ரயிலில் தொடங்கி ராடனில் தொடரும் ராதிகாவின் பயணம்!

44 ஆண்டு பயணத்துக்கு ஒரு பூச்செண்டு கைகுலுக்கல்
நடிகை ராதிகா
நடிகை ராதிகா

திரைப்பட இயக்குநர்களின் திறமை, திரைக்கதை, வசனம் உள்ளிட்ட அம்சங்களைக் கையாள்வதை மட்டும் சார்ந்ததல்ல. தகுந்த நடிகர் / நடிகைகளை அந்தந்தப் பாத்திரங்களுக்காகத் தேர்வுசெய்வதும், அவர்களிடமிருந்து சிறந்த நடிப்புத் திறமையை வெளிக்கொண்டுவருவதும் ஒரு இயக்குநரின் திறமைக்குச் சான்றாக அமையும். அதுவும், புதுமுகங்களை அறிமுகப்படுத்தி, பிற்காலத்தில் அவர்கள் தங்களின் தனித்திறமையால் ஜொலிப்பதும் ஜெயிப்பதும் லேசுப்பட்ட காரியமல்ல. அப்படி தலைமுறை கடந்தும் நடிப்பில் மின்னக்கூடிய நடிகையரைத் தேர்வு செய்வதில் சில இயக்குநர்கள் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் ஒருவர். அவர் அறிமுகப்படுத்திய ’ஆர்’ வரிசை நடிகையரில் மிக மிக முக்கியமானவர் ராதிகா.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில்தான் அறிமுகமானார். நடிப்பதற்கு சான்ஸ் கேட்டு அலைந்துகொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், பாரதிராஜாவே வீட்டு வாசற்கதவைத் தட்டி நடிக்க அழைத்தார்.

கால்மேல் கால் போட்டுக்கொண்டு, நுனி நாக்கு ஆங்கிலத்தில், ‘எனக்கு நடிப்பில் விருப்பமில்லை’ என்று மறுத்துவிட்டு, பின் அம்மாவின் விருப்பத்துக்காக நடிக்க ஒப்புக்கொண்ட ராதிகா, முதல் படத்திலேயே ‘பாஞ்சாலி’ எனும் தெக்கத்திக் கிராமத்துப் பெண்ணாகவே மாறியதுதான், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முதல் மேஜிக்.

கொஞ்சு தமிழ் பேசுகிற நடிகை என்று சரோஜாதேவியைச் சொல்லுவார்கள். அதற்குப் பிறகு, ‘பாஞ்சாலி’யாக ராதிகா பேசியதும் கொஞ்சு தமிழாகவும் வெள்ளந்தித் தமிழாகவும் இருந்தன.

பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ படத்துக்குப் பிறகு இரண்டாவது படமாக அமைந்த ‘கிழக்கே போகும் ரயில்’ மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. முதல் படத்தில், கமல், ரஜினி, ஸ்ரீதேவி என்று பிரபலங்களைக் கொண்டு படமெடுத்தவர், இரண்டாவது படத்திலேயே சுதாகரையும் ராதிகாவையும் அறிமுகப்படுத்தினார். ‘ஆர்’ வரிசையில் பல நடிகைகளை பாரதிராஜா அறிமுகப்படுத்தியிருந்தாலும் அவர்களில் மிகப்பெரிய உயரம் தொட்டவர்களில் முதன்மையானவர் ராதிகா. இன்னொரு விஷயம்... பாரதிராஜா அறிமுகப்படுத்திய முதல் ஹீரோயினும் இவர்தான்.

ராதிகாவின் நடிப்பில் ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ என்று அடுத்தடுத்து படங்கள் வந்தன. அந்தப் படங்களிலெல்லாம் அவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது. மிகப்பெரிய நடிப்பு ராட்சஷியாக கொஞ்சம்கொஞ்சமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார் ராதிகா.

