எந்த கேரக்டரிலும் சொல்லியடிக்கும் டெல்லி கணேஷ்! - பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

கமலுடன் டெல்லி கணேஷ்
கமலுடன் டெல்லி கணேஷ்

படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன்களுக்குப் பிறகு வருபவர்களைப் பொதுவாக ‘சைடு ஆக்டர்’ என்று சொல்வார்கள். தமிழில் துணைக் கதாபாத்திரங்கள் என்பார்கள். இந்த ஹீரோ, அந்த ஹீரோயின், அவர்தான் வில்லன் என்பவர்களையெல்லாம் கடந்து, துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள்தான் படத்துக்கு உண்மையிலேயே பக்கபலமாக இருப்பார்கள். கொடுக்கப்பட்ட கேரக்டருக்கும் படத்துக்கும் பலம் சேர்க்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் டெல்லி கணேஷ்.

நெல்லையை அடுத்த வல்லநாடு பூர்விகம். மதுரையில் படிப்பு. டெல்லியில் வேலை. அங்கே... டெல்லியில் நாடகங்களில் நடித்தார். பின்னர், வேலையை விட்டுவிட்டு, சென்னைக்கு வந்தவரை, காத்தாடி ராமமூர்த்தி தன் குழுவில் சேர்த்துக்கொண்டார். நாடகத்தில் எந்தக் கதாபாத்திரத்திலும் தனி முத்திரை பதித்தார். திடீரென்று ஏதோவொரு கேரக்டரில் நடிப்பவர் வர முடியவில்லையென்றாலும் அந்தக் கேரக்டரை அசால்ட்டாக நடித்து, அசத்திவிடுவார். எல்லா நடிகர்கள் பேசும் வசனங்களையும் மனப்பாடமாக வைத்திருப்பதுதான் டெல்லி கணேஷின் ஸ்டைல்.

‘டெளரி கல்யாணம் வைபோகமே’ என்ற நாடகம். கணேஷும் அட்டகாசமாக நடித்தார். நாடகம் பார்க்க வந்த இயக்குநர் கே.பாலசந்தர், கணேஷின் நடிப்பை மனதில் குறித்துக்கொண்டார். பிறகு, நாடகமாக மேடையேறிய கதையைத் திரைப்படமாக்குவது என முடிவு செய்தார். கணேஷும் சம்மதித்தார். சினிமாவுக்காக அவரது பெயரைச் சற்றே மாற்றலாம் எனப் பேசப்பட்டது.

“கணேஷ், கணேசன், நெல்லை கணேஷ், வல்லை (வல்லநாடு) கணேஷ், பால கணேஷ் என்றெல்லாம் பெயர் சூட்டுங்களேன்” என்று மாறிமாறி கணேஷ் சொல்ல... ‘வித்தியாசமா இருக்கணும்யா’ என்று யோசித்த பாலசந்தர், நிறைவில் வைத்த பெயர்தான் ‘டெல்லி கணேஷ்’. நாடக மேடையிலிருந்து வெள்ளித்திரைக்கு பாலசந்தர்தான் அழைத்து வந்தார். அந்தப் படம்... ‘பட்டினப் பிரவேசம்’. அந்த முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கணேஷ்... டெல்லி கணேஷ்!

பிறகு, ‘டெளரி கல்யாணம்’ படமும் சினிமாவாக்கப்பட்டது. தொடர்ந்து விசு இயக்கத்தில் நடித்து வந்தார். மற்ற படங்களும் கிடைத்தன. முக்தா பிலிம்சில், ‘பொல்லாதவன்’, ‘சிம்லா ஸ்பெஷல்’ உள்ளிட்ட பல படங்கள் கிடைத்தன. பாலசந்தர், ‘சிந்து பைரவி’, ‘உன்னால் முடியும் தம்பி’, ‘புன்னகை மன்னன்’ முதலான படங்களில் நடிக்க வைத்தார். அநேகமாக, எண்பதுகளில், எல்லா தயாரிப்பாளர்களின் படங்களிலும் எல்லா இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார்.

எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதைக் கச்சிதமாக, கதைக்குத் தக்கபடி தன்னைப் பொருத்திக்கொள்வதுதான் டெல்லி கணேஷின் குணம். ஆரம்பகாலத்தில், மற்றவர்களுக்காக டப்பிங் பேசியிருக்கிறார். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ உள்ளிட்ட படங்களில் பிரதாப் போத்தனுக்கும், சிரஞ்சீவிக்கு டப் செய்யப்பட்ட ‘47 நாட்கள்’ முதலான படங்களுக்கும் ‘சூரசம்ஹாரம்’ படத்தில் கேப்டன் ராஜூக்கும் என பலருக்கும் டப்பிங் பேசியிருக்கிறார்.

‘புதுக்கவிதை’யில் எதையாவது நோண்டி ரிப்பேர் பார்த்துக்கொண்டிருக்கும் கேரக்டரை சிறப்பாகச் செய்திருப்பார். ‘புன்னகை மன்னன்’ படத்தில் கமலுக்கு அப்பாவாக, சமையல் கலைஞராக படபடவென அப்பளமாய் பொரிந்து தள்ளியிருப்பார். ‘சிந்து பைரவி’ படத்தில், மிருதங்கம் குருமூர்த்தியாக, அடிபின்னியிருப்பார். எப்போதும் குடித்துக்கொண்டிருக்கிற அந்தக் கேரக்டர், ஒரு கட்டத்தில் ஜே.கே.பி செய்யும் தவறுகளை தைரியமாகத் தட்டிக்கேட்கும். அப்போதும் குடிகாரக் குரலில் குழறுவார் . ஆனால், “நான் குடிக்கலை மன்னி. சும்மா குடிச்சது போல நடிச்சேன்” என்று சொல்லிவிட்டு, கடந்து செல்லும் டெல்லி கணேஷுக்காக, அவர் நடிப்புக்காகக் கைதட்டினார்கள் ரசிகர்கள்.

