ரசனைக்கார தயாரிப்பாளர் கே.பாலாஜி!

பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு
ரசனைக்கார தயாரிப்பாளர் கே.பாலாஜி!

நடிகர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைல் உண்டு. மேனரிஸம் உண்டு. அப்படி சில படங்களில், தனக்கென தனி மேனரிஸம் வைத்துக்கொண்டு ஈர்த்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ‘இந்தக் கேரக்டரை இவர்கிட்ட கொடுத்தாத்தான் நல்லாருக்கும்’ என்று சொல்லுமளவுக்கு அவர் கவனம் பெற்றதில்லை. ஆனால் ‘இந்தக் கேரக்டரை மனுஷன் ரொம்ப நல்லா செஞ்சிருக்காருப்பா’ என்று சொல்லாதவர்களே இல்லை. அந்த நடிகரை எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டமெல்லாம் அவருக்கு இல்லை. அதேசமயம், அவர் தயாரித்த படங்களுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக, பிரம்மாண்டமாக, பிரமாதமாக இருந்ததால், எல்லோரும் அவர் தயாரித்த படங்களுக்கும் ரசிகர்களானார்கள். அப்படியொரு நடிகர்... தயாரிப்பாளர்... கே.பாலாஜி!

சாதாரணமானதொரு வாழ்க்கையைத்தான் தொடக்கக் காலத்தில் கே.பாலாஜியும் கொண்டிருந்தார். குடும்பத்தில் எல்லோருமே படித்தவர்கள். இவரும் தான். ’நரசுஸ் ஸ்டூடியோ’வில் தயாரிப்பு நிர்வாகியாக தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் கே.பாலாஜி.

கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். எஸ்.எஸ்.வாசன் தயாரித்த ‘அவ்வையார்’ படம்தான் அவர் நடித்த முதல் படம். ’மனமுள்ள மணதாரம்’ முதலான ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இயக்குநர் ஸ்ரீதரின் ‘போலீஸ்காரன் மகள்’, ஏ.பீம்சிங்கின் ‘படித்தால் மட்டும் போதுமா’, பி.ஆர்.பந்துலுவின் ‘பலே பாண்டியா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ‘தில்லானா மோகனாம்பாள்’ மைனர் கேரக்டரில், முதல் பாதியில் ரசிகர்களால் வெறுக்கப்படும் மனிதராக வந்து பின்னர் திருந்தி கண்ணியமான கனவானாவார். அந்த ரசமாற்றம் இயல்பாக அரங்கேறும். ‘பட்டணத்தில் பூதம்’ வில்லன் கேரக்டரில் தோள் குலுக்குகிற மேனரிஸத்திலும் அசத்தியிருப்பார். அதுதான் பாலாஜி!

தயாரிப்பு நிர்வாகியாக வேலை பார்த்தவருக்கு, நடிப்பைவிட படத்தயாரிப்பு மீதுதான் அதிக விருப்பம். ‘சாந்த் அவுர் சூரஜ்’ என்ற இந்திப் படத்தை தமிழில் ‘அண்ணாவின் ஆசை’ (1966) என்ற பெயரில் ஜெமினி கணேசன், சாவித்திரி இருவரையும் வைத்து தயாரித்தார். இதுதான் கே.பாலாஜி தயாரித்த முதல் படம். அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பதில் முனைந்தார்.

நடிகர் திலகம் சிவாஜிக்கு சினிமாவுக்குள்ளேயும் முக்கியமான ரசிகர்கள், வெறித்தனமான ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களில் கே.பாலாஜியும் ஒருவர். இன்னும் சொல்லப்போனால், சிவாஜியின் நல்ல நண்பரும் கூட! அதேபோல், கே.பாலாஜியின் உயிர்த்தோழன் நாகேஷ். சினிமா சான்ஸ் தேடி, நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்த நாகேஷைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்தார் பாலாஜி. வீட்டில் தனியறையை ஒதுக்கிக் கொடுத்து அங்கேயே தங்கிக்கொள்ளச் செய்தார். தவிர, பல உதவிகளையும் செய்தார் பாலாஜி. இதை பல மேடைகளின் நன்றி பொங்கச் சொல்லியிருக்கிறார் நாகேஷ். இருவரும் ‘வாடா போடா’ நண்பர்கள்.

இந்திப் படங்களின் மீது அப்படியொரு காதல் பாலாஜிக்கு. இவர் தயாரித்த பெரும்பாலான படங்கள், இந்தி ரீமேக் தான். ’எங்கிருந்தோ வந்தாள்’, ‘என் மகன்’, ’நீதி’, ’தீபம்’, ‘தியாகம்’ என்று வரிசையாக இந்திப் படங்களை ரீமேக் செய்தார். அதுமட்டுமா? சிவாஜியை வைத்து ஏகப்பட்ட படங்களை எடுத்தார்.

வேற்றுமொழிகளில் வந்த சிறந்த கதையம்சம் உள்ள படங்களை ரீமேக் செய்து தமிழுக்குத் தக்கபடி லேசாக டிங்கரிங் செய்வதில் கில்லாடி கே.பாலாஜி. ’சட்டம்’, ‘சவால்’, ‘மங்கம்மா சபதம்’, ‘வாழ்வே மாயம்’ என கமலை வைத்து பல படங்கள் தந்தவர், ’பில்லா’, ‘தீ’ , ‘விடுதலை’ உள்ளிட்ட பல படங்கள் ரஜினியை வைத்தும் தயாரித்தார். மெகா வெற்றிப் படங்களாக்கினார். ரஜினிக்கு மார்க்கெட் வேல்யூவைத் தூக்கி உயரத்தில் வைத்த மிக முக்கியமான படமாக ‘பில்லா’ படம் அமைந்தது.