சுதாகர் - ராதிகா இணையாக நடித்து ஏராளமான படங்கள் வரிசைகட்டி வந்தன.

எழுபதுகளின் இறுதியில் திரையுலகிற்கு வந்த ராதிகா, எண்பதுகளில் எல்லா ஹீரோக்களுடனும் நாயகியாக நடித்தார். மோகன் - ராதிகா, நிழல்கள் ரவி - ராதிகா, ரஜினி - ராதிகா, கமல் - ராதிகா, சத்யராஜ் - ராதிகா, விஜயகாந்த் - ராதிகா என்று மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அத்தனை பேருடன் எத்தனையோ படங்களில் நடித்தாலும், சும்மா வந்துபோகிற கதாபாத்திரங்களாக அமையவில்லை ராதிகாவுக்கு. நடித்த அத்தனை பாத்திரங்களிலும் தன் அற்புதத் திறமையை வெளிப்படுத்தினார்.

‘பிள்ளை நிலா’ படத்தில் இவரின் நடிப்பு ஆகச்சிறந்ததாக இருக்கும். ‘தெற்கத்திக்கள்ளன்’ படத்தில் மிக உயிரோட்டமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் . ’ரெட்டைவால் குருவி’யையும் பாலுமகேந்திரா இவருக்கு அளித்த கதாபாத்திரத்தையும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிடமுடியாது. ‘கண்ணன் வந்து பாடுகின்றான்’ என்ற பாடலுக்கு ராதிகா மைக் பிடிக்கிற லாவகமும் லேசாக ஸ்டெப் போட்டு ஸ்டைலாக ஆடுவதும் இன்றைக்கும் சிலாகிக்கப்படுகிறது. படம் முழுக்க நகைச்சுவையில் பிரமாதப்படுத்தியிருப்பார்.

ரஜினியுடன் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தின் ஆரம்பக் காட்சிகளில் சாதாரணமாக நடித்துக்கொண்டே வருபவர், ஒருகட்டத்துக்குப் பிறகு கொஞ்சம்கொஞ்சமாக ரஜினி என்பவருக்குள் இருக்கிற கெட்ட விஷயங்களை தன் ஆளுமையால் அகற்றி, ‘நல்லவனுக்கு நல்லவன்’ ஆக்குகிற வித்தையை ஒரு மாயாஜாலம் போல் நிகழ்த்திக்காட்டியிருப்பார்.

கமலுடன் இரண்டே படங்கள். ஒன்று நேரடி தமிழ்ப்படம். ‘பேர் சொல்லும் பிள்ளை’. செட்டிநாட்டு பாஷையும் எதுவுமே தெரியாத வெள்ளந்திப் பேச்சுமாகக் கலக்கியிருப்பார். இன்னொரு படம், தெலுங்கில் ‘சுவாதி முத்யம்’ என்று வந்து தமிழில் மலர்ந்த ‘சிப்பிக்குள் முத்து’. கே.விஸ்வநாத் இயக்கத்தில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி பிரமிக்க வைத்திருப்பார் ராதிகா.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர், பின்னாளில் ஆளுமை மிக்க நடிகையாகவும் தன்னை வார்த்து வளர்த்து உயரத்தில் நின்றார்.

‘சிப்பிக்குள் முத்து’ திரைப்படத்தில் கமலுடன்
‘சிப்பிக்குள் முத்து’ திரைப்படத்தில் கமலுடன்

‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகம் செய்த பாரதிராஜாவே, ‘கிழக்குச் சீமையிலே’ மூலம் இன்னொரு பாய்ச்சலை ராதிகாவைப் பாயச் செய்தார். தங்கையாகவே வாழ்ந்திருப்பார் ராதிகா. கொசுவம் வைத்த புடவையும் பெரிய நெற்றிப் பொட்டுமாய், மதுரை பாஷையைப் பேசி நடித்ததைப் பார்க்கிற எவரும், இவர் லண்டனில் படித்தவர், வளர்ந்தவர் என்று சொன்னால் நம்ப மறுப்பார்கள்.