‘எங்கேயோ கேட்ட குரல்’ படத்தில் ரஜினியின் மாமாவாக அம்பிகா, ராதாவின் அப்பாவாக யதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார். ‘இந்தக் கேரக்டருக்குத்தான் இவர் செட்டாவார்’ என்பதெல்லாம் இவருக்கில்லை. எந்தக் கதையாக இருந்தாலும் கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் பொருந்திப்போய்விடுகிற மேஜிக் டெல்லி கணேஷிடம் உண்டு.

சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’ திரைப்படத்தில், சமையல் கலைஞராக டெல்லி கணேஷ், மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருப்பார். “அன்னபூரணின்னுதான் சொல்லுவாங்க. கூல்டிரிங்ஸ் பூரணின்னு சொல்லமாட்டாங்க” என்பார். “எங்க மாமாவுக்கு முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி” என்று பானுப்ரியா சொல்ல, “எனக்குப் பின் கோபம் ஜாஸ்தி” என்பார் சட்டென்று! கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த் என்று தொடங்கி, இன்றைக்கு அஜித், விஜய், விக்ரம், விஷால் என மிகப்பெரிய ரவுண்டு வந்திருக்கிறார். சீரியல், வெப் சீரீஸ் என்றும் கலக்கிக்கொண்டிருக்கிறார். ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தின் ‘பாயாசம்’ பகுதியில் அவரது நடிப்பை வியக்காத இன்றைய திரை ரசிகர்கள் இல்லை!

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் பாலக்காட்டுத் தமிழ் பேசும் கமல் காமேஸ்வரனின் அப்பாவுக்கு, வேறு எவரையாவது நினைக்கக்கூட முடியாது நம்மால். மடித்துக்கட்டிய வேஷ்டியும் கக்கத்தில் வெற்றிலைப்பெட்டியும் வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி பேசுகிற பாவனையும் அந்த ‘மீன்’ காட்சியும் ‘நீ கையைப் புடிச்சியா?’ என்று கேட்டுவிட்டு கமலுக்குப் பளாரென அறைவிடுவதும் என டெல்லி கணேஷ் அதகளம் பண்ணியிருப்பார்.

‘அவ்வை சண்முகி’ என்று நினைக்கும்போதே மாமியுடன் சேர்ந்து நமக்கு நினைவுக்கு வருபவர் சேதுராம ஐயர் டெல்லி கணேஷ்தான். காதில் பூ சுற்றிக்கொண்டு, மாமியைப் பின்தொடர்ந்து, மணிவண்ணனிடம் அடிவாங்குவதாகட்டும், வேலைக்காரப் பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவள் பொருட்கள் திருடி மாட்டிக்கொள்ள, அதைச் சமாளிப்பதாகட்டும், பேச முடியாது என்று இஸ்லாமிய நாசரை, ஐயர் வேஷம் போட்டுக்கொண்டு கமல் அழைத்து வர, நாசருக்கு டெஸ்ட் வைப்பதாகட்டும்... ‘நெத்தில என்ன?’ என்று சண்முகி மாமி கேட்க, ‘மக்கு... பிளாஸ்திரி’ என்று இயலாமையில் சொல்வதாகட்டும், நாகேஷும் ஜெமினியும் உட்கார்ந்திருக்க, ‘அண்ணா, இவன் சண்முகி புருஷனே இல்ல’ என்று சொல்ல, ‘அதைத்தானேடா இவனும் சொல்றான்’ என்று ஜெமினி அதட்ட... நம் வயிறெல்லாம் குலுங்கிக்குலுங்கியே ஜீரணமாகிவிடும்.

‘நேர்கொண்ட பார்வை’யில், குற்றம்சுமத்தப்பட்ட மகள், பாதிக்கப்பட்டிருக்கிற மகள். கோர்ட்டில் துக்கப்பார்வையுடன் வசனமே பேசாமல் நடித்துக் கலங்கடித்திருப்பார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’வில், பேரன்பு மிக்க அப்பாக்களை, மிடில் கிளாஸ் அப்பாக்களை, நம் கண்முன்னே கொண்டுவந்து அழவைத்திருப்பார். அதேசமயம், ‘லண்டன்’ படத்தில் வடிவேலுவுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிக்கெல்லாம் அளவே இல்லை.

கறுப்பு வெள்ளைக் காலகட்டங்களில் ரங்காராவ், மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் பொருந்திப் போகிற நடிகர்கள் சிலர் உண்டு. கலர் படங்கள் தொடங்கி டிஜிட்டல் உலகமாக மாறிவிட்ட இந்தக் காலம் வரை, அப்படியொரு ‘ஆல் கேரக்டர் நடிகர்’ டெல்லி கணேஷ் என்று கொண்டாடுகிறது தமிழ்த் திரையுலகம். நாமும் கொண்டாடி வாழ்த்துவோம்.

ஆகஸ்ட் 1: நடிகர் டெல்லி கணேஷ் பிறந்தநாள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in