54-ம் ஆண்டிலும் மனதில் நிற்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’

54-ம் ஆண்டிலும் மனதில் நிற்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’

சில திரைப்படங்களைப் பார்த்தால் பரவசமாகிவிடுவோம். எத்தனை முறை பார்த்திருக்கிறோம் என்பதே கணக்கில் இருக்காது. அப்படி எத்தனையோ முறை பார்த்த படங்களை, நட்பு வட்டத்தில் சொல்லிச்சொல்லி சிலாகித்துக்கொண்டே இருப்போம். காட்சி காட்சியாக விவரித்துக்கொண்டே இருப்போம். நூற்றாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில், அப்படியான படங்கள் சில உண்டு. அவற்றில் மிக முக்கியமான படம் ‘தில்லானா மோகனாம்பாள்’.

நாவல்களைப் படமாக்குவது என்பது தனிக் கலை. நாவல்களில் உலவுகிற கதைமாந்தர்களை, வாசகர்களின் திருப்திக்கேற்றபடி, கற்பனைக்குத் தகுந்தபடி ரசிகர்களாகவும் அவர்களை ரசிக்கவைக்கிற வித்தை, சாமான்யமானது அல்ல. அப்படி தொடர்கதையாக வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற நாவலை, வெள்ளித்திரையில் வந்தபோது, சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்றது தமிழகம். அந்த வரவேற்பும் பிரமிப்பும் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்கு இருப்பது மாபெரும் சாதனைதான்!

கொத்தமங்கலம் சுப்பு, ‘கலைமணி’ என்கிற பெயரில், விகடனில் எழுதிய தொடர்கதை... ‘தில்லானா மோகனாம்பாள்’. இந்தக் கதைக்குக் கிடைத்த வரவேற்பை கணக்கிட்டு, தாமே படம் எடுப்பது எனும் முடிவில் இருந்தார் எஸ்.எஸ்.வாசன். இதைப் படமாக்கும் சிந்தனையும் ஆசையும் இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்கும் வந்தது. கேட்டுப்பார்த்தபோது, வாசன் மறுத்துவிட்டார். மூன்று நான்குமுறை கேட்டும், மறுப்பே பதிலாக வந்தது. இப்படி இரண்டுமூன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், ஒருவழியாக, ‘நீங்களே படமெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று பச்சைக்கொடி காட்டினார் வாசன். அப்படித்தான் உருவானது ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படம்.

ஒரு நாட்டியப் பெண்ணுக்கும் நாகஸ்வர வித்வானுக்கும் இருக்கிற ஈகோவும் கோபமும் ஊடலும் கொஞ்சம்கொஞ்சமாகக் காதலாக மாறுவதும், பின்னர் அவர்கள் இணைவதும்தான் கதை. ஒருபக்கம் முட்டிக்கொண்டாலும் இன்னொரு பக்கம் காதல்வயப்பட்ட இருவருக்குமாக, கதையின் ஒவ்வொரு கட்டத்திலும் சில கதாபாத்திரங்கள், மோதலைப் பெரிதாக்கிக்கொண்டே இருக்கும். போதாக்குறைக்கு நாட்டியப் பெண் மோகனாவின் அம்மாவே முதல் எதிரியாக இருப்பார்.

நாகஸ்வர சிக்கல் சண்முகசுந்தரம், நாட்டியப் பெண் மோகனா. சிவாஜி, பத்மினி. சிவாஜியுடன் ஏவிஎம்.ராஜன். டி.எஸ்.பாலையா முதலான கோஷ்டியினர். பத்மினியின் அம்மா வடிவாம்பாளாக சி.கே.சரஸ்வதி, ’வெத்தலப்பெட்டி’ எம்.சரோஜா, நட்டுவனார் தங்கவேலு, மிருதங்கம் வாசிக்கும் டி.ஆர்.ராமச்சந்திரன் முதலானோர். சவடால் வைத்தியாக நாகேஷ், ஜில்ஜில் ரமாமணியாக மனோரமா, சிங்கபுரம் மைனர் பாலாஜி, மதன்பூர் மகாராஜா நம்பியார், நாகையா, எஸ்.வி.சகஸ்ரநாமம் என அளவெடுத்த மாதிரி கேரக்டர்கள். அத்தனை பேரும் தன் நடிப்பால், அந்தக் கதாபாத்திரங்களை நம் முன்னே உலவவிட்டிருப்பார்கள்.

சிவாஜியின் யதார்த்தமான நடிப்பைப் படம் முழுக்கப் பார்க்கலாம். நாகஸ்வர வித்வானாகவே வாழ்ந்திருப்பார். பத்மினிக்கென்ன... அவரின் ஆட்டத்துக்குச் சொல்லவா வேண்டும்! இங்கே பாலையா கலகலப்பூட்டுவார். அங்கே டி.ஆர்.ராமச்சந்திரன் நெகிழவைப்பார். இந்தப் படத்தில் வருகிற இன்னொரு சுவாரசியம்... வில்லன்களாக வருகிற பாலாஜியும் நம்பியாரும் இறுதியில் மனம் திருந்துவார்கள். வில்லன்களுக்கு அல்லக்கையாக இருக்கிற நாகேஷ் என்கிற சவடால் வைத்தி மட்டும் கடைசி வரை அப்படியேதான் இருப்பார். முழுக்க முழுக்க நெகட்டிவ் கதாபாத்திரம். நாகேஷ் வெளுத்துவாங்கியிருப்பார்.