இயக்குநர் மனோபாலா மீது மிகுந்த பிரியம் கொண்டவர். அதனால்தான் எப்போது கேட்டாலும் அவருக்கு கால்ஷீட் கொடுத்துவிடுவார். கலைஞரின் வசனத்தில், ‘பாசப்பறவைகள்’ இவரின் நடிப்பின் உன்னதத்தை இன்னொரு முறை எடுத்துக்காட்டியது.

விஜய்காந்த் - ராதிகா
விஜய்காந்த் - ராதிகா

‘ராதிகா ஹீரோயினா நடிக்கறதா இருந்தா, அவங்களுக்கு நடிக்கறதுக்கு நல்ல ஸ்கோப் கொடுக்கணும்பா’ என்று அதற்காகவே கதையில் சில காட்சிகளை திருத்தி, நீட்டித்துக் கொடுத்த இயக்குநர்கள், கதாசிரியர்கள் இருக்கிறார்கள்.

இயக்குநர் மகேந்திரனின் நாயகிகள் தனி விதம். அதிகம் பேசாமல், பார்வையால், முகபாவனைகளால், சின்னதான நடையில்கூட கதாபாத்திரத் தன்மையை வெளிப்படுத்திவிடுவார்கள்.

‘கிழக்குச் சீமையிலே’
‘கிழக்குச் சீமையிலே’

பாரதிராஜா அறிமுகப்படுத்திய வடிவுக்கரசியையும் ராதிகாவையும் தனது ‘மெட்டி’ படத்தில் அப்படிப் பயன்படுத்தியிருப்பார் மகேந்திரன். “அம்மா செத்துப் போற மாதிரி சீன். அதுல பெரிய அழுகையோட, கதறி நடிக்கணும் ராதிகா. அவ நடிப்புல ராட்சஷி. அந்த சீன்ல அவளோட நடிப்பைப் பாத்துட்டு, அழுததைப் பாத்துட்டு செட்ல இருந்த நான் உட்பட எல்லாருமே அழுதுட்டோம். அவ எனக்கு நல்ல தோழி. அதைவிட முக்கியமா மிகச்சிறந்த நடிகை” என்று வடிவுக்கரசி மனம் திறந்து ராதிகாவைப் பாராட்டினார்.

எத்தனையோ இயக்குநர்கள் படங்களில் நடித்தாலும் பாலசந்தர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்கிற ஏக்கம் ராதிகாவுக்கு இப்போதும் உண்டு.

தர்மதேவதை
தர்மதேவதை

எனினும் பாலசந்தரின் சீடர்களின் படங்களில் நடித்து அந்த வருத்தத்தை ஓரளவு போக்கிக்கொண்டார். சரண் இயக்கத்தில் வந்த ‘அமர்க்களம்’ படத்தில் ரகுவரனின் மனைவியாக சிறப்பாக நடித்திருப்பார். இயக்குநர் வஸந்தின் ‘கேளடி கண்மணி’யில் ராதிகாவைத் தவிர அந்தக் கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும் விளையாட்டுக்குக்கூட நினைத்துப் பார்க்க முடியாது.

‘ஜீன்ஸ்’ படத்தில் கொடுமைக்கார, அதிகார குணம் கொண்ட மனைவியாக நடித்து கலங்கடிப்பார். உடன் நடிப்பவர்கள் யார், இயக்குநர் யார், இசையமைப்பாளர் யார், பட்ஜெட் எவ்வளவு என்பவையெல்லாம் தாண்டி, ‘நமக்கு என்ன கதாபாத்திரம், அதில் புதிய பரிணாமங்கள் காட்ட முடியுமா’ என்பவற்றை மட்டுமே பார்ப்பவராகத்தான் ராதிகாவின் திரையாளுமையை உணர முடிகிறது.

