
இன்றைக்கு ஒரு படத்தை வருடக்கணக்கில் எடுக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு படம் கொடுக்கிற இயக்குநர்கள் குறைந்துவிட்டார்கள். ஆனால், ஒரே வருடத்தில் ஒன்றிரண்டு படங்களைக் கொடுத்த இயக்குநர்களும், இரண்டு மூன்று படங்களைக் கொடுத்த இயக்குநர்களும் இருக்கிறார்கள். வெறுமனே எண்ணிக்கையில் மட்டுமல்ல, வெற்றிக் கணக்கிலும் முத்திரை பதித்திருக்கிறார்கள். 1981-ல் பாக்யராஜ் ஒரே வருடத்தில் நான்கு படங்களை இயக்கி நாயகனாகவும் நடித்தார்.
பாரதிராஜாவின் முதல் படமான ‘16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பாக்யராஜ், பாரதிராஜாவின் முதல் சிஷ்யன் என்று பேரெடுத்தார். 1977-ல் வெளியானது ‘16 வயதினிலே’ திரைப்படம். இதன் பிறகு சில படங்களில் அவருடன் பணியாற்றினார். 1979-ல் முதல் படமாக ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தை இயக்கினார். அடுத்த ஆண்டில். இரண்டாவது படமாக ‘ஒரு கை ஓசை’ படத்தைத் தயாரித்து இயக்கினார்.
1981-ம் ஆண்டு, பாக்யராஜின் திரையுலகப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டு. அவருக்கு முதன்முதலாக பிரம்மாண்ட வெற்றியையும் பெண் ரசிகைகளையும் கொடுத்த ‘மெளன கீதங்கள்’ படம் இந்த ஆண்டுதான் வெளியானது. நாவலைப் படமாக்குகிற முயற்சிக்கு மாறாக, ‘மெளன கீதங்கள்’ படத்தின் கதைகளையும் காட்சிகளையும் வசனங்களையும் அப்படியே ஒரு வாரப் பத்திரிகையில் தொடர்கதை போல் வெளியிட்டு, பின்னர் படத்தை ரிலீஸ் செய்தார் பாக்யராஜ்.
1981 ஜனவரி 23-ம் தேதி வெளியான ‘மெளன கீதங்கள்’ திரையிட்ட தியேட்டர்களில்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. படம் பார்க்க டிக்கெட் எடுத்து தியேட்டருக்குள் சென்றவர்களின் எண்ணிக்கையை விட, டிக்கெட் கிடைக்காமல் திரும்பச்சென்றவர்களே அதிகம். இதை ஒவ்வொரு காட்சியிலும் நேரில் பார்த்து பிரமித்துப் போனார்கள் விநியோகஸ்தர்கள். ‘மூணு தடவை பாத்துட்டேன். நாலாவது தடவை பாக்கலாம்னு வந்தா, டிக்கெட் கிடைக்கலியே...’ என்று சொன்னவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்தான்!
‘மெளன கீதங்கள்’ ஹவுஸ்புல்லாக 60 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கும் போதே, அடுத்த படமான ‘இன்று போய் நாளை வா’ (மார்ச் 27-ம் தேதி) வெளியாகிவிட்டது. அந்தப் படத்தில் சரிதா. இந்தப் படத்தில் ராதிகா. அந்தப் படம் கணவன், மனைவி, குடும்பம் சப்ஜெக்ட். இந்தப் படம், மூன்று நண்பர்கள், காதல், காமெடி சப்ஜெக்ட். ‘மெளன கீதங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசை. ‘இன்று போய் நாளை வா’ படத்துக்கு இளையராஜா இசை.
’மெளன கீதங்கள்’ பெண் ரசிகைகளைப் பாக்யராஜுக்கு கொடுத்தது. ‘இன்று போய் நாளை வா’ ஆண் ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை அடுத்து, எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான தூயவனுக்காக ‘விடியும் வரை காத்திரு’ படத்தை இயக்கி நடித்தார். இது மே மாதம் 8-ம் தேதி வெளியானது. அதாவது ‘இன்று போய் நாளை வா’ வெளியாகி, 40 நாட்களைக் கடந்த நிலையில் ‘விடியும் வரை காத்திரு’ வெளியானது. இதில் சந்திரகலா நாயகி.
‘விடியும் வரை காத்திரு’ நல்ல படம்தான். திரைக்கதையில் ஜாலம் காட்டியிருப்பார். ஆனாலும் நெகட்டிவ் கேரக்டரில் பாக்யராஜை பெண்கள் ரசிக்கவில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு, மனைவியையே கொல்லும் கதாபாத்திரத்தில் பாக்யராஜை ஏற்கும் மனம் ரசிகைகளுக்கு இல்லை. படம் சுமாரான வெற்றியையே பெற்றது. இளையராஜா இசையமைத்திருந்தார்.
ஜனவரியில் ‘மெளன கீதங்கள்’, மார்ச் மாதத்தில் ‘இன்று போய் நாளை வா’, மே மாதத்தில் ‘விடியும் வரை காத்திரு’ என்று வெளியான நிலையில், அந்த வருடம் அக்டோபர் 26-ம் தேதி தீபாவளி ரிலீஸ் படமாக ‘அந்த ஏழு நாட்கள்’ வெளியானது. ’மெளன கீதங்கள்’ அடைந்த வெற்றியைவிட மும்மடங்கு வெற்றி, படத்துக்குக் கிடைத்தது. எம்எஸ்வி இசையில் எல்லா பாடல்களும் ஹிட்டடித்தன. பாலக்காட்டு மாதவனை இன்றளவும் மறக்கவில்லை ரசிகர்கள். இதில் நாயகி அம்பிகா. அவரின் கேரக்டர் பெயரான வசந்தியும் ‘கல்யாண பரிசு’ வசந்தி போல் மறக்க முடியாத கதாபாத்திரமானது தனிக்கதை.
பாக்யராஜின் திரைக்கதை ஜாலம் ‘மெளன கீதங்கள்’ படத்திலேயே தெரிந்ததுதான் என்றாலும் ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் அவர் கதை சொல்லும் உத்தியும் க்ளைமாக்ஸ் காட்சியின் இயல்பும் ரசிகர்களை எழுந்து நின்று கைத்தட்ட வைத்தன.
1979-ல் இயக்குநராக அறிமுகமாகி ஒரு படம், 1980-ம் ஆண்டில் ஒரு படம், 1981-ம் ஆண்டில் 4 படங்கள்... அந்த நான்கில் மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன என்பது பாக்யராஜின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான மைல்கல். தமிழ் சினிமாவின் சரித்திரப் பதிவுகளில் ஒன்று என்றும் சொல்லலாம்!
திரைக்கதை மன்னன், திரைக்கதை ராஜா என்றெல்லாம் இன்று வரை போற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கும் பாக்யராஜ், ஒரே வருடத்தில் நான்கு படங்களை இயக்கி, வெற்றிப்பட இயக்குநர் வரிசையில் இடம்பிடித்தார். அடுத்தடுத்து பல படங்களைத் தந்து வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார்!