மோகன், பூர்ணிமா பாக்யராஜை வைத்து, பாலாஜி எடுத்த ‘விதி’ படம் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய ரெக்கார்டை ஏற்படுத்தியது. ’திருவிளையாடல்’ ஒலிச்சித்திரம் எப்படி ஹிட்டானதோ, அதேபோல் ‘விதி’ பட ஒலிச்சித்திரமும் அப்படி ஒரு ஹிட்டடித்து சாதனையைப் படைத்தது.

சிவாஜியை வைத்து மட்டுமே ‘சுஜாதா சினி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில், ‘சுரேஷ் ஆர்ட்ஸ்’ பேனரில் 18-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் கே.பாலாஜி. அவர் தயாரிப்பில் சிவாஜி நடித்த ‘ராஜா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தான் தயாரித்த படங்களில் கதாநாயகன் பெயர் ராஜா என்றும், கதாநாயகி பெயர் ராதா என்றும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

படத்தை ஆரம்பிக்கும்போதே ரிலீஸ் தேதியையும் முடிவு செய்து அதை நோக்கி படக்குழுவினர் செல்ல அனைத்து வழிவகைகளையும் செய்து தரும் கில்லாடி தயாரிப்பாளர் என்று திரையுலகினர் அவரைப் போற்றுகின்றனர். ஒரு படத்தைத் தயாரிப்பதற்கான அத்தனை நுணுக்கங்களையும் உள்வாங்கி மளமளவென ஸ்கெட்ச் போடுவதில் சூரர் என்றும் புகழ்கிறார்கள்.

ஜனவரி 26-ம் தேதி கே.பாலாஜியின் திருமண நாள். எனவே அந்தநாளில், படம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றே விரும்புவார். அவரின் முக்கால்வாசி படங்கள், ஜனவரி 26-ம் தேதியன்று வெளியானவையாக இருக்கின்றன. சுஜாதா சினி ஆர்ட்ஸ் லோகோ வரும். அதையடுத்து, கம்பீரமான சுழல் நாற்காலியில் இருந்து திரும்பிச் சிரிப்பார் கே.பாலாஜி. ‘அட... பாலாஜி படமா... அப்போ பிரமாதமா இருக்கும்யா’ என்று நம்பிக்கையுடன் படம் பார்த்தார்கள் ரசிகர்கள். அப்படியான பெயரைச் சம்பாதித்த தயாரிப்பாளர் அவர்!

தயாரிப்பாளர் எனும் வகையில் கே.பாலாஜியின் கருத்து - ’நல்ல கதை இருந்தா போதும். அதை ரசனையா கொடுக்கத் தெரிஞ்சா போதும். படம் ஓடிரும்’ என்பதுதான். இதில் ரொம்பவே உறுதியாக இருந்தார். அதேபோல், கதைக்குத் தேவையெனில் எத்தனை பிரம்மாண்டமான செலவுகளைச் செய்வதிலும் தயங்கமாட்டார். தமிழ் சினிமாவில், விதவிதமான பங்களாக்களையும் ரகம்ரகமான வெளிநாட்டுக் கார்களையும் நம் தமிழ் சினிமாவில் காட்டி அசரடித்தார்.

இவர்தான் ஆஸ்தான இசையமைப்பாளர் என்றெல்லாம் வைத்துக்கொள்ளாமல், எம்எஸ்வி, சங்கர் கணேஷ், இளையராஜா, கங்கை அமரன் என்று பலரைக் கொண்டும் இசையமைக்கச் செய்தார் பாலாஜி. அவரின் ‘வாழ்வே மாயம்’, ‘சட்டம்’ உட்பட பல படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்தார் என்பதும் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாகின என்பதும் மறக்க முடியாதவை!

எம்ஜிஆருடன் ’என் கடமை’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் பாலாஜி. சிவாஜியை அதிகம் நேசித்தாலும் எம்ஜிஆரையும் பாலாஜிக்கு ரொம்பவே பிடிக்கும். தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவர் இல்லத்துக்குச் சென்று அவரை வணங்கி ஆசி பெற்று வருவதை (எம்ஜிஆர் இறக்கும் வரையிலும்) வழக்கமாகக் கொண்டிருந்தார் கே.பாலாஜி.

’என்னை வைத்து எப்போ படம் தயாரிக்கப் போறீங்க?’ என்று பாலாஜியிடம் எம்ஜிஆர் கேட்கும்போதெல்லாம், ’பண்ணிருவோம் பண்ணிருவோம்’ என்றே டிமிக்கி கொடுத்து சமாளித்து வந்தார். இறுதி வரை அவரை வைத்து ஒரு படத்தைக்கூட தயாரிக்கவில்லை பாலாஜி. சிவாஜியை வைத்துத்தான் எக்கச்சக்க படங்கள் தந்தார்.

நடிகர் நடிகைகள் தொடங்கி டெக்னீஷியன், லைட்பாய் உட்பட எவருக்கும் சம்பள பாக்கியே வைக்காதவர், யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் பக்காவாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்றைக்கும் கொண்டாடுகின்றனர் திரையுலகினர்.

1934 ஆகஸ்ட் 5-ம் தேதி பிறந்த கே.பாலாஜி, 2009 மே 2-ம் தேதி காலமானார். இன்று அவரின் 88-வது பிறந்தநாள்.

உற்சாகம் குன்றாத, உதவி செய்யத் தயங்காத மனிதராக, குறிப்பிடத்தக்க நடிகராக, வெற்றிகரமான தயாரிப்பாளராக வாழ்ந்து மறைந்த கே.பாலாஜியை இந்நாளில் நினைவுகூர்வோம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in