கமல் சொல்வது சரியா? 13 தொடர் தோல்விப் படங்கள் கொடுத்தாரா சிவாஜி?

ஐந்து ஆண்டுகளில் வெளியான சிவாஜி படங்கள்: ஓர் அலசல்
கமல் சொல்வது சரியா? 13 தொடர் தோல்விப் படங்கள் கொடுத்தாரா சிவாஜி?

’’சிவாஜி சார் 13 தோல்விப் படங்களை அடுத்தடுத்து கொடுத்தார். பிறகு ‘திரிசூலம்’ எனும் வெற்றிப் படத்தைக் கொடுத்தார்’’ என்று கமல்ஹாசன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். சிவாஜியை அணு அணுவாக ஆராதிக்கும் கமல், தோல்விகளுக்குப் பிறகும் துவண்டு விடாமல் வென்று காட்டியவர் சிவாஜி என ஒருவேளை சொல்ல முனைந்திருக்கலாம். அதேசமயம், சினிமா தொடர்பான தகவல்களை விலாவாரியாக விவரிக்கும் கமல், பொத்தாம்பொதுவாக அப்படிச் சொல்லியிருப்பாரா? பார்க்கலாம்!

சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில் 1979-ல் ‘திரிசூலம்’ வெளியானது. ’தெய்வ மகன்’ படத்துக்குப் பிறகு மூன்று வேடங்களில் சிவாஜி நடித்த இந்தப் படம் 200 நாட்களைக் கடந்து ஓடி, மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவாஜியுடன் கே.ஆர்.விஜயா, ஸ்ரீப்ரியா, ரீனா முதலானோர் ஜோடியாக நடித்தார்கள்.

1975-ல், சிவாஜி கணேசன், எட்டு படங்களில் நடித்தார். ‘வைர நெஞ்சம்’, ‘அன்பே ஆருயிரே’, ‘அவன்தான் மனிதன்’, ‘சினிமா பைத்தியம்’ (இதில் கெளரவ வேடம்), ‘டாக்டர் சிவா’, ‘பாட்டும் பரதமும்’, ‘மன்னவன் வந்தானடி’. ‘மனிதனும் தெய்வமாகலாம்’ முதலான படங்கள் வெளியாகின.

’அன்பே ஆருயிரே’, ‘அவன்தான் மனிதன்’, ‘டாக்டர் சிவா’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். ’சினிமா பைத்தியம்’ படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார். கமலும் ஜெயசித்ராவும் நடித்திருந்தனர். ’பாட்டும் பரதமும்’, ‘மன்னவன் வந்தானடி’, ’மனிதனும் தெய்வமாகலாம்’ ஆகிய படங்களை பி.மாதவன் இயக்கினார். ‘வைர நெஞ்சம்’ படத்தை இயக்குநர் ஸ்ரீதர் இயக்கினார்.

இதில், ‘அன்பே ஆருயிரே’, ‘அவன் தான் மனிதன்’, ‘டாக்டர் சிவா’, ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்களில் மஞ்சுளா நடித்திருந்தார். ‘அவன் தான் மனிதன்’, ‘பாட்டும் பரதமும்’ படங்களில் ஜெயலலிதாவும் ‘வைரநெஞ்சம்’ படத்தில் பத்மப்ரியாவும் ’மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தில் செளகார் ஜானகியும் உஷா நந்தினியும் நடித்தார்கள். ‘சினிமா பைத்தியம்’ படத்தில் சிவாஜி ஒரேயொரு காட்சியில் நடித்திருப்பார்.

1975-ல் வந்த இந்தப் படங்களில், ‘அவன் தான் மனிதன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மற்ற படங்களெல்லாம் சுமாரான வெற்றியையே பெற்றன. சில படங்களில் அமைந்த பாடல்கள் இன்றைக்கும் பலராலும் ரசித்துக் கேட்கப்படுகின்றன.