பத்மினியின் அம்மா கேரக்டர், கொஞ்சம் வசனமோ காட்சியோ கூடிவிட்டாலும்கூட, விரசமாகிவிடும். அதேபோல் நாகேஷுடன் பேசுகிற காட்சியும் அப்படித்தான். ஆனாலும் அதை மிகுந்த கவனத்துடன் கையாண்டிருப்பார் ஏ.பி.நாகராஜன்.

தொட்டதெற்கெல்லாம் பொசுக்கென கோபப்படுகிற சிவாஜி, கருப்பாயி என்கிற ஜில்ஜில் ரமாமணியிடம் மட்டும் சரண்டராவார். “படத்தில் சின்ன கேரக்டர்தானே. நான் நடிக்கணுமான்னு யோசிக்கிறேன்” என்ற மனோரமாவை சம்மதிக்கவைப்பதே பெரும்பாடாகிவிட்டதாம். ஆனால் ஜில்ஜில் ரமாமணி கேரக்டரில் அவர் காட்டிய ஈடுபாடு அலாதியானது. இன்றளவும் நம்மால் மறக்க முடியாத கேரக்டர் அது!

நாகேஷும் மனோரமாவும் எத்தனையோ படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் இருவருக்குமான காட்சிகளே இருக்காது. அதேபோல், நாயகன் சிவாஜி என்றால், டிஎம்எஸ் பாடல்கள் இல்லாமல் இருக்காது. இந்தப் படத்தில் சிவாஜிக்குப் பாடல்களே இல்லை. நாகஸ்வர வித்வானை, வித்வானாக மட்டுமே காட்டியிருப்பதற்கு தைரியம் வேண்டும். ‘ஒரு கனவுப் பாடல்’ கூட வைக்காத இயக்குநர், நாவலை எந்த அளவுக்கு ரசித்திருப்பார்; ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை ஒரு சிற்பம் போல் எப்படியெல்லாம் செதுக்கியிருப்பார்!

ஒவ்வொரு முறையும் பத்மினியைச் சந்தேகப்படுவதே சிவாஜிக்கு வேலை. அப்படித்தான், ஆஸ்பத்திரியில் இருக்கும்போது, அவருக்குப் பணிவிடை செய்யும் மேரி எனும் நர்ஸ், தன்னைக் காதலிக்கிறாளோ என்று சந்தேகம். இறுதியில், அந்தப் பெண் விளக்கிவிட்டு, “ஏங்க, உங்களுக்கு நாயனத்தைத் தவிர வேற எதுவுமே தெரியாதா?” என்று கேட்க, சிவாஜி கலங்கிப்போவார்.

“அன்னிக்கும் உங்களை நாந்தான் காப்பாத்தினேன்; இப்பவும் அவர்கூட நாந்தான் உங்களை சேர்த்துவைக்க அல்லாடுறேன்” என்று பத்மினியிடம் மனோரமா சொல்லும்போது, “என் தாயைவிட என் மேல அன்பு காட்டுறீங்க” என்று கைப்பற்றி நெகிழ்வார் பத்மினி.

ஆசைக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதற்காக பாலாஜி, பத்மினிக்கு நகை கொடுப்பார். பிறகு திருந்தி, “உன் அண்ணன் வீட்டு சீதனம்” என்று சொல்லும் காட்சியில் ரசிகர்கள் ‘அப்பாடா...’ போடுவார்கள். “அங்கே எனக்கு பீடா கடைக்காரனைத் தெரியும்” என்றும் அவ்வப்போது செய்யும் கொணஷ்டைகளும் என வியக்கவைத்துக் கொண்டே இருப்பார் பாலையா.

எல்லாப் பாடல்களிலும் தேன் கலந்து குழைந்துகொடுத்திருப்பார் கே.வி.மகாதேவன். ‘நலம்தானா உடலும் உள்ளமும் நலம்தானா’ எனும் பாடல், இன்றைய தலைமுறையினரின் செல்போன்களிலும்கூட ரிங்டோனாக ஒலிக்கிறது.

’மண்டு மண்டு’ என்று மனோரமாவை சிவாஜி சொல்ல, ‘ஏன்ன்ன்ன்ன்ன்ன்’ என்று வெள்ளந்தியாகக் கேட்கிற மனோரமா, நம் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்துகொண்டார். நாகேஷ் அறிமுகமான குறுகிய காலத்திலேயே ‘சவடால் வைத்தி’ கேரக்டர். ‘ஏண்டாப்பா சண்முகம்...’ என்று ஒவ்வொரு முறை பேசுகிறபோதும் நக்கலும் நையாண்டித்தனமும் அலட்டலும் கொடிகட்டிப் பறக்கும்.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் கவனித்துப் பார்த்தால்... எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது தெரியும். அதேபோல் காட்சி அரங்குகளை வண்ணத்தில் காட்டுகிற பிரம்மாண்டமும் புலப்படும்.

இயக்குநர் ஏ.பி.நாகராஜன் எனும் படைப்பாளியால் மட்டுமே, ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலை ஜீவனாக்க முடியும். இப்படி காலம் கடந்தும்கூட கொண்டாடுகிற நூறு தமிழ்ப் படங்கள் என்றொரு பட்டியலை எடுத்தால், அதில், தனித்துவமான இடம் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்துக்கு உண்டு.

1968 ஜூலை 27-ம் தேதி வெளியானது ‘தில்லானா மோகனாம்பாள்’. படம் வெளியாகி 54 ஆண்டுகளாகிவிட்டன. இன்னமும் சிக்கல் சண்முகசுந்தரத்தையும் மோகனாவையும் வடிவையும் சவடால் வைத்தியையும் ஜில்ஜில் ரமாமணியையும் மறக்கவே மறக்கவில்லை ரசிகர்கள்! மறக்கவே முடியாது என்பதே நிதர்சனம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in