துள்ளாட்டம் போடவைத்த ‘துள்ளுவதோ இளமை’!

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலுக்கு அகவை 55!
'குடியிருந்த கோயில்’ எம்ஜிஆர்
'குடியிருந்த கோயில்’ எம்ஜிஆர்

இரண்டு வேட கதாபாத்திரம் கொண்ட கதையென்றால், அதிலொரு சுவாரஸ்யம் இருக்கிறது. ‘இப்படித்தான் கதை இருக்கும்’ என்று ஒரு யூகத்துக்கு வந்து, வேறு எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ளமாட்டார்கள். இன்னொன்று.. இப்படியான இரட்டை வேடப் படங்களில் காமெடிக்கும் பஞ்சமிருக்காது. ஆக்‌ஷனையும் அள்ளித்தெளிக்கலாம். அதிலும், எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடிக்கிறாரென்றால், அந்தப் படத்தைச் சொல்லணுமா என்ன? அப்படி எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் விளையாடிய மிக முக்கியமான படம்தான் ‘குடியிருந்த கோயில்’.

தோட்டத் தொழிலாளி ஒருவனை சக தொழிலாளி நாகப்பன் கொன்றுவிட, இந்த வழக்கு கோர்ட்டுக்கு வரும். ‘’ஆமாம், இவன் தான் கொன்றான். நான் பார்த்தேன்’’ என்று உண்மையைச் சொல்லுவார் தோட்ட அதிகாரி. அதன்படி நாகப்பனுக்கு தண்டனைக் கொடுப்பார்கள். ஆனால் அவன் சிறையில் இருந்து தப்பித்து வந்து அந்த அதிகாரியைக் கொல்கிறான்.

தனது இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு வேறு ஊருக்குப் போகிறார் அதிகாரியின் மனைவி. மகன்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள். சேகர், ஆனந்த் என்றும் அவர்களுக்குப் பெயர்கள். இதில், ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்கும் வேளையில், தண்ணீர் பிடிப்பதற்காக சேகர் இறங்குவான். ரயில் கிளம்பிவிடும். அழுதுகொண்டே ரயிலின் பின்னே ஓடுவான். அப்போது நாகப்பனை போலீஸ் துரத்திக் கொண்டு வரும். நாகப்பன் அந்தப் பையனைத் தூக்கிக் கொண்டு போய் வளர்ப்பான்.

ஆக, இரட்டையர்கள் பிரிகிறார்கள். அம்மாவிடம் வளர்கிற ஆனந்த், ஆட்டமும் பாட்டமுமாக கலைகளைக் கற்றறிந்து, நிகழ்ச்சிகளை நடத்துகிறான். அப்பாவைக் கொன்றவன் இவன் என்று தெரியாமல், நாகப்பனிடம் வளர்ந்து, கெட்டிக்கார கெட்டவனாக வளர்ந்திருக்கிறான் சேகர். நாகப்பன் அவனுக்கு வைத்த பெயர் பாபு.

கொடைக்கானலுக்கு நிகழ்ச்சிக்கு வந்த ஆனந்த், அங்கே ஜெயாவைப் பார்க்கிறான். காதல் கொள்கிறான். அம்மாவிடம் மெல்ல தன் காதலையும் தெரிவிக்கிறான். அதேசமயத்தில், போலீஸிடம் குண்டடிபட்டு, தப்பித்து வரும் பாபு, ஒருவீட்டில் அடைக்கலமாகிறான். அது அவனுடைய அம்மாவின் வீடு. இவன் தன் மகன் என்று தெரியாமலேயே, அவன் உயிரைக் காப்பாற்றுகிறார்.

அந்த அன்பும் பண்பும் அவனை நெகிழ வைக்கிறது. அங்கிருந்து செல்லும்போது, அம்மாவின் புகைப்படத்தை எடுத்துச் செல்கிறான். அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் ஆவேசமாகிறான் நாகப்பன். ‘’நம் திட்டம் தெரிந்தவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது. அவளைக் கொன்றுவிட்டு வா’’ என்று பாபுவை அனுப்ப, பாபுவும் கொல்வதற்கு மறுபடியும் வீட்டுக்கு வருகிறான்.

ஆனால், கொல்ல மனமில்லாமல் திரும்புகிறான். ஒரே குழப்பமும் தவிப்பும் படபடப்பும் இனம்புரியாத துக்கமும் கலந்த மனநிலையில் காரோட்டிச் செல்லும்போது, விபத்து நடக்கிறது. போலீஸிடம் சிக்குகிறான். அவனுக்கு பழைய நினைவுகள் மறந்துவிடுகின்றன.

