பேரன்பும் பெருநன்றியும் அண்ணலே! - இந்தியப் பெண்

பேரன்பும் பெருநன்றியும் அண்ணலே! - இந்தியப் பெண்
அம்பேத்கர்

சமத்துவத்தை நோக்கிய பயணத்தில், இந்தியப் பெண்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்ட அற்புதமான தலைவனின் நினைவு நாள் இன்று.

ஆம், அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மறைந்து 65 ஆண்டுகளாகின்றன. அவரது வாழ்நாளில் அவர் வகித்த ஒவ்வொரு பதவியிலும் பெண்களின் உரிமைக்காகவும், நலனுக்காவும் பல சட்டங்களைக் கொண்டுவந்து பெண்களின் வாழ்வியலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார். கொடிய ஜாதிய பாகுபாடுகள் நிலவும் இந்திய சமுதாயத்தில், அண்ணலின் முயற்சிகளை எதிர்த்த ஆதிக்க ஜாதிப் பெண்களும் அவரது சட்டங்களால் பயனடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை வரைவு செய்கையில், அதில் பெண்களின் நலனுக்கான கூறுகளைச் சேர்ப்பதற்காக அரும்பாடுபட்டவர் அண்ணல். குடிம உரிமைகளைப் பொறுத்தவரை, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்துகள் 14 – 16-ல் பெண்களுக்கு சமஅந்தஸ்தை உறுதி செய்ததோடு, பெண்களை ‘வாங்கு’வதையும், ‘விற்பதை’யும் தடை செய்தார். (பெண்கள் விற்பனைக்கா என்று அதிர்ச்சியோடு கேட்பவர்கள் கவனத்துக்கு – இந்து இந்தியாவில் இது நடைமுறையில் இருந்திருக்கிறது என்கிறார் ரத்னேஷ் கடுல்கர் - Ratnesh Katulkar, Ambedkarite activist from Madhy Pradesh and Research Scholar in Dr. Babasaheb Ambedkar National Institute of Social sciences)

டாக்டர் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்தபோது, பெண்களின் சமத்துவத்துக்காக, இந்து நெறிமுறை மசோதாவை (Hindu Code Bill) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதன் நோக்கங்கள்: 1. இந்துக்களிடையே இருக்கும் பல்வேறு திருமண முறைகளை ஒழித்து ஒருதார மணத்தை (Monogamy) சட்டபூர்வமாக்குவது. 2. பெண்களுக்கு சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை தருவது. 3. விவாகரத்து கோரும் உரிமை, விவாகரத்தான பெண்களுக்கு ஜீவனாம்சம் அளிப்பது. இந்த மசோதா, பெண்களுக்கு உரிய சமநிலையை அளித்து, மொத்த சமுதாயத்தையும் முற்போக்கான பாதையில் கொண்டு செல்வதற்கான, அவரின் சீரிய முயற்சியாகும்.

ஆனால், ஆதிக்கசாதி இந்துக்களோ இந்த புரட்சிகர மசோதா இந்து மதத்தின் ‘புனித’த்தின் மீதான தாக்குதல் என்று எதிர்த்தனர். நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்து மகாசபை உறுப்பினர்களுடன், ஆதிக்கசாதி இந்துப் பெண்களும் பெருமளவில் இதை எதிர்த்துப் போராடியதை என்னவென்று சொல்வது? தனக்கான உரிமைகளுக்காகத்தான் அம்பேத்கர் குரல் கொடுக்கிறார் என்பதை உணரக்கூட இயலாத அளவுக்கு மதமும், ஆணாதிக்க சமுதாயமும் அந்தப் பெண்களை மூளைச்சலவை செய்திருக்கிறது.

இந்து நெறிமுறை மசோதாவுக்கு ஆதரவான வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த அம்பேத்கர், மசோதாவின் பின்புலமாக இருக்கும் கொள்கைகள், சுதந்திரம், சமத்துவம், ஒப்புறவின் அடிப்படையிலான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்துதான் பெறப்பட்டன என்றார்.

“நீங்கள் குறிப்பிடும் புனிதமான திருமண முறைகளில், பெண்ணுக்கான சமத்துவத்துக்கோ, சுதந்திரத்துக்கோ இடமில்லை. இந்த புனிதத் திருமணங்களிலும், ஆண்களுக்கான பலதார திருமணம் ஆகியவற்றிலும் பெண் அடிமையாகத்தான் இருக்கிறாள். இந்தத் திருமண முறையில், எந்தச் சூழலிலும், கணவன் மிகக் கொடியவனாக இருந்தாலும்கூட, பெண்ணுக்கு விடுதலை கிடைக்காது” என்று வாதிட்ட அண்ணலின் ஒவ்வொரு சொல்லும், பெண்களின் மீதான கரிசனத்தையும் பரிவையுமே பிரதிபலிக்கிறது.

