ஏழைகளுக்கு வாரிக்கொடுத்த என்.எஸ்.கே!

இன்று கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள்
ஏழைகளுக்கு வாரிக்கொடுத்த என்.எஸ்.கே!
என்.எஸ்.கிருஷ்ணன்

தன் நகைச்சுவைத்திறனால், அன்றைய காலத்தில் மக்களிடையே புரையோடிக் கிடந்த மூட நம்பிக்கைகளை திரைப்படங்களின் வாயிலாக விரட்டியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். திரைப்பங்களிப்பைத் தாண்டியும் கொடை வள்ளல், காந்தியப் பற்றாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள்!

நாகர்கோவில் சுடலையாண்டிப்பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தமிழ்த் திரையுலகில் நகைச்சுவைக்கென தனிப் பாதையை முதன்முதலில் உருவாக்கிய வித்தகன். நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில், தனது மனைவியின் பெயரால் என்எஸ்கே கட்டிய ‘மதுர பவனம்’ கம்பீரம் குறையாமல் நின்றாலும் பராமரிக்க ஆளில்லாத நிலையில் இருக்கிறது!

ஒருகாலத்தில், ஒட்டுமொத்தக் குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு பார்த்த வீடுதான் இந்த மதுர பவனம். மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடு இது என்றுகூட சொல்வார்கள். மொசைக் தரைபோட்ட இந்த வீட்டைப் பார்க்க மாட்டுவண்டி கட்டிவந்தவர்களும் உண்டு. நாடகக் கொட்டகையில் சோடா விற்பனை, டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கிப்போடுவது என சகல வேலையும் பார்த்த என்எஸ்கே, வில்லிசைக் கலைஞராக கலையுலக வாழ்வைத் தொடங்கியவர்.

மதுர பவனம்
மதுர பவனம்

1908-ம் ஆண்டு இதேநாளில் பிறந்த என்.எஸ்.கே, 1936-ல் சதிலீலாவதி மூலம் திரைத் துறைக்கு அறிமுகமானார். மூடநம்பிக்கைகள் புரையோடிய அன்றைய காலத்திலேயே, திரைப்படங்களில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன என்எஸ்கே, தன் மனைவி மதுரத்தின் பெயரில் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இந்த வீட்டில் 12 நாட்கள் தங்கியிருந்து, நாகர்கோவிலில் நடந்த ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தைப் பார்த்தாராம். அண்ணாவும் இந்தவீட்டில் தங்கியுள்ளார். அண்ணா ஓய்வெடுத்த கட்டிலை இன்றும் பொக்கிஷமாய் பராமரிக்கின்றனர் கலைவாணர் வாரிசுகள். பம்மல் கே.சம்பந்த முதலியார்தான் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ‘கலைவாணர்’ என்ற பட்டம் கொடுத்தவர்.

நாகர்கோவிலில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை
நாகர்கோவிலில் உள்ள என்.எஸ்.கிருஷ்ணன் சிலை

49 ஆண்டுகளே வாழ்ந்த என்.எஸ்.கேவுக்கு காந்தியின் மீது பற்று அதிகம். காந்தியின் மறைவு செய்தியறிந்து 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தவர் என்எஸ்கே. நாகர்கோவில் மாநகராட்சிப் பூங்காவில், தனது சொந்த செலவில் காந்திக்கு நினைவு ஸ்தூபியும் எழுப்பியுள்ளார் என்எஸ்கே. உலகிலேயே இரு நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று, சார்லி சாப்ளினுக்கு. மற்றொன்று, என்.எஸ்.கிருஷ்ணனுக்கு. நாகர்கோவில் மணிமேடைப் பகுதியில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு எம்ஜிஆரால் திறந்துவைக்கப்பட்ட அந்தச் சிலை, வரலாறாக அவர் பெயரைச் சுமந்து நிற்கிறது

வீட்டின் உள்புறத் தோற்றம்
வீட்டின் உள்புறத் தோற்றம்

என்எஸ்கேவின் மதுர பவனத்தில், அவர் முகம் பார்த்த கண்ணாடி, அவர் பயன்படுத்திய பொருட்களை இப்போதும் பார்க்கலாம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட சித்திரை திருநாள் மகாராஜாவே, விரும்பி என்.எஸ்.கேயுடன் படம்பிடித்துக் கொண்ட வரலாறும் உண்டு. குமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடும், மன்னர் ஏகபோக அதிகாரத்துடனும் இருந்த காலம் அது. அந்தப் படமும் இந்த வீட்டின் நடுக்கூடத்தில், அந்தக் கலைஞனின் வலிமையை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

தனது வருமானத்தின் பெரும்பகுதியை கொடையாகவே கொடுத்தவர் என்எஸ்கே. அடுத்தடுத்து வந்த அவரது தலைமுறையினர் போதிய வருமானம் இல்லாமல் மதுர பவனம் வீட்டை பிரித்துப் பிரித்து வாடகைக்கு விட்டுள்ளனர். கலைவாணர் வீட்டில் இருந்தாலும், படப்பிடிப்பில் இருந்தாலும் நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லம் தர்மசாலையாகவே செயல்பட்டது. இப்போதும்கூட நாகர்கோவிலின் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்றாகவே இருக்கிறது இந்த ‘மதுர பவனம்’. தன் வாழ்வின் கடைசி நிமிடம் வரையிலும், கொலை வழக்கு ஒன்றில் சிக்கி மிகவும் பொருளாதாரம் நலிவுற்ற நிலையிலும் தன்னைத் தேடிவருபவர்களுக்கு கலைவாணர் உதவி செய்வதை நிறுத்தாமல் தொடர்ந்தார்.

கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் பிறந்து, அதுவும் அன்றைய காலத்தில் தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்தப் பகுதியில் இருந்து, (1956-ல் தான் குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்தது!) அன்றைய நாளில் பக்கத்து மாநிலமாக உணரப்பட்ட சென்னைக்குப் போய் தமிழ்த் திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சாதித்தார். அதற்கு, திராவிட இயக்கத்தின் மீது கலைவாணருக்கு இருந்த பிடிப்பும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.