கிரேஸி மோகன் 70: வார்த்தைக்கு வார்த்தை சிரிப்புப் பட்டாசு கொளுத்திப்போட்டவர்!

- 70வது பிறந்ததினத்தில் சில நினைவுகள்
கிரேஸி மோகன் 70: வார்த்தைக்கு வார்த்தை சிரிப்புப் பட்டாசு கொளுத்திப்போட்டவர்!

அனல்தெறிக்கும் வசனங்கள் ஒரு வகை. கவிதை மாதிரி பளிச்பளிச்சென்று இருக்கிற வசனங்கள் ஒருவகை. உணர்வுபூர்வமாக நம்மை அழவைக்கும் வசனங்கள் இன்னொரு வகை. இப்படி சினிமாவில் பலவித வசனங்கள் இருக்கின்றன.

ஒருவரை அழவைப்பது மிகச்சுலபம்... அது வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி. ஆனால் சிரிக்கவைப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதுவும் காட்சிக்குக் காட்சி சிரிக்கவைக்கும் வசனங்கள்... வார்த்தைக்கு வார்த்தை கலகலப்பாக்கும் வசனங்கள்... அதுதான் கிரேஸி மோகனின் எழுத்து ஜாலம். அவர் எழுதுகிற வசனத்துக்கு கைதட்டி, சிரித்திருப்போம். ஆனால் நாம் சிரித்துமுடிக்கும் வரையெல்லாம் காத்திருக்காமல், சிரிப்பு அடங்கி நிதானத்துக்கு வருவதற்குள் நான்கைந்து ஜோக்குகள் நம்மைக் கடந்துபோய்விடும்.

இரண்டரை மணி நேரப் படத்தில், முதல் முறை பார்க்கும்போது, 61 இடங்களில் சிரித்திருப்போம். இரண்டாவது முறை பார்க்கும்போது புதிதாக 38 இடங்களில் சிரிப்போம். மூன்றாவது முறை பார்க்கும்போது இன்னும் புதிதாக 27 இடங்களில் சிரித்துக் குலுங்குவோம். ஆக, படம் முழுக்க, சிரிப்பு மத்தாப்புக்களைக் கொளுத்திப் போட்டுக் கொண்டே இருப்பார் கிரேஸி மோகன். இதுதான் கிரேஸி மோகனின் எழுத்து செய்த மேஜிக்.

''படத்துக்கு யார் வசனம் தெரியும்ல’’ என்று ஒரு படம் வெளியாகும் போது ரசிகர்கள் பேசிக்கொண்டது, அந்தக் காலத்திலேயே நடந்திருக்கிறது. , இளங்கோவன் வசனம், கலைஞர் வசனம், ஆரூர்தாஸ் வசனம், ஸ்ரீதர் வசனம், பாலமுருகன் வசனம், பாலசந்தர் வசனம், பாக்யராஜ் வசனம், ஏ.எல்.நாராயணன் வசனம், சுஜாதா வசனம், பாலகுமாரன் வசனம் என்று வசனம் எழுதியவர்களுக்காகவே படம் பார்த்ததெல்லாம் உண்டு. ஒரு காட்சியை வசனங்களையும் வார்த்தை எடக்கு மடக்குகளையும் கொண்டே அந்த வார்த்தைக்குள் ஜிம்மிக்ஸ் வைத்து கலகலப்புகளை அடுக்கிக்கொண்டே போனது, தமிழ் சினிமாவுக்கு புது ஸ்டைல். அதுதான் கிரேஸியின் ஸ்டைல்.

பொறியியல்தான் படித்தார். புகழ் பெற்ற நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனாலும் மனசு முழுக்க எழுத்திலும் அந்த எழுத்து முழுக்க நாடகத்திலும் அந்த நாடகம் முழுக்க காமெடியாகவும் என்று ரகளை பண்ணினார் கிரேஸி மோகன். ஆரம்பகாலத்தில் காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி.சேகருக்கெல்லாம் எழுதிக்கொண்டிருந்தார். பிறகு, ’கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ எனும் நாடகத்தை எழுதினார். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

பார்த்தவர்கள் எல்லோரும் குலுங்கிச் சிரித்தார்கள். அப்படி மனம் விட்டுச் சிரிப்பதற்காகவே மீண்டும் வந்து பார்த்தார்கள். மோகன் ரங்காச்சாரி ஆர்.மோகன் என்றானார். பிறகு யார் மோகன் என்று எல்லோரும் கேட்டார்கள். ஆனந்த விகடனில் பணியாற்றிய வீயெஸ்விதான் இவரிடம் இருந்து நிறைய ஜோக்குகளை வாங்கி பிரசுரித்துக் கொண்டிருந்தார். அவர்தான் ’’இனிமேல் நீங்கள் வெறும் மோகன் இல்லை. கிரேஸி மோகன்’’ என பெயர் சூட்டினார்.