திரையுலகில் ‘மார்க்கெட் வேல்யூ’ என்கிற வார்த்தை ரொம்பவே பிரபலம். ‘மார்க்கெட்’ குறைந்த பிறகு சின்னத்திரைக்கு வரும் இயக்குநர்களும் நடிக நடிகையரும் ஏராளம்.

‘சித்தி’ சீரியலில்...
‘சித்தி’ சீரியலில்...

ஆனால் வெற்றிப் படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும்போதே, கே.பாலசந்தர் ‘மின்பிம்பங்கள்’ தொடங்கி டிவி சீரியல்கள் பண்ணியது போல, ராடன் மீடியாவை ராதிகா தொடங்கினார். ’சித்தி’ தொடர் பண்ணினார். ஒருகாலத்தில் ‘ரயில் ராதிகா’ என்று அழைக்கப்பட்டவரை இந்தத் தொடருக்குப் பிறகு, சித்தியாகவே பார்த்தார்கள் ரசிகர்கள். இதன் பின்னர் பல தொடர்கள். எல்லாமே வெற்றி. ஒரு தயாரிப்பாளராகவும் ராதிகா ஜெயித்துக்கொண்டிருக்கிற இடம் இது!

கமல் என்ன நினைத்தாரோ... ‘விக்ரம்’ (அந்தக் கால விக்ரம்) படத்தில் லிஸ்ஸிக்கு ராதிகாவைக் குரல் கொடுக்க வைத்திருப்பார். அதேபோல, பாரதிராஜாவும் ‘முதல் மரியாதை’யில் ராதாவுக்குக் குரல் கொடுக்கவைத்திருப்பார். ‘மீனு மீனேய்’ என்பதும் அந்த அக்மார்க் சிரிப்பும் ராதிகாவின் குரலை நமக்கு மிக எளிதாக உணர்த்திவிடும். அந்தக் குரலுக்குள் நடிப்பைப் பதுக்கிவைப்பதில் கில்லாடி நடிகை அவர்!

இன்றைக்கு இருக்கிற இயக்குநர்களும் ராதிகாவின் திறமைக்குத் தீனிபோடும் கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்கள். ‘தர்மதுரை’ மாதிரியான படங்களில் அவரின் நடிப்பு தனித்துவம் மிக்கதாக ஜொலிக்கும்.

தர்மதுரை
தர்மதுரை

கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து உலவவிடுகிற ஜாலம், ராதிகா ஸ்டைல். இவரின் அப்பாவான எம்.ஆர்.ராதா ஒரு ஃப்ரேமில் ஏழெட்டு நடிகர்களுடன் நடிக்கும்போது, எல்லோரையும் தன் நடிப்பால் தூக்கிச்சாப்பிட்டு விடுவார் என்பார்கள். அப்பாவுக்குத் தப்பாத மகளாக ராதிகா ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

1978 ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியானது ‘கிழக்கே போகும் ரயில்’. அன்று ரயிலில் ஏறிய ராதிகாவின் திரைப் பயணம் சாட்டிலைட் வழியே தொலைக்காட்சி, டிஜிட்டல் வழியே திரைப்படங்கள் என நீண்டுகொண்டே இருக்கிறது. 44 வருடப் பயணத்தில்... ராதிகா எனும் நடிகை, தயாரிப்பாளர், ஆளுமை மிக்க மனுஷி என்று தொட்ட அனைத்திலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவே இல்லை.

எத்தனையோ விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார். வெள்ளித்திரையிலோ... சின்னத்திரையிலோ தோன்றுகிறபோதெல்லாம் ‘அட... நம்ம ராதிகா’ என்று தமிழக மக்களை நினைக்கச் செய்திருப்பதுதான் ராதிகாவின் மிக முக்கியமான சாதனை; விருது; பாராட்டு!

ரயிலில் தொடங்கிய ராதிகாவின் பயணம் இன்னும் சிறக்க வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.