சிரிப்பை விதைத்து சிந்தனையை வளர்த்த சின்னக் கலைவாணர்!

ஏப்ரல் 17: நடிகர் விவேக் நினைவுதினம்
சிரிப்பை விதைத்து சிந்தனையை வளர்த்த சின்னக் கலைவாணர்!

நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாது, மூட நம்பிக்கைக்கு எதிராக சாட்டை சுழற்றுவது தொடங்கி அப்துல் கலாமின் கனவுகளைச் சுமந்ததுவரை நடிகர் விவேக்கின் சமூக பங்களிப்பு அதிகம். இன்று அவரது நினைவுநாள்.

தமிழ்த் திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பின்பு சமூகப் பங்களிப்புள்ள நகைச்சுவையைத் தமிழ் சமூகத்திற்கு வாரி வழங்கியவர் நடிகர் விவேக். அதனாலேயே ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படுகிறார். மூடநம்பிக்கைகளை அரசியல் நையாண்டியோடு விமர்சிக்கும் விவேக்கின் பாங்கு தனித்திறன் வாய்ந்தது.

கோவில்பட்டியில் பிறந்த நடிகர் விவேக் சிறுவயதிலேயே பரதநாட்டியத்தில் மிகவும் தேர்ந்தவராக இருந்தார். ஆரம்பத்தில் மதுரை அஞ்சலகத்தில் பணியாற்றிய விவேக், நடனப் போட்டிக்காக சென்னை சென்றபோதுதான் இயக்குநர் பாலசந்தரின் அறிமுகம் கிடைத்தது. அதன்மூலம் 1987-ம் ஆண்டு ‘மனதில் உறுதி வேண்டும்’ எனும் படத்தில் நடித்தார். தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பணி கிடைக்க கோயம்பேட்டில் குடியேறியவருக்கு ஒருகட்டத்தில் கோடம்பாக்கம் நிரந்தர முகவரி ஆனது.

நான்கு முறை பிலிம்பேர் விருது, நான்கு முறை தமிழக அரசு விருதினையும் பெற்றிருக்கும் விவேக் திரைப்படங்களையெல்லாம் தாண்டி சமூகத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை ஆற்றினார். அப்துல் கலாமின் கனவுகளை நனவாக கடும் சிரத்தை எடுத்தார். லட்சம் மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாகக் கொண்டு பயணித்தார்.

தன் திரைப்படங்களின் மூலம் விழிப்புணர்வூட்டுவது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் அரசின் டெங்கு, சிக்குன்குனியா, கரோனா விழிப்புணர்வு விளம்பரங்களிலும் இலவசமாகவே நடித்துக் கொடுத்தார். கடைசியாக கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பணியிலும் ஈடுபட்டார்.

விவேக்கின் நினைவுநாளில் அவரது சிறப்புகளை நினைவுகூர்ந்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்திவருகிறார்கள் ரசிகர்கள்.

Related Stories

No stories found.