கிரேஸி கிரியேஷன்ஸ் உதயமாயிற்று. இயக்குநர் மெளலியின் சகோதரர் எஸ்.பி. காந்தன் இயக்கினார். இன்று வரைக்கும் இவர்தான் இயக்குநர். கிரேஸி மோகனின் கதை வசனத்துக்கு சகோதரர் பாலாஜி நாயகனானார். மோகன் கிரேஸி மோகன் என்றானது போல், பாலாஜி ‘மாது’ என்ற கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்ததால் மாது பாலாஜி என்றானார்.

இந்த ‘மாது’ பெயர்க்காரணத்துக் காரணம்... இயக்குநர் கே.பாலசந்தர். இவரின் ‘எதிர்நீச்சல்’ படத்தில் நாகேஷ் பெயர் மாது. அந்தத் தாக்கத்தால் தன் நாடகங்களின் கதாநாயகனுக்கு ‘மாது’ எனப் பெயரிட்டார்.

இவரின் கதை, டைமிங் காமெடிகளால் பாலசந்தரையே ஈர்த்தார். வியந்து பாராட்டினார். கிரேஸியை அழைத்தார். இவரின் நாடகம் சினிமாவாயிற்று. அதுதான் ‘பொய்க்கால் குதிரைகள்’.

குரு பாலசந்தரை ஈர்த்தது போலவே சிஷ்யன் கமலையும் கிரேஸியின் எழுத்துகள் ஈர்த்ததில் வியப்பொன்றுமில்லை. ’சத்யா’ படப்பிடிப்பு சுடுகாட்டில் நடந்துகொண்டிருந்தது. அப்போது சாலையில், ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்த கிரேஸி மோகனை கமல் அழைத்தார். ‘அபூர்வ சகோதரர்கள்’ மூலம் வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். அப்பாவைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் மகனின் கதைதான் என்றாலும் படம் முழுக்க தெறித்துச் சிரித்தார்கள் ரசிகர்கள். அந்த வகை வசனங்கள், தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருந்தன. குள்ள கமலுக்காகவும் குட்டிகுட்டி காமெடிகளுக்காகவும் ரிப்பீடட் ஆடியன்ஸ் ஏகத்துக்கும் வந்தார்கள்.

இதையடுத்து சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் கமல் தெலுங்கில் நடித்த படம் ‘இந்திரன் சந்திரன்’ என தமிழில் வந்தது. கிரேஸி மோகன் வசனம் எழுதினார். ‘மகளிர் மட்டும்’, சதிலீலாவதி’ என கமல் தொடர்ந்து கிரேஸி மோகனைப் பயன்படுத்தினார். கமல் கிரேஸி கூட்டணி என்றாலே சிரிப்புக்குப் பஞ்சமில்லை என்பது ஒவ்வொரு படத்திலும் நிரூபணமானது.

அதேசமயத்தில், பிரபுவுக்கு ‘தேடினேன் வந்தது’, ‘சின்ன மாப்ளே’ முதலான படங்களுக்கும் வசனம் எழுதினார் கிரேஸி. இவர் வசனம் எழுதிய படங்களை திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். ஒரு வசனத்துக்கு கைத்தட்டி, விசிலடித்து, குபீரெனச் சிரித்து அடங்குவதற்குள் நான்கு காமெடி சரவெடிகளைப் போட்டுக்கொண்டே போயிருப்பார் கிரேஸி. அதற்காகவே இன்னொரு முறை, இன்னொரு முறை என்று வந்தார்கள் ரசிகர்கள்.

‘அப்பா... இவர் என் கூடப் படிச்சவர்’’

‘நீ ஏன் குறைச்சலாப் படிச்சே?’

***************************

‘’முதலாளி... துப்பாக்கியால சுடப்போறீங்களா? கழுத்தை நெரிச்சுக் கொல்லப்போறீங்களா?’’

