட்டில் கார்டு

’அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘தாயில்லாமல் நானில்லை’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘குப்பத்து ராஜா’, ‘நான் வாழவைப்பேன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’ என ஏழு படங்களில் நடித்தார். இதில் ரஜினியின் ‘தில்லுமுல்லு’ படத்தில் கமல் ஒரேயொரு காட்சி வந்தது போல், கமலின் ‘தாயில்லாமல் நானில்லை’ படத்தில் ரஜினி ஒரேயொரு காட்சியில் நடித்திருப்பார்.

‘குப்பத்து ராஜா’ படத்தில் விஜயகுமாருடன் நடித்தார் ரஜினி. அதேபோல், ‘நான் வாழவைப்பேன்’ படத்தில் சிவாஜியுடன் நடித்தார்.

‘குப்பத்து ராஜா’ டைட்டில் கார்டு
‘குப்பத்து ராஜா’ டைட்டில் கார்டு

பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்திலும் தேவர் பிலிம்ஸின் ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தை ஐ.வி.சசி இயக்கினார். கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தார்கள். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்தார்கள். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில், படம் தொடங்கியதும் நடிகர்களின் பெயர் போடாமல், படம் முடிவுற்றதும் போடப்படும்.

‘நினைத்தாலே இனிக்கும்’
‘நினைத்தாலே இனிக்கும்’

கமல் பெயர் முதல் டைட்டில் கார்டிலும் அடுத்து ரஜினியின் பெயர் டைட்டில் கார்டிலும் வரும். ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படமெடுக்கும்போது கமல்தான் நாயகன், அலாவுதீன் என்றாலும் யார் பெயரைப் போடுவதில் குழப்பமேதும் இருந்ததா... என்று தெரியவில்லை. படத்தில் நடிகர், நடிகைகளின் பெயரே போடவில்லை. மற்ற அனைவரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.

‘குப்பத்து ராஜா’ படத்தில் இரண்டு விஷயங்கள்... ‘குப்பத்து ராஜா குப்பத்து ராஜா’ என்று டைட்டிலைச் சொல்லும் பாடல் ரஜினிக்குத்தான். ஆனால் விஜயகுமார்தான் நாயகன்.

அதுமட்டுமா? டைட்டிலிலும் விஜயகுமார் பெயர் முதலில் வரும். அடுத்து, ரஜினியின் பெயர் இடம்பெறும். இன்னொரு சுவாரசியம்... புரட்சிக்கலைஞர் என்று ’கேப்டன்’ விஜயகாந்துக்கு அடைமொழி இருக்கிறது. ஆனால், ‘குப்பத்து ராஜா’ படத்தில், ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகுமார் என்று டைட்டிலில் போடுவார்கள்.

‘நான் வாழவைப்பேன்’ சிவாஜி ஹீரோவாக நடித்த படம். கே.ஆர்.விஜயா தயாரித்து நாயகியாக நடித்த படம். இந்திப் படத்தின் ரீமேக் இது. புகழ்மிக்க கதாசிரியர்களான சலீம் - ஜாவேத் கதையில், 1974-ல் அமிதாப், பிரான் நடிப்பில், ’மஜ்பூர்’ எனும் பெயரில் வெளியானது.

இந்தப் படத்தை தமிழில் 1979-ல் ‘நான் வாழவைப்பேன்’ என்ற பெயரில் டி.யோகானந்த் இயக்கினார். ஆகஸ்ட் 10-ம் தேதி இந்தப் படம் வெளியானது. அமிதாப் நடித்த வேடத்தில் சிவாஜியும் பிரான் நடித்த வேடத்தில் ரஜினியும் நடித்தார்கள். முதலில் சிவாஜி பெயர், அடுத்து கே.ஆர்.விஜயா பெயர், மூன்றாவதாக ரஜினி பெயர் இடம்பெற்றிருக்கும்.

இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினி வருவார். மைக்கேல் டிஸோஸா எனும் கேரக்டரில், சிவாஜிக்கு உதவி செய்யும் கதாபாத்திரம். ’இந்தக் கேரக்டருக்கு ரஜினியைப் போடுங்கப்பா’ என்று சிபாரிசு செய்தவர் சிவாஜி கணேசன் (1978-ல், சிவாஜியும் ரஜினியும் இணைந்து நடித்த ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ படம் வெளியாகியிருந்தது).

‘நான் வாழவைப்பேன்’ படத்தில் இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினி வருவார் என்றாலும் அதையடுத்து மொத்தப் படத்தையும் தன் நடிப்பாலும் ஸ்டைலாலும் தாங்கிப்பிடித்து, படத்துக்கு புதியதொரு வண்ணம் சேர்த்திருப்பார்.

அவர் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் ஸ்டைல்தான். விசிலடித்து கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தார்கள் ரசிகர்கள்.

‘ஆகாயம் மேலே பாதாளம் கீழே’ என்கிற பாடலும் ரஜினிக்கு உண்டு. இளையராஜாவின் இசை. ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்துக்கும் இளையராஜாவே இசை. ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு மெல்லிசை மன்னர். ‘குப்பத்து ராஜா’வுக்கும் அவரே! ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்துக்கு தேவராஜன் இசை.

‘அன்னை ஓர் ஆலயம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்று தனி ஹீரோவாக வலம் வந்து வெற்றி வாகை சூடிய அதே ஆண்டில், இப்படியும் நடித்திருந்தார். அடுத்தடுத்த வருடங்கள்... எண்பதுகள்... காட்சிகள் மாறின. ‘சூப்பர் ஸ்டார்’ எனும் அந்தஸ்துடன் இன்றைக்கும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் ரஜினி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in