1976-ல் ஆறு படங்களில் நடித்தார் சிவாஜி. ’உத்தமன்’, ‘சத்யம்’, ‘உனக்காக நான்’, ‘கிரகப்பிரவேசம்’, ‘சித்ரா பெளர்ணமி’, ‘ரோஜாவின் ராஜா’ முதலான படங்கள் வெளியாகின. ராஜேந்திர பிரசாத் ‘உத்தமன்’ படத்தை இயக்கினார். மஞ்சுளா ஜோடி. கே.பாலாஜி தயாரிப்பில் உருவான ‘உனக்காக நான்’ படத்தில் சிவாஜி, ஜெமினி, லட்சுமி, வெண்ணிற ஆடை நிர்மலா முதலானோர் நடித்தார்கள். சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ’கிரகப்பிரவேசம்’ படத்தை டி.யோகானந்த் இயக்கினார். கே.ஆர்.விஜயா நாயகியாக நடித்தார்.

’சத்யம்’ படத்தை எஸ்.ஏ.கண்ணன் இயக்கினார். கமலும் உடன் நடித்திருந்தார். தேவிகா, மஞ்சுளா, ஜெயசித்ரா முதலானோர் நடித்தார்கள். ’கல்யாணக் கோயிலில் தெய்வீகக் கலசம்’ எனும் எஸ்பிபி-யின் பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்தது. ’சித்ரா பெளர்ணமி’ படத்தை மாதவன் இயக்கினார். ஜெயலலிதா உடன் நடித்தார். கே.விஜயன் இயக்கிய ‘ரோஜாவின் ராஜா’ படத்தில் வாணிஸ்ரீ நடித்தார். ’உத்தமன்’ படத்தைத் தவிர மற்ற படங்கள் பாராட்டும்படியாக அமையவில்லை. ஓரளவு வெற்றியையே ருசித்தன.

1977-ம் ஆண்டு, நான்கு படங்களில் நடித்தார் சிவாஜி. ‘அண்ணன் ஒரு கோவில்’, ‘அவன் ஒரு சரித்திரம்’, ‘நாம் பிறந்த மண்’, ‘தீபம்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ‘அண்ணன் ஒரு கோவில்’ படத்தை கே.விஜயன் இயக்க, சுஜாதா, சுமித்ரா நடித்திருந்தனர். மஞ்சுளாவும் காஞ்சனாவும் உடன் நடிக்க, கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கத்தில் ’அவன் ஒரு சரித்திரம்’ உருவானது.

ஒளிப்பதிவாளரான வின்சென்ட் இயக்கத்தில், கமலும் சிவாஜியும் இணைந்து நடித்த ‘நாம் பிறந்த மண்’ படத்தில் கே.ஆர்.விஜயாவும் ஜெமினி கணேசனும் நடித்தார்கள். இந்த வருடத்தில், ‘அண்ணன் ஒரு கோவில்’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘மல்லிகை முல்லை’, ‘அண்ணன் ஒரு கோவிலென்றால்’ உள்ளிட்ட பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகின.

’தீபம்’ படத்தை பாலாஜி தயாரிக்க, கே.விஜயன் இயக்க, சுஜாதா இயக்கினார். சிவாஜி படத்துக்கு இளையராஜா இசையமைத்தது இதுவே முதல் முறை. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘அந்தப்புரத்தில் ஒரு மகராணி’, ‘பூவிழி வாசலில் யாரடி வந்தது’ முதலான பாடல்கள் ஹிட்டாகின.

1978-ல், ஏழு படங்களில் நடித்தார் சிவாஜி. ‘அந்தமான் காதலி’, ‘என்னைப் போல் ஒருவன்’, ‘புண்ணியபூமி’, ‘பைலட் பிரேம்நாத்’, ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘ஜெனரல் சக்ரவர்த்தி’, ‘தியாகம்’ முதலான படங்கள் வெளியாகின.

முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வந்த ‘அந்தமான் காதலி’யில் சுஜாதா நடித்தார். டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான ‘என்னைப் போல் ஒருவன்’ படத்தில், உஷா நந்தினியும் சாரதாவும் நடித்தார்கள். இதில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘அந்தமான் காதலி’யிலும் அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன.

