சந்திரபாபு: சார்லி சாப்ளினின் தென்னக வடிவம்!

சந்திரபாபு
சந்திரபாபு

நடிகர் என்பவர், எல்லா விதத்திலும் நடிக்க வேண்டும். முகத்தால் நடிக்க வேண்டும். கண்களால் நடிக்க வேண்டும். கை அசைவுகளால் நடிக்க வேண்டும். நடையிலும் ஓட்டத்திலும் நடிக்க வேண்டும். இதைத்தான் ‘பாடி லாங்குவேஜ்’ என்று கொண்டாடுவார்கள் ரசிகர்கள். நடிகரின் அங்க அசைவுகளும் பார்வைகளும் மெளனங்களும் முகபாவனைகளும் சேஷ்டைகளும் கோணங்கித்தனங்களும் நமக்குள் வெடிச்சிரிப்பைக் கொடுத்துவிடும். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிப்போம். மூச்சுமுட்டச் சிரிப்போம். கண்களில் நீர் வரச் சிரிப்போம். அதேசமயம், அந்த மனிதரின் வாழ்வின் சோகங்களை நினைத்து நினைத்து விகசிப்போம். கண்ணீர்விடுவோம். சார்லி சாப்ளின் நம்மைச் சிரிக்கவைத்தார். அவரின் வாழ்க்கையோ நமக்கு துயரத்தைக் கொடுத்தது. நம்மூரிலும் அப்படியொரு நடிகரைச் சொல்லலாம். நம்மவரும் ஓடுவார். தடக்கெனக் குதிப்பார். பரபரவென பாய்வார். இல்லாத சேட்டைகளையெல்லாம் செய்வார். அவர் செய்வதெல்லாம் இருக்கட்டும். அந்தக் கண்களை வைத்துக்கொண்டு உருட்டினாலே குபுக்கென்று சிரித்துவிடுவோம். அந்தப் பண்பட்ட நடிகர்... சந்திரபாபு.

முத்து நகரம் என்று போற்றப்படுகிற தூத்துக்குடியில் பிறந்த திரைமுத்து சந்திரபாபு. அவரின் தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். சந்திரபாபுவோ... திரையுலகிற்குள் வருவதற்கே ஏகப்பட்ட போராட்டங்களைச் சந்தித்தார். சந்திரபாபு என்றதும் என்ன சொல்வோம்? நடிகர் என்போம். காமெடி நடிகர் என்போம். கேரக்டர் நடிகர் என்போம். எல்லாவற்றுக்கும் மேலாக பிரமாதமாகப் பாடுவார் என்போம். ‘சந்திரபாபு, பிரமாதமாப் பாடுறாம்லே...’ என்று சொன்னதுதான் அவருக்குக் கிடைத்த முதல் பாராட்டு. அவரின் பாடலைக் கேட்டுவிட்டு முத்துநகரமே அவரைக் கொண்டாடியது.

1927 ஆகஸ்ட் 5-ல் பிறந்த சந்திரபாபு தந்து 20-வது வயதில் ’அமராவதி’ என்கிற படத்தில் நடித்தார். படம் வந்ததும் சந்திரபாபுவின் வீட்டுக் கதவை வரிசை கட்டிக்கொண்டு வந்துவிடவில்லை வாய்ப்புகள். கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அறியப்பட்டார் சந்திரபாபு. ஆனாலும், மக்களின் மனங்களில் இன்றைக்கும் சப்பளங்களால் போட்டு உட்கார்ந்துகொண்டிருக்கிறார்.

அந்தக் காலத்தில், நடிப்பவர்களே பாடவும் செய்தார்கள். சந்திரபாபுவும் அப்படித்தான். ஆனால், அந்தக் குரலில் கொஞ்சம் தேன்... கொஞ்சம் ஆல்கஹால் என கலந்துகட்டி ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியது. வசனங்களும் அப்படித்தான். குறிப்பாக, ரஜினி இன்றைக்குப் படபடவெனப் பேசுகிறாரே... எஸ்.வி.ரங்காராவ் தடதடவெனப் பேசுவாரே... அதேபோல், சந்திரபாபு டயலாக் டெலிவரி பண்ணுவதில் சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பீடு.

மெட்ராஸ் பாஷை பேசுவது என்பது மிகப்பெரிய கலை. லூஸ் மோகன், தேங்காய் சீனிவாசன், கமல்ஹாசன் என்றெல்லாம் மெட்ராஸ் பாஷையில் வெளுத்துவாங்குவார்கள். இவர்களுக்கெல்லாம் தாத்தா சந்திரபாபுதான். மொத்த தமிழ்த் திரையுலகிற்கும்... இந்த மெட்ராஸ் பாஷை அப்போது புதுசுதான். சந்திரபாபுவின் குரலில் சென்னை பாஷையைக் கேட்கவும் அவரின் பாடி லாங்வேஜைப் பார்க்கவும் அவர் நடித்த ஒவ்வொரு படத்தையும் சுவரில் பால் கணக்கு போல் கோடு கிழித்துக்கொண்டு, பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார்கள்.

‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதா, எம்.என்.ராஜம், எஸ்.எஸ்.ஆர். ஆகியோருடன் சந்திரபாபுவும் தனித்துத் தெரிந்தார். ‘மாமன் மகள்’ படத்திலும் ‘சகோதரி’ படத்திலும் அவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ‘சபாஷ் மீனா’வில் சிவாஜிக்கு நிகராக அவரும் பேசப்பட்டார். சொல்லப்போனால், சந்திரபாபு இந்தப் படத்தின் மூலம் இன்னொரு உயரம் தொட்டார்.

’பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே...’ என்று சந்திரபாபு பாட்டால் சொன்ன காமெடி சங்கதிகள் சாகாவரம் பெற்றவை. ’குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே’ என்று பாடலின் மூலமாகக் கொஞ்சி விளையாடினார். ‘காதல் என்பது எதுவரை’, ‘பொறந்தாலும் ஆம்பளயா பொறக்கக் கூடாது’, ‘தனியா தவிக்கிற வயசு’ என அவரது பாடல்களை ரசித்துச் சிரித்தார்கள். சிரித்து ரசித்தார்கள். பாடுவதிலும் சரி... நடிப்பதிலும் சரி... தமிழ் சினிமாவில் தனித்துவத்துடன் திகழ்ந்ததுதான் சந்திரபாபுவின் மிகப்பெரிய அடையாளம்; அங்கீகாரம்!

மற்றவர்களுக்கும் பாடியிருக்கிறார் சந்திரபாபு. வீணை பாலசந்தருக்காக ‘கல்யாணம்... ஆஹா கல்யாணம்’ என்ற பாடலைப் பாடி அசத்தினார். இந்தப் பக்கம் எம்ஜிஆருடன் நடித்தார். அந்தப் பக்கம் சிவாஜியுடன் நடித்தார். ‘பாதகாணிக்கை’ மாதிரியான படங்களில் ஜெமினியுடன் நடித்தார். இதில், மாஸ்டர் கமல்ஹாசனுக்கும் சந்திரபாபுவுக்குமான காம்பினேஷன் ரசிக்கப்பட்டது. சிவாஜி நடித்த ‘ராஜா’ படத்தில் மூன்று வேடங்களில் நடித்து அசத்தினார்.

எம்ஜிஆருடன் சந்திரபாபு
எம்ஜிஆருடன் சந்திரபாபு

மேற்கத்திய பாணிதான் சந்திரபாபுவின் பலம். அதுதான் அந்தக் காலத்தில் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்தது. ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்று ஜெய்சங்கரைக் கொண்டாடியது போலவே, ‘தென்னகத்து சார்லி சாப்ளின்’ என்று சந்திரபாபுவை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஆனால் என்ன... ‘சார்லி சாப்ளின் போலவே சோகத்துக்கு வாக்கப்பட்டவர்’ என்றே பலரும் சந்திரபாபுவை நினைவுகூர்கிறார்கள். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறியவருக்கு, மதுவில் இருந்து நீச்சலடித்து மேலெழ முடியாமல் போனதுதான் துரதிருஷ்டம்.

சந்திரபாபுவின் திருமணம்
சந்திரபாபுவின் திருமணம்

கணக்கு வழக்கு பார்க்காமல், நேரங்காலம் பார்க்காமல் நடித்த சந்திரபாபு, ஒருகட்டத்தில் கணக்குவழக்கு இல்லாமல் கடன் சுமைக்கு ஆளானார். சம்பாதித்து காசு சேர்த்து அவர் கட்டிய பங்களாவைப் பற்றி கதைகதையாகச் சொல்வார்கள். கார் வீட்டுக்குள்ளேயே சென்று நிற்கும்படி கட்டினார் என்பார்கள். ஆனால் வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிரேக்கையெல்லாம் தெரியாமல் கோட்டைவிட்டார் என்பதுதான் பெருஞ்சோகம்.

திரையில் ஜொலித்த சந்திரபாபுவின் மணவாழ்க்கை, திரைப்படமாகவே எடுக்கும் அளவுக்குத் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்டதுதான் கொடுமை. சந்திரபாபுவின் ஆட்டம்... தனி தினுசு. புது ரகம். அவரின் குரல்... எந்த இலக்கணங்களுக்குள்ளும் கட்டுப்படாத மாயாஜாலக்குரல். இப்படி தனித்து, தினுசுடன், மாயமாகிப் போன வாழ்க்கைக்குள் வசமாகாமல், தன்னையே இழந்தார். சந்திரபாபு எனும் கலைஞன்... உன்னதப் பிறவி.

எம்ஜிஆருடன் ‘நாடோடி மன்னன்’, ‘அடிமைப்பெண்’ முதலான பல படங்களில் நடித்தார். ‘மாடி வீட்டு ஏழை’ என்று எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்கும் பணியில் இறங்கினார். ஆனால் எடுத்த வேகத்திலேயே நின்றுபோனது. ‘நான் ஒரு முட்டாளுங்க...’ என்ற பாடலும் ‘ஒண்ணுமே புரியல உலகத்திலே’... பாடலும், ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ என்கிற பாடலும் அந்தந்தப் படங்களின் கேரக்டர்களுக்காக, சந்திரபாபுவுக்காக எழுதப்பட்ட பாடல்கள். அவரே பாடிய பாடல்கள். இந்தப் பாடல்கள் அவருக்கே பொருந்திப்போனதுதான்... ஆச்சரியம்.

1974 மார்ச் 8-ம் தேதி காலமானார். அவர் மறைந்து 48 ஆண்டுகளாகியும் கூட, அடுத்தடுத்த தலைமுறையினரும் சந்திரபாபு எனும் கலைஞனைக் கொண்டாடிக்கொண்டே இருக்கிறார்கள்.

சகாப்தம் படைத்த சிரிப்பு நாயகன் சந்திரபாபுவைப் போற்றுவோம்.

ஆகஸ்ட் 5: நடிகர் சந்திரபாபுவின் 95-வது பிறந்தநாள்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in