அனைவரும் ஒன்றிணைந்து அன்னை பூமியைக் காப்போம்!

ஏப்ரல் 22: புவி தினம்
அனைவரும் ஒன்றிணைந்து அன்னை பூமியைக் காப்போம்!

உலக புவி தினம் இன்று (ஏப்.22) அனுசரிக்கப்படுகிறது. மக்கள்தொகை அதிகரிப்பு, காடுகள் அழிப்பு, புவிவெப்பமடைதல் என உலகம் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பினருக்கும் பரப்புவதுதான் இந்த நாளின் முக்கிய நோக்கம். இதை முன்னிட்டு உலகமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டின் புவி தினம் ‘நமது பூமியில் முதலீடு’ செய்வோம் எனும் முழக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது. இயற்கை வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலான திட்டங்களை நோக்கி வணிக நிறுவனங்கள் திரும்ப வேண்டும் என்பது இதன் நோக்கம்.

இதே நாளை, சர்வதேச அன்னை பூமி தினமாக ஐநா கொண்டாடுகிறது. ‘இயற்கையுடன் இசைந்து’ எனும் தலைப்பில் ஐநா இந்த ஆண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.

பின்னணி

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கேலார்டு நெல்சன், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பிவந்தவர். 1969 ஜனவரியில் அவரும் வேறு சிலரும் இணைந்து, கலிபோர்னியா மாநிலத்தின் சான்டா பார்பரா பகுதியில் எண்ணெய்க் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரடியாக ஆய்வுசெய்தனர். அந்தக் காலகட்டத்தில் வியட்நாம் போருக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் அமெரிக்காவை அதிரவைத்தவை. அந்த பாணியில் சுற்றுச்சூழலைக் காக்கும் போராட்டத்தையும் முன்னெடுக்க கேலார்டு நெல்சன் விரும்பினார்.

இதுதொடர்பாக, கல்லூரி வளாகங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த திட்டமிட்டார். பீட் மெக்க்ளோஸ்கி, டெனிஸ் ஹேய்ஸ் போன்றோரின் ஒத்துழைப்புடன் ஏப்ரல் 22-ல் கல்லூரி வளாகங்களில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தக் கூட்டங்கள் பின்னர் பெரிய அளவில் விரிவடைந்தன. பின்னர் அந்த நாள் ‘புவி தினம்’ என மாற்றப்பட்டது. 1970-ல் இதே தேதியில் அமெரிக்காவில் புவி தினம் அனுசரிக்கப்பட்டது. தொழில் துறை வளர்ச்சி எனும் பெயரில் 150 ஆண்டுகளாக பூமி சிதைக்கப்பட்டதைக் கண்டித்து மாபெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதுமட்டுமல்ல, சுற்றுச்சூழலைக் காக்கும் வகையிலான சட்டங்கள் உருவாக இந்த முன்னெடுப்பு வழிவகுத்தது. அமெரிக்காவுக்கு வெளியிலும் இந்த தினத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டதன் விளைவாக, 1990-ல் புவி தினம் உலக அளவில் அனுசரிக்கப்பட்டது. 1992-ல் ரியோடி ஜெனிரோ நகரில் நடந்த ஐநா புவி உச்சி மாநாடு நடக்கவும் இந்த முன்னெடுப்பு அடிகோலியது.

இன்றும் தொழில் வளர்ச்சி எனும் பெயரில் காடுகளை அழிக்கும் வேலைகள் நடக்கவே செய்கின்றன. சில நாடுகளில் தொலைநோக்குப் பார்வையற்ற சட்டங்களே அதற்குத் துணைபோகின்றன. அந்த வகையில், இன்றும் புவியைக் காப்பதற்கான அறைகூவலை விடுக்கும் நிலையில்தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இருக்கிறார்கள்.

புவி தினத்தை அனுசரிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in