‘’ஏன்டா கேக்கறே?’’

‘’கையாலதான் கொல்லப் போறீங்கன்னா துப்பாக்கியை எங்கிட்ட கொடுத்துடுங்க’’

***************************

‘’கபடநாடகவேடதாரி’’

‘’ஏய் அப்பு... இந்த சின்ன உடம்புக்குள்ளேருந்து எவ்ளோ பெரிய வார்த்தை’’

‘’ஆமாம் முதலாளி... அதுவாவே வந்துருச்சு’’

***************************

‘’வயசு என்ன?’’

‘’27 ஆச்சுங்க’’

‘’எது? அந்த 26க்கு அப்புறம் வருமே... அந்த இருபத்தி ஏழா?’’

***************

‘’அய்யா... ராஜா’’

‘’என்னடா இது... மீதி எங்கேடா?’’

‘’இவ்ளோதாங்க கிடைச்சுது’’

*****************************

‘’சின்னவீட்டுக்கு பெரிய காரா?’’

‘’அம்மா கொஞ்சம் பெருசு’’

*******************

இப்படி ‘அபூர்வ சகோதரர்கள்’ என்கிற ஒரு படமே போதும்... காலத்துக்கும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.

சினிமா, பேர்புகழ் என கிடைத்து விட்டதால், நாடகத்தை ஒருபோதும் குறைத்துக்கொள்ளவே இல்லை கிரேஸி மோகன். வரிசையாக நாடகங்கள் போட்டுக் கொண்டே இருந்தார் கிரேஸி.

இவரின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ டிராமாவை எத்தனை முறை அரங்கேற்றியிருப்பார்கள் என்பது அந்த ட்ரூப்புக்கே தெரியாமல் இருக்கலாம். ஆனால் ரசிகர்கள், பால் கணக்கு போல பளிச்சென்று சொன்னார்கள். கிருஷ்ணரை வைத்துக்கொண்டு, கிரேஸி மோகனின் கற்பனை ரகளையைக் காண, அந்தக் கிருஷ்ணரே கிருஷ்ணகான சபாவுக்கு வந்திருப்பார்.

கிரேஸி மோகன் என்றதும் நினைவில் வரும் விஷயங்கள்... மாது, சீனு, ஜானகி. இவரின் எல்லா நாடகங்களிலும் நாயகன் பெயர் மாதுதான். அதேபோல் ஏதேனும் ஒரு கேரக்டருக்கு சீனு எனப் பெயர் வைத்திருப்பார். நாயகியின் பெயர் ஜானகியாகத்தான் இருக்கும். ஜானகி... கிரேஸி மோகனின் டீச்சர். அவர் மேல் கொண்ட அன்பு, மரியாதை. அவர் எழுதிய படங்களிலும் ஜானகி வந்துவிடுவார்.

‘’என் சம்பளத்தை வேணும்னா கொஞ்சம் குறைச்சிக்கங்க. ஆனா ‘ஜானகி’ன்னு பேரை மட்டும் மாத்திடாதீங்க’’ என்று இயக்குநர்களிடம் கோரிக்கை வைப்பாராம் கிரேஸி மோகன்.

ரஜினியின் ‘அருணாசலம்’, சுரேஷ் கிருஷ்ணாவின் ‘ஆஹா’, கமலின் ‘பஞ்ச தந்திரம்’, ‘பம்மல் கே.சம்பந்தம்’, ‘வசூல் ராஜா எம்பிபிஎஸ்’, ’அவ்வை சண்முகி’, ராஜமவுலியின் ‘ஈ’ என பல படங்களுக்கு வசனம் எழுதி, அப்ளாஸ் அள்ளிக்கொண்டே இருந்தார். ‘ஆஹா’ படத்தில் ஒவ்வொரு வசனமும் சிரிப்பு மருந்துதான். ‘ஆஹா’ மட்டுமில்லை... ஒவ்வொரு படத்தின் வசனங்களுமே ‘ஆஹா’ ரகம்தான்.

‘’ஸாரி... அவருக்கு கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி’’

‘’எனக்கு பின்கோபம் ஜாஸ்தி’’

***********************

‘’சமையல் வேலைன்னா மட்டமா? அன்னபூரணின்னுதான் சொல்லுவாங்க. கூல்டிரிங்ஸ்பூரணின்னு சொல்லமாட்டாங்க’’

*********************

’’முதலியார்கிட்ட சொன்னதையே உங்ககிட்டயும் சொல்லிடுறேன்’’

‘’முதலியாரா?’’

