சினிமா ராணியின் வெற்றித் தடம்!

சினிமா ராணியின் வெற்றித் தடம்!

“கலைஞர்கள் பிறப்பதில்லை, அவர்களைச் சமூகமே உருவாக்குகிறது” என்றார் கலைவாணர் என்.எஸ்.கே. முற்றிலும் அதற்குப் பொருத்தமான சாதனைப் பெண்மணி டி.பி.ராஜலட்சுமி. தஞ்சாவூரில் வசித்தது அவரின் குடும்பம். அப்பா திருவையாறு பஞ்சாபகேச சாஸ்திரி, அருகில் இருக்கும் சாலியமங்களம் கிராமத்தில் கர்ணமாக வேலை செய்துவந்தார். அன்றைய வழக்கப்படி ஏழாவது வயதில் ராஜலட்சுமிக்கு திருமணம் நடந்தது. பேசியபடி வரதட்சணையைக் கொடுக்க முடியவில்லை. அதனால், மணமாகி ஓராண்டு முடியும் முன்பாகவே பிறந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டாள் சிறுமி ராஜலட்சுமி.

பிறந்த வீட்டில் வறுமை வாட்டியபோதும் கலங்கிவிடாமல் கல்வி பயின்றாள். நடனமும் இசையும் வழிந்தோடிய தஞ்சையில், நன்கு பாடத்தெரிந்த அம்மா மீனாட்சியிடம் கற்றதுபோக, கேள்வி ஞானத்தைக் கொண்டே பிரமாதமாகப் பாடவும் ஆடவும் செய்தாள். பஞ்சாபகேசர் திடீரென இறந்துபோனர். திக்கற்று நின்ற மீனாட்சியம்மாள், மகளை அழைத்துக்கொண்டு பிறந்தகமான திருச்சிக்கு வந்தார். அங்கேயும் வறுமை. அப்போது சிறுமி ராஜலட்சுமி வாய் திறந்தாள். “அம்மா எதுக்கு கலங்கறே, எனக்குதான் பாடவும் ஆடவும் தெரியுமோன்னோ... நாடகத்துல நடிச்சு உன்னை நல்லாப் பார்த்துப்பேன்” என்றாள். மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் தாய் மீனாட்சி. ஆனால், ராஜலட்சுமி அழவில்லை. அவளது உறுதியைக் கண்ட மீனாட்சி, மதுரை சி.எஸ்.சாமண்ணாவின் நாடகக் கம்பெனியில் 11 வயதில் சேர்ந்தார். மாதம் 50 ரூபாய் சம்பளத்தில் ‘பவளக்கொடி’ நாடகத்தில் புலேந்திரன் வேடம்.

வாழ்க்கை, வரலாறானது!

நான்கே ஆண்டுகளில் மடமடவென்று மங்கையாய் வளர்ந்து நின்ற ராஜலட்சுமிக்கு சி.எஸ்.செல்லப்பா கம்பெனியில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வர, சாமண்ணா ஆசீர்வாதத்துடன் அங்கே சேர்ந்தார் ராஜலட்சுமி. பின்னர் அங்கிருந்து கே.பி.மொய்தீன் கம்பெனி, கண்ணையா நாயுடு கம்பெனி என்று பிஸியான நாடக நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த டி.பி.ராஜலட்சுமிக்கு மதராஸ் பட்டணத்தை அறிமுகப்படுத்தியவர் திருச்சி டி.எஸ்.நடராஜப்பிள்ளை. அவரது அழைப்பின் பேரில், அன்று பிரபலமாக இருந்த ‘ஸ்பெஷல்’ நாடகங்களில் நடிக்க அடிக்கடி மதராஸுக்கு வந்தபோது மவுனப் படங்களைப் பார்த்து வியந்துபோனார் ராஜலட்சுமி. காலம் கடத்தாமல் சிவகங்கை ஏ. நாராயணனின் ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷனின் படங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த ஸ்டுடியோவுக்குள் நுழைந்து அவரைச் சந்தித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in