பாலாஜியின் தயாரிப்பில் கே.விஜயன் இயக்கத்தில் வெளியான ‘தியாகம்’ படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக லட்சுமி நடித்தார். பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இளையராஜா இசை. ‘தியாகம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள்’ பாட்டு பலரின் காலர் டியூனாகவும் இருக்கிறது. ‘அந்தமான் காதலி’யும் வெற்றி பெற்றது. ’புண்ணிய பூமி’க்கு கே.விஜயன் இயக்கம். வாணிஸ்ரீ நாயகியாக நடித்தார். ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ‘பைலட் பிரேம்நாத்’ படத்தில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா நடித்தார். டி.யோகானந்த் இயக்கத்தில், கே.ஆர்.விஜயா நடிக்க, ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ வெளியானது. இதில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

டி.யோகானந்த், ‘ஜெனரல் சக்கரவர்த்தி’யை இயக்க, கே.ஆர்.விஜயா நடித்தார். இந்த ஏழு படங்களில், ‘புண்ணிய பூமி’ மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. ‘பைலட் பிரேம்நாத்’, ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’, ‘ஜெனரல் சக்கரவர்த்தி’ படங்கள் சுமாராகத்தான் ஓடின.

‘என்னைப் போல் ஒருவன்’ பாடல்கள் ஹிட்டான அளவுக்கு படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ‘வேலாலே விழிகள்’, ‘தங்கங்களே’ பாடல்கள் மறக்கமுடியாதவை.

1979-ம் ஆண்டு ‘இமயம்’, ‘நல்லதொரு குடும்பம்’, ‘நான் வாழவைப்பேன்’, ‘பட்டாக்கத்தி பைரவன்’, ‘வெற்றிக்கு ஒருவன்’, ‘திரிசூலம்’ முதலான படங்கள் வெளிவந்தன. மொத்தம் ஐந்து படங்கள்.

’இமயம்’ படத்தை முக்தா சீனிவாசன் இயக்கினார். ஸ்ரீவித்யா நடித்தார். ’நல்லதொரு குடும்பம்’ படத்தை கே.விஜயன் இயக்க, வாணிஸ்ரீ நடித்தார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகின.

’திரிசூலம்’ படத்தை கே.விஜயன் இயக்கினார். சிவாஜியின் தயாரிப்பு. ’நான் வாழவைப்பேன்’ கே.ஆர்.விஜயா நடித்து தயாரித்தார். இளையராஜா இசை. ’பட்டாகத்தி பைரவன்’ படத்தை ராஜேந்திர பிரசாத் இயக்கினார். ஜெயசுதா நடித்தார். இளையராஜா இசை. ’எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்’ இன்றைக்கும் கேட்டுக் கிறங்குகிற பாடலாக அமைந்திருக்கிறது.

இவற்றில் ‘திரிசூலம்’ சிவாஜியின் 200-வது படம். 200 நாட்களைக் கடந்து ஓடிய படம். ‘நான் வாழவைப்பேன்’ படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

’’மூன்று வருடங்களில், 13 தொடர் தோல்விப்படங்களைக் கொடுத்த சிவாஜி சார், மீண்டும் ‘திரிசூலம்’ படத்தில் எழுந்து வந்தார்’’ என்று கமல்ஹாசன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார். அதில் பாதி உண்மை. அதாவது, ஐந்து வருடக் கணக்காகவே எடுத்துக்கொண்டு சிவாஜி படங்களை அலசியதில், ஐந்து வருடங்களில் சிவாஜி நிறைய தோல்விப் படங்களைக் கொடுத்தார் என்பது உண்மையே. அதேசமயம், ‘அவன்தான் மனிதன்’, ‘அண்ணன் ஒரு கோயில்’, அந்தமான் காதலி’, ‘தீபம்’, ‘தியாகம்’ முதலான வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கிறார். இந்த ஐந்து வருடங்களில், வெற்றிப் படங்களைக் கொடுத்ததைவிட, தோல்விப்படங்களின் எண்ணிக்கை அதிகம்தான். ஆம்! சிவாஜியைப் பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படிச் சொல்லியிருப்பார் கமல்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in