ஆனால்… இந்தப் புரட்சிகர மசோதா நிறைவேறவில்லை. கடுமையான எதிர்ப்பினால், அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு இந்த மசோதாவை கைவிட்டார். வெறுப்படைந்த அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். அப்போது மனச்சோர்வுடன் இந்தச் சொற்களை உதித்தார் அண்ணல்... “இந்து நெறிமுறை மசோதா, கொல்லப்பட்டது; புதைக்கப்பட்டது. அழுகையின்றி... அங்கீகாரமின்றி...”

பெண்ணுரிமைக்காகப் போராடி, அதை அடையமுடியாத நிலைமையில் தன் கொள்கையில் உறுதியுடன், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகி, தன் எதிர்ப்பை பதிவு செய்தவருக்கு இன்றும் பெண்கள் நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்.

அண்ணலின் பிற பெண்ணுரிமைப் பணிகளையும் நினைவுகூர வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர், தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கு, பேறுகாலத்தில் ஓய்வும், நிதியுதவியும் அளிக்க வேண்டும் என்று 1928-லேயே குரல் கொடுத்தவர். பம்பாய் சட்டப்பேரவையில் இதற்கான மசோதாவை கொண்டு வருவதிலும் முக்கிய பங்காற்றினார். இதன் விளைவாக, இந்தியாவிலேயே முதன்முறையாக பேறுகால உதவி சட்டத்தை, 1929-ல் பம்பாய் சட்டப்பேரவை இயற்றியது.

“நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, பேறுகாலத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் பெண்களுக்கு சிறிது காலம் ஓய்வு தரவேண்டும். மக்களின் நலத்தைக் காப்பதுதான் அரசின் முதல் கடமை. இந்த மசோதாவை சட்டமாக்குவதன் மூலம் நமது மாகாணத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஏழைப் பெண்கள் பயன்பெறுவார்கள்” என்று இதைப் பற்றி குறிப்பிட்டார் அம்பேத்கர்.

இதைத் தொடர்ந்து, `மெட்ராஸ் பேறுகால உதவி சட்டத்தை’, 1934-ல் மெட்ராஸ் சட்டப்பேரவை கவுன்சில் நிறைவேற்றியது. பின், இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது.

அம்பேத்கர், 1942 முதல் 1946 வரை வைசிராயின் செயற்குழுவில் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, சுரங்கங்கள் பேறுகால உதவி சட்டத்தை, இந்தியா முழுவதற்கும் கொண்டுவர முனைப்புடன் செயலாற்றினார். இந்தச் சட்டத்தின்படி, சுரங்கத்தில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு 8 வாரம் (பிரசவத்துக்கு முன்பு 4 வாரம், பிரசவத்துக்கு பின்பு 4 வாரம்) பேறுகால ஓய்வு கிடைத்தது. 1961-ல் அனைத்து மாநிலங்களின் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டு, பொதுவான பேறுகால உதவிச் சட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்தது.

டாக்டர் அம்பேத்கர், ஆண்களுக்கு இணையான ஊதியத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். வைசிராயின் செயற்குழுவில் தொழில் துறை அமைச்சராக இருந்தபோது, முதன்முறையாக இந்தியாவில், தொழிற்சாலை வேலைகளில், ‘பாலின வேறுபாடின்றி சமவேலைக்கு சமஊதியம்’ என்ற கொள்கையைக் கொண்டு வந்தார். “இது மிக முக்கியமானது. ஆணுக்கு இணையான ஊதியம் பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டும். முதன்முறையாக தொழில் துறையில் பாலின வேறுபாடின்றி சமவேலைக்கு சமஊதியம் என்ற கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்று எண்ணுகிறேன்” என்று அம்பேத்கர் இதைப் பற்றி கூறினார்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைவு செய்யும்போது, அரசு ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவேலைக்கு சமஊதியம் தர வேண்டும் என்பதை, அரசுக்கான வழிகாட்டு நெறிகள் பகுதி நான்கில் சேர்த்து, ஷரத்து 39(d)-ல் அதை உறுதி செய்யவும் செய்தார் இந்த சமத்துவ நாயகன்.

குரல் : அஸ்வினி சிவலிங்கம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in