இந்த சமயத்தில், போலீஸ் உயரதிகாரி ஒருவர், ஆனந்தைப் பார்க்கிறார். அவனை, பாபுவிடம் அழைத்துச் செல்கிறார். பாபுவைப் பற்றியும் நாகப்பன் கூட்டத்தைப் பற்றியும் விரிவாகச் சொல்லி, ‘’இவனைப் போலவே சாயலுடன் இருக்கிற நீ, பாபுவைப் போல் அந்தக் கூட்டத்துக்குள் சென்று, எங்களுக்கு அவர்களைப்பிடிக்க உதவி செய்’’ என்று கேட்கிறார். அதன்படி, ஆனந்த், பாபுவாக அங்கே செல்கிறார்.

கொள்ளைக்கூட்டத்துக்குள் நுழைந்த ஆனந்த், நாகப்பன் தான் அப்பாவைக் கொன்றது என்பதை கண்டுகொண்டாரா? பாபுவுக்கு நினைவு திரும்பியதா? தன்னை வளர்த்த நாகப்பனே, நம் அப்பாவைக் கொன்றவன் என்பதெல்லாம் தெரிந்ததா? நம் உயிரைக் காப்பாற்றிய அந்த அம்மாதான், நம் சொந்த அம்மா என்பது தெரிந்ததா என்பதையெல்லாம் விறுவிறு திரைக்கதையிலும் கலகல காமெடியிலும் திகுதிகு ஆக்‌ஷனிலும் சொன்னதுதான் ‘குடியிருந்த கோயில்’.

திரைக்கதையிலும் வசனத்திலும் காட்சி அமைப்பிலும் நடிப்பிலும் பாடல்களிலும் என ஒவ்வொரு காட்சியும் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி, மனதில் பதியும்விதமாக கட்டமைத்திருப்பதுதான் ‘குடியிருந்த கோயில்’. டைட்டிலில் முதலில் ஜெயலலிதா பெயர் வரும். டைரக்‌ஷன் போட்டு முடித்ததும், புலியைக் காட்டி புரட்சி நடிகர் என்றும் பசுவைக்காட்டி மக்கள்திலகம் என்றும் இரண்டு வேடங்களில் என்று இரண்டையும் இணைத்து, திமுக நிறத்திலும் எம்ஜிஆர் பெயர் போட தியேட்டரே தெறித்தது அப்போது!

ஆனந்த் எம்ஜிஆர் அவரின் வழக்கமான பளபளப்புடனும் மினுமினுப்புடனும் ஜொலிப்பார். பாபு என்கிற கொள்ளைக்கார எம்ஜிஆர், சற்று கறுப்பு நிறத்தில் முரட்டுக்கண்களும் அந்தக் கண்களுக்குக் கீழே மையிட்டு இன்னும் குரூரமாகவும் ஆக்ரோஷமாகவும் இருப்பார். போதாக்குறைக்கு அவ்வப்போது உறுமிக் கொண்டு புது மேனரிஸம் காட்டுவார். ஆனந்த், சேகரின் அப்பாவாக எஸ்.வி.ராமதாஸ். அம்மாவாக பண்டரிபாய்.

ஆனந்தின் காதலி ஜெயாவாக ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அப்பாவாக விகே.ராமசாமி. அண்ணனாக நாகேஷ். போலீஸ் உயரதிகாரியாக மேஜர் சுந்தர்ராஜன். மருத்துவராக கே.விஜயன். பாபுவின் காதலியாக, கொள்ளைக்கூட்டத்தில் இருக்கும் ஆஷாவாக ராஜஸ்ரீ. எல்லோருமே தங்களின் சிறப்பான நடிப்பை பங்கிட்டுக் கொடுத்து, அசத்தினார்கள்.

அம்மா கதாபாத்திரத்துக்காகவே அவதரித்தவராயிற்றே பண்டரிபாய். அவரின் பாசமும் கருணையும் பொங்குகிற முகமும் கண்களும் வசன உச்சரிப்புகளும் தாய்மையை அப்படியே நமக்கு எடுத்துரைத்தது. பாட்டும் கூத்துமாக இருக்கிற ஆனந்த் எம்ஜிஆர் வருகிற இடமெல்லாம் காமெடியும் காதலும் இணைந்து நம்மை கலகலக்கவைத்தன. முரட்டு எம்ஜிஆரும் மிரட்டியெடுத்தார். ராஜஸ்ரீ தன் அழகாலும் நடிப்பாலும் ஆட்டத்தாலும் அசத்தினார். காமெடி விஷயத்தை விகே.ராமசாமியும் நாகேஷும் பார்த்துக் கொண்டார்கள்.