‘’முதல்ல யார்கிட்ட என்ன சொன்னேனோ அதையே சொல்லிடுறேன்’’

*****************

‘’உங்களுக்கு ஒரு செல்லம்மா இல்லியா, அதுபோல எனக்கொரு செல்லப்பா இருக்கார்’’

************************

‘’ஒருவேளை உம்புருஷன் வந்துட்டான்னா, உங்களுக்கு டைவர்ஸ் வாங்கிக் குடுத்துடுறேன்’’

‘’உங்களுக்கு வேற வேலையே இல்லியா? உங்க பொண்ணுக்கு டைவர்ஸ் வாங்கிக் கொடுத்தேள். அதுபோதாதா?’’

********************

அச்சுப்பிச்சு காமெடி இருக்காது. ஆபாசம் கொஞ்சம் கூட எட்டிப்பார்க்காது. யாரையும் காயப்படுத்துகிற வார்த்தைகள் துளியும் இடம்பெறாது. ஆனால், வார்த்தைகளில் கபடி விளையாடிக்கொண்டே இருப்பார் கிரேஸி.

‘’ஒரு காட்சிக்கு நாலஞ்சு பக்கம் வசனம் எழுதினாப் போதும். ஆனா நான் நாப்பது அம்பது பக்கத்துக்கு வசனம் எழுதிட்டுப் போய் கமல் சார்கிட்ட கொடுப்பேன். என்ன மோகன் இவ்ளோவா?’ன்னு அதிர்ச்சியாக் கேப்பார் கமல். ‘அன்னப்பறவை தண்ணியை விட்டுட்டு பாலை மட்டும் எடுத்துக்குமே. அதுமாதிரி நீங்க அன்னப்பறவை கமல் சார். எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கோங்க’ன்னு சொல்லிருவேன். என் டிராமா டைரக்டர் காந்தன்கிட்டயும் இப்படித்தான் நிறைய எழுதித்தள்ளிருவேன். அப்படியே கொடுத்துருவேன். அவன் பாத்துப்பான்’’ என்று ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது சொல்லிச் சிரித்தார், வார்த்தைகளில் கபடி விளையாடுகிற வித்தையை வரமாக வாங்கி வந்தவராகத்தான் தெரிந்தார் கிரேஸி.

காமெடி நறுமணம் தெறிக்கிற கிரேஸியை சந்தித்தால், எப்போதும் வெற்றிலை நறுமணம்தான். மனிதர், வெற்றிலை போட்டுக்கொண்டே இருப்பார். இவரின் வெற்றிலையைப் பெட்டியைக் கொண்டுதான், ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் டெல்லி கணேஷின் வெற்றிலைப் பெட்டியை எஸ்.என்.லட்சுமி லபக்கும் காட்சி ஐடியாவே தோன்றியதாம்.

கடகடவென காமெடி கொட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர்தான் கிரேஸி. அதேசமயம் நுணுக்கி நுணுக்கி, பொறுமையாக, ஓவியம் வரைவதிலும் கில்லி. கிரேஸியின் அப்பாவிடம் இருந்துதான் அவருக்கு ஹீயூமர் சென்ஸே வந்திருக்குமோ என்னவோ..! ஒருமுறை கிரேஸி மோகன், மகாலக்ஷ்‌மியின் படத்தை வரைந்து, அப்பாவிடம் காட்ட... அவர் சொன்னார்... ‘நம்ம வீட்டு வேலைக்காரியை அவ்ளோ தத்ரூபமா வரைஞ்சிருக்கியே’ என்று!

கிரேஸி மோகன் வெண்பா எழுதுவதிலும் கில்லாடி. தினமும் கமல் முதலான நெருங்கிய வட்டங்களுக்கு வெண்பாவை அனுப்பிக் கொண்டிருப்பார். ஒவ்வொரு வெண்பாவும், கவிதை மாதிரி, பஞ்ச் வசனங்கள் மாதிரி புதுவிதமாக இருக்கும். கிருஷ்ணர் பற்றியும் ரமண மகரிஷி பற்றியும் வெண்பா எழுதியதைக் கண்டு எல்லோரும் வியந்தார்கள். கலகல டிராமா, சினிமாவுக்கு வசனம் என கலந்துகட்டி ரவுண்டு வந்தவர், கூட்டுக் குடும்பமாகவே கலகலவென வாழ்ந்தார்.