படத்தின் முதல் பலம் எம்ஜிஆர். இரண்டாவது பலம் எம்ஜிஆர். மூன்றாவது பலம் அப்படியொரு வண்ணப்படமாக கண்ணில் ஒற்றிக்கொள்ளும் கலர்ப்படமாக அமைந்தது. அடுத்தடுத்தும் சிறப்புகள் ஏராளம் உண்டு. ஹோட்டலுக்குள் இருக்கும் ரகசிய அறைக்குள் இருந்தபடி, தன் கூட்டத்தினருக்கு வேலை கொடுக்கும் வேலைதான் நம்பியாருக்கு. ஆனால், நம்பியார் ஸ்கிரீனில் வருகிற காட்சியிலெல்லாம் தூள் கிளப்பிக்கொண்டே இருப்பார். திரைக்கதையையும் வசனத்தையும் சொர்ணம் எழுத, கே.சங்கர் இயக்கினார். ஜி.என்.வேலுமணி தயாரித்தார்.

’சைனா டவுன்’ என்று 1962ம் ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தைத்தான், 1968-ம் ஆண்டு ‘குடியிருந்த கோயில்’ என ரீமேக் செய்தார்கள். ஆனால், இந்திப் படத்தின் சாயல் துளியுமின்றி தன் இயக்கத்தால் அக்மார்க் தமிழ்ப்படமாக படைத்தார் கே.சங்கர்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, ஒவ்வொரு பாடலையும் லட்டு, ஜாங்கிரி, குலோப்ஜான் மெட்டுகளாகப் போட்டுக் கொடுத்து பிரமிக்கவைத்தார். எல்லாப் பாடல்களும் இன்றைக்கும் மெகா ஹிட் வரிசையில் இருக்கின்றன. வாலி, புலமைப்பித்தன், ஆலங்குடி சோமு, ரோஷ்னாரா பேகம் பாடல்களை எழுதினார்கள். புலவர் புலமைப்பித்தன் முதன் முதலாக இந்தப் படத்தில்தான் பாடல் எழுதினார்.

’துள்ளுவதோ இளமை’ என்ற பாடலுக்கான இசையும் வரிகளும் எல்.ஆர்.ஈஸ்வரியும் டி.எம்.செளந்தர்ராஜனும் பாடலில் குழைவும் பிர்காவும் கொடுப்பதும் அட்டகாசம். பாட்டுக்கச்சேரிகளில் அப்போதெல்லாம் இந்தப் பாடலை மறக்காமல் பாடிவிடுவார்கள்.

அதேபோல், ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலை எப்போது கேட்டாலும் கைகளும் கால்களும் தாளமிடத் தொடங்கிவிடும். நடனத்திலும் அழகிலும் நடிப்பிலும் கலக்கிய எல்.விஜயலட்சுமியும் எம்ஜிஆரும் இந்தப் பாட்டுக்கு நடனமாடியிருப்பார்கள்.

‘’விஜயலட்சுமியோட நான் ஆடணுமா. என்ன விளையாடுறீங்களா? நமக்கு டான்ஸ்லாம் வராது’’ என்று ஆடவே மறுத்துவிட்டார் எம்ஜிஆர். பிறகு இந்த ஒரு பாடலை மட்டும் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, ஒருமாத நடனப் பயிற்சி மேற்கொண்டு, எம்ஜிஆர் ஆடினார். அசத்தினார்.

எம்ஜிஆரின் வாழ்வில், பல திருப்புமுனை படங்கள் அமைந்தன. பல படங்கள், தமிழ் சினிமாவின் பாதையையே புதுப்பித்தன. மிகப்பெரிய வசூல் சாதனைகளை எம்ஜிஆர் படைத்திருக்கிறார். அப்படி திருப்புமுனைப் படமாகவும் புதுப்பாதை போட்டுக் கொடுத்த படமாகவும் வசூல் சாதனை படைத்த படமாகவும் திகழ்கிறது ‘குடியிருந்த கோயில்’.

1968-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி வெளியானது ‘குடியிருந்த கோயில்’. படம் வெளியாகி, 55 வருடங்களாகின்றன. எல்லா ஏரியாக்களிலும் மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் குவித்தது இந்தப் படம். பல தியேட்டர்களில் 150 நாட்களைக் கடந்தும் ஓடியது. தமிழக அரசு சிறந்த நடிகர் விருது கொடுத்து எம்ஜிஆரை கெளரவித்தது.

இரண்டு தலைமுறையைக் கடந்துவிட்டாலும், ‘துள்ளுவதோ இளமை’ பாடலுக்கும் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்’ என்ற பாடலுக்கும் நம் மனம் துள்ளியாடி, இசைச் சுகத்தை அனுபவித்துக் கொண்டேதான் இருக்கிறது இன்னமும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in