‘’அட... இப்பவும் கூட்டுக்குடும்பமா?’’என்று யாரேனும் கேட்டால். ‘அட நீங்கவேற... இப்பலாம் புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து இருந்தாலே அது கூட்டுக்குடும்பம்னு ஆயிடுத்து’’ என்று வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே, நகைச்சுவையைக் கொட்டுவார்.

கைதூக்கிவிட்ட கமலுக்கு ப்ரியன். ‘அவர் கமல்ஹாசன் அல்ல. கமல்ஹாஸ்யன்’’ என்பார் கிரேஸி. கிரேஸிக்கு கோபம் வந்தால் அவரின் ட்ரூப்புக்கு கொண்டாட்டம்தான். ஏன் தெரியுமா? யாரையும் கடிந்துகொள்ளமாட்டார். சுள்ளென்று பேசமாட்டார். பதிலுக்கு நாலு காமெடிக்குப் பதிலாக நாற்பது காமெடிகளை, காட்சிகளை, வசனங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். இதுவும் கிரேஸி ஸ்டைல்தான். அவரின் வாழ்க்கை ஸ்டைலும் கூட!

’வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படமெல்லாம் நம் துக்கநிவாரணிக்கான மருந்துக் காமெடிகள்.

‘என்னய்யா இது... திறந்த வீட்ல எச்சக்கலை நுழைஞ்ச மாதிரி...’’

‘’ஏய்... யாரைப் பாத்து எச்சக்கலை நாய்ங்கறே’’

‘’அய்யோ.. எச்சக்கலைன்னா நாய்தானா. எச்சக்கலை சிங்கம், எச்சக்கலை புலி’’

கிரேஸி மோகனைச் சொல்ல, எத்தனையோ படங்கள் இருக்கின்றன. அந்தப் படங்களில் இருந்து நான் நாற்பது சொன்னால், நீங்கள் நானூறு சொல்லுவீர்கள். ‘அந்தப் படத்துல அந்த சீன்ல...’ என்று அப்படியே சொல்லிக் கொண்டிருக்க, தன் எழுத்துக்களைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார் கிரேஸி மோகன்.

ஒருமுறை கமலுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய உறவுக்காரர்கள், இவருடைய உறவுக்காரர்கள் என்றெல்லாம் பேச்சு வளர்ந்துகொண்டே போனதாம். ஒருகட்டத்தில் கிரேஸி மோகன் பதட்டமும் தவிப்புமாக தடக்கென்று எழுந்து நின்றார். ‘’என்னாச்சு மோகன்’’ என்றார் கமல். ‘’அப்படி சுத்தி இப்படி சுத்தின்னு பாத்தா, நாம ஒருவகைல தூரத்துச் சொந்தம் போலயே கமல் சார். அப்படீனா நாம ஃப்ரண்ட்ஸ் இல்லையா?’’ என்று கிரேஸி மோகன் கேட்டதை, கமல் ஒரு விழாவில் சொல்லும்போது, கமலின் குரலே உடைந்துவிட்டது.

1952ம் அண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்த கிரேஸி மோகன், 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி காலமானார். இன்று அவருடைய 70வது பிறந்தநாள். அலட்டலோ கர்வமோ இல்லாமல், வசனங்களில் புதுபாணியைக் கொடுத்த கிரேஸி மோகன் எழுத்துக்கு, எத்தனை நூற்றாண்டுகளானாலும் வயதே ஆகாது. ஏதோவொரு விரக்தியில், மன அழுத்தத்தில், சோகத்தில், சொல்லமுடியாத வேதனையில் உழன்று தவிப்பவர்கள், ஏதோ ஒரு சேனலில் கிரேஸிமோகன் வசனம் எழுதிய படங்கள் பார்த்துவிட்டால், தங்கள் துக்கங்களை மட்டுமல்ல.... தங்களையே மறந்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். கிரேஸி மோகனுக்கு முன்னரும் சரி... பிறகும் சரி... கிரேஸியின் இடம் காலியாக, அப்படியேதான் இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in